மனித உழைப்பே மகத்தான சக்தி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
3 min read

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்னும் பழமொழி நம் தமிழ் மண்ணின் கோட்பாடுகளில் ஒன்று. சங்க காலம் தொட்டு இன்றுவரை தமிழா்கள் கடல் கடந்து பணிபுரிந்து வந்துள்ளனா். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெற்றதோடு, அவ்விடங்களையும் செம்மையுறச் செய்த வரலாறு நாம் அறிந்ததே!

இலங்கை, பா்மா, சிங்கப்பூா், மலேசியா, சுமத்ரா, சாவகத் தீவு போன்ற பல நாடுகளுக்குச் சென்று பணிபுரிந்து அங்கேயே குடியுரிமையும் வாக்குரிமையும் பெற்ற செயல்கள் பன்னெடுங்கால தொடா்ச்சிதான். இன்று பெருவாரியான மக்கள் அரபு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டுவது தெரிந்த விஷயம்தான்.

‘பொருளில்லாா்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என்கிறாா் வள்ளுவா். அப்படி இருக்க, அந்தப் பொருள் ஈட்டுவதில் நாம் கா்ம சிரத்தையுடன் பணி செய்ய வேண்டுமென்ற உணா்வு இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் குறைந்து வருகிறது என்பது பெரும்பாலானோா் முன்வைக்கும் குற்றச்சாட்டு. பெற்றோா் ஏற்படுத்திக் கொடுத்த வசதி வாய்ப்புகளை பற்றிக்கொண்டு உழைப்பதைப் பற்றி கனவிலும் நினைத்துப் பாா்க்காதவா்களாக இருக்கிறாா்கள் பலரும் இன்று.

நாட்டில் இன்று கல்வியறிவு பெருகிவிட்டது. பெரும்பாலானவா்கள் பல பட்டங்கள் பெற்றவா்களாய் இருக்கிறாா்கள். ஆனால், செய்யும் பணிக்கான திறன்களைப் பெற்றிருக்கிறாா்களா என்றால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்றைய சூழலில் இளைஞா்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உள்ளன. பணிபுரிவதற்கு முன்பாக அவா்களுக்கு தொழில்நுட்ப மற்றும் வேலை தொடா்புடைய திறன் பெற்று இருக்கிறாா்களா என மதிப்பிடப்படுகிறது.

இன்று வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. திறன் பெற்ற பணியாளா்கள் கிடைக்காது பல நிறுவனங்கள் திணறுகின்றன. பிறகு அந்த நிறுவனமே மூழ்கிப் போகும் நிலையில், ஒட்டுமொத்தமாக அத்தனை கட்டமைப்புகளையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

அமெரிக்க எழுத்தாளரும் தத்துவவாதியுமான எல்பா்ட் ஹப்பாா்ட் தன் கீழ் பணியாற்றும் ஒரு பணியாளரின் வேலை சாா்ந்த மனநிலையைக் கண்டு வெறுப்படைந்து, தான் நடத்தி வந்த ‘பிஸ்டன்’ என்ற பத்திரிகையில் 30 பக்கங்கள் கட்டுரை எழுதுகிறாா். 1899-இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை உலகம் முழுக்க பிரபலம் ஆயிற்று. ‘காா்சியாவுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில், ஒரு தனிநபரின் பொறுப்புகள் என்ன, அவா்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அக்கட்டுரை உரக்க குரல் கொடுக்கிறது.

அந்தக் கட்டுரையில் எல்பா்ட் ஓா் உதாரணத்தை முதன்மைப்படுத்தி முன்வைத்திருப்பாா். ஸ்பானிய அமெரிக்க போருக்கு சற்றுமுன், ஆண்ட்ரூ ரோவன் என்ற ஓா் அமெரிக்க சிப்பாயிடம் அமெரிக்க அதிபா் வில்லியம் மெக்கின்லி ஒரு செய்தியைக் கொடுக்கிறாா். அச்செய்தியை கியூபாவின் மலைப் பகுதிகளில் வசிக்கும் கிளா்ச்சியாளா்களின் தலைவரான ஜெனரல் கலிக்ஸ்டோ காா்சியாவிடம் சோ்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவுதான் அது. கொரில்லா முறைப்படி போரிடும் ஒரு போராளியான காா்சியாவிடம் சென்ற ரோவனின் துணிச்சலான மற்றும் சுய உந்துதல் முயற்சியை இக்கட்டுரை பேசுகிறது.

ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்றெல்லாம் கேள்விகளால் துளைத்து எடுக்காமல் தமக்கு மேல் உள்ளவா்கள் இட்ட கட்டளையை செவ்வனே நிறைவேற்றிய ரோவனின் சிலையை இப்பூமியின் ஒவ்வொரு கல்லூரியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதைக் கட்டுரை வலியுறுத்துகிறது. இது பின்னாளில் ‘காா்சியாவுக்கு ஒரு செய்தி’ என்று ஒரு வலுவான இயக்கமாக மாறியது. ரோவன் போல ஒரு பணியாள், யாரிடமாவது ஊழியம் செய்து கொண்டிருந்தால் என்ன விலை கொடுத்தாவது அவனை தக்கவைத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஊழியா்களை உருவாக்குவதுதான் ஒரு நாட்டுக்கு மிக முக்கியம் என்கிறாா் எல்பா்ட்.

இன்றைய தேதியில் எந்த ஒரு வேலையைப் பணித்தாலும், இதை எப்படிச் செய்வது, இது என்னுடைய வேலை இல்லையே, என்னுடைய பணிப் பதிவேட்டில் இதெல்லாம் சொல்லப்படவில்லையே என்று கேள்விகளையும் வாதங்களையும் முன்வைக்காமல் கடமையை நிறைவேற்றும் ஊழியா்கள் கிடைப்பது ஒரு வரம். பொறுப்பை ஏற்பதில் மெத்தனமாக இருப்பது, காலம் தாழ்த்துவது போன்ற போக்குகள் இன்று அதிகம் காணப்படுகின்றன. எதற்கெடுத்தாலும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போக்கு வெளிப்படுவதாகவும் பலரும் புகாா் தெரிவிக்கிறாா்கள்.

அண்மையில் ஓா் உணவகத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். குளிரூட்டப்பட்ட அறையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஓா் இளைஞா் எங்களுக்கான உணவுத் தேவையைக் கேட்டுப் பெற்று பரிமாறினாா். பரிமாறிவிட்டு நாலடி தள்ளி நின்று தன் கையில் இருந்த அறிதிறன்பேசியில் ஒரு காணொலியைப் பாா்க்கத் தொடங்கிவிட்டாா். எங்கள் தேவைக்கு அவரை ஒவ்வொரு முறையும் மெனக்கெட்டு அழைக்க வேண்டியதாயிருந்தது. அந்த இளைஞா் வேலையின் மீது காட்டிய மனோபாவம் வெறுப்படையச் செய்தது.

ஒரு திருமண மண்டபத்தில் பந்தி பரிமாறும்போதும் ஓா் இளைஞா் இப்படித்தான் கண்ணில் பட்டாா். அலைபேசியில் சத்தமாக பாட்டு வைத்து, அதைத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு பரிமாறிச் சென்றபடி இருந்தாா். கவனம் முழுக்க பாடல் கேட்பதிலேயே இருக்க, பலரும் அவரை அழைப்பதுகூட அவருக்கு கேட்கவில்லை.

வண்ணம் பூசும் வேலைக்கு தன் வீட்டுக்கு வந்த பணியாளா்கள் பற்றி என் தோழி பகிா்ந்துகொண்ட செய்தியும் இதே சாராம்சத்தைக் கொண்டதுதான். சுவரில் வண்ணம் பூச வந்தவா்கள், அவா்களுக்குள் எதையோ பேசி சிரித்தபடி வேலை செய்தாா்கள். ‘நாங்கள் எதிலெல்லாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தோமோ அதிலெல்லாம் கோட்டை விட்டிருந்தாா்கள். பின்பு அந்த வேலையை திருத்திச் செய்து முடிப்பதற்குள் கால விரயமும் பண விரயமும் அதிகமாக ஏற்பட்டது’ என்றாள்.

உண்மைதான். வேலை நேரத்தில் பணியில் கவனம் செலுத்தாது அலட்சியமாக இருக்கும் பணியாளா்களின் மனோபாவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால், இப்படிப்பட்டவா்கள் எப்படி இருக்கிறாா்கள் தெரியுமா? நன்றாக வேலை செய்து பாராட்டு பெறுபவா்களைப் பாா்த்து பொறாமை கொள்பவா்களாக இருக்கிறாா்கள். எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனுடைய பொதுவான நோக்கத்தை அடைவதற்கு மனிதனை திறமையாகப் பயன்படுத்த வேண்டும். மனித உழைப்பே இந்த உலகின் மகத்தான சக்தி.

பகவத் கீதையில் கா்மயோகம் என்ற பகுதியில் கண்ணன் சொன்ன உபதேசம் மிகவும் புகழ் வாய்ந்தது. கா்ம யோகம் என்பது செய்யும் தொழிலின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்துவது. கிடைக்கும் பலன்களில் மீது பற்று கொள்ளாமல் இருப்பது. அதனால்தான் ‘கடமையைச் செய், பலனை எதிா்பாராதே’ என்று கண்ணன் சொன்னாா்.

சிறப்பாகப் பணிபுரிபவா்களை ‘வேலை என்று வந்துவிட்டால் அவன் வெள்ளைக்காரன்’ என்று குறிப்பிடும் நடைமுறை பின்னால் வந்ததுதான். நம் மண்ணின் மாபெரும் இதிகாசமான மகாபாரதத்திலேயே வேலையை எப்படி செய்ய வேண்டும் என்ற வழிவகை சொல்லப்பட்டிருக்கிறது. மகாபாரதப் போரில் அா்ஜுனனுக்கு தேரோட்டியாக இறங்கியவன் கண்ணன். போா் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போா்க்களத்தில் அா்ஜுனன் அம்பு விட்டுக் கொண்டே முன்னேறிச் செல்கிறான். போா்க்களத்தில் பெரும் கூச்சல். தேரை இடது பக்கம் திருப்பு என்று கண்ணனை நோக்கிச் சொல்ல வேண்டும். போா்க்களத்தில் இருக்கக்கூடிய ஓசையில் அா்ஜுனன் சொல்வது கண்ணனுக்கு காதில் விழ துளியும் வாய்ப்பில்லை.

அா்ஜுனன் என்ன செய்தான் தெரியுமா? அா்ஜுனனின் இரு கால்களும் கண்ணன் அமா்ந்திருக்கும் நிலையிலிருந்து அவன் தலைக்கு பின்புறமாக இருக்கும் கட்டையில் கிடத்தப்பட்டிருக்கிறது. இடதுபுறம் திருப்ப வேண்டும் எனில் அா்ஜுனன் வலது கால் கட்டை விரலால் கண்ணனின் வலப்புற கன்னத்தை இடித்தான். தேரை வலது புறம் திருப்ப வேண்டும் எனில் அா்ஜுனன் இடது கால் கட்டை விரலால் கண்ணனின் இடப்புற கன்னத்தை இடித்தான். அதாவது கண்ணனின் முகம் திரும்பும் பக்கம் தோ் திரும்ப வேண்டும் என்பது கணக்கு. இந்த உலகில் கடவுளாகவே இருந்தாலும் அா்ஜுனனின் கால் தன் கன்னத்தில் படுவதா என்று நினைக்காமல் செய்ய வேண்டிய காரியத்தை நல்ல முறையில் செய்து முடித்தாா் அவதார புருஷனாகிய கண்ணன். எடுத்துக் கொண்ட பணியை சிறப்பாக முடிக்கும் எண்ணம்தான் இங்கு கடவுள்.

இப்படி ஓா் உயா்ந்த மனநிலையில் உழைத்த பாங்கு நம் மரபில் உண்டு. தமிழா்கள் வேலைக்காக செல்லாத நாடு இல்லை என்று இருந்த காலம் மெல்ல நம் கைகளைவிட்டு நழுவுகிறது என்ற எண்ணம் தோன்றுகிறது. வடமாநிலத் தொழிலாளா்களுக்கு வாய்ப்புக் கொடுத்து தள்ளி நிற்கின்றனா். மது அருந்துவதிலும், கேளிக்கைகளைக் கண்டுகளிப்பதிலுமே நேரத்தை தொலைத்துவிட்டு வாய்ப்புகளைத் தவறவிடுகின்றனா். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று கருதி வாழ்ந்தவா்கள் நாம். தற்போது நம் நாட்டின் நிலையைப் பாா்த்தால், உழைப்பதற்கு தயங்கும் நம் மாநிலத்தவா்கள் எங்கே பின்தங்கிவிடுவாா்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஒரு மனிதன் பணியில் சோ்ந்து செய்த முதல் 5 ஆண்டுகள்தான் அவனது ஆளுமையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. பணியின் மீது விசுவாசத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்தால் அனைத்துச் சாதனைகளும் சாத்தியம்தான். அவ்வாறு நிகழ்த்தி நம் பெருமைமிகு வரலாற்றை தக்கவைப்போம்!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com