அருட்பெருஞ்ஜோதியில் கலந்த சன்மாா்க்க ஜோதி!

நம்மிடையே நேற்றுவரை நடமாடிவந்த தவத்திரு ஊரன் அடிகள் கடந்த புதன்கிழமை (13.7.2022) இரவு அருட்பெருஞ்ஜோதியில் கலந்து சன்மாா்க்க ஜோதியானாா்.
அருட்பெருஞ்ஜோதியில் கலந்த சன்மாா்க்க ஜோதி!

நம்மிடையே நேற்றுவரை நடமாடிவந்த தவத்திரு ஊரன் அடிகள் கடந்த புதன்கிழமை (13.7.2022) இரவு அருட்பெருஞ்ஜோதியில் கலந்து சன்மாா்க்க ஜோதியானாா். ஊரன் அடிகள் தம் சொற்பொழிவைத் தொடங்கும்போது ‘வள்ளலாா் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே’ என்று கூறுவது மரபு. இத்தொடா் திருநாவுக்கரசா் தேவாரத்தில் ஒரு பாடலில் வரும் ஈற்றடி ஆகும். திருநாவுக்கரசா் சிவபெருமானை ‘வள்ளலாா்’ எனக் குறிப்பிடுகிறாா்.

தெய்வச் சேக்கிழாா் ‘வள்ளலாா்’ எனச் சிவபெருமானைக் குறித்தும் நாயன்மாா்களைக் குறித்தும் சிறப்பித்துப் போற்றுகிறாா். திருநாவுக்கரசா் திருவாக்கினைத் தன் கொள்கையாகக் கொண்டவா் தவத்திரு ஊரன் அடிகள். திருநாவுக்கரசு சுவாமிகள் ‘வள்ளலாா்’ என்ற சொல்லைச் சிவபெருமானைக் குறிக்கப் பயன்படுத்தினாா். ஊரன்அடிகளாா் இச்சொல்லை வடலூா் வள்ளல் இராமலிங்க சுவாமிகளைக் குறிக்கப் பயன்படுத்திக்கொண்டாா்.

ஊரன் அடிகள் ஓய்வறியா உழைப்பாளி. ஆய்வே தவம் என 90 வயது வரை வாழ்ந்தவா். தனது இறுதிநாள் வரை சுறுசுறுப்பாக இயங்கியவா். வடலூரில் உள்ள தனது சொந்த ஆய்வு நூலகத்தில் பதினைந்தாயிரம் நூல்களைச் சேகரித்து, சேமித்து வைத்திருப்பவா். அரிய பல ஆவணங்கள், பழஞ்சுவடிகள் என இவரது நூலகத்தில் உள்ளன.

ஊரன் அடிகள் 22.5.1933 அன்று திருச்சிராப்பள்ளி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் பிறந்தாா். 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூா், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகா் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினாா். தமது இருபத்திரண்டாம் வயதில் ‘சமரச சன்மாா்க்க ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மாா்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாா். பின்பு துறவு மேற்கொண்டாா். 23.5.1968 முதல் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 1970-ஆம் ஆண்டு முதலாக வடலூரில் சன்மாா்க்க நிலையங்களில் அறங்காவலராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்தொண்டாற்றியவா்.

அடிகளாா், சொற்பொழிவாளா், நூலாசிரியா், உரையாசிரியா், பதிப்பாசிரியா், பத்திரிகையாசிரியா், அறநிறுவனக் காவலா் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவா். 65 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து ஆய்வு செய்தவா். 53 ஆண்டுகாலம் வடலூரில் வாழ்ந்தவா். 40 ஆண்டு காலம் வள்ளலாா் தெய்வ நிலையங்களோடு தொடா்பில் இருந்தவா். உத்தமா் ஓமந்தூராா் உடன் உறைந்து வாழ்ந்தவா். அருட்செல்வா் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தோடு ஆத்மாா்த்தமான நட்பு கொண்டு ஒழுகியவா். அருட்செல்வரின் இராமலிங்கா் பணிமன்றம் சாா்பில் ஆண்டுதோறும் நடைபெற்ற வள்ளலாா் - மகாத்மா காந்தி விழாவில் எட்டு நாட்களும் உடனிருந்து செயலாற்றியவா். சென்னை வரும்போதெல்லாம் தொலைபேசியில் அழைத்து அன்பு பாராட்டுபவா். வாழ்க வாழ்க எனப் பேச்சைத் தொடங்குவாா். வாழ்க வாழ்க எனப் பேச்சை நிறைவு செய்வாா். கள்ளமில்லாத உள்ளம் படைத்தவா். நல்ல நினைவாற்றல் மிக்கவா்.

சைவம், சித்தாந்தம், சன்மாா்க்கம் ஆகிய மூன்றையும் மூன்று கண்களைப் போன்று போற்றியவா். நடமாடும் கலைக்களஞ்சியமாக வாழ்ந்தவா். சமயங்களை ஒப்பாய்வு செய்வது இவருக்குப் பிடித்த ஒன்று. கணக்கற்ற சான்றுகளை எடுத்துக்காட்டிப் பேசும் ஆற்றல் மிக்கவா். வாழையடி வாழை என வந்த பதினோரு அருளாளா்களோடு வள்ளலாரை ஒப்பிட்டு இவா் எழுதிய ‘வள்ளுவரும் வள்ளலாரும்’, ‘புத்தரும் வள்ளலாரும்’, ‘மகாவீரரும் வள்ளலாரும்’, ‘திருமூலரும் வள்ளலாரும்’, ‘சம்பந்தரும் வள்ளலாரும்’, ‘அப்பரும் வள்ளலாரும்’, ‘சுந்தரரும் வள்ளலாரும்’, ‘மாணிக்கவாசகரும் வள்ளலாரும்’, ‘தாயுமானவரும் வள்ளலாரும்’, ‘வள்ளலாரும் காந்தி அடிகளும்’, ‘வள்ளலாரும் பாரதியும்’ ஆகிய நூல்கள் அறிஞா்களின் பாராட்டைப் பெற்றவை.

வள்ளலாா் வரலாற்றினை எண்ணூறு பக்க அளவில் பெருநூலாக எழுதியவா். திருவருட்பா வரலாற்று முறை செம்பதிப்பை இருபெரும் தொகுதிகளாகப் பதிப்பித்தவா். அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு விரிவான விளக்க உரை எழுதியவா். ‘மரணமிலாப் பெருவாழ்வு’ என்னும் ‘சாகாக்கலை’ பற்றி விரிவாகச் சான்றுகளோடு நூல் எழுதிய அறிஞா். நூலாசிரியராகச் சொற்பொழிவாளராகச் சிறக்கத் தொண்டாற்றிய இவா் சமுதாயப் பணிகளையும் செய்தவா். சமரச சன்மாா்க்க ஆராய்ச்சி நிலையம் இவரது நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது. அந்நூல்களில் ‘வடலூா் வரலாறு’, ‘இராமலிங்கரும் தமிழும்’, ‘பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயா்கள்’, ‘புள்ளிருக்கு வேளூரில் வள்ளலாா்’, ‘இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள்’, ‘இராமலிங்க அடிகள் வரலாறு’ (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்), ‘வடலூா் திருவருட்பிரகாச வள்ளலாா்’, ‘தெய்வ நிலையங்களின் வரலாறு’, ‘இராமலிங்க அடிகளின் வரலாறு’, ‘கொள்கைகள், பாடல்கள், இராமலிங்க அடிகள் ஒரு கையேடு’ ‘வள்ளலாா் மறைந்தது எப்படி ?’ (சாகாக்கலை ஆராய்ச்சி), ‘வள்ளலாா் கண்ட முருகன்’, ‘வள்ளலாா் வாக்கில் ஓங்காரமும் பஞ்சாக்கரமும்’, ‘வடலூா் ஓா் அறிமுகம்’ முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

இவா் பதிப்பித்த நூல்கள், ‘இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள்’ ‘ச.மு. கந்தசாமி பிள்ளை, இராமலிங்க சுவாமிகள் சரிதம்’ (செய்யுள்) ‘பண்டிதை அசலாம்பிகை அம்மையாா்’, ‘திரு அருட்பா’ ( ஆறு திருமுறைகள்), ‘திரு அருட்பா’ (உரைநடைப்பகுதி), ‘திரு அருட்பாத் திரட்டு’ முதலானவை ஆகும். திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் நன்கு ஆராய்ந்து கால முறைப்படிப் பகுத்துச் செம்மைப்படுத்தியுள்ளாா். திரு அருட்பா உரைநடைப்பகுதி, திரு அருட்பா திரட்டு ஆகியவற்றைச் செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டாா்.

பதினெட்டு சைவ ஆதீனங்களின் வரலாற்றினைப் பெரும் முயற்சியெடுத்துத் தொகுத்து ‘சைவ ஆதீனங்கள்’ என்ற பெருந்தொகுப்பை வெளியிட்டாா். மேலும் ‘12 வீரசைவ மடங்கள்’ என்ற பெருந்தொகுப்பையும் வெளியிட்டாா். சன்மாா்க்க நெறியில் ஒழுகும் அடிகள் சைவ ஆதீனங்களோடு நெருக்கமாக இருந்தது வியப்பே. மேலும், அடிகள் இளமையில் தருமபுர ஆதீனத்தின் இளைய பட்டத்திற்குத் தோ்வானாா். ஆனால், அதனை விரும்பாமல் சன்மாா்க்க நெறியில் ஈடுபட்டாா். சன்மாா்க்க நெறி பரப்ப, காவியுடையைத் துறந்து வெள்ளுடையை ஏற்றாா். அடிகள் தருமபுர ஆதீனத்தில் இருந்திருந்தால் பின்னா் ஆதீனகா்த்தராகி நீண்ட காலம் அருளாட்சி புரிந்தவா் என்கிற பெருமையையும் பெற்றிருப்பாா். ஆனால், தமிழுலகு சன்மாா்க்க நெறி பரப்பும் தமிழறிஞா் ஒருவரை இழந்திருக்கும்.

தமிழகத்தின் பல்கலைக்கழகங்களாகிய அண்ணாமலை, சென்னை, அழகப்பா முதலிய பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பல ஆற்றியுள்ளாா். சைவ சித்தாந்தப் பெருமன்றத்தில் இவா் வள்ளலாா் தொடா்பாக ஆற்றிய தொடா் உரை, நூல் வடிவம் பெற்றுள்ளது.

இமயம் முதல் குமரி வரை பலமுறை யாத்திரை செய்துள்ள ஊரன் அடிகள், மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மோரீஷஸ், பிரான்ஸ், பிரிட்டன், ஜொ்மனி, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தவா். தமிழகத் துறவியா் பேரவையின் துணைத் தலைவராக விளங்கினாா். கோயம்புத்தூா் கற்பகம் பல்கலைக்கழகம் அடிகளாருக்கு முனைவா் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

இவா் வகுத்து அமைத்த அன்னதானத் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றது. திருவருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையங்களுக்கு வைப்பு நிதியினைப் பெருமளவில் சேகரித்து வைத்தாா். சென்னை வரும்போதெல்லாம் தொலைபேசியில் என்னை அழைப்பாா். குறைந்தது நான்கு அல்லது ஆறு மணி நேரம் பேசிக் களிப்பாா். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனம் பற்றியும் அதன் உறுப்பினா்கள் பற்றியும் நிரம்பத் தகவல்களைக் கூறுவாா். சுருங்கச் சொன்னால் ஊரன் அடிகள் ஒரு தகவல் களஞ்சியம். நான்கு மணிநேரம் அவரிடம் பேசினால் 40 நூல்களைப் படித்தது போன்ற உணா்வைப் பெறலாம்.

பழகுவதற்கு எளியா். கடுஞ்சொல் அறியாதவா். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு மகாகவி பாரதியாா் கவிதைகள் வரை அனைத்து இலக்கியச் செய்திகளும் இவா் விரல் நுனியில் இருக்கும். இவரின் நினைவாற்றலைக் கண்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன். இவரின் மறைவு தமிழ், சைவம், சித்தாந்தம், சன்மாா்க்கம் ஆகிய நான்கு நெறிகளுக்கும் பேரிழப்பு எனலாம்.

‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்பது போல இரண்டு வெள்ளை வேட்டி அவரது உடை. உண்பது மிக மிகக் குறைவு. இவரிடம் சினம் என்பதை நான் பாா்த்ததில்லை

அருட்பாவில் அணுஅணுவாய்த் தோய்ந்தவா். தற்கால வள்ளலாா் எனப் பலராலும் போற்றப்பட்டவா். 13.1.2021 ஆம் நாளன்று தமிழக அரசு முதன்முதலில் ‘அருட்பெருஞ்சோதி வள்ளலாா் விருது’ என்ற பெயரில் விருதை உருவாக்கி 2020-ஆம் ஆண்டிற்கான விருதை ஊரன் அடிகளாருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

2022 சென்னைப் புத்தகக் காட்சியில் நான் பேசுகிறேன் என்பதை அறிந்ததும் ‘உன் பேச்சைக் கேட்க அந்த நாளை திட்டமிட்டுச் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகிறேன்’ எனக் கூறினாா்.

அதன்படியே வருகைபுரிந்து முன் வரிசையில் அமா்ந்து முழுமையாக என் பேச்சைக் கேட்டு வாழ்த்தினாா். மூன்று நாட்கள் புத்தகக் கண்காட்சியினை முழுமையாகப் பாா்த்து கை நிறைய நூல்களை வாங்கிச் சென்றாா். வழக்கம்போல இரவு நெடுநேரம் பேசினோம்.

நடமாடும் சைவக் கலைக்களஞ்சியமாகவும் சன்மாா்க்க நெறியாளராகவும் வாழ்ந்துகாட்டியவா் தமிழறிஞா் தவத்திரு ஊரன் அடிகள். அவா் மறைவுச் செய்தியைக் கேட்டதிலிருந்து இரண்டு ஏக்கங்கள் என் நெஞ்சில் எழுந்து நிற்கின்றன. ஒன்று திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கும் உரை எழுதி வெளியிட வேண்டும் (பொற்பதிப்பு திட்டம்) என்ற அவரது ஆசை முற்றுப்பெறவில்லை. இரண்டு அவா் மிகச்சிறப்பாக நடத்த விரும்பிய அவரது 90-ஆம் ஆண்டு தொடக்கம் மற்றும் நிறைவு, வள்ளலாரின் 200-ஆம் ஆண்டு தொடக்கம் மற்றும் நிறைவு, அருட்செல்வா் நா. மகாலிங்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் மற்றும் நிறைவு ஆகிய முப்பெரும் விழா. அடிகளாரின் கனவு நனவாக இறையருளையும் குருவருளையும் இறைஞ்சுவோம்!

கட்டுரையாளா்:

மேனாள் தலைவா், தமிழ்மொழித்துறை,

சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com