வைரவரி நன்னெறிகள்!

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார் கணியன் பூங்குன்றனார். 'பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்றார் மன்னர் கடலூர் மாய்ந்த பெரும் வழுதி.
வைரவரி நன்னெறிகள்!
Updated on
3 min read

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார் கணியன் பூங்குன்றனார். 'பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்றார் மன்னர் கடலூர் மாய்ந்த பெரும் வழுதி. 'உலகம் உவப்ப' என்று திருமுருகாற்றுப்படை நடத்தினார் நக்கீரர். 'உலகம் யாவையும்' என்று தொடங்கினார் கம்பர். 'உலகெலாம் உணர்ந்து' என்ற அசரீரியை முதலாகக் கொண்டார் சேக்கிழார். 
இப்படி எல்லோரும், உலகை, உலக மக்களை முன்னிறுத்திப் பாடி வந்த காலை, நேற்றையக் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 'தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு' என்று தமிழனைத் தனியாக அடையாளப்படுத்தினார். 
இதற்கு ஒரு காரணம் உண்டு. இவன் ஒருவன்தான் எல்லாவற்றையும் நேசிக்கும் பண்பினன். ஆதரவு நல்கும் நல் மனத்தினன். 'எம்மதமும் சம்மதமே' என்ற சொல்லை அவ்வப்போது முழங்கி வருபவன். இச் சொல்லும் வேறு மதத்தினரால் சொல்லப்படாத சொல். 
வேத கால முன்னோர்கள் 'வசுதேவ குடும்பகம்' என்று உலகையே ஒரு குடும்பமாக எண்ணி நேசித்தவர்கள். உலக மாந்தர் அனைவர்க்குமாக 'யோக úக்ஷமம் வகாமியகம்' என்றும் போதித்தார்கள். இவையெல்லாம் பாரதம் உலகிற்கு வழங்கிய கருவூலச் சொற் செல்வங்கள். 'வைர வரி' நன்கொடைகள்.
கடந்த மாதத்தில் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பலவும் மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளோடு, ஹிந்து மத அகதிகளும் வெளியேறி வங்க தேசத்தில் தஞ்சம் புகுவதைக் காட்டினார்கள். உலகின் பெரும்பான்மை சமூகமாகத் திகழும் முஸ்லிம் இனத்தின் இந்த அகதிகளின் துன்பம், துயரம் கொடுமையானது. இதுகுறித்து உலகின் எல்லாப் பாகங்களிலும் அதிகமாகப் பேசப்பட்டதைப்போல் உலகின் சிறுபான்மை சமூகமான ஹிந்து அகதிகளின் அவலம் குறித்துப் பேசப்படவில்லை. 
வங்கதேசத்திற்கு வரும் ஹிந்து அகதிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், ஹிந்து பெண்களின் நெற்றித்திலகம் அழிக்கப்பட்டு, மங்கல நாண் அவிழ்க்கப்பட்டு 'நமாஸ்' செய்ய வற்புறுத்தப்படுவதையும் கள ஆய்வு செய்து ஆங்கில ஊடகங்கள் ஒளிபரப்பின. ஹிந்து மத அகதிகள் கண்ணீர் மல்க பேட்டி தந்ததையும் கூடக் காட்டினார்கள்.
உலகின் சிறுபான்மை சமயமான இந்து சமூக மக்கள் பாரதத்தில் அந்நியர்கள் ஆட்சிக்காலத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டனர் என்பது இந்நாட்டின் கடந்த கால வரலாறு. அண்மைக்காலத்தில் இலங்கையில் இலங்கை ராணுவத்தினர் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 
இதைப்போன்றே மியான்மரில் ராணுவத்தாலும் இதர தீவிரவாதிகளாலும் கொன்று புதைக்கப்பட்ட சவக்குழிகளில் இருந்து இன்றைக்கு நூற்றுக்கணக்கில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அத்துணையும் ஹிந்து மக்கள் என்று அறிய நேர்ந்தது ஒரு கொடுமை.
ஒருகாலத்தில் நம் நாட்டு நகரத்தார் அன்றைய பர்மாவில் 52 விழுக்காடு நிலபுலங்களை தங்கள் வசம் கொண்டிருந்தனர். கொடுங்கோலன் நீவின் ராணுவ ஆட்சியில், இடுப்பில் கட்டிய வேட்டியோடும், தோளில் போட்டிருந்த துண்டோடும் ஒரே நாளில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்கள். 
ஒரு காலத்தில் நம் நாட்டில் 72 வகையான வழிபாட்டு நெறிகள், சடங்குகள் இருந்தன. ஆதிசங்கரர்தான் அவற்றைச் சுருக்கி அறுவகை சமய நெறிகளாக வகைப்படுத்தினார். சிவனியம், மாலியம் கௌமாரம், சாக்தம், சௌரம், காணாபத்தியம் என்பது சமய வரலாறு.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சன் பிரபு காலத்தில்தான் இந்திய தொல்லியல் துறைக்கு வித்திடப்பட்டது. 
பாரதத்தில் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வந்த சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி மேலும் அறிய ஹீராஸ்குட் பாதிரியார், ஜான்மார்ஷல் என்ற தொல்லியல் அறிஞர்கள் தலைமையில் ஹராப்பா, மொகஞ்சதாரோ போன்ற இடங்களில் அகழ்வாய்வு பணியை மேற்கொண்டார்கள். அவர்கள், சுமார் நான்கு ஆண்டு
களுக்குப் பிறகு அகழ்வாய்வு அறிக்கையை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள்.
அதுநாள் வரை உலகின் முதல் நாகரிகத் தொட்டில்களாகக் கருதப்பட்டு வந்த நைல், யூப்ரட்டீஸ், டைக்ரிஸ், நதிக்கரைகள் கிரேக்க, ரோமானிய வாழ்விடங்கள் எல்லாவற்றையும்விட காலத்தால் மிகவும் பழைமையான நாகரிகமாக சிந்துவெளி நாகரிகம் இருக்கிறது என்பதால் உலகம் முழுதும் வியந்து நின்றது. 
இந்த நாகரிக எச்சங்களின் மிச்சங்களைக் கொண்டுதான் அறிஞர்கள் தந்த நிறைவான தீர்ப்பு உலகின் மூத்த தொன்மையான நாகரிகம் சிந்து வெளியில் இருந்தது என்பது.
சிந்துவெளி மக்களின் பல்வேறு வாழ்வியல் பெருமையைக் கூறும் தடயங்களில் அவர்களது வழிபாட்டு முறையும் அடங்கும். சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறும் 'பிறவா யாக்கை பெரியோன்' என்ற சிவபெருமானை வணங்கினார்கள். 
இவர்களின் காலம் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்னால். இன்றைக்கு சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கிலும் பரவி நின்ற சிவ - சிலை வழிபாட்டு முறைக்கு உரிமையுடைய தொல் சமய மக்கள்தான் இன்றைக்கு இந்தியாவில் வாழும் இந்து சமய மக்கள்.
மத்திய ஆசியாவில், சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஏன்? காதல் தேவதைக்கும் கோயில் கட்டி இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களிடையே தேவகுமாரன், இறைதூதர் என்று போற்றப்படுகின்ற அவதார புருஷர்கள், மகான்களால் சொல்லப்பட்ட அல்லது அவர்களது சீடர்களால் வகுக்கப்பட்ட கொள்கைகள் மூலம் மதம் என்பது பரவலாயிற்று. 
பாரத மண்ணிலும் மக்களிடம் இருந்த மூடப்பழக்கங்களை விலக்கி புதிய ஆன்மிக சிந்தனை பிறப்பிக்கவே மகாவீரர், புத்தர் போன்ற அருளாளர்கள் அவதாரம் கொண்டனர். இவர்களது போதனைகளும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தனித்தனி மதங்களாகப் பரவின. பின்னர் இதுதான் உன் மதம், இதுதான் உன் கடவுள், இதுதான் உன் மத வழிபாட்டுக் கொள்கை என வகையறை செய்யப்பட்டது.
அந்நியர் படையெடுப்புகளால் இந்நாட்டில் மத மாற்றம் பல வழிமுறைகளில் நடைபெற்றது. இதுநாள்வரை இருந்த மத சுதந்திரக் காற்று மெல்லக் குறைந்தது. இயற்கையை வழிபட்டு வாழ்ந்த மக்கள் ஒரு குறுகிய மத வட்டத்திற்குள் அடைக்கப்பட்டனர். 
ஒரு நாமமும், ஓர் உருவமும் இல்லாத இறைவனை ஆயிரம் நாமம் சூட்டி வணங்கியவர்கள் ஒரு நாம எல்லைக்குள் அடங்கினர். ஊன் உடலையும் இறைவன் குடியிருக்கும் கோயிலாக எண்ணியவர்கள், தூணிலும், துரும்பிலும் ஆண்டவன் இருக்கிறான் என்று நம்பியவர்கள் பரிகசிக்கப்பட்டார்கள். 
இந்த தொல் சமயத்தில்தான் தெய்வ நம்பிக்கையில்லாத நாத்திகர்கட்கும், பகுத்தறிவுவாதிகட்கும் இடம் உண்டு. அவர்கள் சுதந்திர உணர்வோடு பேசவும், எழுதவும் உரிமை உண்டு. சாதிகளும் எண்ணிக்கையில் அடங்கா! சச்சரவுகளும் சொல்லி மாளா! 
இருப்பினும் பாரதி பாடுவார், 'ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில் அந்நியர் புகல் என்ன நீதி, ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ'. 
பீஜித்தீவில் நம்மவர்கள் பட்ட துன்பங்கள் குறித்து மனம் நொந்து 'ஹிந்து மாதர் தம் நெஞ்சு, கொதித்து, கொதித்து மெய் சுருங்குகின்றரே, அவர் துன்பத்தை நீக்க வழியில்லையே' என்று பாடிய மகாகவி பாரதி இன்று இருப்பின் மியான்மர் அரசையும் நமது மத்திய அரசையும் சாடியிருப்பார். 
ஈழப்போர் காலத்தில் முன்னின்று போர்ப் பரணி கொட்டியிருப்பார். ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் ஒரு சிறு அதிர்வுகூட ஏற்படவில்லை. 
இதைப்போன்றே இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீரத்தில் இருந்த 'பண்டிட்டுகள்' கூண்டோடு வெளியேற்றியபோது, இந்தியாவின் பிற பகுதிகளில் ஒரு சிறிய சலனம்கூட ஏற்படவில்லை. பல் குழுவும், பாழ் செய்யும் உட்பகையால் ஒற்றுமை சிதைந்ததால் ஏற்பட்ட விளைவு இது. 
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி ஹிந்துக்கள் 80.5%, முஸ்லிம்கள் 13.4 %, கிறிஸ்துவர்கள் 2.30%, சீக்கியர்கள் 1.90%, பௌத்தர்கள், 0.80%, சமணர்கள் 0.47%. 2011-ஆம் ஆண்டில் ஹிந்துக்கள் 79.80%, முஸ்லிம்கள் 14.23%, கிறிஸ்துவர்கள் 2.30%, சீக்கியர்கள் 1.72 %, பௌத்தர்கள் 0.70%, சமணர்கள் 0.37% என்ற அளவில் உள்ளனர். 
ஹிந்துக்கள் தொகை 10 ஆண்டுகளில் குறைந்து இருக்கிறது (13.2.2017 தினமணி 9-ஆம் பக்கம்).
இந்த நாட்டின் தொல் சமய மக்களின் எண்ணிக்கை குறையுமானால், நாட்டின் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிடும். உலகில் உள்ள எல்லா சமய உண்மைகளையும் விரும்பி ஏற்கும் இயல்பினர் ஹிந்துக்கள். இதனால்தான் இவர்களால் 'எம்மதமும் சம்மதமே' என்று சொல்ல முடிகிறது. 
எனவே, இந்நாட்டில் மதச்சார்பின்மை நிலைக்க, நாத்திகர்களும், பகுத்தறிவுவாதிகளும் வாழ ஹிந்து சமய மக்களின் தொகை குறையாது இருக்க வேண்டும். 

கட்டுரையாளர்:
தலைவர், 
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com