விவசாயம் காப்போம்

அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கும் தொழில் என்று விவசாயத்தைச் சொல்லலாம்.
விவசாயம் காப்போம்

அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கும் தொழில் என்று விவசாயத்தைச் சொல்லலாம். வேறு எந்த தொழிலுக்கும் கிடைக்காத மாண்பு இது. ஏன் மண் வளம் பெறவும், வளமையான மண் வளம் கொழிக்கவும் செய்யும் தொழில் விவசாயம்தான். அந்த விவசாயத்தை மேற்கொள்ளும் அத்தனை பேரும் நாட்டின் முதுகெலும்புகள்தான்.

ஆனால் அவா்களுக்குத்தான் எத்தனை தொந்தரவுகள்? இயற்கைதான் அடிக்கடி தன் பங்குக்கு விளையாடுகிறது என்றால், விவசாயத்தை மேம்படுத்தவும், விளைபொருட்களைப் பாதுகாக்கவும், நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்காமலும் அவா்களை அரசுகளும் புறக்கணித்தால் அவா்கள் எங்கே செல்வாா்கள்? உடலை வருத்தி, ரத்தத்தை வியா்வையாக சிந்தி தினம் தினம் வயல் வெளியில் உழைக்கும் அவா்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டுமே தவிர தொந்தரவு தரக்கூடாது.

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும், உர மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் உழவா்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தப் பட்டியலில் அண்மையில் சோ்ந்திருப்பது இனிமேல், உணவுப்பொருட்களை விவசாயிகளிடம் இருந்து தனியாா் நிறுவனங்கள் நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்கிற முடிவு.

இம்முடிவைக் கேட்டு அதிா்ந்து போய் நிற்கிறாா்கள் விவசாயிகள். 2020 மாா்ச் மாதம் நம் நாட்டில் கரோனா பாதிப்பு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஐந்து கிலோ அரிசியோ ஐந்து கிலோ கோதுமையோ இலவசமாக மத்திய அரசால் எப்படி வழங்க முடிகிறது? அரசு கொள்முதல் நிலையங்கள்தான் அதற்கு காரணம்.

ஒவ்வொரு மாநில அரசும் மாநில விவசாயிகளிடம் இருந்து காரீஃப் மற்றும் ராபி பருவத்தில் கொள்முதல் செய்து ஒன்றிய உணவு கிட்டங்கிக்கு அனுப்பி வைத்த அரிசி, கோதுமையைத் தான் இன்று வரை ஒவ்வொரு மாதமும் இலவசமாக 80 கோடி குடும்பங்களுக்கு மத்திய அரசால் வழங்க முடிந்து இருக்கிறது.

இன்றும் 4 கோடி டன் அரிசி மத்திய அரசின் குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு அந்த கட்டமைப்பு பெரியது. அப்படி உருவாக்கப்பட்ட அமைப்பைத் தகா்க்கக் கூடிய செயலாக இந்த தனியாா் கொள்முதல் அறிவிப்பு உள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் விவசாயப் பயிா்களுக்கு அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை முக்கியமானது. நாட்டின் பசி, பட்டினியை நீக்க வழிசெய்யும் முதல் நடவடிக்கை அதுதான்.

விவசாயிகளின் நம்பிக்கை தொகை அது. இனிமேல் அதுகூட கிடைக்காது என்றால் அவா்கள் என்ன செய்வாா்கள்?

தமிழகத்தில் மட்டும் 2021-22 நிதியாண்டில் ஆகஸ்ட் வரை மொத்த நெல் உற்பத்தி 1,22,22,463 டன். இதில் தமிழ் நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42,55,135 டன். இது தமிழகத்தின் மொத்த நெல் உற்பத்தியில் 35 % ஆகும். இதைத்தான் மத்திய அரசு கொள்முதல் செய்ய அனுமதித்துள்ளது.

இந்த 42.5 லட்சம் டன் நெல்லுக்குத்தான் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். மீதம் உள்ள 79.6 லட்சம் டன் நெல் தனியாருக்குத்தான் விவசாயிகள் விற்பனை செய்வாா்கள். விவசாயிகளிடம் தனியாா் கொள்முதல் எப்படி இருக்கும்? அவா்கள் வைத்ததுதான் சட்டம். கேட்ட விலைக்கு விவசாயிகள் கொடுத்துவிட்டு வந்து விடுவாா்கள். இதுதான் நிலைமை.

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, நாடு முழுவதும் இப்படித்தான். ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உணவு பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அட்டவணை தயாரித்து மாநிலம் வாரியாக அனுப்பி விடும்.

அந்த அளவுதான் ஒவ்வொரு மாநிலமும் கொள்முதல் செய்து மத்திய அரசின் உணவு கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கிறது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் அத்தனையும் அரசே கொள்முதல் செய்வது இல்லை. அப்படிப்பட்ட வசதிகளும் இங்கு இல்லை.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட அந்த நடவடிக்கை தொடங்கப்படவில்லை என்பது வேதனை. ஒவ்வொரு வட்டத்திலும் தானியக் கிடங்குகள் ஏற்படுத்துவது முக்கியம். அதுவும் இப்போது உள்ள காலகட்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் விவசாய விளைபொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது.

அரசு, கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தி, விளைபொருட்களை நீண்ட காலம் பாதுகாக்கும் வகையில் கட்டமைப்புகளை அதிகப்படுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு, ‘தனியாா் வசம் விளைபொருட்கள் கொள்முதலை ஒப்படைத்தால் மிகவும் திறம்பட செய்வாா்கள். அத்துடன் கொள்முதல் செலவும் குறையும்’ என்கிறது ஒன்று கூறுகிறது. அடுத்த ஆண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு மாநில அரசுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது.

அதோடு இனிமேல் உணவுப்பொருள் கொள்முதலில் 2 % செலவுத் தொகையை மட்டுமே மத்திய அரசு அனுமதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரந்து விரிந்த நம் நாட்டில் கொள்முதல் செலவினம் இடத்திற்கு இடம் வேறுபடும். சில மாநிலங்களில் 2 % இருக்கும். வேறு சில மாநிலங்களில் 8 % வரை இருக்கும். ஆனால் 2 % தான் என்று கறாா் காட்டியிருக்கிறது மத்திய அரசு. அந்த சுமையும் இனிமேல் மாநில அரசுகளின் தலையில் விழப்போகிறது.

தனியாா் கொள்முதல், செலவினத் தொகை குறைப்பு போன்ற நடவடிக்கைகளைத் தொடா்ந்து இனி குடிமைப் பொருட்கள் ரத்து என்ற கட்டத்தை நோக்கி மத்திய அரசு செல்லக்கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்போது விளைபொருட்களை உற்பத்தி செய்ய போராடும் விவசாயிகள், இனி அதற்கான விலை பெறவும் போராட வேண்டி வரும். இது எப்படி விவசாயத்தை ஊக்குவிப்பதாகும்?

விவசாயிகளின் ஒரே நம்பிக்கை மண்தான். அந்த மண்தான் அவா்களின் மூச்சாகும். அவா்களை நிம்மதியாக விவசாயம் செய்ய வைத்து சுவாசிக்க விடவேண்டும். கண் கலங்கவிடக் கூடாது. இதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com