உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
தமிழகத்தின் மின்தேவை சுமார் 22,150 மெகாவாட்டை எட்டலாம். இது கடந்த ஆண்டின் சுமார் 20,830 மெகாவாட்டைவிட 1,320 மெகாவாட் அதிகம்.


தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரத்தில் சொந்த மாநிலத்துக்கான 50 சதவீத பங்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மத்திய மின் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதைக் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று கேட்பதில் நியாயம் உண்டு.
நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 15.66 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன. அதுமட்டுமின்றி, வீட்டு உபயோகம், விவசாயம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கான மின்சாரத் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு உச்சபட்ச மின்சாரத் தேவை 6 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தின் மின்தேவை சுமார் 22,150 மெகாவாட்டை எட்டலாம். இது கடந்த ஆண்டின் சுமார் 20,830 மெகாவாட்டைவிட 1,320 மெகாவாட் அதிகம்.
கூடங்குளத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் 1, 2-ஆவது அணு உலைகளில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு தினமும் 1,152 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு சராசரியாக ரூ.5.40-க்கு தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. எஞ்சிய மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கும், மத்திய தொகுப்புக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்போது அந்த வளாகத்தில் தலா 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த இரு உலைகளும் இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் ஒன்றன்பின் ஒன்றாக மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ளன. அவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்துக்கு யூனிட் ரூ.5.91-க்கு விற்க விலை நிர்ணயித்திருப்பதாக அணு மின் துறை அறிவித்துள்ளதுதான் தமிழகத்தின் கோரிக்கைக்குக் காரணம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் யூனிட் ரூ.4-க்கு மின்வாரியத்துக்கு கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, அணு மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஆர்வம் காட்டினாலும் புதிய விலை நிர்ணயம் ஏற்கெனவே கடனில் உள்ள வாரியத்துக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் அணு மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 3 முதல் ரூ. 3.80 வரையில்தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர், படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இப்போது சுமார் இரு மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது அணு மின்சாரம் மலிவானது என்ற வாதத்துக்கு முரணாக உள்ளது. கூடங்குளம் 3, 4-ஆவது உலையிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை கூடுதலாக வாங்கிக் கொள்ள அண்டை மாநிலமான கர்நாடகம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே, சொந்த மாநிலத்துக்கான 50 சதவீத ஒதுக்கீட்டை, உயர்த்தப்பட்டுள்ள விலையில் கொள்முதல் செய்து கொள்வது குறித்து தனது முடிவை உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனக் கோரி, இந்திய அணுசக்தி துறையானது தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளது.
கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5, 6-ஆவது அணு உலைகள் கட்டும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. அவற்றிலும் சொந்த மாநிலத்துக்கான 50 சதவீத ஒதுக்கீடு தமிழகத்துக்கு உண்டு. எனவே, இப்போதே விலையை நிர்ணயம் செய்து முடிவு எட்டப்பட்டால் அந்த மின்சாரத்தையும் மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கான வழித்தடங்களை தயார் செய்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த தமிழக மின்வாரியம் தயாராக முடியும்.
அணு சக்தி துறை நிர்ணயித்துள்ள புதிய விலையானது தற்போது தமிழ்நாடு மின்சார வாரியமானது உச்சபட்ச தேவை காலத்தில் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யும் விலையைவிட (யூனிட்டுக்கு ரூ. 12 முதல் ரூ. 17 வரை) குறைவானது என்பதை மறுப்பதற்கில்லை. அணுசக்தி துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி சொந்த மாநிலத்துக்கான ஒதுக்கீட்டை முழுமையாகப் பெறுவதோடு மட்டுமல்லாது குஜராத்துக்கு வழங்குவதைப் போல குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெறவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அது மாநிலத்தின் மின் தேவையை நிறைவு செய்வதோடு மட்டுமல்லாது தேவையற்ற நிதி விரயம் மற்றும் முறைகேடு புகார்களைத் தவிர்க்கவும் உதவும்.
குஜராத்தின் காக்ராபர் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்த மாநிலத்துக்கு யூனிட் ரூ.5.60-க்கு வழங்க மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால், விலையைக் குறைத்து வழங்க அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில், யூனிட் ரூ.4.50-எனக் குறைத்து மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதேபோல, கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலை மின்சாரத்தை குறைந்த விலையில் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தி மத்திய மின் துறையின் தென் மாநில மின்சாரக் குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையில் நியாயம் உண்டு என்பதை உணர்ந்து அணுசக்தி துறை உடனடியாக பரிசீலித்து விலையைக் குறைக்க முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...