தெய்வத்தின் மேலாம் ஆசிரியர்

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குப் பாடங்களை சொல்லிக் கொடுப்பவர் என்றுதான் தற்கால மாணவர்களும், பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குப் பாடங்களை சொல்லிக் கொடுப்பவர் என்றுதான் தற்கால மாணவர்களும், பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல.

ஆசு என்றால் பிழை. இரியர் என்றால் திருத்துபவர். மாணவர்களிடம் இருக்கும் பிழைகளைத் திருத்தும் மகத்தான பணியைச் செய்பவர்தான் ஆசிரியர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறப்படுவதால் ஆசிரியர், தெய்வத்திற்கு மேலாக வைத்துப் பூஜிக்கப்பட வேண்டியவர். 

ஒரு சமுதாயத்தின் எழுச்சி ஆசிரியர்களிடம்தான் உள்ளது. ஆசிரியர் மட்டுமே நல்ல கருத்துகளை மாணவர்களின் மனங்களில் பதிய வைத்து அவர்களை ஒழுக்கத்திலும், அறிவிலும், நாட்டுப் பற்றிலும் சிறந்து விளங்க வைத்து அவர்களை மேதைகளாக உருவாக்க முடியும். 

சாணக்கியர் என்ற  நல்லாசிரியர் ஒருவரால்தான் அவர்தம் சீடர் சந்திரகுப்தர் ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கவிழ்த்து ஒரு புதிய சாம்ராஜ்யத்தையே நிறுவ முடிந்தது. துரோணாச்சாரியார் எனும் ஆற்றல்மிக்க ஆசிரியரால்தான், அர்ச்சுனனின் வில்வித்தையை மூவுலகமும் அறியும்படி செய்ய முடிந்தது. பழமரத்தை நாடிச் செல்லும் பறவைகள்போல, மாணவர்கள் ஆசிரியர்களைத் தேடிச் சென்று கற்க வேண்டும்.

முன்பெல்லாம் குருகுல முறையில் குருவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரை நிழல்போல், தொடர்ந்து எவ்வளவு கஷ்டமான பயிற்சியாக இருந்தாலும், அதைத் திறம்படக் கற்று வெற்றி பெறுவதுதான் மாணவனின் கடமை. 

மேலை நாடுகளில் கூட, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் போன்று ஆசிரியர்களைப் பின்பற்றிச் சிறந்த மேதையானவர்கள் பலருண்டு. ஆசிரியரை மதிக்கும் எந்தவொரு மாணவனும் வாழ்க்கையில் தோல்வியடைந்ததில்லை.  

பஞ்ச பாண்டவர்கள் தம் குருகுலப் பயிற்சியை முடித்து, அவரவர் கற்ற வித்தைகளையெல்லாம் சக்கரவர்த்தி திருதராஷ்டிரர், பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றோருடன் திரளான மக்களும் கூடியிருந்த சபையில் வெளிப்படுத்திக் காட்ட வருகின்றார்கள். 

முதலில் வருகின்ற தருமனும், பீமனும் தங்களை சக்கரவர்த்தி பாண்டுவின் முதலாவது புதல்வன் என்றும் இரண்டாவது புதல்வன் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், மூன்றாவதாக வரும் அருச்சுனன் மட்டும் தன்னை துரோணாச்சாரியாரின் சீடன் என்று பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். 

எனவே, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை நன்கு மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, பெற்றோரும் ஆசிரியர்களை மதித்து, அவர்களை நம்பி, தம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும். அதுபோன்று ஆசிரியப் பெருமக்களும், பெற்றோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஆசிரியர்களே! உங்களது முழு ஆற்றலையும் மாணவர்களுக்காக அர்ப்பணம் செய்யுங்கள். இன்று உங்கள் முன் அமர்ந்திருக்கின்ற மாணவர்கள்தான் நாளை வளமான இந்தியாவை உருவாக்கப் போகிறவர்கள். உங்கள்முன் இருக்கும் இளங்குருத்துகள் பிற்காலத்தில் அறிவில் அறிஞர்களாகவோ, தேசத்தலைவர்களாகவோ, நாட்டைக் காக்கும் போர்வீரர்களாகவோ வரக்கூடும்.

இன்றைக்குப் புகழ் பெற்று விளங்கும் அனைவரும் ஏதோ ஒரு பள்ளியில் ஏதோ ஒரு மூலையில் ஒன்றும் அறியாத மாணவர்களாக இருந்தவர்கள்தானே! உங்களைப் போன்ற நல்லாசிரியர்களின் பெருமுயற்சியால்தானே அனைவராலும் புகழப்படும்படி அவர்கள் உயர்ந்தார்கள். அதை மனத்தில் நிலைநிறுத்திச் செயல்படுங்கள்.

ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பெற்றோரைப் போலவே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. குழந்தைகள்  தமது பெற்றோரைப் பார்த்துப் பல விஷயங்களைப் புரிந்துகொள்கின்றனர். பின்னர் ஆரம்பப் பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை அவர்கள் தங்களை அறியாமலே ஆசிரியர்களைப் பின்பற்றுகிறார்கள். 

எனவே, ஆசிரியர்கள் தங்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குமாறு வாழ வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாய முன்னேற்றத்திற்காக தனது பொறுப்பையும், மாணவர்களை நல்ல பாதையில் வழிநடத்தி அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கடமை தமக்கு உள்ளதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

அரசாங்கத்தையே உருவாக்குவது உங்களைப்போன்ற ஆசிரியர்கள்தான். அதை உணர்ந்து நல்ல மாணவர்களைத் தயார் செய்தால், அவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவார்கள். அவர்களால் நல்ல சமுதாயம் உருவாகும். அதன் மூலம் நல்ல அரசாங்கம் உருவாகி நாடே சிறப்படையும். 

எந்த ஒரு நாடும் சிறக்க வேண்டும் என்றால், அங்குள்ள ஆசிரியர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மனத்தில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதைத் தவிர வேறு கவலை எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமை.

நமது நாட்டின் எல்லையில் நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போன்று நமது சமுதாயத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்கும் ஆசிரியர்களின் பணியும் மிக மிக இன்றியமையாதது. இதனை அனைவரும் உணர்ந்து ஆசிரியப் பெருமக்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அரசாங்கம் ஆசிரியப் பெருமக்களுக்கு நல்ல வசதிகளை வழங்கி, அவர்களின் பெருமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், "ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் விதைநெல் போன்றது. விதைநெல்லுக்குக் கணக்குப் பார்த்தால் விளைச்சல் இருக்காது' என்று கூறினார். அவர் கூறியது உன்னதமான வாக்கு.

பள்ளிக்கூடம் என்பது ஜாதி மத பேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று. அங்கு இருக்க வேண்டிய ஜாதிகள் இரண்டுதான். ஒன்று, கற்கும் ஜாதி; மற்றொன்று கற்பிக்கும் ஜாதி. வேறு எந்த சிந்தனைக்கும் பள்ளிகளில் இடமில்லை.

இதனை மாணவர்களும், பெற்றோரும் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் நல்ல சமுதாயம் உருவாவது சாத்தியமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com