பொருளாதார வளர்ச்சியும் நல்வாழ்வும்

உலக நாடுகளில் அதிக பலம் பெற்று செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் ஆண்டுதோறும், ஒரு லட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். உலக
Updated on
2 min read

உலக நாடுகளில் அதிக பலம் பெற்று செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் ஆண்டுதோறும், ஒரு லட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். உலக சராசரியான, லட்சத்துக்கு 11.5 பேர் என்பதனைவிட இது கணிசமாக அதிகம்.
சாதாரண ஊரில் கூட, பணவசதி மிக்கவர்களைவிட எளிய நிலையில் வாழ்பவர்கள் பலர் மன நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வசிப்பதை நாம் காண்கிறோம். அடிப்படைத் தேவைகளை மீறிய வசதிகளும் செல்வமும் மட்டுமே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருவதில்லை என்பதற்கான சான்றுகள் இவை. 
பொதுவாக, ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதுபோல, தனி நபர் சராசரி வருமானம், அதன் வளர்ச்சி ஆகியனவும் முக்கியக் குறியீடுகளாகும். இந்த அடிப்படையில் எழும் சிக்கல் என்னவென்றால், ஒரு நாட்டில் இருக்கும் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதும், ஏழ்மையின் பிடியில் இருப்பவர்கள் மேலும் இறுக்கப்படுவதும் கூட, இந்த சராசரிக் கணக்கில், பார்வைக்குத் தெரியாமல் போகும். 
இது ஒருபுறமிருக்க, உலகின் மிகச்சிறிய நாடுகளுள் ஒன்றான பூடான், வளர்ச்சி குறித்த பார்வையைப் புரட்டிப் போடும் ஒரு கருத்தினை முன்னிறுத்தி, அது ஐ.நா.வால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது . 
சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நாட்டின் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த பாதுகாப்பு ஆகியனவற்றை அடிப்படையாக கொண்ட மக்களின் ஒட்டுமொத்த நலனும் மகிழ்ச்சியும் உற்பத்தி - வருவாய் சார்ந்த வளர்ச்சியினைவிட முக்கியத்துவம் என பூடானன் வலியுறுத்தியது.
அந்த அடிப்படையில் தனது நாட்டுக்கான திட்டங்களை பூடான் வகுத்தது. மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு என்பதனை இலக்காக  (Goal of National Happiness)  என நிர்ணயித்தது! உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறியது. 
பூடானின் இக்கருத்தினையும் திட்டத்தினையும் ஐ.நா. 2012-இல் அங்கீகரித்து, மார்ச் 20-ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக(International Day of Happiness)  அறிவித்தது; தொடர்ந்து உலகளாவிய 'மகிழ்ச்சிக் கணக்கெடுப்பும்' (Happiness Mapping) செய்துவருகிறது!
இந்த அடிப்படையிலான ஒருசில புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்: ஐ.நா.வால் 155 நாடுகளில் எடுக்கப்பட்ட இத்தகைய கணக்கெடுப்பில், நார்வே 7.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், அமெரிக்கா 7.4 புள்ளிகளுடன் 14-ஆம் இடத்திலும், பூடான் 5 புள்ளிகளுடன் 97-ஆம் இடத்திலும், இந்தியா 4.3 புள்ளிகளுடன் 122-ஆம் இடத்திலும் உள்ளன. 
மக்களின் உண்மையான நலம் சார்ந்த வளர்ச்சி என்பதன் அங்கமாக விளங்கும் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நாட்டின் சுற்றுப்புறச்சூழல் சார்ந்த பாதுகாப்பு ஆகிய இம்மூன்றில் ஏதேனும் ஒன்று குறைவுபடும்போதும், மற்ற இரு அம்சங்கள் அடையும் வெற்றிகூட விரயமாகிறது.
ஒரு நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்தபோதும், அந்நாட்டின் ஒரு சாரார் புறக்கணிக்கப்படுவது, ஒரு நாட்டின் தொழில்துறை பெரும் வளர்ச்சி அடையும்போது மறுபுறம் விவசாயம் பெரும் நலிவடைவது, நல்ல கல்வி அளிக்கப்பட்டும் ஏராளமான சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பது, ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தும், அவர்களைச் சார்ந்த முதியோர் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் இன்னல்படுதல் போன்றவை - அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியினைப் பொருளற்றதாகச் செய்துவிடும்.
ஒரு நாட்டினர் தாங்கள் அனுபவிக்கும் வசதிகளை அவர்களது சந்ததியினரும் தொடர்ந்து பெறுகின்ற நிலையினை ஏற்படுத்திச் செல்லுதல் அவசியம். இதனை உறுதி செய்ய சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பும் மிக முக்கியமாகிறது. 
ஒரு நாடு, தனது இயற்கை வளங்களை இழப்பது- வன உயிரினங்கள் அழிதல், நாட்டின் நீர்நிலைகள் சுருங்குதல், குளிர் பிரதேச நாடுகளின் மலைகளில் பனிமட்டம் குறைதல், பருவ நிலை மாறுபாடு போன்றவை சுற்றுப்புறச் சூழல் சரிவரக் காப்பாற்றப் படவில்லை என்பதற்கான அடையாளங்களாகும்.
இப்படி இயற்கையை சீரழித்து அடையும் சமூக வளர்ச்சி அல்லது பொருளாதார வளர்ச்சி என்பது நிரந்தரமில்லாத ஒன்றாகவே அமையும். மேலும் சமூக வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியனவற்றை உதாசீனப்படுத்தி அடையும் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு முரண்பட்ட வளர்ச்சி என்றே பார்க்கப்படும். 
இந்த முக்கியமான விஷயத்தில் அரசுகளுக்குப் பெரும் பங்கும், பொதுமக்களுக்கு கணிசமான பொறுப்பும் உள்ளன. 
இந்த ஒட்டுமொத்த வளர்ச்சி -நல்வாழ்வு சார்ந்த விஷயங்களில், அரசுகள் தனி மனித உரிமை, பாதுகாப்பு ஆகியன உறுதி செய்தல், பல்வேறு இன மதம் சார்ந்தவர்கள் நிம்மதியாக வாழ இணக்கமான சூழலை உறுதி செய்தல், இயற்கை வளங்கள் - சுற்றுப்புற சூழல் பாதுகாப்பினை மேம்படுத்துதல் அவசியம்.
இத்தகைய உலகளாவிய ஒரு விஷயத்தில் தனி மனிதன் என்ன செய்ய முடியும்? எந்தவிதமான பங்களிப்பினைத் தந்துவிட முடியும்? 
இந்த மூன்று அம்சங்கள் குறித்த புரிதலை அதிகப்படுத்திக் கொள்ளுவதும், இளைய தலைமுறை உள்ளிட்ட பிறருக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும், நல்லிணக்கத்துக்கான செயல்களில் ஈடுபடுவதும் கூட நல்ல பங்களிப்புதான்.
தமிழர்களாகிய நமக்கு இவை எதுவுமே புதிதல்ல! நாம் வேறு எங்கும் தேட வேண்டாம்...வள்ளுவர் கூறிய அறம் சார்ந்த பொருள் ஈட்டலும் பிற உயிரையும் தம்முயிர் போல் பேணுதலும், அவர் விதித்தன செய்தலும் விலக்கியது ஒழித்தலும் மட்டுமே போதும்... உலகமே நன்மை பெறும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com