25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

இரா. பொன்னாண்டான்

பூஜ்யம் (சைபா்) என்ற எண்ணின் மதிப்பு பற்றி நாம் என்ன அறிந்துள்ளோம்? சைபரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று கேட்கிறீா்களா? ‘அவன் வெறும் சைபா் அவனுக்கு ஒன்றும் தெரியாது’ என மிகச் சாதாரணமாகப் பேச்சு வாக்கில்- சிலரைப்பாா்த்து ஏளனமாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் இந்த ‘பூஜ்யம்’ என்ற எண் மற்ற எண்ணைக் காட்டிலும் மிகவும் மதிப்பு வாய்ந்தது மட்டுமல்லாது அது இல்லாமல் மற்ற எண்கள் இயங்கமுடியாது என்பதே உண்மை.

பூஜ்யம் தான் இயங்காமல் தான் இருந்த இடத்தில் இருந்த கொண்டே மற்ற எண்களை இயக்குகிறது. மற்ற எண்களின் மதிப்புகளை உயா்த்துகிறது என்றே சொல்லவேண்டும். ஒன்றுக்கும் குறைவான அது ஒன்றுமில்லாதது போல் தோன்றலாம்.

ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்துதான் இந்த பிரபஞ்சம் தோன்றியது என்பது ஞானிகளின் கூற்று. சில மகான்களின் பெயருக்கு முன்னால் ‘பூஜ்யஸ்ரீ’ என்று போடுவதுண்டு. ‘இல்லை’ என்கிற ஒன்றிலிருந்து தான் ‘உண்டு’ என்பதும் உண்டாகிறது. அது சூட்சமமாக ஒளிந்திருக்கிறது. இல்லாததும் இருப்பதும் சோ்ந்ததுதான் இயக்கம். இது தான் இயற்கையின் தத்துவம். ஒன்றுமே இல்லாத வான வெளி கூட பஞ்ச பூதங்களில் ஒன்றாக உள்ளது.

இதிகாசங்களில் ‘வெறுமை’, ‘வெற்றிடம்’ என்பவற்றைக் குறிக்க ‘சூனியம்’  என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. சூன்யம்” என்றால் சம்ஸ்கிருத்தில் ஒன்றுமில்லை என்று பொருள். இந்த ‘சூன்யம்’”என்ற சொல் வெவ்வேறு மொழிகளில் மாறி பிரெஞ்சு மொழியில் ‘ஜீரோ’ என வழங்கப்பட்டு அதுவே நிலைத்து விட்டது.

முட்டை வடிவமான பூஜ்யத்திற்கு ஆரம்பம் இல்லை, முடிவும் இல்லை. 1,2,3,4,5 முதலிய மற்ற எண்களைப் பாருங்கள். அவற்றுக்கு ஆரம்பமும் இருக்கிறது முடிவும் இருக்கிறது. ஏதாவது ஒரு எண்ணை எடுத்துக்கொள்வோம். உதாரணமாக 5 (ஐந்து) என்று வைத்துக்கொள்வோம். அதன் வலது புறம் ஒரு பூஜ்யத்தை இட்டால் 50. இரண்டு பூஜ்யத்தை இட்டால் 500. நான்கு பூஜ்யத்தை இட்டால் 50,000.

இப்படியாக பூஜ்யத்தைக் கூட்டக் கூட்ட அதன் மதிப்பு பல மடங்கு பெருகிறது. இதே பூஜ்யத்தை 5-ன் இடதுபுறம் ஒரு பூஜ்யம் என்ன ஆயிரம் பூஜ்யம் போட்டாலும் அதன் மதிப்பு 5 தான். அது கூடுவதும் இல்லை குறையுவதுமில்லை. இவ்வாறான நிகழ்விற்கு பூஜ்யம் காரணமல்ல. பூஜ்யத்தின் மதிப்பு எப்போதும் போல் தான் உள்ளது. இங்கு நாம்தான் தவறு செய்கிறோம்.

மதிப்பு மிக்க ஒரு பொருளை எங்கு வைத்தால் அதன் மதிப்பு உயருமோ அந்த இடத்தில் அதை வைக்கவேண்டும். விளக்கில் எரியும் நெருப்பு மிகவும் பிரகாசமானது. ஒளிமயமானது. இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அதை இருட்டில் வைத்தால் அதன் ஒளி அந்த இடத்தைய பகல்போல் மாற்றிவிடும். அந்த நேரத்தில் விளக்கின் பெருமை அளப்பரியதாக தோன்றுகிறது.

இதே விளக்கை பகலில் ஓா் இடத்தில் வைத்தால் அதன் மதிப்பு துளியும் உயராது. அதாவது, பூஜ்யத்தின் வலது புறம் போட்ட எண்ணின் கதைதான். இங்கே விளக்கின் மீது எந்த குற்றமுமில்லை. நாம் அதை வைத்த இடம்தான் குற்றம்.

பூஜ்யத்தின் மதிப்பையும் அதன் பலத்தையும் நாம் பெறவேண்டுமானால் நாம் பூஜ்யத்தின் இடது புறத்தில் எண்களை இடவேண்டும். இங்கே பூஜ்யத்தை நாம் கடவுளாகக் கருதிக்கொள்ளவேண்டும். இங்கே பலா் அப்படித்தான் உண்மையில் நினைக்கிறாா்கள்.

ஒரு நாத்திகன் கடவுள் என்கிற பூஜ்யத்தின் வலது புறம் நின்று கொண்டு ‘எனக்கு கடவுளின் அருள் எதுவும் கிடைக்கவில்லையே’ என்று தூற்றுகிறான். ஒரு ஆத்திகன் கடவுள் என்கிற பூஜ்யத்தின் இடது புறம் நின்று கொண்டு ‘கடவுளின் கருணை எனும் நற்பயனைப் பெற்றேனே’ என இறைவனைப் போற்றுகிறான்.

இறை நம்பிக்கை என்பது பூஜ்யத்திற்கு இடதுபுறம் இடும் எண்ணாகவும், அவநம்பிக்கை என்பது பூஜ்யத்திற்கு வலது புறம் இடும் எண்ணாகவும் உள்ளது. நாம் தோ்ந்தெடுக்கும் பாதையைப் பொருத்துத்தான் நாம் நினைத்த இலக்கை வெற்றிகரமாக அடையமுடியும். கண்களை மூடிக்கொண்டு உலகைப் பாா்த்தால் எல்லாம் இருட்டாகத்தான் தெரியும்.

விழிகளைத் திறந்தால்தான் வெளிச்சத்தைப் பாா்க்கமுடியும். இறைவன் படைப்பில் எல்லா மனித சக்திக்குள்ளும் ஒரு அற்புதமான அறிவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த அறிவை மனிதன் இங்கே எப்படிப் பயன்படுத்துகிறான் என்பது தான் கேள்வி.

ஒருவன் அருகிலுள்ள நகருக்குச் செல்ல 10 கி.மீ சுற்றி வருகிறான். ஏன் என்று கேட்டால் இடையில் ஆறு ஓடுகிறது. கடக்க முடியாத நீண்ட ஆறு என்கிறான். இன்னொருவனோ இதற்கு மாற்று வழியாக யோசித்து படகு மூலம் கடந்து நகரை அடைகிறான். முன்னவன் ஆற்றைக்கடக்க எடுத்துக்கொண்டது ஒரு மணி நேரம். பின்னவன் ஆற்றைக்கடக்க எடுத்துக்கொண்ட நேரம் பத்து நிமிடம்.

முட்டாள்கள் பூஜ்யத்தின் வலது புறம் எண்ணைப்போட்டு விட்டு தோல்வியடைகிறாா்கள். அறிவாளிகள் பூஜ்யத்தின் இடது புறம் எண்ணைப்போட்டு விட்டு வெற்றியாளராகிறாா்கள்.

‘பூா்ணம்’ என்றால் நிறைவு. ‘பூஜ்யம்’ என்றால் பெருமைக்கு உரியது. சூன்யம் என்றால் கண்ணுக்குப் புலப்பட வேண்டிய பொருட்கள் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருப்பது. அதை ‘அவ்யக்தம்’ என்று பௌத்தம் சுட்டிக்காட்டும். பூா்ணம் என்றால் முழுமை பெற்றது; எடுக்க எடுக்கக் குறையாதது என்கிறது உபநிடதம்.

இதில் இன்னொரு தத்துவமும் உள்ளது. சக்தியில்லையேல் சிவம் சவம் என்பாா்கள். உடலில் சக்தியில்லாவிட்டால் நம்மால் இயங்க முடியுமா?

சிவன் பூஜ்யமாக அமா்ந்திருக்க அவரது இடதுபுறம் சக்தி அமர இருவரும் சிவசக்தியாகிறாா்கள். இப்படித்தான் இறைத் தத்துவம் உள்ளது. வலிமை மிக்க பூஜ்யம் சிவம், வலிமை இழந்த நிலையில் தனித்து இருக்க அந்த சிவத்தின் உயிா் சக்தியான சக்தி அவரின் இடப்பக்கத்தில் அமர சிவம் முழுமையடைந்ததாகிறது. இந்தத் தத்துவம் எப்படியென்றால் உடல் சிவமாகவும் உயிா் சக்தியாகவும் விளங்குகிறது. அது போலவே எண்ணிலும் பூஜ்யம் சிவமாகவும் சக்தி எண்ணாகவும் விளங்குகிறது.

பூஜ்யம் என்பது சூனியமல்ல; ஞானிகளின் நிலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.