காவல் மரணங்களுக்கு தீர்வு காண்போம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒரு மாநில காவல்துறையின் செயல்திறனையும், நிர்வாக அமைப்பையும் மதிப்பீடு செய்யும் அளவுகோலாக விளங்குவது அந்த மாநிலத்தில் நிகழும் காவல் மரணங்கள். காவல் மரணம், காவல்துறையின் மனித உரிமை மீறியச் செயலாகக் கருதப்படுவதோடு, அரசாங்கத்திற்கு அவப்பெயரையும் ஏற்படுத்துகிறது.

சென்னை தலைமைச் செயலகக் குடியிருப்பு காவல் நிலையத்தில் அண்மையில் நிகழ்ந்த காவல் மரணத்தைத் தொடர்ந்து, குற்ற வழக்கில் கைதானவர்களை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என்றும், ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டால், மாலைக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குற்ற வழக்கில் கைதானவர்களை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் காவல் மரணங்கள் நிகழ்வதைத் தடுத்துவிட முடியுமா?  இரவு நேரங்களில் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவது குறித்து சட்டம் கூறுவது என்ன?    

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான பிரிவு 22 (2)-இன் படி கைது செய்யப்பட்ட  நபரை 24 மணி நேரத்திற்குள் (நீதிபதியிடம் அழைத்துச் செல்ல ஆகும் பயண நேரம் நீங்கலாக) நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும்.

குற்றம் புரிந்த நபரை கைது செய்வது, அவரிடம் விசாரணை மேற்கொள்வது தொடர்பான விதிமுறைகளை குற்ற விசாரணை நடைமுறை சட்டம் வரையறை செய்துள்ளது. இச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும்.


குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததும், உடனடியாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டமும், குற்ற விசாரணை நடைமுறை சட்டமும் கூறவில்லை. கைது செய்யப்பட்டவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு 24 மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  

குற்றச் செயலில் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என புலன் விசாரணை அதிகாரிக்குத் தெரிய வந்ததும், குற்றம் புரிந்த நபரை உடனடியாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க முடியாது. அந்த குற்றவாளியிடம் முதல் கட்ட புலன் விசாரணையை 24 மணி நேரத்திற்குள் நடத்தி, அவருடன் குற்றச் செயலில் பங்கெடுத்துக் கொண்டவர்கள், குற்றம் நிகழ்த்திய விதம், குற்றம் நிகழ்த்தப் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்து துப்பு துலக்க வேண்டும். சாட்சிகள் முன்னிலையில் குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தை புலன் விசாரணை அதிகாரி பதிவு செய்ய வேண்டும். முதல் கட்ட புலன் விசாரணை அறிக்கையுடன் குற்றவாளியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும். முதல் கட்ட புலன் விசாரணை முறையாக நடைபெறாவிட்டால், நீதிமன்ற விசாரணையில் வழக்கு தோல்வியடைய அதுவே காரணமாகிவிடும்.

இரவு நேரத்தில் குற்றவாளிகளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டால், அது மற்றொரு அசம்பாவிதத்தை நோக்கி நகரும். இரவு நேரங்களில் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவதற்கென்று ரகசிய இடங்களை புலன் விசாரணை அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொள்ளும் நிலை உருவாக அது வழி வகுக்கும். அந்த ரகசிய இடங்களில் புலன் விசாரணை என்ற பெயரில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் போகும் சூழல் ஏற்படும்.

காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் நடத்தப்படும் விசாரணையின் விளைவாக நிகழும் மரணம் மட்டுமின்றி, ஒரு குற்றவாளியை காவல் நிலையம் அழைத்து வராமல், வேறு ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதன் விளைவாக நிகழும் மரணமும் காவல் மரணம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
விசாரணையின்போது சந்தேகக் குற்றவாளியை அடித்து, துன்புறுத்துவதன் மூலம் குற்றம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை புலனாய்வில் ஈடுபடும் காவல்துறையினரிடம் நிலவுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக சந்தேக குற்றவாளியை விசாரணையின்போது கண்மூடித்தனமாக அடிப்பதால், காவல் மரணம் நிகழ்கின்றது.

காவல் நிலையம் அழைத்து வரப்படும் சந்தேக குற்றவாளி, விசாரணையின் முடிவை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், காவல் நிலைய வளாகத்திலேயே தூக்குப்போட்டுக் கொண்டோ, நச்சு திரவத்தைக் குடித்தோ தற்கொலை செய்து கொள்வதும் காவல் மரணமே.

குற்ற விசாரணை நடைமுறை சட்டமோ, புலன் விசாரணை செய்வது குறித்த வழிமுறைகளோ தெரியாத சிலர் புலன் விசாரணைக் குழுவில் இடம் பெற்று விடுகின்றனர். புலன் விசாரணையின்போது அவர்களுடைய வரம்பு மீறிய செயல் சில நேரங்களில் காவல் மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது. அண்மையில் சென்னையில் நிகழ்ந்த காவல் மரணம் குறித்த வழக்கில் ஊர்க்காவல் படையைச் சார்ந்த ஒருவரும், ஆயுதப்படையைச் சார்ந்த இரு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் களப்பணி, புலன் விசாரணை போன்றவற்றில் ஈடுபடும் காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோரின் செயல்களை உடனுக்குடன் கண்காணித்து, அவர்களை வழி நடத்துவதற்காக பல நிலைகளில் காவல் உயரதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளனர். மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தெரியப்படுத்துவதற்காக தனிப்பிரிவு காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனிப்பிரிவு காவலர்களின் உளவுத்தகவலும், காவல் உயரதிகாரிகளின் மேற்பார்வையும் முறையாக இருந்தால், காவல் மரணங்கள் நிகழ்வது தவிர்க்கப்பட்டு விடும்.

புலன் விசாரணையில் ஈடுபடும் காவல் அதிகாரிகளுக்கும், அவர்களுக்குத் துணைபுரியும் காவலர்களுக்கும் குற்ற விசாரணை நடைமுறை தொடர்பான சட்டங்கள், புலன் விசாரணையின்போது நிகழும் மனித உரிமை மீறல்களால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்து தொடர்பயிற்சி வழங்குவதும் காவல் மரணங்கள் நிகழ்வதைத் தடுக்கத் துணைபுரியும்.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், புலன் விசாரணைக்காக அவர்களைத் தங்கள் பொறுப்பில் (போலீஸ் கஸ்டடி) புலன் விசாரணை அதிகாரிகள் அழைத்து வருவதற்கு சட்டம் அனுமதிக்கிறது. 

புலன் விசாரணையைத் தொடர்வதற்காக போலீஸ் கஸ்டடி பெற்று அழைத்து வரப்படும் குற்றவாளிகள் மீது காவல்துறையினரே "என்கவுன்ட்டர்' என்ற பெயரில் துப்பாக்கி சூடு நடத்தி, குற்றவாளிகளை உயிரிழக்கச் செய்யும் முறை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. 

நீதிமன்ற விசாரணையின் முடிவில், பல கொடுங்குற்றவாளிகள் விடுதலை அடைந்துவிடுகின்றனர் என்றும், அவர்களுக்கு என்கவுன்ட்டர் மூலம் உடனடி தண்டனை வழங்கினால்தான், சமுதாயத்தில் கொடுங்குற்ற நிகழ்வுகள் குறையும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பொதுமக்களிடத்தில் வரவேற்பு கிடைத்தாலும், இத்தகைய என்கவுன்ட்டர்களும் காவல் மரணங்கள்தான். 

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவரும் கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவலர்கள் அழைத்துச் செல்லும்போது, பழிதீர்த்துக் கொள்ளும் விதத்தில், அக்கைதியின் பகையாளிகள் நடத்தும் தாக்குதலில் நீதிமன்ற விசாரணை கைதி உயிரிழக்கின்ற சம்பவங்களும் நம்நாட்டில் நிகழ்கின்றன. இத்தகைய மரணங்களும் காவல் மரணங்கள்தான்.

நீதிமன்ற ஆணையின்படி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விசாரணை கைதிகள் உயிரிழக்கின்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. புலன் விசாரணையின்போது காவல்துறையினர் அடித்ததன் விளைவாகவோ, சிறைச்சாலையில் சிறைத்துறையினர் தாக்கியதன் விளைவாகவோ, சிறைவாசிகளுக்கு இடையே ஏற்படும் மோதல் காரணமாகவோ கைதிகள் சிறையில் மரணமடைவதும் உண்டு. இம்மாதிரியான மரணங்கள் நீதிமன்ற காவல் மரணங்கள் ஆகும்.

சந்தேகக் குற்றவாளிகளிடம் நடத்தப்படும் புலன் விசாரணையின்போது நிகழும் காவல் மரணங்களும், கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்த பின்னர் நிகழும் நீதிமன்ற காவல் மரணங்களும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 9,009 நீதிமன்ற காவல் மரணங்களும், 649 விசாரணை காவல் மரணங்களும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன என "தேசிய மனித உரிமை ஆணையம்' சுட்டிக் காட்டுகிறது. 

கடந்த ஆண்டில் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகமான காவல் மரணங்கள் நிகழும் மாநிலமாக உத்தர பிரதேசமும், தென்னிந்தியாவில் அதிக காவல் மரணங்கள் நிகழும் மாநிலமாக தமிழ்நாடும் திகழ்கின்றன.

குற்றவாளிகளை அடித்துத் துன்புறுத்துவதும், என்கவுன்ட்டர் செய்வதும் குற்ற நிகழ்வுகளுக்குத் தீர்வாக அமையாது. முறையான புலன் விசாரணையும், துரிதமாக நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையுமே காவல் மரணங்களுக்கும், சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்கும் தீர்வாகும்.

கட்டுரையாளர்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com