ஊழல் ஒழிப்புச் சட்டம் பலனளிக்குமா?

ஊழல் என்பது உலகளாவியது. அது வெட்ட வெட்ட வளரும் நச்சுமரம் போன்றது.
Updated on
3 min read


ஊழல் என்பது உலகளாவியது. அது வெட்ட வெட்ட வளரும் நச்சுமரம் போன்றது. அதனை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றுதான் பலரும் பல காலமாக முயன்று வருகின்றனர். ஆனால் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகி விடுகின்றன. ஆயினும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
அண்மையில் சர்வதேச ஊழல் தடுப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்' நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஆசியப் பகுதியில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பள்ளிகள், காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும், அடையாள ஆவணங்கள் மற்றும் பல சேவைகளைப் பெறுவதற்கும் தாங்கள் லஞ்சம் கொடுத்ததாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 69 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிராக சிறப்பாக மோடி செயல்படுவதாக 53 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்தபடியாக 65 விழுக்காட்டுடன் வியத்நாம் நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகியவை முறையே மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ள நாடுகளாகும்.
ஊழல் தடுப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்' ஆசியப் பகுதியைச் சேர்ந்த 16 நாடுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 18 மாதங்களாக ஆய்வு நடத்தியது. பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதற்குக் கட்டாயமாக லஞ்சம் வழங்க வேண்டிய நிலையில் இருப்பதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே அமைப்பு கடந்த ஆண்டு உலக அளவில் ஊழல் மிகுந்த 168 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா 76-ஆவது இடத்தில் இருந்தது.
ஆசிய நாடுகளில் இந்தியா மற்றும் இலங்கையைப் பொருத்தவரை, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபோவதாக தலைவர்கள் அறிவித்ததால் ஏற்பட்ட எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை என்று அந்த அமைப்பின் தலைவர் ஜோஸ் உகாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் காவல்துறையில்தான் மிக அதிகமாக லஞ்சம் புழங்குவதாக 85 விழுக்காட்டினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அரசுத்துறைகள், தொழிலதிபர்கள், உள்ளூர் கவுன்சிலர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வரி வசூல் அலுவலர்கள் போன்றவர்களே அதிகமாக ஊழலில் ஈடுபடுவதாக இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறைந்த ஊழல் நாடுகளில் ஜப்பான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 0.2 விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் லஞ்சம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக, தென் கொரியாவில் 3 விழுக்காட்டினர் லஞ்சம் கொடுத்து அரசு சேவைகளைப் பெறுகின்றனர்.
ஊழல் தடுப்புச் சட்டம்' 1988-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் ஊழலுக்கான குற்றப்பிரிவுகளும், அவற்றுக்கான தண்டனை விவரங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் லஞ்சம் வாங்குகிறவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதே தவிர, லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் விதிகள் அதில் இல்லை. இந்தியாவில் இயற்றப்பட்ட எந்தச் சட்டத்திலும் இதற்கான விதிமுறை இல்லை.
ஆகவே முதல் முறையாக லஞ்சம் கொடுப்பதற்கும் தண்டனை விதிக்கத்தக்க வகையில் ஊழல் தடுப்புச் சட்ட'த்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அம்மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இது கடந்த 2018 ஜூலை 26 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த மசோதாவின்படி பொது ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தாலோ, கொடுப்பதாக உறுதி அளித்தாலோ ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
இருப்பினும், லஞ்சம் கொடுக்குமாறு நிர்பந்திக்கப்படுபவர்களைப் பாதுகாக்கும் அம்சம் இந்தச் சட்டத்தில் இருக்கிறது. அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் தரவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானவர்கள், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளிடம் ஏழு நாட்களுக்குள் புகார் தெரிவித்தால் அவர்களுக்கு எந்தச் சிக்கலும் வராது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்களும், இந்தச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, வணிக நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள், பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தாலோ, லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளித்தாலோ அவர்களுக்கு அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்.
லஞ்சம் பெறுபவர்களுக்கான குறைந்தபட்ச கால சிறைத் தண்டனை மூன்று ஆண்டுகள்; அதிகபட்சம் ஏழு ஆண்டுகள். சிறைத் தண்டனை அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
அதே சமயத்தில் பொது ஊழியர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், வங்கிப் பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்தச் சட்டத்தில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஏதேனும் பரிந்துரை தொடர்பான குற்றம் செய்திருந்தாலோ அல்லது தங்களது பணி தொடர்பான முடிவுகளை எடுத்திருந்தாலோ அத்தகைய பொது ஊழியர்மீது அவர்களுடைய மேல் அதிகாரியின் முன் அனுமதியில்லாமல் எந்தக் காவல்துறை அதிகாரியும் விசாரணை நடத்தக் கூடாது என்று இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் தனக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ லஞ்சம் பெறும்போதோ அல்லது பெற முயற்சிக்கும் போதோ, பொது ஊழியர் கையும் களவுமாகப் பிடிபட்டால் அவர் மீது விசாரணை நடத்த முன் அனுமதி தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் வழக்குகளை அதிக காலம் நீட்டித்துக் கொண்டே போகாமல் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திருத்தங்களெல்லாம் ஊழலை ஒழிப்பதற்குப் போதுமானவையாக இல்லை என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். எனினும் இந்தச் சட்டத் திருத்தம், ஊழலை ஒழிக்கும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களைக் களையவில்லை என்பதால் அரசியல் விமர்சகர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
சொந்தப் பயன்பாட்டுக்காகவோ, வருவாய்க்குப் பொருத்தமில்லாமலோ சொத்து சேர்ப்பது குற்றம் என்று சட்டத் திருத்தத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. பதவி வகித்த காலத்தில், தான் சேர்த்த சொத்து எந்தெந்த வருமானங்கள் மூலம் வந்தது என்று ஒருவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால், அதை உள்நோக்கத்துடன் சொத்து சேர்த்ததாக எடுத்துக் கொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் லஞ்சம் வாங்குவது குற்றம் என்றால் கொடுப்பதும் குற்றம் என்று கூறப்படுகிறது. எனவே லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க வேண்டும் என்பது ஐ.நா. ஆதரவு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், ஒருவர் லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டால் கொடுத்தவரைத் தண்டிக்கத் தேவையில்லை என்று அதற்கு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
லஞ்சம் கொடுத்தவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்னும் திருத்தம் கடுமையான விவாதங்களை எழுப்பியிருக்கிறது. காவல்துறையினர் லஞ்சம் கேட்டது தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார்களை காவல்துறையினர் பதிவு செய்வார்களா? பதிவு செய்ய மறுத்தால் என்ன செய்வது?
இவ்வாறு புகார் அளிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். லஞ்சம் தராததுடன் மேல் அதிகாரிக்குப் புகார் செய்ய மனுவும் தருகிறாயா என்று ஊழல் செய்வோர் மிரட்டவும் கூடும்.
இந்த ஊழல் சட்டத் திருத்தத்தில் ஏற்க முடியாத மற்றொரு விதியும் உள்ளது. மேல் அதிகாரியின் ஒப்புதலைப் பெற்ற பிறகே ஊழல் புகார் மீதான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்பதுதான் அது. ஒருவர் மீது வழக்கு நடத்த மேல் அதிகாரியின் அனுமதி தேவை என்று ஏற்கெனவே சட்டம் இருக்கும்போது விசாரணைக்கும் மேல் அதிகாரியின் ஒப்புதல் தேவை என்பது ஏற்கக் கூடியதாக இல்லை.
நேர்மையான அதிகாரிகள் பொய்யான புகார்களால் அலைக்கழிக்கப்படக் கூடாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். ஆனால், ஊழல் அதிகாரிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இந்த விதிகள் தடையாக உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் ஊழலை ஒழிப்பதற்கு உதவி செய்யாது.
ஊழலுக்கு எதிராகப் புகார் தருவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். லஞ்சம் கேட்பவர்களும், வாங்குகிறவர்களும் உடனடியாகத் தண்டிக்கப்பட்டால்தான் பிற அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்படும். இந்தத் திருத்தத்தினால் லஞ்சம் வாங்குபவர்களுக்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊழல் என்பது ரத்த வெறி பிடித்த கொடிய மிருகம். அதனை வேட்டையாடப் போனவர்கள் திரும்பி வந்ததில்லை. இனியும் இந்நிலை தொடரக் கூடாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com