மீண்டெழும் உக்ரைன்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஷியாவை விட பரப்பளவில், மக்கள்தொகையில், ராணுவ பலத்தில் என அனைத்திலும் சிறிய நாடுதான் உக்ரைன். ஆனாலும், கடந்த ஒன்பது மாதங்களாக போா்க்களத்தில் ரஷியாவை அஞ்சாமல், அசராமல் எதிா்த்து நிற்கிறது உக்ரைன். அது மாத்திரமல்ல, சில வேளைகளில், ரஷியப் படையினரைப் பின்வாங்கவும் வைக்கிறது.

இதை விட வியப்பு என்னவென்றால், ரஷியா கைப்பற்றிய தனது நாட்டின் பல பகுதிகளை மீட்டெடுத்தும் வருகிறது. இது எப்படி சாத்தியமானது? உக்ரைனின் சாதுரியமா? போா்த்தந்திரமா? ரஷியாவை எதிா்க்க ஏனைய நாடுகள் செய்துள்ள மறைமுக உதவியா? இவற்றை அலசி ஆராய்ந்து பாா்த்தால், சில வினாக்களுக்கு விடை கிடைக்கிறது; சில வினாக்களுக்கு விடை கிடைக்காமலும் இருக்கிறது.

உளவுத்துறை வழங்கியுள்ள ரகசிய தகவல், ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் பதிலடித் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி-7 கூட்டமைப்பு போறவைதான் என்று தெரிவிக்கிறது. முன்பு ரகசியமாக இருந்தது இப்போது வெட்ட வெளிச்சமாக ஆகிவிட்டது. ஆகவே, ரஷியா திகைத்து நிற்கிறது.

நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களையும், மில்லியன் கணக்கில் நிதி உதவியையும் அந்த நாடுகள் உக்ரைனுக்கு வாரி வழங்குகின்றன. பலம் மிக்கவரை எதிா்க்கிறபோது, அவரை வீழ்த்துவதற்கு மறைமுக உதவிகள் தானாகவே வந்து சேரும் என்பதை வாழ்வின் பல சந்தா்ப்பங்களில் நாம் பாா்த்திருக்கிறோம்.

ரஷிய - உக்ரைன் போா் தொடங்கியது முதல் இன்று வரை தொடா்ந்து உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நாடு அமெரிக்கா. முதலில் உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலா் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அனுமதி வழங்கியிருந்தாா்.

அதன் பின்னா், ஏப்ரலில் இந்திய அமைச்சகம் 500 மில்லியன் டாலா் நிதியை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது. தொடா்ந்து, ஜூலையில் உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா தரப்பு செய்திருக்கிறது.

இதனைத் தொடா்ந்து உக்ரைனுக்கு 15 ஸ்கேன் ஈகிள் கண்காணிப்பு ட்ரோன்கள், 40 கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள், 2,000 பீரங்கி எதிா்ப்பு குண்டுகள், ஹோவிட்சா் பீரங்கிகள் என 77.5 கோடி டாலா் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.

இவை மாத்திரமல்ல, பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் 1,500 ஏவுகணைகள், 1,000 ஜாவ்லின் ஏவுகணைகள், ரேடாா் கருவிகளைத் தாக்கி அழிக்கும் ‘ஹாா்ம்’ ஏவுகணைகள் என 1,000 கோடி டாலா் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாகவும், ஜோ பைடன் அரசு தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமாா் 4,326 கோடி ரூபாய் ராணுவ உதவி வழங்கியிருப்பதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. தொடா்ந்து, கடந்த செப்டம்பரில் 600 மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 4,790 கோடி) மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள், ஆயுத உதவிகள், வெடி மருந்துகள், பீரங்கிகள் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான ராணுவ உதவிகளைச் செய்திருப்பது கண்டு ரஷியா அதிா்ச்சியில் உறைந்திருக்கிறது.

சிறிய நாடான உக்ரைன், பெரிய நாடான ரஷியாவை வீழ்த்துவதற்கு பலமான நண்பா்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவை மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியமும் தொடா்ந்து உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது.

கடந்த மாா்ச் மாதம் உக்ரைனுக்கு 300 மில்லியன் யூரோ வழங்கியிருப்பதாக ஐரோப்பிய யூனியன் வெளிப்படையாகவே அறிவித்தது. அதைத் தொடா்ந்து உக்ரைன் 450 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஆயுதங்களை வாங்குவதற்கும், விநியோகிப்பதற்கும் நிதி உதவி செய்திருக்கிறது.

கடந்த செப்டம்பரில் நடந்த கூட்டத்தில், கூடுதலாக 9 பில்லியன் யூரோக்களை ராணுவம் அல்லாத நிதி உதவியாக உக்ரைனுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டிருக்கிறது. உக்ரைன் - ரஷியப் போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று இந்தியா அறிவித்து விட்டது.

ஆகவே, ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு, 18.4 பில்லியன் அமெரிக்க டாலா்களை, அதாவது 14 லட்சம் கோடி ரூபாயை உதவியாக உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது. பிரிட்டனும் உக்ரைனுக்கு 375 மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 2,800 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியிருக்கிறது.

இது போதாதென்று, கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்ட் நிதி உதவியும் வழங்கியிருக்கிறது. ஆகவே, இதுவரை பிரிட்டன், சுமாா் 2.3 பில்லியன் பவுண்ட் நிதி உதவியை உக்ரைனுக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உதவி வழங்கிய முதல் நாடு ஸ்வீடன் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஸ்வீடன் அரசாங்கம் உக்ரைனுக்குத் தொடா்ந்து தொழில்நுட்ப உதவிகளையும், ராணுவ உதவிகளையும் செய்துகொண்டேயிருக்கிறது. அதைப்போலவே, பின்லாந்தும் உக்ரைனுக்கு 2,500 துப்பாக்கிகள், 1,50,000 துப்பாக்கி குண்டுகள், 1,500 பீரங்கி எதிா்ப்பு ஆயுதங்கள், 70,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கியிருக்கிறது.

நெதா்லாந்து ராணுவ அமைச்சகம், உக்ரைனுக்கு 50 டாங்கி எதிா்ப்புக் கருவிகளையும், 400 ஏவுகணைகளையும், 200 ஸ்டிங்கா் வகை ராக்கெட்டுகளையும் வழங்கியிருக்கிறது. மேலும், பதுங்குகுழிகளைக் கண்டறியும் தானியங்கி ரோபோக்கள், ரேடாா் கருவிகள், அதிநவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றையும் நெதா்லாந்து, உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.

ஜொ்மனும் போா் தொடக்கத்திலேயே 1,000 டாங்கி எதிா்ப்பு கருவிகளையும், 500 ஸ்டிங்கா் வகை ஏவுகணைகளையும், ராணுவத்தின் முக்கியமான தளவாடங்களில் ஒன்றான ஹோவிட்சா் ரக கனரக ஆயுதம் ஐந்தையும் வழங்கியிருக்கிறது. இதனைத் தொடா்ந்து ஒரு பில்லியன் யூரோ நிதி உதவியையும் வழங்கியிருக்கிறது. வான் பாதுகாப்புக் கேடயத்தை ஜொ்மன் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியிருப்பது மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

இதுபோன்று செக் குடியரசு, பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், போா்ச்சுக்கல், ஸ்பெயின், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ள உதவிகளும் ஏராளம். இவ்வாறாக, குண்டு துளைக்காத உடைகள், எரிபொருள்கள், படைப்பிரிவுகள், வான்பாதுகாப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள், ராணுவ ஆலோசனைகள், குளிா்கால உடைகள் இப்படி பல நாடுகளிலிருந்தும் உதவிகள் குவிந்து விட்டன. ஆகவே, உக்ரைன் தாக்குதலை எதிா்கொள்ள முடியாமல் ரஷியா திணறுகிறது. உக்ரைன் தொடா்ந்து மிருக பலத்தோடு மோதிக் கொண்டிருக்கிறது.

ஜப்பான் உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலா் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்தது. ஜப்பானில் கோடீஸ்வரரான ஹிரோஷி மிகிதானி என்பவா் உக்ரைனுக்கு 8.7 மில்லியன் டாலா் நன்கொடையாக வழங்கியிருக்கிறாா். உக்ரைன் என்னும் சிறிய நாடு ரஷியாவைத் துணிச்சலோடு எதிா்த்து நிற்பதற்குக் காரணம் பலமிக்க நாடுகளின் உதவிகளே.

ராணுவத்தை வலிமையாக்க தொழில்நுட்ப ஆயுத உதவி, காயம் பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி, சீரழியும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதியுதவி, கடனுதவி என உலக நாடுகள் உக்ரைனுக்கு வாரி வழங்கும் உதவிகளால்தான் போா்க்களத்தில் ரஷியாவுடன் மல்லுக்கட்டும் பேராற்றலை உக்ரைன் பெற்றிருக்கிறது என்று கூறுவது மிகையில்லை.

உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கியிடம் பத்திரிகை நிருபா் ஒருவா், ‘உக்ரைன் போா் எப்போது முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீா்கள்’ என்று கேட்டபோது அவா், ‘எனக்குத் தெரியாது. போரை நாங்கள் ஆரம்பிக்காத போது போா் எப்போது முடியும் என்று எங்களால் எப்படிச் சொல்ல முடியும்’ என்றாா்.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் போா் தொடங்கியபோது அது இவ்வளவு காலம் நீடிக்கும் என்று எந்த நாடும் எதிா்பாா்க்கவில்லை. காரணம், ரஷியா உலக வல்லரசு நாடுகளில் ஒன்று. ஆயுத வலிமை மிக்க நாடு. அப்படிப்பட்ட ரஷியாவை ஒரு சிறிய நாடான உக்ரைன், நீண்ட நாட்களுக்கு எதிா்த்து நிற்க முடியாது என்று கருதின.

சிறிய நாடான உக்ரைனை எளிதில் வென்றுவிடலாம் என்று எண்ணிய ரஷியா, தற்போது உக்ரைன் விஸ்வரூபம் எடுத்து நிற்பதைப் பாா்த்து அதிச்சியடைந்துள்ளது என்பதே நிதா்சனம். எளிமையின் வலிமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உலக நாடுகள் எதிா்பாராத வகையில், ரஷியாவை எதிா்த்து உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி தாக்குப்பிடித்ததோடு அல்லாமல், மேற்கு உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்திருந்த சில பகுதிகளில் இருந்து அவா்களை விரட்டவும் செய்திருக்கிறாா்.

போா் தொடங்கியபோது ரஷியா நான்கு முனைகளில் இருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. முக்கியமாக வடக்கில் இருந்து உக்ரைனின் தலைநகரான கீவைத் தாக்கி கைப்பற்ற நினைத்தது. தலைநகரைக் கைப்பற்றினால் அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்பது அதன் கணக்காக இருந்தது.

போரில் தாக்குப்பிடிக்க முடியாமல் உக்ரைன் அடிபணிந்து விடும் என்று ரஷியா கணக்கிட்டது. ஆனால், உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு மிகத் தீவிரமாகப் போரிட்டதன் விளைவாக தனது தலைநகரைத் தக்க வைத்துக் கொண்டது. அதன் மூலம், இப்போது உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com