தலைவருக்காக காத்திருக்கும் காங்கிரஸ்!
மகிளா காங்கிரஸ் தேசியத் தலைவி சுஷ்மிதா தேவ் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்திருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை


மகிளா காங்கிரஸ் தேசியத் தலைவி சுஷ்மிதா தேவ் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்திருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. இளைய தலைமுறை தலைவர்கள் ஒருவர்பின் ஒருவராக காங்கிரஸில் இருந்து விலகுவதும் புதிதொன்றுமல்ல. சுஷ்மிதா தேவுக்கு முன் ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், பிரியங்கா சதுர்வேதி என்று ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்பட்ட பல இளைய தலைமுறைத் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். நட்புறவால்கூட அவர்கள் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த ராகுல் காந்தியால் முடியவில்லை.
அவர்கள் தங்களது வருங்காலத்துக்காகவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் கட்சியிலிருந்து விலகினார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். அகில இந்தியத் தலைமையைத் தவிர (அது நேரு குடும்பத்துக்கு மட்டுமானது) கட்சியின் உன்னதமான அனைத்துப் பதவிகளையும் எட்டிப்பிடிப்பவர்களாக வளர்ந்து கொண்டிருந்தவர்கள் அவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் ஏன் கட்சியிலிருந்து வெளியேற முற்பட்டனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவர்பின் ஒருவராக காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் சேருவதற்கு ஏன் விரும்புகிறார்கள் என்கிற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது. பாஜகவின் மீதான கவர்ச்சியைவிட காங்கிரஸ் தலைமையின் மீதான நம்பிக்கையின்மையும், குறைபாடுகளும்தான் அவர்களை வெளியேற தூண்டுகின்றன. காங்கிரஸாருக்கு தன்னம்பிக்கை அளிக்க கட்சித் தலைமையால் இயலவில்லை. இனிமேல் ஒருநாளும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்காது என்கிற அவநம்பிக்கை பெரும்பாலான தலைவர்களுக்கு இருக்கிறது.
இன்னும் சிலர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள். ஆட்சியை மீட்டெடுக்கும் திறமையுள்ள தலைமை காங்கிரஸில் இல்லாததாலும், கட்சியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததாலும் அவர்கள் வெளியேறத் துடிக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்திலிருந்து வெகுதொலைவில் போய்விட்டதால் காங்கிரஸ் கட்சியின் பலம் சரிந்து போயிருக்கிறது. கட்சிக்குள் கட்டுப்பாட்டையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்த முடியாமல் தலைமை பலவீனப்பட்டிருக்கிறது. அந்த பலவீனம் மாநில, மாவட்ட அளவிலும் அதற்குக் கீழேயும்கூட பிரதிபலிக்கிறது.
இந்தப் பின்னணியிலும்கூட கட்சி எதிர்கொள்ளும் சவாலை எதிர்கொள்ள 23 பேர் துணிவு காட்டினார்கள். அவர்கள் சோனியா காந்தி பதவியிருந்து விலகி புதிய தலைவரை நியமிக்க வேண்டுமென்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர். அவருக்கு எழுதிய கடிதத்தை பொதுவெளியில் கசியவிட்டனர்.
துதிபாடும் கலாசாரத்தில் உறைந்து போயிருக்கும் காங்கிரஸ் கட்சியில் இப்படியொரு கடிதம் எழுதுவது என்பது சாதாரணமான செயலல்ல. ஆனால், அந்தக் கடிதம் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டபோது அதை எழுதியவர்களும் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களும்கூட சோனியா காந்தியின் மீது நம்பிக்கை தெரிவித்து அவருக்கு துதிபாடப் போட்டி போட்டனர் என்பது மிகப்பெரிய முரண்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி 23 பேர் காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பினர். தற்போது ஓர் ஆண்டு கடந்து விட்டது. சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இரண்டு ஆண்டுகளாகியும்கூட நிரந்தரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். பல மாநிலங்களில் பேரவைத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், அதுகுறித்த பணிகளில் அக்கட்சி இதுவரை ஓர் அடிகூட எடுத்து வைக்கவில்லை. வேறு மாற்று இல்லாததால் அதீர் ரஞ்சன் சௌத்ரி நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியது காங்கிரஸ் அல்ல - திரிணமூல் காங்கிரஸூம் இடதுசாரிக் கட்சிகளும்தான். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்றபோது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப்பெரிய உற்சாகம் இருந்தது. ஆனால் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தும் மத்திய பிரதேசத்தில் அந்த வெற்றியை காங்கிரஸால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
தனது பலவீனங்களை வெளிப்படுத்துவதுதான் காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனம். அரசியல் சவால்களை எதிர்கொண்டு உடனுக்குடன் தீர்வு காண முடியாத சூழல் காணப்படுகிறது. கட்சியின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் பதவிகளுக்காக ஆசைப்படுபவர்கள், கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள் வெளிப்படுத்தும் அச்சுறுத்தல்களுக்கு தலைவணங்கும் தலைமை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளை விவாதிக்க காங்கிரஸ் இதுவரை தயாராகவில்லை.
2019-இல் தனக்கு எதிரான சூழலும், அதற்கான காரணங்களும் நிறையவே இருந்தும்கூட 2014-ஐ விட அதிக இடங்களில் பாஜகவால் வெற்றிபெற முடிந்தது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது, பொருளாதார நிலை தகர்ந்தது, கிராமப்புறங்களில் அதிருப்தி, சிறுபான்மையினரின் எதிர்ப்பு, ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள், அதானி - அம்பானிகளை வளர்க்கும் முதலாளித்துவப் போக்கு போன்ற பல காரணங்கள் இருந்தும்கூட அவற்றையும்மீறி பாஜகவால் மக்களின் பேராதரவைப் பெற முடிந்தது. அதற்கு முக்கியமான காரணம் காங்கிரûஸ வாக்காளர்கள் மாற்று சக்தியாகக் கருதவில்லை என்பதுதான்.
அடிமட்ட யதார்த்தங்களுடனான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருக்கிறது. மக்களுடன் இணைந்து செயல்படும் எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள காங்கிரஸால் முடியவில்லை. தன்னம்பிக்கை இல்லாத செயல்பாடுகள்தான் அதற்கு காரணம். 2019 மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை எதிர்கொண்டும்கூட இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வ விவாதமும் காங்கிரஸில் நடைபெறவில்லை என்பதுதான் வேடிக்கை.
ராகுல் காந்தி, 'நோ காந்தி' என்று சொன்னார். ஆனால், 'காந்தி ஒன்லி' என்று குடும்ப அரசியலில் தோய்ந்து வளர்ந்த காங்கிரஸ்காரர்கள் சொன்னார்கள். நேரு - காந்தி குடும்பம் அல்லாத தலைமையின்கீழ் காங்கிரஸூக்கு வருங்காலம் இல்லையென்று அவர்கள் கருதுகிறார்கள். மக்கள் பிரச்னை குறித்த கவலையே இல்லாமல், எந்தவித உழைப்பும் இல்லாமல் காந்தி - நேரு குடும்பத்தின் செல்வாக்கில் இதுவரை குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல் காந்தி, 2019 மே 25-ஆம் தேதி பதவி விலகினார். 11 வாரங்கள் கழித்து காங்கிரஸ் செயற்குழு கூடியபோது தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியின் பெயரை மட்டும்தான் முன்மொழிய முடிந்தது. 2017-இல் தனது மகன் ராகுல் காந்தி தலைவராவதற்காக பதவி விலகிய சோனியா காந்தி, வேறு வழியில்லாமல் மீண்டும் தலைவர் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற காங்கிரஸ் தலைவர்களின் நிர்பந்தத்தைத் தொடர்ந்து சோனியா காந்தியே மீண்டும் இடைக்காலத் தலைவரானார். ராகுல் காந்திக்கு மனமாற்றம் ஏற்படும்போது மீண்டும் அவரிடம் பொறுப்பைக் கொடுப்பது என்பது சோனியாவின் எண்ணமாக இருக்கக்கூடும். இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ராகுல் இன்னும் தயாராகவில்லை.
நேரு குடும்பத்துக்கு வெளியேயிருந்து ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று ராகுல் காந்தி பலமுறை தெரிவித்துவிட்டார். எல்லா தலைவர்களும் நேரு - காந்தி குடும்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் யாரும் அதற்கு ஆதரவளிக்கவில்லை. தனக்கு தலைமைப் பதவியில் ஆசையில்லை என்று ராகுல் காந்தி சொன்ன பிறகும்கூட, அவருக்காக காத்திருக்கும் காங்கிரஸ்காரர்களை என்னவென்று சொல்வது? காங்கிரûஸக் காப்பாற்றுவதல்ல அவர்களது நோக்கம். நேரு குடும்பத்தின் அரவணைப்பில் தங்களது அரசியல் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்வது மட்டும்தான் அவர்களது இலக்கு.
காங்கிரஸிலிருந்து விலகிய தலைவர்கள் உருவாக்கிய கட்சிகள் பல மாநிலங்களிலும் அரசியல் சக்திகளாகத் திகழ்கின்றன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆகிய மூவரும் முன்னாள் காங்கிரஸ்காரர்கள். மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் முன்னாள் காங்கிரஸ்காரரே.
பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவை காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள். கேரளம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியாக காங்கிரஸ் திகழ்கிறது. நேரு குடும்பத்தை அகற்றி நிறுத்தி இந்த காங்கிரஸ்காரர்கள் அனைவரும் பாஜகவுக்கு மாற்றாக ஒருங்கிணைந்து ஏன் செயல்படக்கூடாது என்கிற கேள்வி எழுகிறது.
அப்படி எல்லா காங்கிரஸ்காரர்களும் ஒருங்கிணைந்து மாற்று சக்தியாக மாறாவிட்டால், முன்பு சோஷலிஸ்டுகளுக்கு ஏற்பட்ட அதே நிலைமை காங்கிரஸ்காரர்களுக்கும் ஏற்படக்கூடும். ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற சோஷலிஸ்ட் தலைவரை பாஜக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக்கினர். நிதீஷ்குமார் பிகாரில் முதல்வராவதற்கு பாஜகவின் கூட்டணி தேவைப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் ஒரு மாற்று எதிரணியை உருவாக்குவது குறித்து விவாதித்தன. அதற்கு முனைப்புக் காட்டியவர்கள் பழைய காங்கிரஸ்காரர்களான சரத் பவாரும் மம்தா பானர்ஜியும்தானே தவிர, காங்கிரஸ்காரர்கள் அல்ல. பாஜகவு-க்கு மாற்று நேரு குடும்பத் தலைமை அல்ல; அந்த குடும்பம் இல்லாத காங்கிரஸின் தலைமையே.
கட்டுரையாளர்:
மூத்த பத்திரிகையாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...