ஒரு கொலை... சில கேள்விகள்...

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே நம்பியாற்றில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை தனிப்பிரிவு காவலர் ஜெ. ஜெகதீஷ்துரை
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே நம்பியாற்றில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை தனிப்பிரிவு காவலர் ஜெ. ஜெகதீஷ்துரை (34), கடத்தல்காரர்களால் இரும்புக் கம்பியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 
மணல் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டுள்ள காவலர் ஜெகதீஷ்துரை குடும்பத்துக்கு முதல்வர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை அளிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். பணியின்போது இறந்துபோன காவலரின் குடும்பத்தை பாதுகாக்க அரசு, தான் செய்ய வேண்டிய கடமையை செவ்வனே செய்துள்ளது. காவலர் ஜெகதீஷ்துரையின் செயலை வீரமரணமாக கருதி அவரது குடும்பத்துக்கான நிவாரண நிதியாக ரூ. 1 கோடி அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த சூழ்நிலையில், சட்டம் மற்றும் தார்மீக அடிப்படையில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
காவலர் ஜெகதீஷ்துரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நேரடியாக தகவல்களை தெரிவிக்கும் தனிப்பிரிவுக்காக விஜயநாராயணம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு காவலர். அந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ரகசியமாக உளவுபார்த்து அதை தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவரது பிரதான கடமை. அவசர அவசியம் கருதி சில நேரங்களில் உள்ளூர் காவல்நிலையத்திலும் நேரடியாக தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவலின்பேரில் களத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் கடமையே தவிர தனிப்பிரிவு காவலரின் வேலை அல்ல. 
அப்படி இருக்கும்போது ஜெகதீஷ்துரை மணல் கடத்தல் கும்பலை பிடிக்க நள்ளிரவு நேரத்தில் ஏன் தனியாக சம்பவ இடத்துக்கு சென்றார்? விதிமுறையை மீறி தனிப்பிரிவு காவலர் செயல்பட்டது சரியா? அதை அரசு ஏற்றுக் கொள்கிறதா போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.
மணல் கடத்தல் என்பது உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் ஒருபோதும் நடைபெறாது. நம்பியாற்றில் மணல் திருட்டு என்பது பல ஆண்டு காலம் நடைபெற்று வரும் ஒரு சட்டவிரோத தொழில். எனவே, அந்த மணல் திருட்டு குறித்து தனிப்பிரிவு காவலர் ஏற்கெனவே, உயர் அதிகாரிகளுக்கு கட்டாயம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அதன்படி, உள்ளூர் காவல்துறையினர் மணல் திருட்டை தடுத்திருக்க வேண்டும். மணல் திருட்டை தடுத்திருந்தால் ஜெகதீஷ்துரையின் கொடூர கொலை நிகழ்ந்திருக்காது. அப்படியானால் இத்தனை காலம் மணல் திருட்டை அனுமதித்தவர்கள்யார் யார்? அதனால் பயன்பெற்றவர்கள் யார் யார்? அவர்கள் மீதான நடவடிக்கை என்ன?
பொதுவாகவே, உள்ளூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் முதல் அதிகாரிகள் வரை அந்தந்த காவல்நிலையங்களில் பணியாற்றும் தனிப்பிரிவு காவலர் மீது நல்லெண்ணத்துடன் இருக்க மாட்டார்கள். காரணம், அந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் மட்டுமின்றி, காவல்நிலையங்களில் நடைபெறும் சில முறைகேடுகள், விசாரணை குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் சில விரும்பத்தகாத நடவடிக்கை குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தனிப்பிரிவு காவலர்கள் அறிக்கை அளிப்பர். இதனால் அவர்களுக்குள் எப்போது சுமுகமான உறவு இருப்பதில்லை. ஜெகதீஷ்துரை இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அவரது மனைவி உள்ளூர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தபோதும் அவரது நிலை குறித்து அறியவோ, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவோ காவல்துறையினர் உரிய அக்கறைகாட்டவில்லை என அவரது மனைவி ஊடகங்களிடம் புகார் தெரிவித்தார். அது உண்மையானால் உள்ளூர் காவல்துறையினர் அக்கறை காட்டாததற்கான காரணம் என்ன? இதற்கெல்லாம் ஒரே பதில் மணல் கடத்தல் கும்பல் கொடுக்கும் மாமூல்தான். அதை பெறுவதிலும், பிரிப்பதிலும் சிக்கல் எழாத வரையில் யாருக்கும் எந்த பிரச்னையும் எழுவதில்லை. சிக்கல் எழும்போது மோதல் தவிர்க்க முடியாததாகி உயிர்ப்பலி வரை சென்று விடுகிறது.
அண்மையில், கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் மாநிலம் சென்ற சென்னை 
காவல் ஆய்வாளர் எஸ். பெரியபாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அவர் கொள்ளையர்களால் சுடப்பட்டு இறந்தார் எனக் கூறி அவரது குடும்பத்துக்கு அரசு ரூ. 1 கோடி வழங்கியது. ஆனால், அவரை தான்தான் தவறுதலாக சுட்டுவிட்டதாக கூறி அவரோடு சென்ற சக ஆய்வாளர் ஒருவர் பெரியபாண்டியின் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். இது முன்பே தெரிந்திருந்தால் அரசு அந்த ரூ. 1 கோடியை வழங்கி இருக்குமா? அரசின் விருதும், நிவாரண நிதியும் ஒருவரின் நற்செயலுக்குதானே தவிர பதவிக்காகவோ, ஆளுக்காகவோ அல்லது வாக்குவங்கி அரசியலுக்காகவோ அல்ல என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விருதுகளும், நிவாரண நிதிகளும் தகுதியற்றவர்களுக்குத் தரப்பட்டு மோசமான முன்னுதாரணங்களாகிவிடக் கூடாது.
மணல் கடத்தலில் ஈபடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கடந்த திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் வெறும் கூலிக்காரர்கள்தான். பின்னணியில் இருப்பவர்கள் என உள்ளூர் மக்களால் அடையாளம் காட்டப்படும் யார் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாயவில்லை. இதையெல்லாம் தெரிந்துதான் இப்போது, மணல் கடத்தலை தூண்டுபவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் இறந்துபோகிறார்களோ அந்தப் பகுதியின் 
காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். அதேபோல், மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால் மணல் கடத்தல் நிச்சயம் முடிவுக்கு வரும். அது மட்டுமல்ல, விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியா
வதையும் தடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com