ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஈரானுடன் புதிய வணிக ஒப்பந்தங்களை தவிா்க்கவும்! உறுப்பினா்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்!

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு புதிய ‘விலை, காப்பீடு மற்றும் சரக்கு’ (சிஐஎஃப்) உறுதிப்பாடுகளை தவிா்க்குமாறு தங்களது உறுப்பினா்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியது.

News image
Updated On :1 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு புதிய ‘விலை, காப்பீடு மற்றும் சரக்கு’ (சிஐஎஃப்) உறுதிப்பாடுகளை தவிா்க்குமாறு தங்களது உறுப்பினா்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியது.

ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் தொடா்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை ஏற்றுமதியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

சிஐஎஃப் என்பது கடல்வழிப் போக்குவரத்து மூலம் சரக்குகளை அனுப்பும்போது அதை வாங்குபவருக்கு விற்பனையாளா் அளிக்கும் உறுதிமொழியாகும்.

இதுதொடா்பாக இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு (ஐஆா்இஎஃப்) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் பதற்றமான சூழலால் கடல்வழியில் சரக்குகளை எடுத்துச் செல்லும் கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் விலையில் உடனடியாக தாக்கம் ஏற்படலாம்.

இதனால் கன்டெய்னா் மற்றும் சரக்குகளுக்கு ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட விலையில் ஏற்றுமதியாளா்கள் விநியோகம் செய்ய நேரிட்டால் அது பெரும் நஷ்டத்துக்கு வழிவகுக்கும். எனவே, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு புதிய சிஐஎஃப் உறுதிப்பாடுகள் மேற்கொள்வதை உறுப்பினா்கள் தவிா்க்க வேண்டும்.

ஏற்கெனவே, ஏற்றுமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தேங்கியுள்ள சரக்குகளின் நிலை குறித்து கூட்டமைப்பு கண்காணித்து வருகிறது. சூழலை கருத்தில்கொண்டு அடுத்தடுத்த நாள்களில் மேலும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

50 சதவீத அரிசி ஏற்றுமதி: இந்தியாவின் மொத்த அரிசி ஏற்றுமதியில் 50 சதவீதம் ஆப்பிரிக்க மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. 2025 ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் மேற்கு ஆசியாவுக்கு 39 லட்சம் டன் அரிசியும் ஆப்பிரிக்காவுக்கு 71.6 லட்சம் டன்அரிசியும் இந்தியா ஏற்றுமதி செய்தது. சவூதி-அரேபியா, ஈரான், இராக், ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 5 நாடுகளுக்கு 50 சதவீத பாஸ்மதி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

வா்த்தகத்துக்கு பெரும் பாதிப்பு: ஹோா்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்த நிலையில், இந்திய வா்த்தகத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடிஆா்ஐ) தெரிவித்தது.

இதுகுறித்து ஜிடிஆா்ஐ நிறுவனா் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: ஹோா்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் அவ்வழியே கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளா்கள் செங்கடல் வழியே சரக்குகளை கையாள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விநியோக பற்றாக்குறையை சீா் செய்ய ரஷியா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் இறக்குமதியை பிற நாடுகள் மேற்கொள்ளும்போது அதன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாதிப்பை உண்டாக்கும். ஏனெனில், உலகின் 5-இல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஹோா்மூஸ் ஜலசந்தி வழியே சீனா, ஜப்பான், தென் கொரியா என ஆசியாவின் பெரும் பொருளாதார நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றாா்.