ஒன்று உண்டு மானுட சாதி!

மானுடராய் பிறப்பவர் எவரும் சாதி, மத அடையாளங்களோடு பிறப்பது இல்லை. எந்தப் பெற்றோரும் தம் மழலைகட்கு பெயர் சூட்டும்போது சாதி மாலை அணிவிப்பது இல்லை.
Updated on
3 min read

மானுடராய் பிறப்பவர் எவரும் சாதி, மத அடையாளங்களோடு பிறப்பது இல்லை. எந்தப் பெற்றோரும் தம் மழலைகட்கு பெயர் சூட்டும்போது சாதி மாலை அணிவிப்பது இல்லை. பள்ளி பருவத்தில் தொடங்கும் சாதியைக் குறிப்பிடும் முறை வாழ்நாள் வரை, உரம் பெற்று உறுதி கொள்கிறது. மிகச் சொற்பமானவர்களே சாதி, மத அடையாளங்களைப் பொருட்படுத்துவதில்லை. பெரும்பான்மை மக்கள் தத்தம் சாதி, மதப் பிரிவு அடையாளங்களால் தாங்கள் பயன்பெற இயலும் என்பதால் அவற்றைக் கெட்டியாக பிடித்துக் கொள்கிறார்கள்.
 சாதித் தலைவர்களும் சாதி, மதம் ஒழிய வேண்டும் என்றும் சமூக நீதி வேண்டும் என்றும் முழங்குகிறார்கள். இவர்கட்கு பின்பலமாகவும், பின்புலமாகவும் இருப்பவர்கள் இவர்களின் சாதியினரே. ஆளும் அரசுகளும் சாதி வழிச் சலுகைகளைத் தந்து மக்களை பலவாறாக பிரித்து மகிழ்கின்றன.
 மகாகவி பாரதியார், மழலைப் பருவத்திலேயை மனதில் பதியும் வண்ணம், "சாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்றார்.
 நம் நாட்டின் மக்கட்தொகை 132 கோடி. இதில்தான் எத்துணை எத்துணை சாதிப்பிரிவுகள்? மதங்கள்? சுதந்திர நாட்டிற்கு அரசியல் சாசனம் எழுதிய குழுவிற்கு தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர், கடைக்கோடி பாமரன் பெரும்பான்மை மக்களால் புறந்தள்ளி வைக்கப்பட்டிருந்த கொடுஞ்செயலை அகற்ற எண்ணி, குறிப்பிட்ட வகுப்பார்க்கு குறிப்பிட்ட காலம் வரை இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்க சாசனம் எழுதினார்.
 குறிப்பிட்ட காலமும் கரைந்தது. எனினும், குறிப்பிட்ட வகுப்பார் கரை ஏறவில்லை என்பதால் கால வரையறை நீட்டிக்கப்பட்டது. சாதி இட ஒதுக்கீட்டால் உயர்ந்தவர்கள், தம் பிரிவினை உயர்த்த முன் வராதது மட்டுமல்ல, பிற பிரிவினரை அரவணைத்துக் கொள்ளவும் தவறினர். இந்நிலை இப்படியே நீடிக்குமானால், சூரிய, சந்திரர் இருக்கும் வரை இடஒதுக்கீட்டு கொள்கையின் காலமும் நீடித்துக் கொண்டே போகும். பின் எப்படி சாதி வேற்றுமைகள் குறையும்?
 அரசுகளும் உண்மையான சமதர்மம் காண முயலுவதை விட்டு, நேரத்திற்கு ஏற்ப சாதி, மதங்களுக்கு சலுகைகளை வழங்குகின்றனர். இதனால் ஒரு மாநிலத்தில் அதிகம் உள்ள இதர சாதியினர், தங்களுக்கு இத்தனை விழுக்காடு சலுகை தேவை எனப் போராடுகின்றனர். புதிய புதிய இளைஞர்கள் எல்லாம் தத்தம் சாதிகளின் தலைவர்களாக உருவெடுக்கின்றனர். கோரிக்கை ஊர்வலம், சாலை மறியல், முழு அடைப்பு இப்படியே போய் வன்முறையில் முடிகிறது. காவல்துறை நடவடிக்கை துப்பாக்கிக் சூட்டில் முடிகிறது.
 தமிழ்நாட்டில் பல ஆண்டுகட்கு முன்னர் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் காரணமாக நாடே நிலை குலைந்தது. வீரம் செறிந்த ராஜபுதனத்து மண்ணில் இட ஒதுக்கீட்டுப் போராட்டம். மாநிலமே அதிர்ந்து போனது. ஹரியாணாவில் தங்கள் சாதிக் கொடியினை ஏந்தி இட ஒதுக்கீடு வேண்டிப் போராட்டம் நடத்தினார்கள்.
 வழக்கம் போல் தடியடி. பலர் உயிரிழப்பு. பல ஆண்டுகளின் வளர்ச்சி ஓரிரு மாதங்களில் முடங்கியது. குஜராத் மாநிலத்தில் முன்னேறிய சமூகமும் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச்சொத்துகளுக்குக் கேடு விளைவித்தார்கள்.
 அண்மையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சாதி இட ஒதுக்கீட்டுப் போராட்டம், மும்பை நகரையே அடியோடு செயலிழக்கச் செய்தது. இப்படி மாநிலத்திற்கு மாநிலம் சாதிவாரியாக போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படாதா? இப்போது இன்னும் ஒரு படிமேலே போய் நீதிபதிகள் நியமனத்திலும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற குரல் மேலெழும்புகிறது.
 "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்' என்பது கிரேக்கப் பழமொழி. நம் நாட்டு இதிகாசங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், நீதி நூல்கள் எல்லாமே சாதி வேற்றுமைகளைக் களையவே முற்பட்டன. அத்தணராயினும், வேறு எந்த குலத்தவராயினும், திருக்கோயில்களில் இருக்கும் அறுபத்து மூவரை வணங்கத் தவறுவது இல்லை. அந்த மூர்த்திகளுக்கு ஆராதனைகளும் நிகழாமல் இருப்பது இல்லை.
 திருநாளைப் போவாரும், திருஞான சம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருநீலநக்க நாயனாரும், இளையான் குடி மாறனாரும், திருநீலகண்டரும் ஒரே வரிசையில்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
 வேதியரான திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணரை உடன் அழைத்துக் கொண்டு கோயில் கோயிலாகச் சென்று திருப்பதிகம் பாட, யாழ்ப்பாணர் யாழ் இசைத்தார். இடையில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு வேதியர் இல்லத்தில், தழல் வளர்த்து யாகம் புரியும் இடத்தருகே யாழ்ப்பாணரையும் அவர்தம் மனைவி மதங்க சூளாமணி அம்மையாரையும் துயில் கொள்ள வைத்தார்.
 திருவரங்கத்தில் திருப்பாணாழ்வாரிடம், லோகசாரங்கரைத் தோளில் ஏற்றி வர திருவரங்கனே ஆணையிட்டாராம். காசி நகர்ப் பெரு வீதியில் ஆதிசங்கரரேயே கடை நிலைக் குடிமகனைக் கொண்டு மடக்கி மகிழ்ந்தாரே இறைவன்! இந்த காட்சிகள் எல்லாம் "சாதி இரண்டொழிய வேறில்லை' என்ற ஒளவைப் பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்க வைத்த நிகழ்வுகள் அல்லவா?
 ஆனால், நாம் இன்றும் திருந்தினோம் இல்லை. சிவபெருமானே, தனக்கு அனுதினமும் அருச்சனை புரிந்து வழிபாடு இயற்றும் சிவகோசரியாரைக் காட்டிலும், காளத்தி வேடனைத் தானே அதிகமாகக் காதலித்து மகிழ்ந்தார். இன்னும் ஏன்? இதயம் கவர் இதிகாசங்களான இராமாயணமும், மகா பாரதமும் அந்தணர்களாலோ அன்று உயர் வகுப்பு எழுத்தர்களாலோ வரையப்படயில்லையே! அனுதினமும் காலையும், மாலையும் அந்தணர்களால் மந்திரமாக உச்சாடனம் செய்யும் காயத்திரி மந்திரம், சத்தியர் ஒருவரால் வழங்கப்பட்டது தானே!
 யாராக இருந்ததாலும், அவரது பிறப்பை விட, மேன்மையும், தகுதியும்தான் உயர்வுக்கு வழி காட்டும். அண்ணல் அம்பேத்கர் வேண்டுகோளை ஏற்று அவரது உயர்கல்விக்கு நிதியுதவி செய்தாரே பரோடா மன்னர், அவர் என்ன குலம் என்று எண்ணினார் இல்லை. இவரது அறிவின் ஆழம் கருதியும், சட்ட நுணுக்க வல்லமை கருதியும் அல்லவா இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைவராக அமர்த்தப்பட்டார். திருநாளைப்போவாரின் உண்மையான இறையுர்ணவும் தொண்டுள்ளமுமே, பாரதியை "நந்தனைப் போல் ஒரு பார்ப்பானை நானிலத்தில் கண்டதும் இல்லை' என்று பாட வைத்தன. அவருக்காகத் திருப்புங்கூர் நந்தியும் சற்றே விலகியது.
 சாதிவழி இட ஒதுக்கீட்டால் சாதிப் பிரிவுகள் மலிந்து, அவை நாட்டை மெலியச் செய்துவிடும். காலையில் தன் சாதி மாநாடு; மாலை சாதி, மத ஒழிப்பு மாநாடு; மதம் ஒழிய மைய மண்டபத்தில் போர்க்குரல். பின்னர் ஒரு நாளில் சிறு பான்மையோர் நலம் காக்கக் கருத்தரங்கம் - என்ன போலி மனிதர்கள்? சிறுபான்மையோ, பெரும் பான்மையோ தேவையில்லை. பொது மனப்பான்மை மட்டுமே வேண்டும். "சட்டத்தின் கண்களுக்கு முன் அனைவரும் சமம்' என்ற லத்தின் பழமொழிக்கு ஏற்ப தலைவர்கள் நடக்க வேண்டும். பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்கினால் மட்டுமே சாதிச் சச்சரவுகள் தொலையும்.
 திரையங்குகளில், உணவு விடுதிகளில், பேருந்துகளில், தொடர் வண்டிகளில் எப்படி சாதி இனம் காண முடியாத நிலை இருக்கிறதோ, அதே நிலை எல்லா இடங்களிலும் பரவ வேண்டும். ஏழை- பணக்காரன், படித்தவன்- படிக்காதவன், உழைப்பவன்-சோம்பறி, நேர்மையாளன்- பொய்யுரைப்பவன் என்று பேதங்களை சாதிகள் அல்லாத இரு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். எதனையும் இலவசமாகக் கொடுத்து ஏழ்மையை வளர்க்கக்கூடாது. உழைப்பின் உன்னதத்தை உணருமாறு சொல்லிக் கொடுக்க வேண்டும். உழைத்தால் உயர்வு நிச்சயம் என்பதைக் காட்ட வேண்டும்.
 யாரும் தான் இன்ன சாதியில் பிறக்க வேண்டும் என்று நேர்ந்து கொள்வது இல்லை. முப்பிறவியில் என்ன சாதியில் பிறந்தோம் என்று அறியவும் இயலாது. ஆண்டாண்டு காலமாக நீங்கள் எங்களை அடக்கி ஆண்டீர்கள் என்றும் நாங்கள் தான் இந்நாட்டையை ஆண்டவர்கள் என்றும் சொல்லி சமர் செய்வது நிழலோடு போரிடுவது போலாகும். இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம். ஒன்று உண்டு மானுடசாதி என்று வாழுதல் வேண்டும்.
 ஸ்ரீராமாநுஜர், குருநானக், ஸ்ரீநாராயண குரு, தேசப்பிதா காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், பெரியார் ராமசாமி போன்ற சீர்திருத்தச் செம்மல்கள் மீண்டும் மீண்டும் தோன்ற வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். அமெரிக்காவைப் போல், இங்கிலாந்தைப் போல், அரசியல் கட்சிகளின் எண்ணிக்கைக்குக் கடிவாளம் போட வேண்டும். இதனால், தேர்தல் செலவுகள், அரசியல் பேரங்கள் கட்சிச் சண்டைகள் எல்லாம் வெகுவாகக் குறையும். "எல்லாரும் ஒர்குலம்; எல்லாரும் ஒர் இனம்; எல்லாரும் இந்திய மக்கள். எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை' என்ற பாரதியின் வாக்கு கனவாகும்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com