ஐந்து கடமைகள்!

இஸ்லாம் 'நம்பிக்கை' என்னும் உறுதிப்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் ஐந்து. அதில் முதலாவது கலிமா. அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை

இஸ்லாம் 'நம்பிக்கை' என்னும் உறுதிப்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் ஐந்து. அதில் முதலாவது கலிமா. அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்பதே இதன் அர்த்தம். இதன் மீது நம்பிக்கை கொள்ளுதல் வேண்டும். இதனை வெறும் வாயால் உச்சரிப்பதால் முஸ்லிம் ஆகிவிட முடியாது. மாறாக இந்த வாக்கியத்தின் மீது உளமாற நம்பிக்கை கொண்டு உறுதி பூண்டு சாட்சியம் பகர வேண்டும்.
இரண்டாவது கடமை முஸ்லிம் ஆன ஒவ்வொருவரும் இறைவனைத் தொழ வேண்டும். இது கட்டாய கடமை ஆகும். முடியாதவர்கள் உட்கார்ந்து கொண்டோ படுத்துக்கொண்டோ நினைவில் நிறுத்தி தொழ வேண்டும். மொத்தத்தில் எப்படியாவது தொழுதே ஆக வேண்டும். 
மனநலம் பாதித்தவர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும், தன்நிலையை உணர முடியாதவர்களுக்கும் மட்டுமே விதிவிலக்கு (பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தொழுகையில் விதிவிலக்கு உண்டு).
மூன்றாவது கடமை நோன்பு. இதுவும் அனைவருக்கும் கடமை என்றாலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கடமை இல்லை. மாறாக அதற்காக தர்மம் செய்து கொள்ளலாம். 
நான்காவது ஜகாத் (அறவரி). வருமானமுள்ள ஒவ்வொரு மனிதற்கும் அவருடைய வருமானத்தில் ஆண்டிற்கு 64 கிராம் தங்கத்தின் மதிப்பிற்கு மேல் வருமானம் வருமாயின் அத்தொகையில் இரண்
டரை சதவீதத்தில் அறவரியாக ஏழைக்கு தர வேண்டும். விவசாயமாக இருந்தால் நீர்பாய்ச்சி சாகுபடி செய்யக்கூடிய விவசாயத்திற்கு மகசூலில் அடிப்படை கழிவு போக மீதத்தில் ஐந்து சதவீதத்தையும், மழையை நம்பிச் செய்யும் விவசாயத்தின் மகசூலில் அடிப்படை கழிவு போக மீதத்தில் 10 சதவீதத்தையும் அறவரியாக தர வேண்டும். 
இந்த அறவரி மேற்கண்ட அடிப்படை வருமானத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே கடமையாகும். இந்த அளவுக்கு வருமானம் இல்லாதவருக்கு அறவரி கடமையில்லை.
ஐந்தாவது கடமை ஹஜ் செய்தல். சென்று வர பண வசதியும், தக்க உடல் நலமும், வாகனமும், வழிதுணையும் வாய்த்தவர்களுக்கு மட்டுமே கடமையாகிறது. ஏனையவர்கள் ஹஜ் செய்யாததனால் எவ்வித குற்றமும் இல்லை. ஹஜ் செய்தவர்களோடு ஒப்பிடும்போது அந்த வாய்ப்பு பெறாதவர்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. 
ஹஜ் என்பது மக்காவில் உள்ள கஃபா பேராலயத்திற்கு சென்று அங்கு செய்ய வேண்டிய, வலியுறுத்தப்பட்ட காரியங்களை செய்வதாகும். இதற்கு ஆறு நாட்கள் தேவைப்படும். 
கஃபா என்பது உலகின் முதன் முதலாக இறைவனை தொழ எழுப்பப்பட்ட ஆலயம் ஆகும். இதனை ஆதிமனிதனும், முதல் நபியுமான ஆதம் அவர்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. 
பின்னர் இறைத்தூதர் இப்ராஹிமும் அவரது மகன் இறைதூதர் இஸ்மாயிலும் உயர்த்தி மறு புனரமைப்பு செய்ததாக திருக்குரான் எடுத்துரைக்கிறது. முஸ்லிம்கள் உலகில் எங்கிருந்தாலும் இந்த கஃபா பேராலயத்தை முன்னோக்கி தொழும் திசையாக திருக்குரானில் அறிவிக்கப்பட்டது.
இந்த பேராலயம் மனிதர்களுக்கு ஒன்றுகூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் அபயம் அளிக்கும் இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இங்கு செல்லும் வெள்ளையர், கருப்பர், மங்கோலியர், திராவிடர் இப்படி எந்த இனத்தவரானாலும் எந்த நிறத்தவரானாலும் எந்த நாட்டவரானாலும் எல்லோரும் ஒன்றாக ஒரே மாதிரியான உடை உடுத்தி (ஆண்களுக்கு இஹ்ராம் நிலைக்கான உடை கீழே தைக்கப்படாத முழு வெள்ளை வேட்டியும் அதுபோன்ற வெள்ளைத் துண்டும் அணிந்து கொண்டு கஃபாவை வலம் வர வேண்டும். இதில் யார் முந்தி, யார் பிந்தி என்ற பாகுபாடு கிடையாது. ஆட்சியாளர் முதல் கடை நிலை குடிமகன் வரை அனைவரும், அனைத்து நாட்டவரும் ஒன்று. 
கஃபாவை யாரும் வணங்குவது இல்லை. தொழுவதற்கு முன்னோக்கும் திசையாகவும் ஹஜ் செய்வதற்கு உரிய பேராலயமாகவும் இறைவனால் அறிவிக்கப்பட்ட இடம். அதனால் அது மகத்துவமும், புனிதத்துவமும் பொருந்தியதாக உள்ளது. அங்கே சென்றவர் அங்கே இருக்கும் காலத்தில் சண்டையிடுவது, வாதங்கள் புரிவது, வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. 
அங்கே செய்யக்கூடிய பெரும்பாலான காரியங்கள் இறைத்தூதர் இப்ராஹிமால் செய்யப்பட்ட காரியங்களை பின்பற்றியே செய்யப்படுகின்றது. இறைத்தூதர் இப்ராஹிம் இறை கட்டளைப்படி அவரது மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக பலியிட துணிந்தபோது இறைவன் அக்காரியத்தை நிறுத்தி ஆட்டை பலியிட செய்து எல்லோருக்கும் பகிரச் செய்தான். அதுவே, இன்றளவும் குர்பானி ஆகும். 
இதன் பிறகு நரபலிகள் ஒழிய ஆரம்பித்தது. இறைதூதர் இப்ராஹிம், மனைவி ஹாஜிராவையும், குழந்தை இஸ்மாயிலையும் விட்டுச் சென்ற இடமே மக்காவாக உருவாகியது. இங்குதான் இவர்களுக்கு இறைவன் தந்த வற்றாத ஜீவ ஊற்று ஜம்ஜம் கிணறு உள்ளது. இச்சிறிய கிணற்றை ஒரு நாளைக்கு 30 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். 
மேலும், ஹஜ் செல்பவர்கள் தனது சொந்த ஊர்களுக்கும் இந்த புனிதத் தண்ணீரை எடுத்து வருகின்றனர். இதுவரை இங்கு (இப்பாலைவனத்தில்) ஜம்ஜம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. 
உலக மக்கள் இன, மொழி, நிற பேதம் கடந்து ஏற்றத்தாழ்வு இல்லாமல், 
எவ்வித சண்டைச் சச்சரவுகளும் இல்லாமல் அரஃபா மைதானத்தில் கூடி முஜ்தாலிபா வந்து பின்னர் சைத்தானை கல்லெறிந்து, குர்பானி கொடுத்து, தலையை மழித்து, பின்னர் கஃபா பேராலயம் வந்து அதனை வலம் வந்து சஃபா, மருவாயிடையே ஓடி தனது ஹஜ் கடமையை முடிக்கின்றனர். 
இங்கு உலக சகோதரத்தையும், சமத்துவத்தையும் காண முடிகிறது. உலக மக்கள் அனைவரும் ஒன்று என்பதை உலகத்திற்கு பறைசாற்றும் நிகழ்வே ஹஜ் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com