

தமிழ் - வடமொழித் தொடர்பு மிகப் பழைமையானது. கிடைக்கின்ற தமிழ் நூல்களில் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியமாகும். அதற்குப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார்,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம்
என்கிறார். ஆக, தொல்காப்பியர் காலத் தமிழகம் வடவேங்கடத்திற்கு உட்பட்டதாகிறது.
ஆயினும் தமிழில் வழங்கும் சொற்களை வகைப்படுத்த முனைந்த தொல்காப்பியர்,
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
என்கிறார். அதன்படித் தொல்காப்பியர்க்கு முன்பே தமிழில் வடசொல் கலப்பு ஏற்பட்டு விட்டது.
வடசொல் பற்றி விளக்க முற்பட்ட தொல்காப்பியர்
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே
என்கிறார். அதாவது, அகஸ்தியர் - அகத்தியர், ஆஸ்வத்-ஆசுவதம், இஷ்டம்-இட்டம், சாஸ்திரம்-சாத்திரம், கிருஷ்ணன்-கிருட்டிணன், வருஷம்-வருடம் என்பனபோல்.
சங்க காலத்தில் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வடநாட்டுப் படையெடுப்பு பற்றி பதிற்றுப்பத்து - ஐந்தாம் பத்து மூன்றாவது பாடலில்,
கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாகத்
தென்னங் குமரியோடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமம்ததைய ஆர்ப்பெழ
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்து
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
என்கிறார் வன்பரணர்.
ஈண்டு "சொல்பல நாடு' என்றது வெவ்வேறாகப் பல மொழிகள் பேசும் நாடுகள் என்றாகிறது. அவற்றில் எந்த வரியும் மன்னன் நெடுஞ்சேரலாதன் வடபுலத்தை ஆட்சி செய்ததாகச் சொல்லவில்லை. அப்படியே ஆட்சி செய்திருந்தாலும் அதனால் வடபுலம் தமிழகமாகிவிட்டதாகப் பொருள் கொள்ளுதல் அறிவுடைமையாகாது.
சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டின் அடிக்குறிப்பு, "ஆரியஅரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது' என்றிருக்கிறது. இமயம் உட்பட வடபுலம் தமிழ் வழங்கும் தமிழகமாக இருந்ததெனில் ஆரிய அரசன் யாண்டு வந்தான்? யாங்ஙனம் வந்தான்? வடபுலம் தமிழ் வழங்கும் பகுதியாக இருந்ததெனில் பிரகதத்தன் தமிழறியாதவனாக இருந்தமை எப்படி? அவனுக்குத் தமிழறிவிக்க நேர்ந்ததெங்ஙனம்?
பிற்காலச் சோழ மன்னர்களில் கி.பி.1012 முதல் 1044 வரை ஆட்சி புரிந்த முதலாம் இராசேந்திர சோழன் கங்கை வரை படை நடத்திக் கங்கை நீரைக் கொணர்ந்து, தான் புதிதாக உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்தைத் தூய்மைப்படுத்தியதாக அவனது கல்வெட்டு கூறுகிறது.
அது கொண்டு அவனது ஆட்சிக் காலத்தில் வடபுலமும் தமிழ் வழங்கும் தமிழகமாக இருந்ததெனக் கூறுவாரில்லை. அதே இராசேந்திரன் பர்மா, மலேசியா, கம்போடியா, வியத்நாம் முதலான நாடுகள் மீது படை நடத்தி வென்றதாகவும் அவனது கல்வெட்டுகள் கூறுகின்றன. இது பற்றிப் பண்டித நேருவும் குறிப்பிடுகிறார். அதுகொண்டு மேற்படி நாடுகள் தமிழ் வழங்கும் பகுதிகளாகிவிடவில்லை. சங்க காலத்தில் இமயம் வரை தமிழ் வழங்கும் தமிழகமாக இருந்த வடபுலம், பின்னர் எப்போது எதனால் தமிழல்லாத பல மொழிகள் வழங்கும் நாடாயிற்று? என்ன ஆதாரம்?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்பதுதான் தமிழ் நெறி. ஆனாலும்,அதற்கு மாறாகப் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனரைத் தம்மினும் மேலோராகக் கருதும் மனப்பான்மை சங்ககாலத்திலேயே ஏற்பட்டு விட்டது என்பதும் உண்மைதான்.
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாட முற்பட்ட காரிகிழார்,
பணியியர் அத்தை நின்குடையே முனிவர்
மூக்கட் செல்வர் நகர் வலம் வரற்கே
இறைஞ்சுக பெரும நின்சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
(புறநானூறு: 6)
என்கிறார்.
ஆர்புனை தெரியல் நின்முன்னோ
ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யார் (புறம்: 143)
எனச் சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானை எச்சரிக்கிறார் தாமப்பல்கண்ணனார்.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்மரண்
சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை (புறம்: 9)
என்கிறார் நெட்டிமையார்.
இமயத்து ஈண்டி இன்குரல் பயிற்றி
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் பலவே
(புறம்: 39)
என்கிறார் ஆலத்தூர் கிழார்.
வடதிசை யதுவே வான்தோய்
இமயம்
தென்திசை ஆய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம்மலர்தலை உலகே (புறம்:132)
என்கிறார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீநிலமிசையானே
(புறம்: 166)
என்கிறார் ஆவூர் மூலங்கிழார்
நெஞ்சு நடுங்கு அவலம் பாய
துஞ்சாக் கண்ண வடபுலத்தரசே (புறம்: 31)
என்கிறார் கோவூர் கிழார்.
ஆனால் இவை எதுவும் அதுபோது வடபுலமும் தமிழ் வழங்கும் தமிழகமாக இருந்தமைக்குச் சான்றாகாது.
புறநானூறு உள்ளிட்ட சங்க நூல்கள் எனப்படுவன அக்காலத்திய தமிழரின் வாழ்வியலை விளக்குவன என்பது உண்மைதான். அது கொண்டு அவை கூறும் வாழ்வியல் இன்று நம்மால் போற்றிப் பின்பற்றத்தக்கனவாகாது.
ஒருத்திக்கு ஒருவன் ஒருவனுக்குப் பலர் என்பதுதான் சங்கப் பாடல்கள் காட்டும் பண்பாடு. ஆசிரியர் தொல்காப்பியர் ஆண்மகனுக்கு "மனைவி, பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை, காமக்கிழத்தி, காதற்பரத்தை' என நால்வரைச் சுட்டுகிறார். சங்க அகப்பாடல்கள் அனைத்தும் அம்முறையில்தான் அமைகின்றன.
கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுதல், அல்லது கைம்மை நோன்பு மேற்கொள்ளுதல் என்பதுதான் சங்கப் பாடல்கள் காட்டும் அன்றைய தமிழ்ப் பண்பாடாகிறது. புறநானூறு 246-ஆவது பாடலில் பெறப்படும் செய்தி மிகவும் வேதனையானது. மன்னன் பூதப்பாண்டியன் இறந்த நிலையில் அவனுடைய மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏற முற்படுகிறாள். பெரியோர் சிலர் அதனைத் தடுக்க முனைகின்றனர்.
பெருங்கோப்பெண்டு அவர்களை நோக்கி, "கணவனுடன் செல்க எனச் சொல்லாது, செல்லாதே எனத் தடுக்கும் பெரியோர்களே, வெள்ளரி விதை போன்ற வெண்மையான நெய் படாமல் கையால் பிழியப்பட்ட சோற்றுடன், எள்ளும் , புளியும் கலந்து சமைக்கப்பட்ட வேலைகீரை அளந்து உணவு உண்டு பருக்கைக் கற்கள் பரப்பப்பட்ட படுக்கையில், பாயில்லாமல் படுத்துறங்கும் விதவை பெண்களில் ஒருத்தியாக நான் வாழ மாட்டேன்' என்று சொல்லி தீப்பாய்கிறாள்.
இதன் மூலம் விதவைப் பெண்களின் அவல வாழ்வு மிகப் பழைமையானது எனபது தெரிகிறது. உடன்கட்டை ஏறுதல் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவது நிலவிய பழைமையானது.
கடந்த நூற்றாண்டில் வங்காளியான இராசா ராம்மோகன் ராயின் கடுமையான முயற்சியால் ஆங்கில அரசினர் உடன்கட்டை தடைச்சட்டம் என்பதன் வழியாக அக்கொடுமையை தடுத்தனர்.
விதவை மறுமணம் மட்டுமல்ல, விவாகரத்து பெறும் பெண்களின் மறுமணமும் இயல்பாகி விட்டது. அவ்வாறே "பொட்டு கட்டுதல்' என்னும் பெயரில் நடைபெற்ற பெண்களின் பாலியல் தொழிலையும் சட்டவிரோதமாக்கி விட்டோம். ஆண் - பெண் இருபாலரின் மைனர் திருமணத்தையும் தடுத்து விட்டோம்.
சங்க காலத்திலேயே பிராமணரைத் தம்மினும் மேலானவராகக் கருதும் மனப்பான்மை தமிழரிடையே ஏற்பட்டுவிட்டது என்பது உண்மைதான். அது கொண்டு அதுவே சீரிய நற்பண்பு எனல் தகாது.
இனி, வேதம் என்பது யாது? மேற்காசியாவிலிருந்து பாஞ்சாலப் பகுதியில் பரவிய ஆரியர் தமக்கு வாழ்வும் வளமும் நல்க வேண்டி இந்திரனை வேண்டிக் கொள்ளும் முறையில் பாடியவற்றின் தொகுப்புதான் வேதம்.பிற்காலத்தில் மகாபாரதம், வால்மீகி, இராமாயணம், பகவத்கீதை, மனுதர்மம் என்பனவும் வேதங்களாகக் கொள்ளப்படுகின்றன.
பகவத் கீதையும் மனு தர்மமும் மக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்காக வகைப்படுத்துகின்றன. இதன்படி இன்றைய நிலையில் மிகப்பெரும்பான்மையான மக்கள் சூத்திரர் ஆகின்றனர்.
பாஞ்சாலி ஐவருக்கும் தேவியாகிறாள். இன்றைய பெண்கள் இதனைப் பின்பற்ற வேண்டுமா? இராமனுடன் சீதையும் காடு செல்கிறாள். இந்த நிலை மீள வேண்டுமா?
காலம் மாறுகிறது; அதற்கேற்ப வாழ்வியலும் மாறுகிறது. மீண்டும் வேத காலத்திற்கு மாறுதல் நிறைவேறமாட்டாத - நிறைவேறக்கூடாத வீண் கனவு.
கட்டுரையாளர்: தலைமையாசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.