முடிவில்லா துயர் முடிவுக்கு வருமா?

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பெண்கள் உட்பட 17 இந்தியர்களின் தண்டனைக் காலம் நிறைவடைந்த போதிலும்

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பெண்கள் உட்பட 17 இந்தியர்களின் தண்டனைக் காலம் நிறைவடைந்த போதிலும், அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களின் விவரங்களை அறிய முடியாமல் அனைவரையும் தாயகம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு இந்திய அரசிடம் தெரிவித்திருந்தது.  இது ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம்.

ஆனாலும், இன்றுவரை அவர்களைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைத்தபாடில்லை. இதனால், அவர்களது புகைப்படங்களை இம்மாதத் தொடக்கத்தில் தனது அதிகாரபூர்வ இணையதள முகவரியில் பகிர்ந்த மத்திய உள்துறை அமைச்சகம், அவர்களைப் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கோரியுள்ளது. தண்டனைக் காலம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகளாகியும் அவர்கள் இன்னும் கைதிகளாகவே சிறையில் காலம் தள்ளுகின்றனர். 
குஜராத் மாநிலத்தின் கொடினார் அருகே உள்ள நானவாடா பகுதியைச் சேர்ந்த அவர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படையினரால் கடந்த 2019}ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். அவரது சிறைவாசம் அதே ஆண்டு ஜூலை 3}ஆம் தேதி நிறைவடைந்தாலும், அவர் விடுவிக்கப்படவில்லை. இந்திய தூதரகத்தை அணுகும் வாய்ப்பும் அவருக்கு மறுக்கப்பட்டது. 

பாகிஸ்தான் சிறையில் கொடுமைகளை அனுபவித்துவந்த அவர், நோய்வாய்ப்பட்டு கடந்த மார்ச் 26}ஆம் தேதி கராச்சி மலீர் சிறை மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால், இதுவரை அவர் உடல் சொந்த ஊர் கொண்டுசெல்லப்படவில்லை. 

இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2008}ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் குடிமகன் மற்றொரு நாட்டில் கைது செய்யப்பட்டாலோ, பிடிபட்டாலோ அல்லது சிறைத்தண்டனை பெற்றாலோ மூன்று மாதத்துக்குள் அவருக்கு அந்நாட்டின் தூதரகத்தை அணுக வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். 

கைதான நபரின் தேசிய இனம் உறுதிசெய்யப்பட்ட பின்னர் அல்லது தண்டனைக் காலம் நிறைவடைந்த ஒரு மாதத்துக்குள் அவரை விடுவித்து, தாயகம் அனுப்பி வைக்க வேண்டும். 

ஆனால், ரமேஷ் தபா தாயகம் அனுப்பி வைக்கப்படாதது மட்டுமின்றி, இந்திய தூதரகத்தை அணுகும் வாய்ப்பு கூட அளிக்கப்படவில்லை என்பதை அடிப்படை மனித உரிமை மீறல் என்றுதான் கூற வேண்டும். ரமேஷ் தபா போல் 300}க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாகிஸ்தானின் மலீர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

விசாரணைக் கைதியானாலும், தண்டனைக் கைதியானாலும், தூதரகத்தை அணுகுவது அனைவருக்குமான விதிவிலக்கு. தூதரகத்தை அணுகாமல், ஒருவரின் தேசிய இனத்தை உறுதிப்படுத்துவதும், தாயகம் திரும்புவதற்கான நடைமுறையை தொடங்குவதும் சாத்தியமல்ல. 

கைதாகும் நபர்களின் தேசிய இனத்தை உறுதிசெய்வதற்கான காலவரையறையை இந்த ஒப்பந்தம் தெளிவாக குறிப்பிடாததால், இருநாடுகளும் கைதிகளின் தேசிய இனத்தை கண்டறிய அதிக காலம் எடுத்துக் கொள்வதால், அந்த காலத்தை அவர்கள் சிறையிலேயே கழிக்க நேரிடுகிறது. 

ரமேஷ் தபா சோஷாவுக்கு முன்பாக வாகா சௌகான் என்ற இந்திய மீனவரும் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது நடவடிக்கைக்கு ஆளாகி, அந்நாட்டு சிறையில் கடந்த 2015}ஆம் ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். அவரது உடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டது. 
இதேபோல், குஜராத் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த லதீஃப் காசிம் என்பவர், கடந்த 2018}ஆம் ஆண்டில் எல்லையை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில், பாகிஸ்தான் ராணுவத்தின் கைது நடவடிக்கைக்கு ஆளானார். அவரது தண்டனைக் காலம் 2018}இல் நிறைவடைந்த போதிலும், இதுவரை அவர் தாயகம் திரும்பவில்லை. அவருக்கு இந்திய தூதரகத்தை அணுகும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. 

இவரை போல், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரது உறவினர் இஸ்மாயில் சமா என்பவரும் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் விடுவிக்கப்பட்டார். 

கொடுமை என்னவென்றால், அவரது தண்டனை காலம் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்துவிட்டது. லதீஃப் காசிமும், இஸ்மாயில் சமாவும் மீனவர்கள் அல்ல. சர்வதேச எல்லைப் பகுதியில் வாழ்ந்ததாலேயே இந்த கைது நடவடிக்கைக்கு ஆளானார்கள்.

இந்திய - பாகிஸ்தான் சர்வதேச கடற்பகுதியில் மீன்பிடிக்கும் குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்திய மீனவர்களே பெரும்பாலும் பாகிஸ்தான் கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ஆளாகின்றனர். பொதுவாக சிறைக் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவடைந்த அன்றே அவர்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். 

ஆனால், பாகிஸ்தானை பொருத்தமட்டில் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டில் இணை நீதி கமிட்டியை இரு நாடுகளும் அமைத்தன. ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த ஓய்வுபெற்ற நான்கு நீதிபதிகளை கொண்ட இந்தக் குழு, ஆண்டுக்கு இருமுறை கூடி, சிறைக் கைதிகளை சந்திப்பது வழக்கம்.

மேலும், மீனவர்களையும், பெண் கைதிகளையும் விடுவிப்பதிலும், தாயகம் திரும்ப ஏற்பாடு செய்வதிலும் இந்த கமிட்டி ஏகமனதாக பரிந்துரை அளித்துவந்தது. இவ்வாறு கடந்த 2013-ஆம் ஆண்டுவரை செயல்பட்ட இந்த கமிட்டி, அதன்பின்னர் கைவிடப்பட்டது. 

இந்த கமிட்டிக்கு புத்துயிரூட்ட கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தியா முயன்ற போதிலும், பாகிஸ்தான் தரப்பில் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், ஏராளமான உயிர்களை இந்தியா விலையாக கொடுக்க நேரிடுகிறது. 

இந்த நிலை எப்போது மாறும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com