தேவை விழிப்புணர்வு

கரோனா பொதுமுடக்க காலத்தில்  கருத்தடை சாதனங்களை பெறமுடியாத 2.56 கோடி தம்பதிகளால் 23 லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்பட்டதாகவும் இவை 8,34,042 பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளுக்கு வழிவகுத்ததாகவும் கூறுக

மேரி ஸ்டோப்ஸ் இன்டர்நேஷனலின் துணை நிறுவனமான இந்திய சுகாதார சேவை நிறுவனம் (பவுன்டேசன் ஃபார் ரீப்ரொடக்டிவ் ஹெல்த் சர்வீசஸ் இந்தியா), கரோனா பொதுமுடக்க காலத்தில்  கருத்தடை சாதனங்களை பெறமுடியாத 2.56 கோடி தம்பதிகளால் 23 லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்பட்டதாகவும் இவை 8,34,042 பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளுக்கு வழிவகுத்ததாகவும் கூறுகிறது.

கருக்கலைப்பு முற்றிலும் தடைசெய்யப்பட்ட நாடுகளில் கூட திட்டமிடப்படாத 68 சதவிகித கர்ப்பங்கள் கருக்கலைப்பில் முடிவடைவதாக தரவுகள் கூறுகின்றன. திட்டமிடப்படாத குழந்தை பிறப்பினை பெண்களும் இளம் பருவத்தினரும் விரும்புவதில்லை என்பதே இந்த தரவுகள் உணர்த்தும் உண்மை.  

அதிக மக்கள்தொகை கொண்ட ஆறு இந்திய மாநிலங்களில் 2015-ஆம் ஆண்டு கருக்கலைப்பு மாத்திரை விற்பனை - விநியோக தரவுகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு, இந்தியாவில் நிகழும் 4.8 கோடிக்கும் அதிகமான கர்ப்பங்களில் பாதி திட்டமிடப்படாதவை என்றும் இவற்றில் மூன்றில் ஒரு பங்கு கருக்கலைப்புகளுக்கு வழிவகுத்தது என்றும் கூறுகிறது.

இந்திய மருத்துவ நெறிமுறைகள் (இந்தியன் ஜெர்னல் ஆஃப் மெடிக்கல் எதிக்ஸ்) என்ற மருத்துவ இதழ்  2015-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வு, இந்தியாவில் கர்ப்பம் தரித்த தாய்மார்களின் இறப்புகளில் 10 முதல் 13 சதவிகிதம்  பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் நிகழ்வதாக கூறுகிறது. 

இந்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றின்படி, நமது நாட்டில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் கர்ப்பம் தரித்த தாய்மார்களின் இறப்புகளுக்கு மூன்றாவது பெரிய காரணமாகும். பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் ஒவ்வொரு நாளும் 10 பெண்கள் இறக்கின்றனர் என்கிறது சுகாதார அமைச்சக தரவு. 

இந்தியாவில் ஆண்டொண்டிற்கு 7,00,000 கருக்கலைப்புகள் நிகழ்வதாக கூறும் அரசின்  மதிப்பீட்டை விட 22 மடங்கு அதிகமான கருக்கலைப்புகள் நிகழ்வதாக  நியூயார்க்கிலிருந்து செயல்படும் "குட்மேச்சர் இன்ஸ்டிடியூட் ரிசர்ச் சென்டர்' ஆய்வு முடிவு கூறுகிறது. 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.56 கோடி கருக்கலைப்புகள் நிகழ்கின்றன என்றும் இவற்றில் பெரும்பாலானவை  மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையின்றி வீட்டிலேயே மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் நிகழ்கின்றன என்றும் இவ்வாராய்ச்சி மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"மைஃப்பிரிஸ்டோன்', "மிúஸôபுரோஸ்டோல்' போன்ற மாத்திரை மருந்துகள் மூலம் 80% க்கும் அதிகமான கருக்கலைப்புகள் வீடுகளிலும் அறுவை சிகிச்சை மூலமாக 14% கருக்கலைப்புகள் மருத்துவமனைகளிலும் பாதுகாப்பற்ற முறைகளில் 5% கருக்கலைப்புகளும் இந்தியாவில் நிகழ்வதாக தரவுகள் கூறுகின்றன. 

கருக்கலைப்பிற்கான குறைந்த அளவு சேவையினை வழங்கும் இந்திய பொது சுகாதார அமைப்பின் மூலம்  கருக்கலைப்பு சேவை - பராமரிப்பினைப் பெறுவதற்கு இந்திய பெண்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முறையான ஆலோசனை பெறாமல் முறைசாரா மருந்தகங்கள், விற்பனையாளர்களிடம் பெறும் மருந்துகள் மூலமாக நான்கில் மூன்று கருக்கலைப்புகள் இந்தியாவில் நிகழ்வதாக பொது சுகாதார ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

பல அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு சேவை வழங்கப்படுவதில்லை. ஆதலால் கிராமப்புற  ஏழைப் பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பின் முக்கிய ஆதாரமான பொது சுகாதாரத்துறை மூலம்  நான்கில் ஒரு பங்கு கருக்கலைப்புகள் மட்டுமே செய்யப்படுகின்றன.  

1971-ஆம் ஆண்டு இந்தியாவில் மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்து. தற்போது ஐம்பது ஆண்டு கடந்துவிட்டது. எனினும் பயிற்சி பெற்ற சுகாதார வல்லுநர்கள் பற்றாக்குறை, போதிய வசதியில்லாத உள்கட்டமைப்பு, பெண்கள் மத்தியில் கருக்கலைப்பு சட்டம் பற்றிய அறியாமை ஆகியவை பாதுகாப்பான  கருக்கலைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாமல் போனதற்கான முக்கியக் காரணங்கள்.
உலக அளவில் பெண் குழந்தை பிறப்பு குறைவதற்கான மிக முக்கியக் காரணம் இந்தியாவில் நிகழும் பாலினத் தேர்வு கருக்கலைப்பு என்கிறது "லான்செட்' மருத்துவ இதழில் வெளியான ஒரு கட்டுரை (ஏப்ரல் 2021). பெண் கருக்கொலைகள் என்று அழைக்கப்படும் பாலின தேர்வு கருக்கலைப்புகள் ஆண் குழந்தையே குடும்பத்தின் வாரிசு என்ற தொன்றுதொட்டு வந்த பழக்கத்தின் விளைவினால் இந்தியாவில் நிகழ்கின்றன. 

ஆண்களை விட பெண்களுக்கு சமூக மதிப்பு குறைவு என்ற நம்பிக்கையும் பெண் குழந்தை பெற்றோருக்கு பொருளாதார சுமை என்ற தவறான எண்ணமும் நம் நாட்டில் பெண் சிசு கருக்கலைப்பு நிகழ மிக முக்கிய காரணங்கள். இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு 75 பெண் கருக்கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும் அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 17 பெண் கருக்கொலைகள் நடந்துள்ளதாகவும் "ஸ்டடிக்கா' என்ற இணையதளத் தரவு கூறுகிறது.

2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பாலியல் - இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த உலகளாவிய ஆராய்ச்சி, கொள்கைக்கான அமைப்பின் அறிக்கை 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி125 நாடுகளில் வாழும் 42% பெண்கள் கடுமையான கருக்கலைப்பு சட்டங்களைக் எதிர் கொண்டுள்ளனர் என்றும் இந்த கடுமையான சட்டங்களைக் கொண்ட நாடுகளில் பெரும்பாலானவை (93%) வளரும் நாடுகள் என்றும் கூறுகிறது. 

2000-ஆம் ஆண்டு முதல் 28 நாடுகள் தங்கள் கருக்கலைப்பு சட்டங்களை மாற்றியமைத்துள்ளன. பெண்களின் கருத்தரிக்கும் உரிமையை வலுப்படுத்தவும், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளைத் தடுக்கவும் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் உலகின் மிக முற்போக்கான கருக்கலைப்பு சட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் திருமணமான பெண் தனக்கு விருப்பமில்லா நிலையில் கருவை கலைக்க முடிவு செய்து கொள்ளலாம் என்றும்  அதற்காக கணவரிடமோ குடும்பத்தினரிடமோ அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்திய கருக்கலைப்பு சட்டம் கூறுகிறது. கருக்கலைப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் பெண்களிடம் கருக்கலைப்பு சட்டவிரோதமானது அல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com