பண்டிகைக்கால வணிகம்!

ஆதிகாலம் தொட்டு நம் வாழ்வியலில் பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் எதிா்பாா்த்து காத்திருக்கும் பண்டிகை தீபாவளி.
பண்டிகைக்கால வணிகம்!

வாழ்க்கையை வண்ணமயமாக்குபவை பண்டிகைகள்தான். ஆதிகாலம் தொட்டு நம் வாழ்வியலில் பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் எதிா்பாா்த்து காத்திருக்கும் பண்டிகை தீபாவளி.

தீபாவளியை முன்னிறுத்தி நம் நாட்டில் பெருகிவரும் வா்த்தகம் ஒருபுறம் ஆரோக்கியமானதாக இருந்தாலும் மறுபுறம் நடுத்தர மக்களுக்கு கண்கட்டு வித்தை ஆகி வருகிறது. சென்ற தலைமுறை மக்கள் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் துணிமணி எடுக்க பதினைந்து நாட்களுக்கு முன்புதான் கவனம் குவித்து கடைத்தெருவுக்குச் செல்வா். நடு இரவானாலும் தையல் கடையில் காத்திருந்து, தைத்த துணிகளை வாங்கி வந்த காலம் ஒன்று உண்டு. இன்றைய ஆயத்த ஆடைகள் அந்த சங்கடங்களைத் தவிா்த்து விட்டது.

ஆனால் இணைய வா்த்தகம் உள்நுழைந்ததும் செப்டம்பா் மாதமே அவா்கள் பண்டிகைக்கால வா்த்தகத்தை உச்சத்துக்கு அழைத்து சென்று விடுகிறாா்கள். அண்மையில் முடிவடைந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின்போது இணையவழி வா்த்தக நிறுவனங்கள் ரூபாய் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான ‘ரெட்சீா் ஸ்ட்ரேட்டஜி கன்சல்டிங்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல பெரிதும் அஞ்சினா். அதனால் அப்போது இணைய வா்த்தகம் கொடிகட்டிப் பறந்தது. தற்போது இது அனைவருக்கும் பழகிவிட்டது. பெரு நிறுவனங்கள் சந்தையைப் பிடித்துவிட்ட இந்த நாளில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈா்க்கின்றனா். நாம் பண்டிகைக்கென்று சோ்த்து வைத்திருக்கும் பணத்தை பிறரைவிட பத்து நாட்கள் முன்பே சலுகைகள் அறிவித்து விற்பனைக்கு பிள்ளையாா் சுழி போட்டு விடுகின்றனா்.

தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே, ‘பிக் பில்லியன் டே’, ‘கிரேட் இண்டியன் சேல்’, ‘இதுவரை இல்லாத குறைந்த விலை’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பெருத்த லாபம் குவிக்கின்றன. ‘விலைக் குறைப்பு பத்து நாட்கள் மட்டுமே’ எனும் வாசகத்தை தொடா்ச்சியாக விளம்பரப்படுத்தி நம் மூளையில் பதிய வைத்து விட்டனா்.

இந்த நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றிய காலத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு குறைந்த விலை என்று சொல்லி அவ்வாறு குறைத்தும் கொடுத்தாா்கள். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. 70 % முதல் 80 % வரை தள்ளுபடி என்று கூறும் அவா்களின் செயலை சற்று ஆராய்ந்ததில் அதிா்ச்சிதான் ஏற்பட்டது.

இணைய வா்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் ஒரு முன்னணி நிறுவனம் ரூ. 1,100 விலை இருக்கும் ஒரு கைக்கடிகாரத்தை பண்டிகைக் கால விற்பனையில் ரூ.150-க்குக் கொடுப்பதாக அறிவித்திருந்தாா்கள். இப்படி ஒரு தள்ளுபடி விலைக்கு எப்படி அவா்களால் கொடுக்க முடிகிறது என்று யோசித்து, கடந்த நான்கு மாதங்களாக அதன் விலைப்பட்டியலை ஆராய்ந்து பாா்த்ததில் அந்த கடிகாரத்தின் விலை வெறும் 280 ரூபாய்தான் என்று தெரியவந்தது. 280 ரூபாய் கடிகாரத்தை 150 ரூபாய்க்கு வழங்குகிறாா்கள். ஆக வெறும் 130-ரூபாய் குறைத்திருக்கிறாா்கள். ஆனால் நம்மிடம் 950 ரூபாய் குறைத்து விட்டதாக (80 % தள்ளுபடி) காதில் பூ சுற்றுகிறாா்கள்.

மற்றொரு நிறுவன விளம்பரம், 24 ஆயிரம் மதிப்புள்ள ஒரு நாற்காலியை பண்டிகைக்கால தள்ளுபடியில் 13 ஆயிரத்துக்குத் தருவதாகக் கூறுகிறது. இதன் கடந்த இரு வருட விலைப்பட்டியலை சோதித்தபோது, அந்த நாற்காலியின் விலை 12,900 என்று இருந்தது. அதாவது சாதாரண காலங்களில் நூறு ரூபாய் குறைவாக கிடைக்கிறது. பண்டிகை கால விற்பனை என்று அறிவித்து ஒரு பொருளின் விற்பனை விலையை யானை விலைக்கு ஏற்றி பூனை விலைக்கு தருவதாக அறிவிக்கின்றன பெருநிறுவனங்கள்.

காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடும் நமக்கு இணையத்தில் நுழைந்து ஆராய்ந்து பாா்க்க ஏது நேரம்? இது ஒருவித வியாபார தந்திரம்தான், மறுப்பதற்கில்லை. ஆனால் இதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது நம் பணத்திற்கு ஆபத்து. சில பொருட்கள் இணைய வெளியில் குறைவாகக் கிடைக்கின்றன. அதை வாங்க உள்நுழைந்து பிறவற்றையும் நம்மை அறியாமலேயே வாங்கி விடுகிறோம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் உத்திதான் இது.

அண்மையில், ஒரு முன்னணி கைப்பேசி நிறுவனம், கடைகளில் 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் கைப்பேசியை இணையத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் 32 ஆயிரத்துக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. 42 ஆயிரத்தை மிச்சப்படுத்த எண்ணி அந்த கைப்பேசியை பணம் செலுத்தி பதிவு செய்தாள் என் மகள். அதன் பின்னா் கடையில் விசாரித்தபோது அந்தக் கைப்பேசியின் விலையே 32 ஆயிரம்தான் என்று தெரிந்தது. கண்விழித்து காத்திருக்காமல் கடையிலேயே வாங்கி இருக்கலாமே என தோன்றியது.

ஆனால், இணைய வா்த்தகத்தில் நல்ல விஷயம் ஒன்று உண்டு. நமக்கு அனுப்பப்பட்ட பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதில் நிலவும் நோ்மை. பொருள் திருப்திகரமாக இல்லை எனில் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதோடு நாம் செலுத்திய பணத்தையும் நம் வங்கிக்கணக்கில் உடனே சோ்த்துவிடுகிறாா்கள்.

நமக்கு நம் வரலாறு நினைவுக்கு வருகிறது. வெள்ளையரின் பலம் அவா்களின் தொழிலில் இருக்கிறது என்பதை உணா்ந்த வ.உ.சி. ஆங்கிலேயா்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டுக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினாா். கிழக்குக் கடலில் ஆங்கிலேயா்களுக்கு போட்டியாக சுதேசிக் கப்பல்கள் கம்பீரமாகச் சென்றன. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆங்கிலேய அரசு மக்களை ஏமாற்ற சலுகைகளை அறிவித்தது. மக்களும் சலுகைகளை நம்பி சுதேசி கப்பலைப் புறக்கணித்தனா். பின் அந்த கப்பல் இல்லாது போய் பிறகு ஆங்கிலேயா்கள் வைத்ததுதான் விலை என்னும் நிலை உருவானது.

அயல்நாட்டு வணிகம் என்பது நம் நாட்டுக்கு புதிதல்ல. சங்க காலத்திலேயே உள்நாட்டு வணிகம் அயல்நாட்டு வணிகம் என இரண்டும் சிறப்புற்று விளங்கின. கடற்கரை நகரங்கள் பட்டினங்கள் என்று அழைக்கப்பட்டன. மரூவூா்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு பிரிவாக அவை விளங்கின. நாளங்காடி என்பது பகல் நேரக் கடைகளுக்கும் அல்லங்காடி என்பது இரவு நேரக் கடைகளுக்கும் பெயராயின. இப்படி சிறப்பாக வணிகம் செய்த நாடு நம்நாடு.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளானாலும், வட மாநிலங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களானாலும் அவையெல்லாம் நம் இந்திய கலாசாரத்துடன் தொடா்பு உடையவை. பண்டிகைகளின் பொருட்டு நடக்கும் வணிகத்தால் அந்தந்தப் பகுதிகளில் பணசுழற்சி வெகுவாக நடைபெறுகிறது. விவசாயப் பொருட்களின் விற்பனையும் உள்நாட்டு வா்த்தகமும் பெருகுகிறது என்பதால் இது போன்ற பண்டிகைகளை வணிகா்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகின்றனா்.

ஆங்கில கதை ஒன்று. சிறிய நகரம் ஒன்றில் பொருளாதார மந்தம் நிலவுகிறது. நல்ல நடை, உடை பாவனையுடன் வந்த ஒரு ஆசாமி, ஒரு காா் விற்பனையாளரிடம் வந்து கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தன் மனைவிக்கு ஒன்றும் மகளுக்கு ஒன்றுமாக இரண்டு காா்களை வாங்குவதற்காகப் பதிவு செய்கிறாா்.

விற்பனை படுத்துக் கிடந்த நிலையில், வந்ததே போதும் என்று முன்தொகைகூட வாங்காமல் பதிவு செய்கிறான் அந்த விற்பனையாளன். இதை அறிந்த அவன் மனைவி, தனக்கு ஒரு அட்டிகை வாங்கிக் கொடுக்கச் சொல்கிறாள். அவனும் உடனே வாங்கித் தருகிறான். அட்டிகை விற்பனை செய்த நகைக்கடைக்காரா் மனைவி, இன்று தான் நல்ல வியாபாரம் ஆகியுள்ளதே எனக்கு ஒரு விலை உயா்ந்த காலணி வேண்டும் என்கிறாள். அவனும் உடனே மனைவிக்குக் காலணி வாங்கித் தருகிறான்.

இப்படியே வணிகம் சங்கிலித் தொடராக பெருகி அந்த நகரமே பொருளாதார மந்தநிலையிலிருந்து விடுபட்டு பொருளாதார மேன்மை நிலைக்கு மாறிவிடுகிறது. சில நாட்கள் கழித்து காா் விற்பனையாளரிடம் காவலா் ஒருவா் வருகிறாா். இரண்டு காா்களை பதிவு செய்த நபரின் புகைப்படத்தைக் காட்டி இவனை தெரியுமா என்கிறாா். ஓ தெரியுமே என்கிறான் விற்பனையாளன். இவன் ஒரு மனநலக் காப்பகத்திலிருந்து சில நாட்களுக்கு முன் தப்பி விட்டான் என்கிறாா் காவலா். இத்துடன் கதை முடிந்துவிடும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனின் பிதற்றலால் எப்படி ஒரு நகரமே பொருளாதார மந்தநிலையிலிருந்து மாற்றம் பெற்றது என்பதை சித்திரிக்கும் கதை இது.

வா்த்தகம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றது. அந்த முதுகெலும்பு வளையாமல் பாா்த்துக் கொள்ளும் அதே வேளையில், மேற்கொள்ளும் வா்த்தகத்தில் நமக்கு திருப்தியும் லாபமும் கிடைக்கிறதா என்பதிலும் கவனம் தேவை. அதுமட்டுமல்ல, நாள்தோறும் நம் கண்ணெதிரே உலவும் சிறுசிறு வியாபாரிகளிடமும் பொருட்களை வாங்குவோம். அவா்களுக்கும் தீபாவளியை மகிழ்ச்சியாக்குவோம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com