பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சுயபரிசோதனைக்கான தருணம்!

நீதிபதிகள், அவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளானாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளானாலும், உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள்.

News image
Updated On :14 மே 2017, 8:53 pm

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

நீதிபதிகள், அவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளானாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளானாலும், உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். நீதிதேவதையின் பிரதிநிதிகளாக கருதப்பட்டு "மை லார்ட்' என கடவுளுக்கு நிகராக அழைக்கப்படுகிறார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளும் நீதியரசர்கள் என மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்கள். ஆகவே நீதிபதிகளின் அந்தஸ்தையும், மரபு காக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
நீதி அரசர் கர்ணன் உச்சநீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல் உயர்நீதிமன்ற நீதிபதி என்கிற அவப்பெயருக்கு ஆளாகி இருப்பதால் இன்று நீதி தேவதை தலைகுனிந்து நிற்கிறாள். நீதிபதிகளே குற்றம் சாட்டப்பட்டவர்களாக மாறி இருப்பது வேதனைக்குரியது.
சுதந்திர இந்தியாவில் தன்னுடைய வயதை குறைத்துச் சொல்லிப் பதவியில் நீடிக்கிறார் என குற்றம்சாட்டப்பட்டு பதவியைத் துறந்த முதல் தலைமை நீதிபதி ராமச்சந்திர ஐயர். நீதியரசர் ராமசாமி, பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது தவறுகள் செய்தார் என குற்றம்சாட்டப்பட்டு பதவிநீக்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு நாடாளுமன்றம் வரை சென்ற முதல் நீதிபதி. நீதியரசர் தினகரன், உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டபொழுது எழுந்த கடும் எதிர்ப்பால் பதவியைத் தவற விட்ட நீதிபதி.
இப்பொழுது நீதியரசர் கர்ணனின் முறை. மன்னராட்சிக் காலத்தில், அரசர்களே நீதிபதிகளாக இருந்தார்கள். அதனால் பிரச்னை எழவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில் நீதித்துறை நிர்வாகத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. நீதிபதிகளை அரசுதான் நியமிக்க வேண்டும் என நமது அரசியல் சட்டம் விதிகளை வகுத்திருக்
கிறது.
ஆனால் உச்சநீதிமன்றம் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்தபோது அரசு கையைப் பிசைந்து கொண்டு செயலற்று இருந்தது.
நீதிபதிகளின் மாமன்றத்தால் (கொலிஜியம்) நியமிக்கப்பட்ட நீதிபதிதான் நீதியரசர் கர்ணன். சுதந்திர இந்தியாவில் உச்சநீதிமன்றத்தால் சிறை தண்டனைக்கு ஆளான, அதுவும் நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைக்கு அனுப்பப்படும் முதல் நீதிபதி என்ற வரலாற்று பெருமைக்கும் இப்போது ஆளாகி நிற்கிறார்.
நீதியரசர் கர்ணன் ஆரம்பம் முதலே ஒரு விவாத நபராகவே இருந்து வந்திருக்கிறார். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் "என்னை சக நீதிபதி காலால் மிதித்தார்' எனப் பிரச்னையை ஆரம்பித்தார்.
அதற்குப் பிறகு தொடர்ந்து ஏதாவது சர்ச்சை அவரைச் சுற்றி இருந்து கொண்டே இருந்தது.
தலைமை நீதிபதியை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியது சென்னை உயர்நீதிமன்றம் முழுமைக்கும் தெரியும். தெரிந்தும், தெரியாமலும் அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஒரு வழக்கு நடக்கும்போது அந்த நீதிமன்றத்தில் சம்மன் இல்லாமல் அவரே ஆஜரானதும், பின்னாளில் உச்சநீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியபோது வர மறுத்ததும் ஒரு நகைமுரண்.
இந்த நிலையில் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தன் மாறுதலுக்குத் தானே தடை விதித்துத் தன் வழக்கில் தானே நீதிபதியாக இருக்க முடியாது என்ற சட்ட அடிப்படையை மீறி உச்சநீதிமன்றத்திற்கு சவால் விட்டார்.
கொல்கத்தாவில் டிவிஷன் பெஞ்சில் அமர்ந்து முக்கிய வழக்கில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டு, மூத்த சக நீதிபதிகளுக்கு சொல்லாமல் குற்றவாளிகளுக்கு பெயில் வழங்குவதாகத் தீர்ப்பு எழுதி நீதித்துறையின் மாண்பைக் கேலிக்கூத்தாக்கினார்.
சக நீதிபதிகள் கையூட்டுப் பெற்றதாக பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதினார். ஒருவர் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு எழுப்புவது முறையல்ல என்பது ஒரு நீதியரசருக்குத் தெரியாததா?
தாழ்த்தப்பட்ட மக்களை மகாத்மா காந்தி "ஹரிஜனங்கள்' என பெயரிட்டு அவர்கள் முன்னேற்றத்திற்காக உழைத்தார். அந்த சமுதாயத்தில் வந்த மாமனிதர்தான் டாக்டர் அம்பேத்கர். ஹரிஜனங்களை "பட்டியல் இனத்தவர்' என அரசியல் சட்டம் குறிப்பிட்டு பல சலுகைகளை வழங்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியான நீதியரசர் வரதராஜன்தான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியான முதல் "பட்டியல் இனத்தவர்'. பின்னாளில் நீதியரசர் பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.
சென்னையில்தான், பல "பட்டியல் இனத்தவர்' உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். அதில் ஒருவர் மதுரை கிளையின் நிர்வாக நீதிபதியாக இருக்கிறார். ஆகவே, தலித் என்பதால் விரட்டப்படுவதாக நீதியரசர் கர்ணன் சொல்வதில் சிறிது கூட உண்மை இல்லை.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளான நீதியரசர் மார்கண்டேய கட்ஜு ஒரு பிராமணர் மட்டுமல்ல, நேரு குடும்பத்திற்கு தூரத்து உறவினரும்கூட. அவர், தான் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சுமத்துகிறார்கள் என்று பழி சுமத்தவில்லை.
நீதித்துறையின் மாண்பைக் குலைத்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்மீது பெரிய குற்றம் இல்லாவிட்டாலும்கூட மன்னிப்புக் கேட்க முற்பட்டார்.
ஒரு செயல் சரியா, தவறா என விசாரிக்கப்படும்பொழுது சாதி அடையாளத்தால் தப்பிக்க நினைப்பது கோழைத்தனம் மட்டுமல்ல, தான் சார்ந்த சமுதாயத்திற்கு அறிந்தோ அறியாமலோ செய்யும் மிகப்பெரிய தீங்குமாகும். காந்தியும் அம்பேத்கரும் ஈ.வெ.ரா. பெரியாரும் போராடிய சமூக நீதிப் போராட்ட வெற்றிகளை, நீதியரசர் கர்ணன் போன்றோர் சுய லாபத்திற்காக அழிப்பது வேதனையானது, வருந்தத்தக்கது.
நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பால் இன்று அமலில் உள்ள நடைமுறை. இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு. வெளி மாநிலத் தலைமை நீதிபதிக்கு உள்ளூர் வழக்குரைஞர்கள் பற்றி சரியான பரிச்சயம் இருப்பது இல்லை.
அவர்கள் தங்களிடம் சொல்லப்படும் பெயர்களைத் தபால்காரர்போல தில்லிக்கு அனுப்புகிறார்கள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. உதாரணம், நீதியரசர் கர்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் இன்று விவாதப் பொருளாகியிருப்பது!
நீதியரசர் கர்ணனைத் தேர்ந்தெடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாமன்றத்தில், தலைமை நீதிபதி கங்குலி, நீதியரசர்கள் மஹோபாதியாயா மற்றும் மிஸ்ரா இருந்ததாக அறியப்படுகிறது. இதில் நீதியரசர் மிஸ்ரா அந்த தேர்வுக் குழுவில் இருந்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி கங்குலி இவரைத் தேர்ந்தெடுத்ததை பற்றித் தன்னால் நினைவுகூர முடியவில்லை என்று சொல்லிவிட்டார். மூன்றாவது நீதிபதி எந்த கருத்தும் சொன்னதாகத் தகவல் இல்லை.
ஒரு வழக்குரைஞர் நீதிபதியாக தேர்வு செய்யப்படுமுன் அவர் உயர்நீதிமன்றத்தில் நடத்திய வழக்குகள் எத்தனை? அவருடைய வாதங்கள், தீர்ப்புகளில் எப்படி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பார்க்கப்படுவதாகத் தெரியவில்லை.
உயர்நீதிமன்ற நீதிபதி, அரசியல் சட்டத்தின் கீழ் நீதிபதிகளின் மாமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இப்பொழுது உள்ள நடைமுறையின்படி ஒரு நீதிபதி இரண்டு ஆண்டுகளுக்கு தாற்காலிகமாக நியமிக்கப்பட்டு பிறகு நிரந்தர நீதிபதியாக உறுதி செய்யப்படுகிறார்.
ஆனால் இந்த இரண்டாண்டுகளில் அவருடைய செயல்பாடுகளை யார் கவனிக்கிறார்கள்? என்ன அளவுகோலில் கவனிக்கிறார்கள் என்ற விவரம் தேவ ரகசியமாக இருக்கிறது. நீதிபதிகள் தீர்ப்பு எழுத எடுக்கும் கால அளவு மாதங்களையும் தாண்டி வருடங்களைத் தொடுகிறது.
நீதியரசர் கர்ணன் முதலில் இரண்டு ஆண்டுகள்தான் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய பணிமுறையையும் தீர்ப்புகளையும் ஆராய்ந்து முடிவெடுத்திருந்தால், இன்று நீதித்துறை ஏளனத்தை சந்தித்திருக்காது. எடுத்தேன் கவிழ்த்தேன் என உச்சநீதிமன்றம் செயல்பட்டதால்தான் இன்றைக்கு இந்த அவலநிலை.
இதை எல்லாம்விட இன்னாரை நீதிபதி ஆக்கக் கூடாது என வாய்கிழியக் கூப்பாடு போடும் வழக்குரைஞர்கள் இன்று வாயடைத்து நிற்பது ஏன்? நீதியரசர்
கர்ணனின் செயல்பாடுகளை வழக்குரைஞர்கள் அங்கீகரிக்கிறார்களா? இல்லை, ஜாதியின் அடிப்படையில் தவறாக இருந்தாலும் ஆதரிப்பது என்று முடிவெடுக்
கிறார்களா?
நீதியரசர் கர்ணன் தன்னைப் பதவிநீக்கம் செய்ய முடியாது என்று தெரிந்து செய்த அடாத செயல்களால் இன்று சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இந்த இழிவும், அவமானமும் கர்ணன் என்ற தனிமனிதர் சம்பந்தப்பட்டது அல்ல. நீதியரசர் கர்ணனின் செயல்பாடுகளால் நீதித்துறைக்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
நீதியரசர் கர்ணன் சிறைச்சாலைக்கு செல்கிறாரா இல்லையா என்பதல்ல பிரச்னை. சிறைச்சாலைக்கு செல்லத்தக்க குணமுடைய நபரை நீதிபதியாக்கியது யார்? அவரை நிரந்தரம் செய்தது யார்? இந்த சுயபரிசோதனையை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் செய்துகொண்டாக வேண்டும்.
உயர்நீதித்துறைக்கு கவனிக்கப்பட வேண்டிய அடிப்படை தகுதி திறமையா? ஜாதியா? என்ற கேள்வியை எழுப்புகிறது நீதியரசர் கர்ணன் தொடர்பான பிரச்னை.

கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.