தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மதம், மனங்களை இணைக்கும் பாலம்!

வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், இந்தியாவில் உள்ள ஜாதிகளை எண்ணுவது கடினம்.

Updated On :8 ஏப்ரல் 2018, 9:18 pm

வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், இந்தியாவில் உள்ள ஜாதிகளை எண்ணுவது கடினம். இப்போது அந்த வரிசையில் மதங்களும் சேர்ந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்து, வாக்கு வங்கி அரசியலில் மதத்தையும் பகடைக் காயாக பயன்படுத்தியிருப்பது இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதைப் போலுள்ளது. இது எதிர்மறையான பிரிவினைவாத அரசியல் என்றால் அது மிகையில்லை. அந்த மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜகவின் வாக்கு வங்கியைக் கவரவே, நம்பிக்கைக் கீற்றாகவுள்ள லிங்காயத்துகளை காங்கிரஸ் பக்கம் இழுக்க முதல்வர் சித்தராமையா செய்துள்ள முதல் முயற்சி பிரித்தாளும் சூழ்ச்சியேயன்றி வேறில்லை. 
இந்து சமயத்திலேயே பல்வேறு உட்பிரிவுகள் இருக்கும்போது, சைவ சமயத்தைச் சேர்ந்த லிங்காயத்துகளை சிறுபான்மையினராக அங்கீகரித்து இருப்பது மற்ற மதப் பிரிவினர்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களிடையே பேதங்களை அதிகரிக்கச் செய்யும் .
இப்படி இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களும் மதங்களைப் பிரித்து, மக்களிடையே பிரிவை உண்டாக்கி, தேச ஒற்றுமையே கேள்விக்குறியாகும். ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவர் அந்த நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு மதிப்பளித்து நடந்தால்தான் அவர் சிறந்த குடிமகனாக இருக்க முடியும். மனித சமுதாயத்தின் ஒற்றுமையில்தான் ஒப்பற்ற தேசம் உருவாகும். பிரிவினையை வென்ற பன்மைத்துவம்தான் இந்தியாவின் முகம்.
வணிக நோக்குடன் இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் இந்தியத் திருநாட்டை அடிமைப்படுத்தி ஆண்டது எவ்வாறென்றால் மக்களிடையே பிரிவினைகளை உருவாக்கி, ஒருவருக்கொருவர் சண்டையிடச் செய்துதான் என்பதை இக்காலத் தலைமுறையினர் வரலாற்றுப் புத்தகத்தில்தான் படித்திருப்பார்கள். ஆனால், இப்போது கண்ணால் காண முடிகிறது.
தேர்தல் காலங்களில் வாக்குகளைக் கைப்பற்ற இம்மாதிரியான ஜாதிகளுக்குள்ளேயும், மதங்களுக்குள்ளேயும் பிரிவினைகளை உருவாக்கி குளிர் காய நினைப்பது, வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழும் மக்களிடையே ஜாதி, மத துவேஷங்களைத் தான் உருவாக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று ஒரு புறம் கூறிக் கொண்டே மறு புறம் இம்மாதிரியான மறைமுக மதவாத சக்திகள் வலுப்பெற்று வளர்வது, ஜனநாயக நாட்டின் நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். இது அனைத்து மதமும் சம்மதம் என சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துவடனும் ஒற்றுமையுடன் வாழும் மக்களிடையே பிரிவினை எண்ணத்தை விதைக்கும், கலக எண்ணங்களை தூண்டும், பூசல்களை விதைக்கும், வன்முறைகளைக் கட்டவிழ்க்கும், ஒருமைப்பாட்டுணர்வை சீரழிக்கும். 
மதத்தைப் பிரிக்காமல் அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள அரசு முயல வேண்டும். அதில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தால், சட்டத்தை மாற்றலாமே தவிர இம்மாதிரி மதங்களையே பிரிப்பது ஆபத்தாகத்தான் முடியும். 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். எல்லா உயிர்களிடத்தும் கடவுளைக் காண்பதே உயர்ந்த பக்தியாகும். எறும்பு முதல் யானை ஈறாக எல்லா உயிர்களிடத்தும் உதவி செய்தலும் தொண்டாகும். இதைத்தான் மதங்கள் போதிக்கின்றன. வேற்றுமையின்றி சமத்துவமாக கலந்து பழகும் உன்னதப் பண்பை வளர்க்கவும், மனித மனங்களிடையே உள்ள மாசுகளைக் களையவும்தான் மதங்கள் தோன்றின. மதங்கள் மனித மனங்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக் கூடாது. மதம் மனிதனுக்குப் பிடித்தாலும், மிருகங்களுக்குப் பிடித்தாலும் ஆபத்து ஒன்றுதான். மதம் கொண்ட யானையும், மதம் கண்ட மனிதனும் வகை வேறென்றாலும், சீர்கெடும்போது இரண்டும் ஒன்றாகிவிடுகிறது. 
மக்களிடையே காணப்படும் கலாசாரம், பண்பாடு, வாழ்வின் விழுமிய ஒழுக்கம் போன்றவைதான் நம் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி நிற்க வைக்கின்றன. 
நாம் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ, எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை, எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற மகாகவி பாரதியின் சிந்தனை உணர்வை அனைவரிடமும் விதைக்க வேண்டும். 
எல்லா மதங்களும் அன்பையே போதிகின்றன. மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் காட்டும் அன்பு எனும் நூலிழையில்தான் உலகையே இணைக்கின்றன. உலகத்தை ஒரே குடும்பமாக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே உண்டு. எனவேதான் திருமூலரும் தனது திருமந்திரத்தில் மந்திர வரியாக "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்றார். கடவுள் ஒருவரே - நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார். ஆறுகள் பலவாயினும் சேரும் இடம் கடல். மதங்கள் பலவாயினும் ஒருவனே தேவன். 
ஜாதி, மத பேதமின்றி இந்தியர் என்கிற ஒரே குடையின் கீழ் சமதர்ம பாங்கான சமுதயாம் உருவாக அனைவரும் உவப்போடு பாடுபடுவோம். மதம் எனும் பேய் பிடிக்காமல், மதச் சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.