வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சீக்கியப் படுகொலையும் காங்கிரஸூம்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் அப்பாவி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தொடர்பு

Updated On :30 ஆகஸ்ட் 2018, 10:15 pm

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் அப்பாவி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தொடர்பு இல்லை என லண்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 
சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி, இந்திய அரசுக்கெதிராக, ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா தலைமையில் சீக்கிய கடும் போக்காளர்கள் போராடி வந்தனர். சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயில் மீது "ஆபரேஷன் ப்ளூஸ்டார்' என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கைக்கு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். இந்த ராணுவ நடவடிக்கையால் பிந்தரன்வாலாவும் அவரது தீவிரவாதக் குழுவினரும் முற்று முழுதாகக் கொல்லப்பட்டனர். கூடவே, பொற்கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். 
"ஆபரேஷன் ப்ளூஸ்டா'ருக்குப் பழிவாங்கும் வகையில், 1984-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31- ஆம் தேதி காலை 9.15 மணியளவில், தனது வீட்டில் வைத்து இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.  இதைத் தொடர்ந்து தலைநகர் தில்லியிலும், அண்டை மாநிலங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 3 நாள்கள் தலைநகர் தில்லியில் உள்ள சீக்கியக் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்தன. தில்லியில் மட்டும் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீக்கியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தில்லியை விட்டு பஞ்சாப்புக்கு குடிபெயர்ந்தனர். 
சீக்கியர்களுக்கெதிரான இந்த வன்முறைகளை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு காங்கிரஸ் அரசு அரங்கேற்றியதாகவும், தனது ஆளுகைக்குள்பட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இந்த வன்முறைகளை அவர்கள் ஊக்குவித்ததாகவும் சொல்லப்படுகிறது. தில்லியில் மூன்று நாள்கள் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைத் தாண்டவத்துக்கு,  "கூன் ஹா பத்லா கூன்' என்ற வாக்கியம், "கோர்ட் வேர்டாகப்' பயன்படுத்தப்பட்டது. காங்கிரஸ் உயர் மட்டத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், பல கோஷங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதியாக இந்த "கூன் ஹா பத்லா கூன்', கோஷம் தேர்வு செய்யப்பட்டது என்றும், இந்தக் கோஷத்தை உருவாக்கியவர் ராஜீவ் காந்தியின் மைத்துனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு என்று கூறுகிறார் சீக்கியப் படுகொலை தொடர்பாக ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ள பாவ் சிங் என்ற எழுத்தாளர். 
31-ஆம் தேதி மாலை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய வன்முறை வெறியாட்டம் ஒரு இரவுக்குள் தில்லி முழுவதும் பரவி, மிகப் பெரிய இனப்படுகொலை வெறியாட்டமாக மாறியது. சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் ஜக்தீஷ் டைட்லர், சஜன்குமார், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் எச்.கே.எல். பகத், நாடாளுமன்ற உறுப்பினர் தரம்தாஸ் சாஸ்திரி, இன்றைய தில்லி காங்கிரஸ் 
தலைவர் அஜய் மாக்கனின் மாமனார் லலித் மாக்கன் என்று வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், கலவரத்தை நேரில் கண்ட பத்திரிகையாளர்கள் உள்படப் பலரும் விசாரணைக் கமிஷன் முன்பாக சாட்சியமளித்துள்ளனர்.
இந்திராகாந்தியின் கொலையால் சடுதியாக ஏற்பட்ட குழப்ப நிலையால் இந்தப் படுகொலைகள் நிகழ்ந்ததாக காங்கிரஸ் முட்டுக் கொடுத்தது. ஆனால், இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்த 'மக்கள் சிவில் உரிமைக் கழகம்' இதை மறுத்துள்ளது. மாறாக, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து அதன் மூலம், இந்திரா காந்தி கொலையால், சீக்கியர்கள் மீது வெறுப்பில் இருந்த இந்துக்களின் வாக்குகளைக் கவர்ந்து, தேர்தலில் பெரு வெற்றி பெறுவதுதான் காங்கிரஸ்காரர்களின் நோக்கம் என்கிறன இந்த அமைப்பின் ஆய்வுகள். 
நவம்பர் 1, 2 ஆம் தேதிகளில் முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது, தில்லியில் சீக்கியர்கள் மீது வன்முறை நடைபெறுவதாக "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை மட்டுமே தொடர்ந்து செய்திகளை வெளியிட்டது. இந்தச் செய்திக்காக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்கள் காங்கிரஸ் குண்டர்களால் தேடித் தேடித் தாக்கப்பட்டனர். சீக்கியப் படுகொலைகளை ரிப்போர்ட் செய்து, காங்கிரஸ் கட்சிக் குண்டர்களிடம் அடிவாங்கிய பத்திரிகையாளர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர். 
தில்லியில்  "தினமணி' அலுவலகம் அமைந்துள்ள ஐ.டி.ஓ.வில் இருந்து வெறும் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திரிலோக்புரி. அங்கிருந்த சீக்கிய குடியிருப்பொன்று, காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டு, சுமார் 1000 சீக்கியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த மூன்று தினங்களில் திரிலோக்புரியில் மட்டும் சுமார் 600 பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். அவர்கள், தில்லி புறநகர் பகுதியான திலக் விஹாரில் குடியேற்றப்பட்டனர். 
1984-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 19 ஆம் தேதி, இந்தியா கேட்டுக்கு அருகில் உள்ள, தில்லி போட் கிளப்பில் இருந்து, தேச மக்களுக்கு உரையாற்றிய, இந்திராவின் மகன், ராஜீவ் காந்தி, " மிகப்பெரிய விருட்சம் ஒன்று பெயர்ந்து விழும் பொழுது அந்த நிலம் சற்று அதிரவே செய்யும்" என்று சீக்கியப் படுகொலைகளை நியாயப்படுத்திப் பேசினார். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில், சீக்கியப் படுகொலைக்காக மனம் வருந்தவும் இல்லை. மன்னிப்புக் கோரவும் இல்லை. 
குறைந்தபட்சமாக, காங்கிரஸ் கட்சிக்கும் சீக்கியப் படுகொலைக்கும் உள்ள தொடர்பைக் கூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே, ராஜீவின் மகன் ராகுல் , 34 ஆண்டுகளுக்குப் பிறகு, சீக்கியப் படுகொலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பை மறுக்கிறார். 
அன்பை, சகிப்புத் தன்மையை பரப்புவதுதான் காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தி, மன்னிப்பில், சகிப்புத் தன்மையில் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே நம்பிக்கை உள்ளது என்றால், காங்கிரஸ் கட்சியின் பெயரால் நடந்த அநியாயங்களை ஒத்துக் கொள்வதுதானே குறைந்தபட்ச நேர்மைத் தன்மையாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.