மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு
நாம் ஒரு நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் பல வழிகள் இருக்கின்றன.


நாம் ஒரு நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் பல வழிகள் இருக்கின்றன. பொது இடங்களில் மனநோயாளிகளை நாம் நடத்தும் விதமும் அவற்றில் ஒன்று. ஆனால், நாமெல்லாம் அப்படி ஒன்றும் நாகரிமானவர்களில்லை என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் மனநோயாளிகளைச் சீண்டுவதும் பகடி செய்வதும் பலருக்கு இங்கு ஒரு வேடிக்கை. தெருவில் திரியும் மனநோயாளிகளைப் பலர் முன்னிலையில் கோபமூட்டுவது, அழவைப்பது, பயமுறுத்துவது, விரட்டுவது ஆகையவை சிலருக்கு பொழுதுபோக்கு. இப்படியெல்லாம் வளர்ந்து வந்த நமது நயத்தகு நாகரிகம், இப்போது கொள்ளை மற்றும் குழந்தைகள் கடத்தல் என்னும் சந்தேகத்தில் பின்னணியில் மனநோயாளாளிகள் சிலரது உயிரையும் பறிக்க வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் கேரள மாநிலத்தில் பசிக்காக உணவுப்பொருள்களைத் திருடிய மது என்ற மனநலம் குன்றிய ஆதிவாசி இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டதை யாரால் மறக்க முடியும் ?
அந்த இளைஞன் அடித்துத் துவைக்கப்படும் நேரத்தில் சுற்றி நின்றிருந்தவர்கள் தங்களது கைப்பேசியில் கைப்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டது அவனைக் கொன்றதைவிட மிகவும் கொடூரமான செயல்.
முன்பின் அறிமுகமில்லாதவர்களைச் சந்தேகப்படுவது மனித இயல்பு. அதிலும், கொள்ளை மற்றும் குழந்தைக் கடத்தல் பற்றிய வதந்திகள் பரவும்போது இத்தகைய சந்தேகங்கள் ஒரு கூட்டத்தைக் கொதிப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும். உண்மையான குற்றவாளிகளையும் அப்பாவிகளையும் இனம்பிரித்துப் பார்க்கின்ற நிதானமும் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும். அதன் விளைவாகத்தான் மனநோயாளிகள் கூட கொலை செய்யப்படும் அவலம் அரங்கேறுகின்றது. சந்தேகமோ அல்லது வேறு எந்தக் காரணமானாலும் சரி. அதற்காக, சந்தேகத்திற்கிடமான நபர் கொல்லப்படுவதை ஏற்க முடியாது. அதிலும், தாங்கள் நிரபராதிகள் என்று எடுத்துக்கூறவும் திறன் பெற்றிராத மனநோயாளிகள் தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் ஏற்கவே முடியாது.
இன்னும் சொல்லப் போனால், உண்மையான மனநோயாளிகளையே குற்றவாளிகளாகவும், மனநோயாளியைப் போல வேஷம் போடுபவர்களாகவும் கருதி அடித்து நொறுக்குகின்ற நாம்தான் நிஜமான மனநோயாளிகள் என்று சொல்ல வேண்டும்.
மற்றவர்களைப் போலவே, மனநோயாளிகளும் தங்களது இறுதி மூச்சு வரையில் ஒரு கெளரவமான வாழ்க்கையை வாழும் உரிமை கொண்டவர்களே. இந்தப் பின்னணியில் இன்னொரு உண்மையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
வட மாநிலங்கள் சிலவற்றில் கணவனை இழந்த பெண்களை அவர்களுடைய குடும்பத்தினரே மதுரா நகரில் கொண்டுவந்து விட்டுப் போய்விடும் வழக்கம் உண்டு. அப்பெண்கள் தங்களது இறுதிக் காலத்தை மதுரா மற்றும் பிருந்தாவனம் போன்ற புனிதத் தலங்களில் உள்ள மடங்கள் மற்றும் கோயில்களில் கழிக்க வேண்டியதுதான்.
அதைப் போலவே, தங்களால் இனிமேலும் பராமரிக்கவோ சமாளிக்கவோ முடியாது என்ற நிலையில் உள்ள மனநோயாளிகளை அவர்களது உறவினர்களே சில சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுவதாக ஒரு செய்தி கூறுகின்றது. குறிப்பாக, தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான மனநோயாளிகள் சுற்றித் திரிகின்றார்களாம். மற்ற ஊர்களிலும் இப்படிப் பட்ட பலர் சுற்றித்திரிய வாய்ப்பு உண்டு.
உறவினர்களால் கைவிடப்பட்டவர்களைப் போலவே, தத்தமது இல்லங்கள் அல்லது மனநோயாளிகள் பராமரிப்பு இல்லங்களிலிருந்து தப்பித்து வெளியில் செல்பவர்களும் உண்டு. தமிழகம் மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலிருந்து வரும் மனநோயாளிகளும் நமது மாநிலத்தில் அநேக ஊர்களில் நடமாடிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்டவர்களில் ஒருசிலர் சமீபத்திய சந்தேகத் தாக்குதல்களில் சிக்கியவர்களாகவும் இருக்கலாம்.
இவ்விதம் திரிகின்ற ஆண் மனநோயாளிகள் தாக்கப்படுவது ஒருபுறம் இருக்க, பெண் மனநோயாளிகள் விஷமிகள் சிலரால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், நமது ஊரில், நாம் வசிக்கும் தெருவில் நம் கண்ணெதிரே உலவும் ஒரு மனநோயாளிக்கு முடிந்தால் உணவோ உடையோ அளித்து, அருகில் உள்ள ஏதாவது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு நாம் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மூலம் அந்த மனநோயாளிக்கு மறுவாழ்வு கிடைக்க உதவலாம்.
அரசு இயந்திரமும் இவ்வகையில் சில முன்முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியம்.
கைவிடப்பட்ட அல்லது வீட்டைவிட்டு வெளியேறிய மனநோயாளிகள் வீதிகளில் திரிவதால் இதுவரை அதிகம் நிகழாத (தாக்குதல், கொலை முதலிய) சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் இப்போது அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன.
இந்நிலையில், சமூக நலத்துறையினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இவ்விதம் வீதியில் திரியும் மனநோயாளிகளைக் கணக்கெடுத்து அவர்களை அருகிலிருக்கும் மனநோய் மருத்துவமனை அல்லது காப்பகத்தில் சேர்க்க வேண்டும். இயலுமெனில், அவர்களில் ஒரு பகுதியினரையாவது அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதை ஒரு போர்க்கால அடிப்படையில் செய்வது மிகவும் அவசியம்.
மனநோயாளிகள் ஒருவிதத்தில் இச்சமூகத்தின் குழந்தைகளைப் போன்றவர்கள். குழந்தைகளை நடுவீதியில் அலையவிடுவது நம் சமூகத்திற்குப் பெருமை தருமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...