'ஜாதி பாகுபாடு கொடுமையானது; ஜாதியை ஒழிக்க வேண்டும்; ஜாதி இருக்கும் வரை இந்த சமுதாயம் முன்னேறாது; ஜாதியை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்' என ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டே மறுபக்கம் ஜாதியை தூக்கிப்பிடிப்பது நியாயமா? அதுவும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, தன் பணியின் நிமித்தம் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்தவரை "அவர் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்', "அவர் எங்கள் வீட்டுப் பெண்' என அவருக்கு ஜாதிச் சாயம் பூசி ஒரு சாரார் கொண்டாடுவது அந்த அதிகாரியின் உழைப்பையும், திறமையையும் மதிப்பவர்களுக்கு மன வருத்தத்தையே ஏற்படுத்தும்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் வெள்ளை உடை அணிந்து அங்கும் இங்கும் ஓடியாடி சுறுசுறுப்பாக பணியாற்றியவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி. அமுதா. தமிழக அரசின் முதன்மைச் செயலர் நிலையில் இருக்கும் அவர், தற்போது உணவு பாதுகாப்புத் துறை ஆணையராக உள்ளார். மெரினா கடற்கரையில் கருணாநிதியின் இறுதிச் சடங்கை மேற்கொள்ளும் பணிக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளில் அவரும் ஒருவர். தனக்கு ஒதுக்கப்பட்ட பணியில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செய்து முடித்தார். அதற்காக ஊடகங்களாலும், பொதுவெளியிலும் அவர் பாராட்டப்பட்டார்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே இருக்கும் எதிர்மறையான எண்ணங்களுக்கு மாறாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியாற்றினார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் சிலர், அவரது ஜாதியை குறிப்பிட்டும், அவர் பிறந்த ஊர், பூர்வீகம், குலம், கோத்திரம் வரை அலசி ஆராய்ந்தும் பதிவிட்டு பாராட்டி பரவசப்பட்டனர். இதன் மூலம் இதுவரையில் அந்தப் பெண் அதிகாரி எந்த ஜாதி, எந்த மதம் என்று தெரியாதவர்களுக்குக் கூட எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டினர். இது ஜாதிய அவர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால், தனது திறமை மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கை வைக்கும் ஒரு நேர்மையான அதிகாரி அதை ஒருபோதும் விரும்ப மாட்டார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளுக்கு ஜாதிச் சாயம் பூசுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு அதிகாரியின் ஜாதி பொதுவெளியில் தெரியாத வரை அவரது பணிக்கால நடவடிக்கையானது செயல் சார்ந்த வகையில் மட்டுமே விமர்சிக்கப்படும். அதேவேளையில், அந்த அதிகாரியோ அல்லது ஜாதி அனுதாபிகளோ அவரது ஜாதியை பகிரங்கப்படுத்தும்போது, அவர் அரசு சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு நேர்மையாக செய்யும் பணிகளில் கூட குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு ஜாதி சார்ந்த முறையில் விமர்சனம் செய்யப்படுகிறது. இதனால் அவரது நேர்மை கேள்விக்குறியாகி எஞ்சிய பணிக்காலம் பாதிப்புக்கு உள்ளாகலாம். இதை அதிகாரிகளுக்கு ஜாதிச் சாயம் பூசுவோர் உணர வேண்டும்.
கடந்த 1995-இல் தென் மாவட்டங்களில் இரண்டு ஜாதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. அதனைத் தொடர்ந்து ஒரு ஜாதியைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவர் ஒரு ஜாதிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என எதிர்தரப்பினர் புகார் கூறியதே காரணம். அவர் நல்ல நிர்வாகியாக இருந்தாலும் கூட அவரது திறமையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட இரு ஜாதிகளைச் சேர்ந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை அந்த மாவட்டங்களில் உயர் பதவிகளில் நியமனம் செய்யக் கூடாது என அரசு உத்தரவிட்டது. இதனால், நேர்மையும், திறமையும், அனுபவமும் மிக்க அதிகாரிகளை சிக்கலான சூழ்நிலைகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில் சிலர், தங்கள் ஜாதி மீதுள்ள பற்றுதலினாலும், தான் பிறந்த ஜாதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உந்துதலினாலும் சில வேளைகளில் அவர்களே தங்களது ஜாதிய அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்வது உண்டு. அப்படி வெளிக்காட்டிக் கொள்வோரை ஜாதிய அமைப்புகள் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு அவர்களை தங்களின் பாதுகாவலராக பாவிக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் அவர்களது எஞ்சிய பணிக்காலம் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் பலர் தமிழ்நாட்டில் உண்டு. சிலர் பல்வேறு சோதனைகளுக்கு ஆளானதும் உண்டு. அந்த அதிகாரிகளின் முழுத் திறமையையும் பயன்படுத்தும் வகையிலான முக்கியமான அரசுத் துறைகளில் அவர்கள் பணிநியமனம் பெறாமலேயே பணி ஓய்வு பெற்றுவிடும் சூழ்நிலையும் உருவாகி விடுகிறது.
தனக்கு ஜாதிய அடையாளத்தை விரும்பாத சில நேர்மையான அதிகாரிகளைக் கூட சில ஜாதிய அமைப்புகள் விட்டுவைப்பதில்லை. பொதுநிகழ்வுகளில் தங்கள் ஜாதியைச் சேர்ந்த அதிகாரிகளைப் பாராட்டி ஜாதிச் சங்கங்களின் பெயரில் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். நகரின் முக்கிய இடங்களில் பதாகைகளை வைக்கின்றனர். இது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. குறிப்பிட்ட அதிகாரிகள் அவற்றை விரும்பாதபோதும் ஜாதிச் சங்கங்கள் தங்களின் சுயநலத்துக்காக இவ்வாறு செயல்படுவது அதிகாரிகளை மட்டுமின்றி சமுதாயத்தையும் பாதிக்கிறது என்பதை ஜாதிய அமைப்புகள் உணர வேண்டும். ஒவ்வொரு ஜாதிச் சங்கமும் அவரவர் ஜாதியைச் சேர்ந்த அதிகாரிகளை இனங்கண்டு இவ்வாறு ஜாதிச் சாயம் பூசத் தொடங்கினால் நடுநிலையான அரசு நிர்வாகம் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் ஜாதிய பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் பரவலான புகார் உள்ளது. தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட பகிரங்க புகார்கள் எதுவும் இல்லை என்ற போதிலும், தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் போன்ற உயர் பதவிகளிலும், முக்கியமான அரசுத் துறைகளிலும் பட்டியலினத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, தகுதியும், திறமையும் மிக்க அதிகாரிகள் உயர் பதவிகளைப் பெற்று மக்களுக்கு சிறப்பன முறையில் சேவையாற்ற வேண்டுமானால் அவர்களுக்கு ஜாதிச் சாயம் பூசாதிருப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

