சிலர், காலந்தவறாமை என்ற பழக்கத்தினை நேரத்தின் அருமை குறித்தும் , வாக்குத் தவறாமை என்பதன் அடையாளமாகவும் கொண்டிருப்பர்; இத்தகையோருக்கு , ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றது. சிலர், தங்களுக்கு நேரம் போதவில்லை என்பார்கள்; ஆனால் சிலரோ, தாங்கள் செய்ய நினைக்கும் எல்லாப் பணிகளுக்கும் நேரத்தினை ஒதுக்கும் திறமையும் சாமர்த்தியமும் பெற்றிருப்பார்கள். ஆங்கிலத்தில், a busy person is one who finds time to do everything என்று சொல்லப்படுவதுண்டு.
மனித இனம், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தை அடைந்தாலும்கூட, மனிதனால் உற்பத்தி செய்ய முடியாத-இழப்பின் ஈடு செய்ய முடியாத சில விஷயங்களில், முதலிடம் வகிப்பது நேரம் ஆகும். மனித உழைப்பைக் குறைத்து , குறுகிய நேரத்தில் அதிக உற்பத்தியை நோக்கியே விஞ்ஞானம் நம்மை இட்டுச் செல்லுகிறது. தொழிற்கூடங்கள், ஒவ்வொரு மணியிலும் எவ்வளவு அதிகமான பொருள்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற நோக்கில் செயல்படுகின்றன.
எழுபதுகளின் பசுமைப் புரட்சிகூட , அதிக உற்பத்தி விளைவிக்கும் பயிர் வகைகளை மட்டுமின்றி , குறுகியகாலப் பயிர்களை மக்களிடையே கொண்டு சேர்த்தது . இந்தப் பின்னணியில், சராசரி மனிதனாக நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம்? பணத்தை ஒரு முறைக்குப் பல முறை எண்ணி எண்ணிச் செலவு செய்யும் நாம் , நேரத்தை அதே அக்கறையுடன் பயன்படுத்துகிறோமா?
சில பத்தாண்டுகளுக்கு முன், கணினி அறிமுகமானபோது வேலையிழப்பினை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், அதனை எதிர்த்தவர்கள்தாம் , ரயில்வே துறையில் - குறிப்பாக, பயண முன்பதிவு , மக்களுக்கு நேரடியாக பயன் தரத் தொடங்கியதும் , அதனை முதல்படியாக மனதளவில் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர் . இன்று, தனியார் அநேகமாக எல்லாத் துறைகளிலும் கணினியைப் பயன் படுத்திவருகின்றனர் .சேவை அல்லது உற்பத்தித் துறையில், பணி புரிபவர்களது ஒவ்வொரு மணித்துளியும் கணக்கெடுக்கப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்டு கண்காணிக்கவும் படுகிறது .
ஒவ்வொரு வேலைக்குமான நேரம் - மனித உழைப்பு கணக்கிடப்பட்டு, உற்பத்தித் திறன் மற்றும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. அதே போன்று ஒவ்வொரு பணியாளரும் எந்தெந்தப் பணியில் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கின்றனர் எனக் கணக்கெடுக்கப்பட்டு அவ்வப்போது பரிசீலிக்கப்படும். முக்கியமான பணிகளுக்கு எவ்வளவு நேரம், முக்கியமற்ற தவிர்க்கப் பட வேண்டிய பணிகள் எவை , நேரப் பயன்பாடு குறைக்கப்பட வேண்டியவை , முன்னுரிமை தரப்பட வேண்டியவை எவை என்ற அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும் . இத்தகைய அட்டவணைப் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் செயல்பாட்டுக்கு வந்தால் பெரும் நலன் விளையும்.
குடும்ப உறுப்பினர்களின் திட்டமிட்ட நேரப் பங்கீடு, அவசியமற்ற செயல்களை அறவே செய்யாமல் இருத்தல், ஈடுபடும் செயல்களுக்கு ஆகும் நேரத்தினைக் குறைத்தல் , அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்தல் என்ற நற்பயன்களை விளைவிக்கும். குறிப்பாக, குழந்தைகள் எவ்வளவு நேரம் வீணடிக்கிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரிய வரும்; அவர்கள் கண் எதிரே எவ்வளவு நேரத்தை பெற்றோர் வீணடித்து அவர்களுக்குத் தவறான முன்மாதிரியாக விளங்குகிறார்கள் என்பதும் தெரியவரும்.
அதிலும் குறிப்பாக, தொலைக்காட்சிப் பெட்டி முன்னர் அமர்ந்து வீணடிக்கும் நேரம், செல்லிடப்பேசியில் விளையாட்டு, பாடல்கள் என வீணடிக்கும் நேரம், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உபயோகமாகச் செலவிடும் நேரம் குறித்த தகவல்கள் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை . இத்தகைய தகவல்கள், தங்களைத் திருத்திக் கொள்ளவும், குழந்தைகளை வழிநடத்தவும் உதவும் .
இது ஒருபுறமிருக்க, அரசும் தனது நடவடிக்கைகளில் ,நேரத்தின் அருமையைக் கருதி அதனை வீணடிக்காது இருப்பதற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
உதாரணமாக, பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து பண விநியோகமும் நடைபெற்றது.
அப்போது ஏற்பட்ட மனித வேலை நாள் விரயம் குறித்து பார்ப்போம். தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடி பேர் நியாயவிலைக் கடைகளில் பணம் பெற சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு மேல் வரிசையில் நின்றனர். இது மட்டுமே சுமார் ஐம்பது லட்சம் மணி நேரம் - மனித நேரத்தை விழுங்கியிருக்கிறது. அதாவது , சுமார் எட்டு லட்சம் பேர் ஒரு முழு நாள் வரிசையில் நின்று, பணம் பெறுவதற்காக காலத்தை விரயம் செய்தனர் என்பதற்கு ஈடாகும். இதற்காக அரசுத் தரப்பிலும் பல ஆயிரம் மனித நாள்கள் செலவு செய்யப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் மக்களின் சராசரி தினசரி வருவாய் ரூ.457 என்ற அடிப்படையில் கணக்கிட்டால், சுமார் ரூ.37 கோடிக்கு ஈடான மனித உழைப்பு இந்த விநியோகத்துக்காக மட்டுமே விரயமாகியிருக்கிறது. சரிவரத் திட்டமிட்டிருந்தால் இந்தப் பணத்தை குடும்ப அட்டைதாரரின் வங்கிக் கணக்கில் சேர்த்து கால விரயத்தை முழுமையாகத் தவிர்த்திருக்கலாம்.
இதே போன்று நூலகத் துறை, போக்குவரத்துத் துறை , வருவாய்த் துறை உள்ளிட்ட பொதுமக்கள் நேரடித் தொடர்பிலிருக்கும் பல துறைகளில், கால தாமதத்தையும் கால விரயத்தையும் தவிர்க்க முழு முயற்சி எடுத்து, அரசு முன்மாதிரியாக விளங்க வேண்டும். நமது கணிணிப் பொறியாளர்கள் உலகின் பல நாடுகளில் சிறப்புறப் பணிபுரியும் போது, இங்கும் அவர்களது திறமையை அரசு சரிவரப் பயன்படுத்தி கால விரயத்தைத் தவிர்க்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து அதனை விரயம் செய்யாது , நாட்டினர் ஒவ்வொருவரும் செயல்படுவது கலாசார மாற்றத்துக்கு வித்திடும்; மேலும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அவிநாசி திமுக வேட்பாளா் வெ. கோகிலாமணி

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

