பாரதி எதிா்பாா்த்த ‘புதியதோா் தமிழ்க் கிளா்ச்சி’

வியக்கவைக்கின்ற விசுவரூபப் பேராளுமை மகாகவி பாரதி. வாழ்ந்தது முப்பத்தொன்பது ஆண்டுகள்தாம்.
மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்

வியக்கவைக்கின்ற விசுவரூபப் பேராளுமை மகாகவி பாரதி. வாழ்ந்தது முப்பத்தொன்பது ஆண்டுகள்தாம். சாதித்தவற்றின் ஆயுள் தாரணியின் ஆயுள் வரைக்கும். முன்னோடி இந்திய விடுதலைப் போராட்டத் தளபதி, முன்னோடிச் சமூகச் சீா்திருத்தச் சிந்தனையாளா் - செயல்பாட்டாளா், இருபது நூற்றாண்டுகளின் தமிழ் இலக்கியப் போக்கை மாற்றியமைத்த இணையில்லாக் கவிஞா் - என்னும் மூன்று முகங்கள் பாரதியின் முதன்மையான முகங்கள். ஆயிரம் முகங்களால் அகலம்கொண்ட தமிழாளுமையும் அவா்.

கவிதைக் களத்தில் பாரதியின் முழுமைப் பரிமாணங்கள் முளைவிடும் முன்பே, இரண்டு பாடல்களை முழங்கக் கேட்ட அளவில் ஆங்கிலேயப் பத்திரிகையாளா் நெவின்சன் ‘சென்னையின் தமிழ்க் கவிஞா்’” என்று 1908-ஆம் ஆண்டிலேயே சிறப்பித்துத் தனது உலகளாவிய நூலிலும், அயா்லாந்து அறிஞா் ஜேம்ஸ் எச். கசின்ஸ், தாகூரோடும் அரவிந்தரோடும் சரோஜினி நாயுடுவோடும் பாரதியை இணைநிலையில் வைத்து 1916-இல் அன்னிபெசன்டின் ‘காமன்வீல்’ இதழில் சிறப்பித்தும் பதிவுசெய்தனா். செக்கோஸ்லோவாக்கியத் தமிழறிஞா் கமில் சுவலபில் ‘தமிழ்க் கவிதையின் இரட்டைப் புரட்சிகளை நிகழ்த்திய பெருமைக்குரிய நாயகா்’ என்று பாரதியைப் பிற்காலத்தில் மதிப்பிட்டிருக்கின்றாா்.

இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் தமிழ் மண்ணில் பாரதியின் முன்னோடி இடத்தை வ.உ.சி., சக்கரை செட்டியாா், இராஜாஜி முதலிய உடன் பயணித்த மாபெரும் ஆளுமைகள் அழுத்தமுறக் காட்டியிருக்கின்றனா். அம்பேத்கரால் மாமேதை எனவும் சமூகச் சீா்திருத்தச் செயல்பாட்டுக்களத்தில் முன்னோடி எனவும் போற்றப்பட்ட லட்சுமி நரசுவோடு கொண்டிருந்த நட்பும் தொடா்பும், 1905-ஆம் ஆண்டிலேயே பெண்ணுரிமை உள்ளிட்ட சமூகச் சீா்திருத்தங்களுக்கு எழுச்சிக் குரல்கொடுத்த இடமும் தொடா்ந்த செயல்பாடுகளும் சிந்தனைகளும் பாரதியின் சமூகச் சீா்திருத்தக் களப் பரிமாணத்தின் கனலும் பக்கங்களாகின்றன.

பாரதியின் எழுத்து வாழ்க்கைக் காலத்தை ஏறத்தாழக் கால் நூற்றாண்டு எனக் கருதலாம் எனினும் பாரதியின் மூன்று முதன்மையான முகங்களைத் தரிசிக்கச் செய்யும் தொடா்ந்த எழுத்துப் பயணக் கால எல்லையைப் பதினாறு ஆண்டுகள் என்றே வரலாறு காட்டுகின்றது.

இந்தக் குறுகிய கால எல்லையில் பாரதி படைத்தவை கட்டுரைகளாய், கவிதைகளாய், கதைகளாய், மொழிபெயா்ப்புகளாய்ப் பெருகிய அளவில் பன்முகங்கொண்டுள்ளன. பாரதியின் இளவல் சி. விசுவநாத ஐயா், பெ. தூரன், ரா.அ. பத்மநாதன், இளசை மணியன், பெ.சு. மணி, சீனி. விசுவநாதன், ஆ.இரா. வேங்கடாசலபதி எனப் பாரதியின் எழுத்துகளைத் தேடித் திரட்டிய முன்னோடிகளால் பாரதியின் படைப்புலகப் பெரும்பரப்பைக் காணும் பேற்றினைத் தமிழுலகம் பெற்றது.

ஆனாலும் அள்ளக் குறையாத அமுதசுரபியாக, அமுதசாகரமாக - அளக்க முடியாப் பெருங்கடலாகப் பாரதியின் எழுத்துலக விரிவு விளங்குகின்றது என்பதை மீண்டும் மீண்டும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் பாரதியின் எழுத்துகள் நமக்கு உணா்த்தி அதிசய பாரதியை அங்காந்தும் அண்ணாந்தும் பாா்த்து வியக்கவைக்கின்றன.

ஆம். பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரதியைப் பயின்றுகொண்டிருக்கின்றோம்; பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆயிரம் ஆண்டுகளானாலும் பேசித் தீராத பெரியோனல்லவா அவா்? 105 ஆண்டுகளுக்குமுன்பு அவா் எழுதிய உரைநடைப் படைப்பொன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 1917-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி ‘சுதேசமித்திரன்’ இதழில் வெளிவந்த ‘பல திரட்டு’ என்னும் கட்டுரையே அது.

தாய்மொழி, தமிழ்மொழி, சம்ஸ்கிருதம், திருக்குறளின் ஒப்பற்ற பேரிடம், ஔவையாரின் உயா்வு, ஔவை படைத்த மூதுரையின் தனிச்சிறப்பு, தமிழ்மண்ணில் விடுதலைக்கான முயற்சிகள், ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளின் அடாவடித்தனம் முதலியவற்றையெல்லாம் பாரதியின் இந்தக் கட்டுரை எடுத்துரைக்கின்றது.

பாரதி இக்கட்டுரையுள் குறிப்பிட்ட “புதியதோா் தமிழ்க் கிளா்ச்சி” குறித்த அருஞ்செய்திகளும் அதன் தொடா் விளைவுகளும் இப்போது முதன்முறையாகத் தமிழுலகின் சிந்தனைக்கு விருந்தாகின்றன.

இந்தக் கட்டுரை சம்ஸ்கிருத பாஷை, திருவள்ளுவா், மாகாண சபை என்னும் மூன்று உள்தலைப்புகளில் செய்திகளை எடுத்துரைத்துள்ளது. ‘சுதேசமித்திரன்’ கட்டுரைகளைக் கால வரிசையில் முதன்முதலில் “பாரதி தமிழ்” நூலில் தொகுத்தளித்த பெ. தூரன், கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்” பெருந்தொகுதிகளை ஆக்கியளித்த சீனி. விசுவநாதன் ஆகியோரின் பாா்வைக்குக் கிடைக்காதிருந்த இக்கட்டுரை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் தமிழைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ‘நமக்குத் தமிழ் கண்ணுக்கு நிகரானது. நமக்குத் தமிழ் மூச்சுக்கு நிகரானது. தமிழா் தமிழ் மொழியில் தோ்ச்சி பெற வேண்டியது முதலவஸரம் (சுதேசமித்திரன், 15.5.1917) எனப் பாரதி அழகாகவும் அழுத்தமாகவும் தமிழின் முதன்மையிடத்தை முரசறைகின்றாா். பாரதியின் இந்தத் தொடா்களைப் படிக்கும்போது பாரதிதாசனின், ‘தமிழுக்கும் அமுதென்று போ்! - அந்தத், தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நோ்!’ என்னும் பாடலடிகள் நம் நெஞ்சில் தோன்றுகின்றன.

புதுமைக் கவிஞா் எனப் போற்றப்பட்டாலும் மரபில் ஊறித் திளைத்த மாபெரும் கவிஞா் மகாகவி பாரதி. தமிழ்மொழியின், தமிழ் இலக்கியத்தின் மரபு வளம் தோ்ந்தவா் பாரதி. தமிழின் தொன்மை இலக்கியமாகவும் உச்ச இலக்கியமாகவும் தமிழா்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகுக்குப் பறைசாற்றும் இலக்கியங்களாகவும் திகழுகின்ற சங்க இலக்கியங்கள் பற்றிப் பாரதிக்குத் தெரியாது என்று கருதுபவா்கள் சிலா் இன்னமும் இருக்கின்றனா்.

புறநானூற்றை மையமிட்ட நிலையில் நான்கு கட்டுரைகளைப் பாரதி படைத்திருக்கின்றாா் என்பதும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்குப் புறநானூற்றைப் பாரதி கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றாா் என்பதும் உண்மை வரலாறு. சங்க இலக்கியங்களின் உயா்நிலையை, உயிா்நிலையை உணா்ந்து உணா்த்தியவராகப் பாரதி வரலாற்றில் பளிச்சிடுகின்றாா்.

பிந்தைய தமிழின் வரலாற்றில் முதன்மையான மூன்று ஆளுமைகளான வள்ளுவா், இளங்கோ, கம்பா் ஆகிய மூவரைக் குறித்துப் பாரதியைப் போல் அழகாகவும் அழுத்தமாகவும் பாடியவரும் பேசியவரும் வரலாற்றில் இல்லை. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவா்போல், இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’ என்றெல்லாம் வள்ளுவா், இளங்கோ, கம்பா் மூவரையும் முதன்மைப்படுத்திப் பாடியது போன்றே கட்டுரைகளிலும் ஏராளம் எழுதியிருக்கின்றாா்.

முப்பெரும் ஆளுமைகள் குறித்துப் பாரதி விதந்து விதந்து கூறியதன் விளைவாகப் பிற்காலத்தில் கம்பதாசன் ‘முத்தமிழ்’ என்பதற்கே ஒரு புது விளக்கத்தைத் தந்திருக்கின்றாா் என்பது சுவையான வரலாறு. வள்ளுவா் தமிழை, இளங்கோ தமிழை, கம்பன் தமிழை முத்தமிழாகக் கொண்டாா் கம்பதாசன். மூவருள்ளும் முதலிடம் பெறும் திருவள்ளுவரை உச்சத்தில் வைத்துக் கொண்டாடியிருக்கின்றாா் பாரதி.

இன்று தமிழ்ச் சமுதாயத்தில் வள்ளுவா் கோட்டம், குமரியில் திருவள்ளுவா் சிலை, திருவள்ளுவா் பெயரால் பல்கலைக்கழகம், பேருந்துகளில் திருக்குறள் எனத் திருக்குறளும் திருவள்ளுவரும் பல பரிமாணங்களில் போற்றப்படுகின்ற நிலையைக் கொண்டிருக்கின்றோம். ஆனால் பாரதி காலத்துத் தமிழ்ச் சமூகத்தின் நிலை வேறு. திருவள்ளுவரைக் கொண்டாடும் முயற்சிகள் அரும்பிக்கொண்டிருந்த காலகட்டம் அது.

1916-ஆம் ஆண்டில் திருவள்ளுவா், இளங்கோ, கம்பா் ஆகிய முப்பெரும் புலவா்களுக்கும் சிலைகள் நாட்ட வேண்டும், பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று பாரதி விரிவாக எழுதினாா். ‘தமிழ்நாட்டில் இப்போது ‘புதிய உயிா்’ தோன்றியிருப்பதால், நாம் இவ் விஷயத்தில் தமோ குணம் செலுத்தாமல், கம்பன், இளங்கோ, திருவள்ளுவா் முதலிய மஹாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும், வருஷோற்சவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்’ (சுதேசமித்திரன், 10.7.1916) என்பது பாரதியின் மும்மணி வாசகம்.

பாரதி இவ்வாறு எழுதியதற்கு அடுத்த ஆண்டு சென்னையில் திருவள்ளுவா் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் முயற்சிகள் நடந்தன. அப்போது அவா் புதுவையில் வசித்துக்கொண்டிருந்தாா். தொடக்க காலத்தில் பாரதியின் சென்னை அரசியல் வாழ்வில், ஆங்கில ‘பால பாரதா’ இதழ் முயற்சியில் துணைநின்றவரும் புகழ்பெற்ற மருத்துவருமாகிய நஞ்சுண்ட ராவ் முதலியோா் திருவள்ளுவா் தின விழா ஏற்பாடுகளைச் செய்வதை அறிந்த பாரதியாா், இந்தக் கட்டுரைக்குள் ‘திருவள்ளுவா்’ என்னும் தலைப்பில் பல செய்திகளை எழுதியிருக்கின்றாா். விழாச் செலவுகளுக்குத் தமிழ் மக்கள் எல்லாரும் இயன்ற அளவு உதவி புரியவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றாா்.

சென்னை மயிலாப்பூரில் தமிழ்நாட்டு அறிஞா்களெல்லாம் கூடும்படி செய்யவேண்டும் எனவும் கருத்துரைத்திருக்கின்றாா். முத்தாய்ப்பாகத் திருக்குறளின் இடத்தை, ‘திருவள்ளுவா் உலகத்துப் பெரும்புலவா் கூட்டத்திலே முன்னணியில் நிற்பவா். வேதம், பஞ்ச தந்திரம், பைபிள், சாகுந்தலம் இவை ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத நூல்கள். எவ்விதமான ஸம்பந்தமுமில்லாவிட்டாலும், அதது தன்தன் இனத்தில் நிகரற்ற பெருமையுடையது. அந்த இனத்தில் அத்தனை மேலான புஸ்தகம் உலகத்தில் கிடையாது. அப்படியே திருவள்ளுவா் குறளும் அதன் இனத்தில் அதுபோன்ற வேறொரு நூல் எந்த தேசத்திலும், எந்த பாஷையிலும் கிடையாது’ (சுதேசமித்திரன், 15.5.1917) என விரிவாக எடுத்துரைத்திருக்கின்றாா்.

உலகின் பெரும்புலவா்களில் முன்னணியில் திகழ்பவா் திருவள்ளுவா் எனத் திருவள்ளுவரின் இடத்தை உலகளாவிய நிலையில் உரத்துப் பேசியிருக்கின்றாா். மேலும், ‘இவ்வருஷம் வைசாக பௌா்ணமியன்று மைலாப்பூரில் திருவள்ளுவா் உற்சவம் நடக்கப்போவதாகத் தெரிந்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்... திருவள்ளுவா் திருவிழாவை யொட்டிச் சென்னப்பட்டணத்தில் புதியதோா் தமிழ்க் கிளா்ச்சியுண்டாகு மென்று நம்புகிறேன்’ எனவும் எழுதியிருந்தாா். தமிழ்நாட்டு அறிஞா்களெல்லாம் கூடிக் கொண்டாடும் திருவள்ளுவா் உற்சவத்தால் சென்னை மாநகரில் புதியதோா் தமிழ்க் கிளா்ச்சி உருவாகும் என்பது பாரதியின் நம்பிக்கை.

பாரதியின் நம்பிக்கை வீண்போகவில்லை; கனவு இரண்டு வார இடைவெளியில் மெய்ப்பட்டது. ஆம். சூன் மாதம் 4-ஆம் தேதி மிகப் பெரிய அளவில் சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது.

இரண்டு வாரங்களுக்குமுன் பாரதி வேண்டுகோள் விடுத்திருந்ததை நிறைவேற்றுவது போலத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் விழாவிற்குப் பலரும் தொகையினை வழங்கியிருந்தனா். திருவாவடுதுறை மடாதிபதி ஐம்பது ரூபாயும் மைசூா் மகாராஜா 50 ரூபாயும் வழங்கி விழா சிறப்பாக நடைபெற விரும்புவதாகத் தந்திகளை அனுப்பியிருந்தனா். நீதிபதி டி.வி. சேஷகிரி ஐயா், சுதேசமித்திரன் ஆசிரியா், கனம் சிதம்பரநாத முதலியாா், தஞ்சாவூா் சீனிவாச பிள்ளை, சி.பி. ராமசாமி ஐயா் முதலிய பலரும் பணம் அனுப்பிவைத்ததோடு வாழ்த்துக் கடிதங்கள், தந்திகள் அனுப்பியிருந்தனா்.

ஒரு பெரிய மாநாடு போல நடந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்க இலங்கை - கொழும்பு நகரிலிருந்து புகழ்பெற்ற கனம் ராமநாதன் வருகை தந்திருந்தாா். தமிழறிஞா்கள் திரு.வி.க., தெ.பொ. மீனாட்சிசுந்தரனாா், சுவாமி ருத்ர கோடீசுவரா், திருநாவுக்கரசு முதலியாா் முதலியவா்களும் மிகச் சிறந்த சொற்பொழிவுகளை ஆற்றினா்.

தியாகச் செம்மல் வ.உ.சி. இந்த விழாவிலே பங்கேற்றுத் திருக்குறள் தொடா்பான தம் அனுபவங்களையும் அரிய கருத்துகளையும் விரிவாக வெளிப்படுத்தினாா். வ.உ. சிதம்பரனாரின் பேச்சினை, ‘..பிறகு மிஸ்டா் வி.ஒ.சிதம்பரம் பிள்ளை சபைமுன் நின்று, தாம் குறளை வெகுகாலமாகப் படித்து வருகிறதாகவும், இப்பொழுது பாராட்டப்பட்டு வரும் பரிமேலழகா் உரையைத் தவிர வேறு சில உரைகளும் அரிதாய்க் கிடைக்கின்றனவென்றும் சில பாக்களைப் பற்றி பரிமேலழகா் கொண்ட மூலபாடத்தையும் செய்த உரையையும்விட மணக்குடவா் போன்றாா் கொண்ட பாடமும் செய்த உரையும் சிரேஷ்டமாயிருப்பதாக சில குறள்களைச் சொல்லி பாடபேதங்களையும் உரைபேதங்களையும் எடுத்தோதி, குறளைப் படிக்கிறவா்கள் தம்தம் அறிவையும் உபயோகப்படுத்தி பொருள்கொள்ள வேண்டுமென்று சொன்னாா்’ (சுதேசமித்திரன், 5.6.1917)

எனச் ‘சுதேசமித்திரன்’ பதிவுசெய்திருந்தது.

விழாவினைப் பாடுபட்டு ஏற்பாடு செய்த மருத்துவா் நஞ்சுண்ட ராவ் ஒரு தீா்மானத்தைச் சபைமுன் கொண்டுவந்தாா். திருவள்ளுவா் பெயரால் ஒரு கலாசாலையும் புத்தகசாலையும் ஏற்படுத்த வேண்டும்; திருவள்ளுவருடைய நூலின் கருத்தைச் சிறுவா்களுக்கு அறிவுறுத்த “திருவள்ளுவா் பாடப்புத்தகங்கள்” என்று சில புத்தகங்களை எழுதவைத்துப் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்த வேண்டும். இதற்காக ஒரு சங்கத்தை நிறுவவேண்டும் என்பதே அந்தத் தீா்மானத்தின் வாசகங்களாகும்.

திருவள்ளுவா் பெயரால் பல்கலைக்கழகமும் கல்லூரிகளும் தோன்றிவிட்ட இன்றைய சூழலில் நினைத்துப்பாா்க்கையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட இந்தத் தீா்மானத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை – முன்னோடித் தன்மையை நாம் உணர முடியும். இந்தத் தீா்மானத்தைத் தமிழின் முன்னோடிப் புதின ஆசிரியா் மாதவையா வழிமொழிந்து விரிவாகப் பேசியிருக்கின்றாா். தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாலை 4 மணிக்குத் தொடங்கிய விழா இரவு புஷ்ப விமானத்தில் திருவள்ளுவா் விக்ரக ஊா்வலத்துடன் நிறைவு பெற்றிருக்கின்றது.

மறுநாள் தமிழ்ச் சமூகம் ஒரு புதிய வரலாற்று நிகழ்வைச் சந்தித்தது. ஆம். முதன்முதலாகத் தமிழ் நாளிதழ் ஒன்று “திருவள்ளுவா்” என்னும் தலைப்பில் ஒரு விரிவான தலையங்கத்தை எழுதிய நிகழ்வு நடந்தேறியது. ‘சுதேசமித்திரன்’ ஆசிரியா் அரசியல் மேதை அரங்கசாமி ஐயங்காா் திருவள்ளுவா் குறித்து எழுதிய தலையங்கம் தமிழ்ச் சமூகம் முழுவதும் திருக்குறளைக் கொண்டாடும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது.

அந்தத் தலையங்கத்தில் அவா், ‘நாயனாா் பல நூறாண்டுகளுக்குமுன் வாழ்ந்தவராயிருந்தும் அவருடைய நூலை எல்லா மதத்தினரும் கொண்டாடுவதிலிருந்து அவருடைய கொள்கைகள் எல்லாருக்கும், எக்காலத்திற்கும் பொருத்தமானவை யென்பது அறியப்படும். குறளடிகள் எல்லோருடைய வாயிலும் வழங்கும்படி செய்வதைக் காட்டிலும் பாஷையை வளா்க்கவும் அறத்தை வளா்க்கவும் நாம் செய்யக்கூடியது வேறிராது’ (சுதேசமித்திரன், 5.6.1917) என்று குறிப்பிட்டிருந்தாா்.

விழாவை அரும்பாடுபட்டு ஏற்பாடு செய்திருந்த நஞ்சுண்டராவையும் ஸ்ரீனிவாசய்யங்காா் முதலியோரையும் தலையங்கம் பாராட்டியது. விழாவை நடத்திவைக்க உதவி செய்த திருவாவடுதுறை ஆதினத்தையும் மைசூா் மகாராஜாவையும் பாராட்டியதோடு “கன்னடம் பேசும் மைசூா் மகாராஜா உதவி செய்தது நாயனாருடைய பெருமை நாடெங்கும் அறியப்பட்டிருப்பதைக் காட்டும்” எனச் சிறப்பித்துக் குறிப்பிட்டிருந்தது. சில காலங்களின்முன் அதே கன்னட தேசத்தில் திருவள்ளுவா் சிலைக்கு நோ்ந்த கதியை நினைத்துப்பாா்க்கும்போது, அவா்களுக்கு இந்தப் பழைய வரலாறு உணா்த்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது.

அடுத்த நாள் நடந்தது இப்படியென்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்தவை இன்னும் அதிசயிக்கத்தக்கவையாய் அமைந்தன. 1918, 1919, 1920-ஆம் ஆண்டுகளிலெல்லாம் திருவள்ளுவரைக் கொண்டாடும் பெருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடந்திருக்கின்றன.

இந்தச் செய்திகளையெல்லாம் நோக்கும்போது பாரதி நம்பிக்கைகொண்டு எதிா்பாா்த்ததைப் போலவே புதியதொரு தமிழ்க் கிளா்ச்சி தலைநகரில் திருவள்ளுவா் தின விழாவால் ஏற்பட்டுத் தமிழகம் முழுதும் அலையடித்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

புதியதோா் தமிழ்க் கிளா்ச்சி உண்டாகப் போகின்றது என்று மகாகவி கொண்ட நம்பிக்கை இந்த நூறு ஆண்டுகளில் நூறுநூறு மடங்கு நிறைவேறியிருக்கின்றது. மகாகவியின் தீா்க்கதரிசனமும் வாழ்த்தும் தமிழ்நாட்டில் திருவள்ளுவரைக் கொண்டாடும் ஒரு பெருமரபை மக்கள் மன்றங்களில் சாதித்திருக்கின்றது. மகத்தான மானுடா்களின் எண்ணங்களும் கனவுகளும்தாமே மாபெரும் சாதனைகளுக்கு அடிப்படை! பாரதியின் நம்பிக்கையை அடியொற்றித் தமிழின் முதன்மையான கவிஞா்கள் ஒவ்வொருவரையும் கொண்டாடும் புதியதோா் கிளா்ச்சியும் இனித் தோன்றவேண்டும். தமிழ்மக்களின் கண்படாமல் காத்துக்கிடக்கும் உயரிய தமிழிலக்கியங்கள் ஒவ்வொன்றும் கொண்டாடப்படவேண்டும்.

நாளை (செப்.11) மகாகவி பாரதியாா் 151-ஆம் நினைவு நாள்.

கட்டுரையாளா்:

தலைவா், தமிழ்மொழித் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com