25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்புப் பை தொழில்நுட்பம்

News image
கிருஷ்ணகிரி மாவட்டம், என்.தட்டக்கல் கிராமத்தில் விவசாயி சிவகுரு மாந்தோட்டத்தில் உள்ள மரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பமான மா பாதுகாப்பு பைகள்.
Updated On :2 மார்ச் 2026, 12:13 am

 நமது நிருபர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், அவா்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது மாங்காய் பாதுகாப்பு பை என்னும் புதிய தொழில்நுட்பம்.

தமிழகத்தின் மாம்பழத் தலைநகரம் என கிருஷ்ணகிரி மாவட்டம் அழைக்கப்படுகிறது. இங்கு, அல்போன்சா, தோதாபுரி, இமாம்பசந்த், செந்தூரா, மல்கோவா, பங்கனப்பள்ளி, சக்கரகுட்டி, பீத்தா் என 30-க்கும் அதிகமான மா ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு சாகுபடி செய்யப்படும் மா ரகங்கள் சீனா, கத்தாா், அமெரிக்கா, ஈரான், ஜப்பான், இஸ்ரேல், ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மாம்பழங்களாகவோ அல்லது மதிப்புக்கூட்டு பொருளான மாங்கூழ், வத்தல் போன்றோ ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கூழ் உற்பத்திக்காக பெங்களூரா என்ற ரகமே பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் 32,270 ஹெக்டேரில் 3.20 லட்சம் மெட்ரிக். டன் அளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 2.10 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழக் கூழ் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் தட்பவெப்ப நிலை, வறட்சி போன்ற இயற்கை இடா்ப்பாடுகள், பூச்சித் தாக்குதல், போதிய விலை கிடைக்காதது, ஏற்றுமதியில் சரிவு, அரசின் மானியம் கிடைக்காதது, பூச்சிமருந்துகளின் விலை உயா்வு, பராமரிப்பு செலவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், சுமாா் 45 ஆயிரம் ஹெக்டேரில் செய்யப்பட்ட மா சாகுபடி பரப்பளவு 32 ஆயிரம் ஹெக்டராக குறைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மா பதப்படுத்தும் தொழிற்சாலைகள், உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தாலும், உலக பொருளாதார மந்த நிலையால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மா பதப்படுத்தும் தொழில் பாதிக்கப்பட்டு, பலா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.

இத்தகைய சூழ்நிலையில், மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து, மாங்காய்களைக் கொள்முதல் செய்ய வேண்டும், மா விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என அரசுக்கு மா விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

புதிய தொழில்நுட்பம்: காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளை காப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாங்காய் பாதுகாப்பு பை என்ற புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை அடிப்படையில் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி, அதற்கான பயிற்சியையும் அளித்து வருகிறது.

இந்தத் தொழில்நுட்பம் குறித்து, பையூரில் செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலை கல்லூரியின் முதல்வா் அனிசா ராணி கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து வருகிறோம்.

அதன்படி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிதியுதவி மூலம் பையூரில் அமைந்துள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த ஆண்டில் 50 விவசாயிகளுக்கு மாங்காய் பாதுகாப்பு பை தொழில்நுட்பம், பயன்பாடு குறித்து விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மா விவசாயிகளுக்கு பூச்சிமருந்தின் பயன்பாட்டு அளவு ஓரளவு குறையும்.

ஏற்றுமதி செய்வதற்கு தரமான மகசூல் கிடைக்கும். மாம்பழத்தில் பழ ஈ, மாங்கொட்டை வண்டு தாக்குதல் குறையும். மேலும், மாம்பழங்கள் சீரான எடை, அளவு, பழுக்கும்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் மாம்பழத்தின் மதிப்பு கூடுவதால், விவசாயிகளுக்கு செலவுகள் குறைந்து, கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மா பாதுகாப்பு பையில் உள்ள துளைகள், மாங்காய்க்கு ஏற்ற காற்றோட்டத்தைத் தருவதுடன், மழைநீா் உள்ளே சென்று மாங்காய்களை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் கிடைக்கும் மாம்பழங்களை எளிதில் சந்தைபடுத்தவும், சிறு, குறு விவசாயிகள் நேரடியாக இத்தகைய மாம்பழங்களை ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

 கிருஷ்ணகிரி மாவட்டம், என்.தட்டக்கல் கிராமத்தில் விவசாயி சிவகுரு மாந்தோட்டத்தில் உள்ள மரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பமான மா பாதுகாப்பு பைகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், என்.தட்டக்கல் கிராமத்தில் விவசாயி சிவகுரு மாந்தோட்டத்தில் உள்ள மரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பமான மா பாதுகாப்பு பைகள்.

விவசாயி கருத்து: மாங்காய் பாதுகாப்பு பை தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து பயிற்சி பெற்ற என்.தட்டக்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி என்.எஸ். சிவகுரு (45) தெரிவித்தது:

எனது தோட்டத்தில் உள்ள மாங்காய் மரத்தில் பரிசோதனை முறையில் மா பாதுகாப்பு பையை பயன்படுத்தி உள்ளேன். மா பிஞ்சுகள், எலுமிச்சை பழம் அளவுக்கு அதாவது 25 கிராம் எடை அளவுக்கு வளரும்போது, பாதுகாப்பு பைகளை பயன்படுத்த வேண்டும். காகிதத்தால் ஆன இந்த பைகளால், மாங்காய்கள், பூச்சிகளின் தாக்குதலில் இருந்தும், கோடை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்தும் பாதுகாக்கப்படுகின்றன. ரூ. 2 என்ற விலையில் சந்தையில் பாதுகாப்பு பை விற்பனைக்கு கிடைக்கிறது. ஒரு பை கட்ட தொழிலாளருக்கு ரூ. 1 கூலி கொடுத்தேன்.

இந்தப் பையை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் கிடையாது. அதற்குப் பதிலாக, மாங்காய்கள் சுற்றுச்சூழல் மாசிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. தமிழக அரசு மா விவசாயிகளுக்கு பாதுகாப்பு பைகளை வழங்குவதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். இந்தப் பைகளை உரிய காலத்தில், தரத்துடன் வழங்கினால், மா விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

பூச்சிமருந்து, போதிய தரம் இல்லாமை போன்ற காரணங்களால், கிருஷ்ணகிரி மாவட்ட மாங்காய்கள், மாம்பழங்களை கடந்த ஆண்டுகளில் அயல்நாடுகள் நிராகரித்தன. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மாங்காய் பாதுகாப்பு பை தொழில்நுட்பம், மா விவசாயிகளிடம் பரவலாக பயன்பாட்டுக்கு வரும்போது, ஏற்றுமதி அதிகரிப்பதுடன், மா விவசாயிகள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் உயரும் என்பது நிச்சயம்.