கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அச்சம் காரணமாக கடந்த நூற்றைம்பது நாள்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த தமிழகம் கணிசமான தளர்வுகளோடு பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. வீட்டுக்குள் முடங்கியிருந்த மக்கள் வெளியே வந்துவிட்டாலும் அவர்கள் மனத்திலுள்ள அச்சம் இன்னும் விலகவில்லை.
முகநூலைத் திறந்து பார்க்கிறபோதெல்லாம் யார் முகமேனும் தென்பட்டால் உடன் நெஞ்சு படபடக்கிறது. அது அவரின் பிறந்தநாள் என்றால், அமைதி. பதிவேதும் இடாமல் ஒரு விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு அடுத்த பதிவுக்குத் தாண்டிவிடலாம். மாறாக, அஞ்சலிச் செய்தியாக அமைந்துவிட்டதென்றால், துக்கம் நிறைந்துவிடுகிறது. அவர் நமக்கு மிகவும் நெருக்கமானவராக இல்லாவிட்டாலும், நம்மையும் அறியாமல் ஓர் அனுதாப உணர்வு எழுந்துவிடுகிறது.
பொதுவாக, கிராமங்களில் இதுமாதிரியான செய்தியைச் சொல்ல வருபவருக்கு (துட்டி சொல்பவர்) செய்தியைக் கேட்பவர்கள் கைப்பணம் கொடுப்பது வழக்கம். இப்போது கிராமங்களில்கூட இந்தப் பணியைக் கைப்பேசிக் கருவி உடனுக்குடன் நிறைவேற்றிவிடுகிறது. சொல்லாவிட்டாலும்கூட, கேள்விப்பட்டவுடன் சுற்றத்தார்கள், நண்பர்கள் சென்று உதவுவது கட்டாயம். சொன்னால்தான் போகவேண்டும் என்பது சுப காரியங்களுக்குத்தான்.
கேள்விப்பட்டுவிட்டாலே இந்தக் காரியங்களுக்கு உடன் போக வேண்டும் என்பது கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதி. அதிலும் உள்ளூர் என்றால், உறவோ இல்லையோ எல்லாரும் போய் நிற்பது மனிதப்பண்பு. ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக் காலத்தில், இவை யாவும் தடைப்பட்டுப் போய்விட்டன. உரியவர்கள் கூட, அதிகம் இருக்கக்கூடாத நிர்பந்தம். நிலையாமைக்கு நடுவில் நிலைகொள்ள வேண்டிய அன்பையும் ஆதரவையும்கூட இழந்து நிற்கிறது மானுடம்.
"கையறு நிலை' என்று இலக்கியம் இந்தத் துன்பத்துக்குப் பெயர் தந்திருக்கிறது. உரிய பொழுதில் நேரில் செல்ல இயலாதவர்கள்கூட, பின்னர் செல்லும்போது, "துக்கம் விசாரித்தல்' என்பது மரபு. அதை இப்போது கைக்குதவியாய் நிற்கும் கைப்பேசியே நிறைவேற்றித் தருகிறது ஆறுதல். அதனால்தான், சில இதழ்கள் துயரச் செய்தியோடு, உற்றாரின் கைப்பேசி எண்ணையும் தந்து உதவுகின்றன. இது ஒரு சமூகக் கடப்பாடு.
வயோதிகம், நலக்குறைவு என எத்தனைக் காரணங்கள் இருந்தாலும் இழக்கப்பட்ட மனிதர்கள் ஈடுசெய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் மனிதப் பொதுத்துக்கம். எத்தனை மருத்துவர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களை, சமூகநலத் தொண்டர்களை, ஊடகவியலாளர்களை, பல்துறை சார்ந்த பேராளுமைகளை இந்த நெருக்கடிக் காலத்தில் நாம் இழந்திருக்கின்றோம்?
எளிய மருத்துவ உதவிகூடச் செய்ய முடியாத நிலையில், பிணியுற்றிருக்கின்ற பெரியவர்களைக் காக்க முடியாமல், கைபிசைந்து நிற்கும் கொடிய மனத்துயரை எங்கு இறக்கிவைப்பது? "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதைக் கடந்து இந்த நோய்த்தொற்றுக் காலம், "நோயற்ற வாழ்வே இறைதந்த வரம்' என்று எண்ண வைத்திருக்கிறது. ஆனாலும், வயது நிறைந்த முதுமைக்கு எப்போதும் நிறைவுவரும்தானே? அதற்கு ஈடு?
ஈன்ற வாழைக்கன்று விடைபெறும்போது, புதிய கன்றுகள் அதன் அடியில் தழைத்திருக்கும். மூத்த ஆல மரத்தின் மையவேர் முற்றாக இறப்பு எய்துகிறபோது, பக்க வேர்களாய் மண்ணிறங்கும் விழுதுகள். அற்ப உயிரே ஆயினும் அருகம்புல்லானது, கொளுத்தும் வெயிலுக்குக் கருகி மடிந்தாலும், சற்றே கொட்டிய மழைக்கு மறுநாளே துளிர்த்துவிடும். இம்மூன்றையும் முன்னிறுத்தித்தான், நம் முன்னோர்கள் "ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வாழ்க' என்றும், "வாழையடி வாழையென வாழ்க' என்றும் வாழ்த்தினார்கள். சிறப்பு நிகழ்வு அனைத்துக்கும் வாசலில் வாழை மரம் கட்டிவைப்பதன் வரலாற்றுச் செய்தி இதுதான்.
தனக்காக மட்டும் இத்தாவர வர்க்கம் முளைக்கவில்லை; வளரவில்லை. தன்னைப் பேணிய மண்ணுக்கு, மழைக்கு, காற்றுக்கு, ஏன் விண்ணுக்கும் கூட இது ஒவ்வொன்றும், தன்காலத்தில் தக்க வகையில் பயன் தந்திருக்கிறதே! இந்தப் பண்புகளையெல்லாம் முன்னிறுத்தி, மனித குலம் செய்கிற சடங்குகள் பல அர்த்தம் இழந்துவிட்டன; அவை, ஆடம்பரச் சடங்குகளாக, பொருளற்ற செயல்பாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும், நடைமுறை வாழ்க்கையில், கடைப்பிடிக்கப்படுகிற நெறிமுறைகளாகவில்லை.
இயற்கை, தான் இழந்ததை ஈடுசெய்ய புதியனவற்றைப் பிறப்பித்துவிடுகிறது. ஆனால், மனிதம் பிறப்பினால் மட்டும் தன் பேராளுமையை நிலைநிறுத்திவிட இயலாது. பிறந்து பின் உழைத்துப் பெற்ற பேரனுபவத்தால், தனக்கும் சமுதாயத்துக்கும் பயனுறப் பாடுபட்டதன் பலனால்தான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
பழைய நூற்றாண்டு விடைபெற்று, புதிய நூற்றாண்டு பிறந்து இருபதாம் வருடத்தில் இப்போது இருக்கிறோம். இந்த இருபதாண்டுக் காலமாக நாம் நினைவுகூர்ந்து போற்றுகிற நாயகர்களைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
அவர்கள், சென்ற நூற்றாண்டு செழுமைபெறச் செய்திருக்கும் அறப்பணிகளை, அர்ப்பணிப்புப் பணிகளை, அர்த்தமுள்ள உயர் பணிகளை, உயிர்ப்பணிகளை, இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கு என்று செய்துள்ள தியாகப் பணிகளை நினைத்துப் போற்றுகிறோமே, அப்படி நினைத்துப் போற்றத்தக்க அரிய பெரிய தலைமுறைகளை, இந்த நூற்றாண்டு உருவாக்கியிருக்கிறதா?
அவர்களுக்குப் பின், சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் பிறந்து இந்த நூற்றாண்டின் முன் பகுதியில் விடைபெற்றுக் கொள்கிற, தற்போதைய ஆளுமைகளை நினைக்கிறபோது, எதிர்காலச் சூனியம் நம் இதயத்தைக் கவ்வுகிறது.
அப்படியான ஆளுமைப் பண்புகள் நிறைந்த பலரை, இப்போதைய நோய்த்தொற்றுப் பரவல் காலத்தில் இழந்துவருகிறோம் என்பதுதான் காலக்கொடுமை. அவர்களின் அரிய சாதனைகளை, அவர்கள் இந்தச் சமுதாயத்திற்குச் செய்த பங்களிப்பினை நினைவுகூர்ந்து அடுத்து, அந்தத் துறையில் வருபவர்களுக்கு உந்தாற்றல் தருவதற்குச் செய்ய வேண்டிய அஞ்சலிக் கூட்டங்களைக் கூடப் பொதுவெளியில் செய்ய முடியாத அவலத்திற்கு ஆளாகியுள்ளோம்.
அவர்களின் அருஞ்செயல்களை முழுமையுற எடுத்துரைக்கக்கூட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பொது ஊடகங்களாகிய, இதழியல், இணையவெளி சார்ந்த அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் ஆகியவற்றிலேனும் அவர்களை நினைவுகூர்வது ஓர் ஆறுதல்தான் என்றாலும், அவர்களுக்கு உரிய மரியாதையை அனைவரும் சேர்ந்து செலுத்துதற்கு இயலாத நிலை.
திருவள்ளுவருக்கு வாரிசு யார் என்று தெரியாது. இளங்கோவடிகளும் கம்பனும் இணைந்து எழுந்து தத்தம் காலத்தில் அவருக்குரிய வழியில் இயங்கி, அந்த ஆளுமையின் விசுவரூபத்தை உலகிற்கு அடையாளப்படுத்தினார்கள். இம்மூவருக்கும் வாரிசு யார் என்ற கேள்விக்குச் சென்ற நூற்றாண்டு பதிலாகத் தந்தது, மகாகவி பாரதியை.
பாரதிக்குப் பாரதிதாசனும், கம்பனுக்கு கம்பன்அடிப்பொடியும், சிலப்பதிகாரத்திற்குச் சிலம்புச்செல்வரும் பெயர்அடையாளமாய் நின்று, தம் முன்னோர் பெருமையைப் பின்னோர் அறியத் தொண்டுகள் செய்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்கள். இவ்வாறு பெயர்கள் கொள்ளாவிடினும், நம் முன்னோர்களின் இலக்கிய, வாழ்வியல் மரபுகளை எடுத்து நிறுத்த எத்தனையோ பணிகளைத் தத்தம் துறைகளில் செய்து புகழ் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இதுபோல், மருத்துவத்துறையில், இதழியல் துறையில், கல்வி மற்றும் பொதுத்துறைகளில் வாழையடி வாழையெனத் தழைத்துவந்த மரபினர் பலர்.
இந்நிலை முன்னிலும் பன்மடங்காய், எல்லாத் துறைகளிலும் வந்தாக வேண்டும், வளர்ந்தாகவேண்டும் என்பதுதான் இந்த நூற்றாண்டின் இன்றியமையாத எதிர்பார்ப்பு. இத்தகு ஆளுமைகள் என்னதான் அவர்கள் குடும்பத்திற்கு உரியவர்கள் என்றாலும், இந்தச் சமுதாயத்திற்குப் பொதுவானவர்கள். தத்தம் பிள்ளைகளுக்குச் செய்ததைவிடவும், தன்னைச் சார்ந்த நண்பர்களுக்கு, தன்னையடுத்துவந்த தலைமுறையினருக்கு அவர்கள் செய்தவை அனேகம். அதற்கான நன்றியுணர்ச்சியை அவர்கள் எப்படி வெளிப்படுத்திக் கொள்ள
இயலும்?
இந்தக் காலத்தில் இலக்கியவாதிகளுக்கு உதவ, சடையப்ப வள்ளல்கள் தோன்ற முடியாதுதான். ஆனால், சபையில் ஏறிப் பேசிய காலத்தில், "என்னிடம் வில்லிபாரதம் இல்லை' என்று நான் உருக்கமாய்ச் சொன்னதுகேட்டு, பார்வையாளர் வரிசையில் இருந்த ஒரு பள்ளி ஆசிரியர், என் முகவரி கேட்டு வாங்கி, தன் செலவில் நூல் வாங்கி அனுப்பிய உதவியை நான் என்றும் மறவேன்.
இதுபோல் உதவிய ஒரு பேராளருக்கு என் நன்றியை எப்படித் திரும்பச் செலுத்துவது என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்தான், இப்போது மட்டுமல்ல, எப்போதும் நினைவுக்கு வருகிறது.
"உதவி செய்தவருக்கே திரும்பச் செலுத்துவது உதவி இல்லை. உதவ வேண்டிய நிலையில், இன்றைக்கு உன்னைப்போல் நாளைக்கு உன்முன் இருப்பவருக்கு நீ உதவினால் போதும். அதுதான் எனக்குச் செலுத்துகிற நன்றி. ஏனென்றால், உன்னைப் போல் இருந்த எனக்கு, என்னைப்போல் முன்பு உதவியவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.'
மழை செய்யும் பேருதவிக்குக் கைம்மாறாக என்ன தந்துவிட முடியும்?
கட்டுரையாளர்: பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.