தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தெளிவு பிறக்கட்டும்!

மனிதன் ஒரு சமூக விலங்கு. கூட்டுணர்வுடனும், ஒற்றுமையாகவும் வாழ சமூகம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

Updated On :26 ஜனவரி 2018, 9:09 pm

மனிதன் ஒரு சமூக விலங்கு. கூட்டுணர்வுடனும், ஒற்றுமையாகவும் வாழ சமூகம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இருவரது நட்புறவு என்பதானது வளர்ந்து, விரிந்து, பரந்து, சங்கிலி போல நீண்டு கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர், நண்பர், ஊரார், சமூகம் மற்றும் சாதி, இனம், மதம் என மனித குலம் அனைத்தும் ஓரினமாக மனிதநேயம் சிறக்க அடிப்படையாக இருப்பது இந்த நட்புறவுதான் என்பது மறுக்க முடியாத உண்மை. 
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தற்கால மனித சமுதாயம் வசதியான வாழ்க்கை பெற்றிருக்கிறது. ஆனால், மனதளவில் நிறைவோ, அமைதியோ பெற முடியாமல் தனிமையையே எங்கும் காண முடிகிறது. 
இளம்தலைமுறையினரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சகிப்புத் தன்மையும் காண்பது அரிதாகி வருகிறது. அதனால், குடும்பத்திற்குள்ளேயும், நண்பர்களிடையேயும், கணவன் மனைவியிடையேயும் பிரச்னைகள் வளர்ந்து இறுதியில் மன முறிவும், மண முறிவும் ஏற்படுகின்றன. 
நட்புணர்வு பூணும் இருவரில் ஒருவர் பொறுத்துப் போனால்தான் அவர்களிடையே அன்பும், நட்பும் வளர்ந்து, நிலைக்க, நீடிக்க வகை செய்யும். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இரண்டாயிரத்துக்கும் குறைவான விவாகரத்து வழக்குகளே தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தற்போது எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில் ஒரு குடும்பநல நீதிமன்றம் என்றிருந்த நிலை மாறி இப்போது 8 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. எந்த அளவுக்கு நவீன வாழ்வில் மண உறவு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பது இதிலிருந்து தெரியும்.
மண முறிவுகளைக் களைந்து குடும்பம் செழிக்க வேண்டும் என்பதற்காக 1984-ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உயர் நீதிமன்றங்களைக் கலந்தாலோசித்து, மாநிலங்கள் குடும்ப நீதிமன்றங்களை அமைக்க வழிவகை செய்யப்பட்டது.
2016-ஆம் ஆண்டு மே மாத புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 439 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 76 குடும்பநல நீதிமன்றங்கள்; தமிழ்நாட்டில் 20 குடும்பநல நீதிமன்றங்கள். இது இந்திய அளவில் 4.56%. குடும்பநல நீதிமன்ற நீதிபதி பெரும்பாலும் நடுவரைப் போல, சமரச அதிகாரியைப் போல தம்பதிகளுக்கு இடையே சமரசம் ஏற்படவே பாடுபடுகிறார். இரு தரப்பிற்கும் உடன்பாட்டை உருவாக்க ஆலோசகர்களை நீதிமன்றம் நியமிக்கிறது. 
இந்தியாவில் திருமணம் என்பது புனிதச் சடங்கு. ஆனால், இப்போதெல்லாம் புதிதாக திருமணமாகும் இளம் தம்பதியரில் 10% பேர் 6 மாதங்களுக்குள் நீதிமன்ற படியேறி விவாகரத்து வழக்குத் தொடுக்கின்றனர்.இக்கால இளையத் தலைமுறையினரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத் தன்மை, பொறுமை இல்லாததே இதற்குக் காரணம். 
வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுணர்ந்த பெற்றோர்கள்தான் இளம் தம்பதிகளுக்கு நட்புணர்வுகளை எடுத்துச் சொல்லித் தர வேண்டும். தன் மகளுக்காகவோ, மகனுக்காகவோ மற்றவரைக் குறை கூறி, தம்பதி இடையே பிணக்கை ஏற்படுத்தக் கூடாது. 
தமிழகத்தில் விவாகரத்து வழக்குகளைக் குறைக்க இளம் தம்பதிகளின் பெற்றோர்களுக்கு முதலில் கவுன்சிலிங்-ஆலோசனை- அளிக்க வேண்டும். அதன் பிறகே விவாகரத்து கோரியவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நிச்சயமாக 10 முதல் 20 சதவீத வழக்குகளைத் தவிர்க்கலாம்' என்கிறார் பிரபல வழக்கறிஞர் ஒருவர்.
இங்கே ஒரு புத்தர் கதையை நினைவுகூரலாம். ஒரு நாள் புத்தர் தனது சீடர்களுடன் அருகே உள்ள ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த ஊருக்குச் செல்ல ஓர் ஆற்றைக் கடக்க வேண்டும். வெகு தூரம் நடந்து வந்ததால், அனைவரும் சோர்வடைந்திருந்தனர். அதனால் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு செல்ல முடிவு செய்த புத்தரும், சீடர்களும் ஆற்றங்கரை அருகே ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தனர். 
அப்போது, புத்தர் தனக்கு மிகவும் தாகமாக இருப்பதாகவும், ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வரும்படி ஒரு சீடரிடம் கூறினார். உடனே ஆற்றை நோக்கி விரைந்தார் சீடர். அப்போது தான் அவருக்கு முன்பாக ஒரு மாட்டு வண்டி ஆற்றை கடந்துக் கொண்டிருந்தது. அதனால் ஆற்று நீர் கலங்கி அழுக்காக இருந்தது. இந்த அழுக்கு நீரை குருவுக்கு குடிக்க கொடுப்பது சரியாகாது என்று யோசித்த சீடர் புத்தரிடம் வந்து, "அந்த ஆற்று நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை குருவே' என்றார். 
"இல்லை, அப்படி இருக்காது, நீ கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை சென்று பார்த்து விட்டு வா' என்றார் புத்தர். 
சிறிது நேரம் கடந்த பின்பு கிளம்பிச் சென்ற சீடர் இப்போது ஆற்று நீர் தெளிவாக இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு புத்தரிடம் திரும்பினார். "குருவே, அழுக்கான ஆற்று நீர் எப்படி மிகவும் நன்றாகவும், தெளிவாகவும் மாறியது? இந்த மந்திரத்தை நானும் கற்றுக் கொள்ளலாமா?' என்று பணிந்து கேட்டார். 
புன்னகைத்த புத்தர், "நான் மாயாஜாலம் எதுவும் நிகழ்த்தவில்லை. நீ தண்ணீர் கொண்டு வருவதற்கு முன்பு ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்து சென்றிருந்தது. அதனால் ஆற்று நீர் கலங்கிவிட்டது. மேலும், நான் தண்ணீர் கேட்டபோது, எனக்கு விரைவில் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக நீ பதற்றத்துடன் சென்றதால், உன்னால் ஆற்று நீர் கலங்கி இருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கலங்கிய நீரைப் போன்றுதான் மனமும். குழம்பிய நீர் எப்படி குடிக்க ஏற்றதாக இருக்காதோ, அது போல குழப்பமான மன நிலை முடிவெடுக்க ஏற்றதல்ல. எனவே ஒரு முடிவை அவசர கதியில் எடுப்பதோ, கோபத்தில் எடுப்பதோ தவறாகவே முடியும்' என்று போதித்தார்.
நண்பர்களாகட்டும், கணவன் மனைவியாகட்டும் ஒருவர் செய்த தவறை மற்றவர் பொறுத்து அமைதி காப்பாரேயானால் நட்பு தொடரும். மனிதன் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கை அமைவது இல்லை. எப்போதுமே யாரும் தவறும் செய்து கொண்டிருப்பதில்லை.
தட்டிப் பறித்தவர் வாழ்ந்ததில்லை, விட்டுக் கொடுத்தவர் வீழ்ந்ததில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.