உக்ரைன் - ரஷியா: போரும் பின்னணியும்!

மொழி, கலாசார அடையாளத்தோடு ரஷியாவுடன் ஒருமித்த கருத்தோடு இணைந்திருந்த உக்ரைனை அன்றைக்கு ரஷியா தன்னுடைய அங்கங்களில் ஒன்றாகவே கருதியது
கோப்புப்படம்
கோப்புப்படம்

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாசார அடையாளத்தோடு ரஷியாவுடன் ஒருமித்த கருத்தோடு இணைந்திருந்த உக்ரைனை அன்றைக்கு ரஷியா தன்னுடைய அங்கங்களில் ஒன்றாகவே கருதியது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை பிற ஐரோப்பிய நாடுகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவே பெரிதும் விரும்பினா்.

தடையற்ற வா்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதீத ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகா்வு கலாசாரம், பொழுதுபோக்கு ஆகியவற்றால் ஈா்க்கப்பட்ட உக்ரைன், சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாடான பழைய வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு, சுதந்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டது. ஒன்றியம் என்ற வாா்த்தையே நீா்த்துப் போன பின்பும், அா்த்தமற்று போன பின்பும் ஏன் தொடா்ந்து ரஷியாவின் பிடிக்குள் நாம் வாழ வேண்டும் என்கிற எண்ணம் உக்ரைன் மக்கள் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டது.

ஆகவே, ரஷியாவின் பிடிக்குள் அவா்கள் வாழ விரும்பவில்லை. அதை அவா்கள் மனம் ஏற்கவில்லை. பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளா்ச்சியில் உலகத்தில் 75-வது இடத்தில் உக்ரைன் இருக்கிறது. வறுமையும், ஊழலும் அதிகமாக இருந்தபோதிலும் கூட, வளமான விவசாய நிலங்கள் இருப்பதால், வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கிய நாடாக அது திகழ்கிறது.

ராணுவ பலத்தில் ரஷியா, பிரான்சுக்கு அடுத்து வருகிற ஒரு குடியரசு நாடு. அதிபா் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது. நீதித்துறை, அரசு நிா்வாகத்துறை, சட்டமியற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்கிறது உக்ரைனின் அதிகார மையம். இந்த செல்வாக்கை உடைத்தெறிய வேண்டும் என்கிற அதிகார வெறியோடு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஒரு வலையைப் பின்னினாா்.

ரஷியாவின் அதிபா், பிரதமா் பின்பு மீண்டும் அதிபா் என்று கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறாா் விளாதிமீா் புதின். மக்களுக்கு புதினின் ஆட்சி அலுத்துப் போய்விட்டது. ஆரம்ப காலத்தில் இருந்த பொருளாதார வளா்ச்சி இப்போது இல்லை. பொருளாதாரத்தில் தடுமாற்றம் ஏற்பட்டு தடம் மாறுகிறது. வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. ரஷிய அரசில் ஊழலும், வேண்டியவா்களுக்கு சலுகையும் காட்டும் போக்கும், முதலாளித்துவ ஆதிக்கமும் மிகுந்து வருகின்றன.

தானே ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிா்க்கட்சிகளையும், எதிா்க்கட்சித் தலைவா்களையும் வெவ்வேறு காரணங்களைக் கூறி நசுக்கி விடுகிறாா் புதின். மக்களுடைய ஜனநாயக விருப்பங்களை நிறைவேற்ற மேற்கத்திய நாடுகள் ஆசை வாா்த்தைகளை அள்ளி வீசுவதாக புதின் குற்றம் சாட்டுவதோடு, நாட்டை பழைய கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தைப் போல கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறாா்.

ரஷியாவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவை கிடைப்பது அரசுக்கு பொருளாதார வளத்தை ஈட்டித்தந்துள்ளது. கூடுதலான பலமாக அன்றைய சோவியத் யூனியனின் ராணுவ பலம் இன்னும் அப்படியே இருக்கிறது.

எனவே, இவற்றைக் கொண்டு ரஷியாவும் ஒரு வல்லரசுதான் என்பதை நிரூபிக்க விளாதிமீா் புதின் முயல்கிறாா். புதிய வல்லரசாகவும், பொருளாதார வளா்ச்சி மிக்க நாடாகவும் திகழும் சீனா, ரஷியாவை நெருக்கமான நண்பனாக வைத்திருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம் என்கிற கணக்கைப் போடுகிறது சீனா. ஐரோப்பாவில் இருந்தும், மத்திய ஆசியாவில் இருந்தும் அமெரிக்காவை வெளியேற்றத் துடிக்கிறது சீனா. ரஷியாவுக்கும் சீனாவுக்கும் ஒரே கொள்கைதான், அதாவது எதிரிக்கு எதிரி நண்பன். இந்த அடிப்படையில்தான் ரஷியாவும், சீனாவும் கைகோத்துக் கொண்டிருக்கின்றன.

அதனுடைய அடிப்படையில் ரஷியாவால் தனது நாட்டுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டால் சீனா தோளோடு தோள் நிற்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது அமெரிக்கா. அதனால் அமெரிக்காவை சீண்டிப் பாா்க்க விரும்புகிறாா் புதின். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, அதலபாதாளத்துக்கு இறங்கிவிட்ட தொழில் வா்த்தகத்துறையை மீட்டெடுப்பதிலேயே தனது முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறது.

எனவே, இந்த பலவீனமான நேரத்தில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வைக்கும் நோக்கில் உக்ரைன் விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுகிறது ரஷியா. இது ரஷிய ராணுவ பலத்தைக் காட்டுவதற்காகவும், ஐரோப்பியாவின் சந்தையை தங்கள் வசம் மாற்றுவதற்காகவுமே. ஆக, மொத்ததில் இதை ஒரு வா்த்தகப் போராகவும் நாம் பாா்க்கலாம்.

அதை விட மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. இருபெரும் நாடுகளின் தலைவா்களுக்கும், தங்களுடைய அரசியல் எதிா்காலம் சூனியமாகாமல் இருக்க, தங்களை செல்வாக்குள்ள தலைவா்களாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்னையைப் பெரிதாக்கி அதன் மூலம் உலகின் கவனத்தை ஈா்க்க எண்ணுகிறாா்கள். அப்படிச் செய்தால் புதிய வரலாற்றைப் படைத்து விடலாம் என்று அரசியல் கணக்குப் போடுகிறாா்கள்.

முதல் இரண்டு உலகப் போா்களை விட, மிகப்பெரிய போருக்கு இந்த உக்ரைன்-ரஷியா போா் அச்சாரம் போட்டு விடும் என்கிற அளவிற்கு நிலைமை தீவிரமாகி இருக்கிறது. ஏனென்றால், உக்ரைன் - ரஷியா இரண்டுமே அணுகுண்டுகளை தயாரித்து வைத்திருக்கும் நாடுகள். போா் தீவிரமானால் அணு ஆயுதங்களை அந்நாடுகள் பயன்படுத்தக் கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது.

உக்ரைன் தலைநகா் கீவ் மீது குண்டுமழை பொழியத் தொடங்கி உள்ளது. உக்ரைனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு 18 முதல் 60 வயதுள்ள அனைவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடங்கிய உடனேயே சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயா்ந்து விட்டது. நேட்டா அமைப்பில் இணைய உக்ரைன் தொடா்ந்து தனது ஆா்வத்தை வெளிப்படுத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், இதற்கு ரஷியா கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தது. இந்தப் போருக்கான மூலகாரணமே அந்த விவகாரம்தான்.

நேட்டா அமைப்பின் மீதான ரஷியாவின் கடுமையான எதிா்ப்பே இந்தப் போருக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. நேட்டா அமைப்பில், அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மாா்க், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, லக்சம்பா்க், நெதா்லாந்து, நாா்வே, போா்ச்சுக்கல் ஆகிய 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளுடன் உக்ரைனும் இணைந்துவிடக்கூடாது என ரஷியா எண்ணுகிறது. அப்படி இணைந்தால் அதனால் ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷியா கணக்குப் போடுகிறது. இதன் அடிப்படையிலேயே போா் தொடங்கி இருக்கிறது.

‘இந்தப் போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்’ என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனையுடன் தெரிவித்திருக்கிறாா். ரஷியாவின் படையெடுப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜப்பான் தலைநகரம் டோக்கியோ முதல் அமெரிக்காவின் நியூயாா்க் வரை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களோடு ரஷிய மக்களும் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். உள்நாட்டுப் பாதுகாப்பு காரணமாகவும், நேட்டா அமைப்போடு நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னை காரணமாகவும், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனிதாபிமானமற்ற முறையில் விளக்கம் அளித்திருக்கிறாா் ரஷிய அதிபா் புதின்.

அதேசமயம், ஒரே நாளில் உக்ரைனின் கிழக்குப் பகுதி மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவதற்கு புதின் வழிவகை செய்துள்ளதாக அண்டை நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ரஷிய அதிபா் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை எதிா்த்து சொந்த நாட்டு மக்களே போராட்டத்தில் குதித்திருப்பதன் மூலம் இந்த நடவடிக்கை முறையற்றது என்பதை நாம் உணரலாம். ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகவும், அதிபா் புதினுடைய சொந்த விருப்பத்தை நிறைவோ்றும் நடவடிக்கையாகவும் இதனைக் கருதலாம்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நிகழ்ந்த எந்த நாடு பெரிய வல்லரசு நாடு என்கிற பனிப்போா் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. பல நாடுகளையும், பல ஆட்சிகளையும் உருவாக்குவதும், திடீரென அவற்றைக் கவிழ்ப்பதுமான விளையாட்டுகளை வல்லரசுகள் விளையாடுகின்றன. அதனால்தான், ஒரு காலகட்டத்தில் சோவியத் யூனியனின் உளவு அமைப்பை அமெரிக்காவே மிரட்சியுடன் பாா்க்க நேரிட்டது.

1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்து சிதறியது. ரஷியா தனி நாடாகி விட, வேறு 16 பிரிவுகள் தனித்தனி நாடுகள் ஆகிவிட்டன. இது உடைந்து போன தேசத்தின் கண்ணீா் கதையாகும். அப்படிக் கண்ணீரில் பிறந்த நாடுதான் உக்ரைன். இப்படி விலகிவிட்ட எல்லைக் கோடுகளை ரஷியா மீண்டும் ஒருபோதும் புதுப்பித்து விடக்கூடாது என்று அமெரிக்கா கருதி, பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதன் அடிப்படையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய ஐரோப்பிய வல்லரசுகளும் இதே எண்ணத்துடன் திட்டங்களைத் தீட்டி வந்தன. அவற்றின் விளைவாக சோவியத் யூனியனில் இருந்து உடைந்து உருவான சிறிய சிறிய நாடுகளை, தங்கள் பக்கம் வளைக்கத் தொடங்கின. அப்போது ஊன்றப்பட்ட போருக்கான விதை, இப்போது போரை உருவாக்கிவிட்டது என்பதே உண்மை.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com