உறவுகள் தொடர்கதை

முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை நம் சமூகம் கூட்டுக்குடும்ப முறையைப்பின்பற்றி வந்தது.
உறவுகள் தொடர்கதை
Updated on
2 min read


முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை நம் சமூகம் கூட்டுக்குடும்ப முறையைப்பின்பற்றி வந்தது. காலப்போக்கில் உலகமயமாதல், நகர்ப்புற விரிவாக்கம், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி போன்றவற்றால் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்தன. குழந்தை ஒரு பொருளாதார சுமையாகக் கருதப்பட்டு இன்று "ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தனிக் குடும்ப முறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்த குழந்தைகள் பெரியவர்களானதும் தனிக் குடும்பத்தையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு உறவுகளின் தேவைபுரியாமல் போகிறது. தற்காலங்களில் நம் வீட்டு நிகழ்வுகளில் உறவினர்களை விட நண்பர்களே அதிகம் பங்கேற்கின்றனர்.
நான் என்னுடைய சிறுவயதில், என்னுடைய தாத்தா, மாமா போன்ற சொந்த பந்தங்களின் வீட்டிற்கெல்லாம் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் சென்று விடுவேன். கிராமத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவார்கள். தெருவில் நடந்து செல்பவர் யார் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், அவர்கள் என்னிடம் நலம் விசாரித்து செல்வார்கள். தற்போதைய குழந்தைகள் இந்த அன்பை இழக்கிறார்கள்.
மனித சமூகமே ஒருவரோடு மற்றொருவர் தொடர்பில் இருப்பதில்தான் வளர்கிறது. ஆனால் ஒரு மாணவன் இன்னொரு மாணவருடன் நட்பில் இருக்க வேண்டும் என்பதைப் பள்ளிகள் சொல்லித் தருவதில்லை. மாறாக அவன் யாருடனும் பேசக் கூடாது என்று மட்டுமே சொல்லித் தருகின்றன. அது மட்டுமில்லாமல் அனைத்து வாழ்க்கைப் பாடங்களையும்  உறவுகளிடம் இருந்தும் ,வெளியில் இருந்தும்தான் மாணவன் அதிகமாக கற்றுக் கொள்ள முடிகிறது.                            
பள்ளியில் விளையாடுவதற்கு ஒதுக்கப்பட்ட வாரத்தில் இரண்டு வகுப்புகளுக்காக அனைவரும் காத்து கிடப்போம். மற்ற நேரங்களில் விளையாடுவதை பெற்றோர்களும் விரும்பியதில்லை. விளையாடினால் படிப்பதற்கான நேரம் குறைந்துவிடும் என்பதற்காகவே வெளியே விளையாட விடமாட்டார்கள். தற்போதும் குழந்தைகளுக்கு இதே நிலைதான். 
ஆனால் கோடை விடுமுறையில் உறவினர் கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம், அங்கே விளையாடுவதற்கு அதிக நேரம் கிடைத்தது. புது புது நண்பர்களுடன் பழகுவதற்கும், நல்லது கெட்டது தெரிந்து கொள்ளவதற்கும் நேரமும் இருந்தது. உறவுகளும் நமது வளர்ச்சியை விரும்பினார்கள். நமக்கு நல்லனவற்றை சொல்லிக் கொடுத்தார்கள். அந்த உரிமையையும், நம்மை நல்வழிப்படுத்தும் பொறுப்பினையும்  என்னுடைய பெற்றோர் அப்போது அவர்களுக்கு கொடுத்திருந்தார்கள். 
கூட்டுக்குடும்பம் என்பதைத் தாண்டி தனிக்குடும்பமாக இருக்கும்பொழுதும் உறவுகள் தொடர்பில் இருந்து வந்தன. ஆனால் இன்றைய குழந்தைகள் தங்கள் உறவுகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், வளர்ந்து விட்டார்கள். உறவுகளின் அவசியம் அவர்களுக்கு எப்போது புரியும் என்று நமக்குத் தெரியவில்லை. 
நம் சமூக கட்டமைப்பு மாறிவிட்டது. நாமும் அந்த மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்து விட்டோம். மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, மாற்றத்தை ஆதரித்தவர்களும் நாம்தான். ஏதோ ஒரு சமூகம் என்று ஒரு சமூகத்தின் மீது பழியை போட்டுவிட்டு நாம் தப்பித்துக் கொள்வது நியாயமல்ல. இப்போது பலருக்கும்  தாய், தந்தை தவிர மாமா, அத்தை, பெரியப்பா இந்த மாதிரி சொல்லிக்கொள்ள  உறவுகளும் எதுவும் இல்லை. 
பல ஆண்டுகளாக ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்றே இருக்கும் அவர்களுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், அத்தை பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, போன்ற உறவுகளைப் பற்றியும் தெரியவில்லை. உறவுகளின் பாசத்தை அவர்கள் உணரவில்லை. இது ஒரு கொடுமை. நாம், குடும்பம் என்பது, தாய் தந்தை, உடன் பிறந்த ரத்த சொந்தம் இவை மட்டும்தான் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது ஒரு குடும்பம் ஆகிவிடாது. 
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். நான்கு பேர் அல்லது ஐந்து பேர் சேர்ந்து ஒரு குடும்பத்தை உருவாக்க முடியாது. ஒட்டுமொத்த சொந்தங்களும் சேர்ந்ததுதான் ஒரு குடும்பம். அந்த ஒரு குடும்பமே பல்கலைக்கழகம் என அழைக்கப்படும். ஒரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு நிறையும் இருக்கும்; குறையும் இருக்கும். அதேபோன்று நம் குடும்பத்தின் பல்வேறு உறவுகளில் ஒவ்வொரு உறவிலும் நிறைகள், குறைகள் இரண்டுமே இருக்கும்.
உறவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத்தான் 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்றும், "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்றும் கூறினார்கள். இவை இன்று நம்மில்  பல பேருக்கு தெரியாது. 
ஒருவர் தவறு செய்துவிட்டால் அவர் நமக்கு வேண்டாம் என்று உடனே ஒதுக்கிவிடும் பழக்கம் நம்மிடையே இன்றும் இருக்கிறது. அனைத்து மனிதர்களிடமும் நிறை, குறை என்று இரண்டுமே இருக்கும். உறவுகள் செய்யும் தவறுகளை மட்டுமே நாம் பெரிதாக எண்ணினால் அவர்களின் நல்ல குணம் நம் கண்களுக்குப் புலப்படாது.
உறவுகள் தொடர்கதையாக இருந்த காலம் மாறி, இன்று அவை சிறுகதைகளாக மாறிவிட்டன. இன்னும் சில காலத்திற்குள் உறவுகளின் அவசியம் சுருங்கிப்போய், உறவுகளே இல்லாமல் கூட போய்விடலாம். அந்த நிலை உருவாகாமல்  தவிர்ப்பது நம் கையில்தான் உள்ளது. 
உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்போம். உறவுகளின் முக்கியத்துவத்தை நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம். இதை இன்று நாம் செய்யத் தவறி விட்டால், நம் எதிர்கால தலைமுறையினர் சொந்தபந்தங்களைப் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் போய் இயந்திர வாழ்க்கையில் பயணிப்பார்கள். அப்போது, தற்போது உள்ளதை விட அதிக அளவிலான முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் இல்லங்களும் உருவாகலாம். அதற்கு காரணமாக நாம் இருந்துவிடக்கூடாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com