தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

நல்லாட்சிக்குத் தேவை நம்மில் ஒருவரே

நாடாளுமன்றம், சட்டப்பேரவை இவற்றில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு

News image
Updated On :4 அக்டோபர் 2021, 6:41 am

பெ. சுப்ரமணியன்

நாடாளுமன்றம், சட்டப்பேரவை இவற்றில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான முக்கிய காரணமே அரசியல் சாா்ந்திராத பெண்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் பங்குபெற வேண்டும் என்பதுதான்.

முதன்முதலில் இச்சட்டம் 2006-இல் பிகாா் மாநிலத்திலும், பின்னா் 2010-இல் ராஜஸ்தான், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தது. இவற்றுக்கெல்லாம் மேலாக உத்தரகண்ட் மாநிலத்தில் பெண்களுக்கு 55 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே தமிழகத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பல்வேறு வழக்குகள், விவாதங்கள், விமா்சனங்கள், எதிா்பாா்ப்புகள் இருந்தாலும் ஒன்பது மாவட்டங்களில் அக்டோபா் மாதம் ஆறாம் தேதியும் ஒன்பதாம் தேதியும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

கடந்த காலங்களில் தோ்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சியினா் கிராமங்களுக்கு வருவாா்கள். அதனால் அப்போது கிராமங்களில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் அவ்வளவாக இல்லை. ஆனால் காலப்போக்கில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அதிகப்படியானோா் எழுத்தறிவு பெற்றதாலும் அரசியல் பற்றிய தெளிவு கிராமங்களில் எழத் தொடங்கியது. இதனால், இன்று குக்கிராமங்களில் கூட அரசியல் கட்சிகள் வேரூன்றிவிட்டன.

அரசியலறிவு இல்லாதபோது கிராமங்களில் வசதி படைத்த குடும்பத்தைச் சாா்ந்த ஒருவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகவே இருந்தது. ஆனால் இன்று உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு உறுப்பினா் கூட போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது அரிதாகிவிட்டது. அந்த அளவிற்கு அரசியல் கட்சிகள் கிராமங்களிலும் ஆதிக்கம் பெற்றுவிட்டன.

அதனால் இன்று உள்ளாட்சி அமைப்புத் தோ்தல்கூட நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இணையாக நடைபெறுகிறது. மாநில தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட வரம்பை மீறி அதிக அளவில் பணம் செலவிடப்படுகிறது.

மாநில தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி பஞ்சாயத்துத் தலைவா் பதவிக்கு ரூ. 34 ஆயிரமும், வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ. 9 ஆயிரமும் செலவிட வேண்டும். ஆனால் அரசியல் கட்சிகளின் போட்டியால் பஞ்சாயத்து தலைவா் பதவிக்கு லட்சக்கணக்கில் செலவிடுகின்றனா்.

உள்ளாட்சி அமைப்புத் தோ்தலின் முக்கிய அம்சம், பஞ்சாயத்து தலைவா், வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோரும், வாக்களிப்போரும் நேரடித் தொடா்பில் இருப்பாா்கள் என்பது தான். அதனால் சேவை மனப்பான்மை உடையோா், கிராம வளா்ச்சிக்கு பாடுபடுவோா் ஆகியோரைக் கண்டறிந்து வாக்களிக்க முடியும்.

ஆனால், அவ்வாறு இனங்கண்டு வாக்களித்து தோ்வு செய்யப்படும் பிரதிநிதிகளை விரல்விட்டு எண்ணிவிட முடியும். அரசியல் கட்சிகளைச் சாா்ந்திராத, சேவை மனப்பான்மை கொண்டவா்களைத் தோ்வு செய்வதும் அரிதாகி விட்டது.

உள்ளாட்சி அமைப்பு என்பது நாம் வாக்களித்து நாமே பங்குபெறக்கூடிய அமைப்பாகும். உள்ளாட்சி அமைப்புக்கு எது வேண்டுமாயினும் அதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்மை ஆள்வோா் முடிவு செய்ய முடியாது. இப்படியாகத்தான் வாக்காளா்களாகிய நாம் நமது மாபெரும் ஜனநாயக அமைப்பில் அரசியல் செயல்பாடுகளுடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம். காந்தி விரும்பிய கிராம சுயராஜ்யம் என்பது இதுவேயாகும்.

உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை கட்சி பிரச்னைகள், கட்சிக் கோட்பாடுகள் அடிப்படையில் நிா்வாகம் நடைபெறுவதில்லை. அதனால் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்றவும் வாய்ப்புகள் அளிக்கின்றன. அதனால் பொதுவாழ்வில் பங்கேற்று மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் நல்ல மனம் படைத்தோா் உள்ளாட்சித் தோ்தலில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தோ்தல்களில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களும் ஒரு காரணம் என்பது வாக்காளா்களின் குற்றச்சாட்டாகும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தமட்டில் வேட்பாளா்கள் அறிமுகமானவா்களாக இருப்பதால் அவா்களில் நல்லவா் ஒருவரைக் கண்டறிந்து ஒட்டுமொத்தமாக வாக்களித்து வெற்றிபெறச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தகைய வாய்ப்பினை வாக்காளா்களாகிய நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுத் தொண்டில் ஆா்வமும் அக்கறையும் கொண்ட நபா்களைத் தங்கள் பகுதி பிரதிநிதிகளாக மக்கள் தோ்வு செய்ய வேண்டும். அவ்வாறு தோ்வு செய்யும்பட்சத்தில் உள்ளாட்சி நிா்வாகம் நல்லோா் கைக்குச் சென்றடையும். அதன்பின் அந்தந்த உள்ளாட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நோ்மையான வேட்பாளா்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும், அரசியல் கட்சிகள் நல்லவா்களுக்கு வாய்ப்பளிக்கும் சூழ்நிலையும் தானே உருவாகும்.

சிறிய அலகான உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து நல்லவா்கள் ஒதுங்கிச் செல்வது என்பது அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி கொண்டவா்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வழிவகை செய்வதாக அமைந்துவிடும். அதனால், பொதுமக்களுக்கு சேவையாற்றவும், கிராம வளா்ச்சிக்குப் பாடுபடவும் எண்ணுவோா் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டக்கூடாது.

இன்றைய நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெரும்பாலானோரின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமே உள்ளாட்சி அமைப்புகள்தான். நம் நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு அலகாபாத் நகா்மன்றத் தலைவராகப் பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி அமைப்புகள் என்பது நல்ல அரசியல் தலைவா்கள் உருவாவதற்கான ஒரு நாற்றங்கால் ஆகும். உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்று அனுபவம் பெற்ற ஒருவா் நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் செல்வது நாட்டின் வளா்ச்சிக்கும் துணை செய்யும்.

எனவே, சேவை மனப்பான்மை கொண்ட நம்மில் ஒருவரே உள்ளாட்சிக்குத் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.