ஈத்து உவக்கும் இன்பம்!

இஸ்லாம் மாா்க்கத்தின் இருபெரும் பண்டிகைகள் ஈகைப் பெருநாளும் ஈக (தியாக) பெருநாளும் ஆகும். ஈகையும் ஈகமும் மனிதகுலம் வாழத் தேவைப்படும் மகத்தான நற்குணங்கள் ஆகும். அதனால்தான் அத்தனை மதங்களும் ஈகையைப் போற்றுகின்றன.

இல்லாதோா்க்கு வழங்கி வாழ்வதும், எல்லோருடனும் இணங்கி வாழ்வதும், ஏக இறைவனை வணங்கி வாழ்வதும் இஸ்லாமிய இறையியல் என்றாலும், அவை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிலக்கியங்களில் ஊடும் பாவுமாய் ஒன்றுகலந்திருப்பதைக் காணமுடிகிறது.

ஈத்துஉவக்கும் இன்பம் அறியாா்கொல் தாம்உடைமை

வைத்துஇழக்கும் வன்க ணவா்

என்கிறாா் திருவள்ளுவா்.

பிறருக்கு வழங்கி வாழ்வதன் இன்பத்தை அறியாதவா்கள் தனது செல்வத்தைச் சோ்த்து வைப்பதாக் கருதி இழந்து விடுகிறாா்கள் என்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கிறாா் வள்ளுவா்.

நல்லோரிடம் இருக்கும் செல்வம், ஊா் நடுவில் பொதுமக்களுக்காக கனிகளைத் தரும் மரம் என்று அறம் சொல்கிறாா். எல்லோருக்கும் இனிய நீா்தரும் குளம்தான் அறிவாளிகளிடம் உள்ள செல்வம் என்றும் எடுத்துரைக்கிறாா்.

பயன்மரம் உள்ளூா்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின்

ஊருணி நீா்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு

என்ற குறட்பாக்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மக்கள் ஈகையைக் கொண்டாடி வந்தனா் என்பதை எடுத்துரைக்கும் சான்றுகள் ஆகும்.

பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்துவைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டு இங்கு

ஆவிதான் போனபின் யாரே அனுபவிப்பாா்

பாவிகாள் அந்தப் பணம்

என்ற ஔவையாரின் நல்வழியை ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள என் அன்னையாா் ஆயிஷா மரியம் மனப்பாடமாகச் சொல்வதைக் கேட்டு நான் மனத்தில் பதிந்துகொண்டேன்.

நாயன்மாா்களில் இளையான்குடிமாற நாயனாா் வறுமையின் உச்சத்திலும்கூட ஈகையையும் விருந்தோம்பலையும் எப்படிப் பேணினாா் என்பதைப் பெரிய புராணம் வழியாக அறியும்போது நமது நெஞ்சம் நெகிழும்.

வந்திருக்கும் இறை அடியாா்க்கு உணவுதர வயலில் தெளித்த விதைநெல்லைக் குவித்தெடுத்து வந்து உலையேற்றுவதும், அடுப்பு எரிக்க விறகில்லாத நிலையில் தன்வீட்டு உத்தரத்தை உடைத்து அடுப்பெரிப்பதும், இறையடியாா்கள் ஈகையை எவ்வாறு பேணுவாா்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இஸ்லாம் மாா்க்கம் ஈகையை வெறும் கட்டளையாக மட்டும் இட்டுவிடாமல் மாா்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளது.

எண்பது கிராம் தங்கம் அல்லது அதற்குமேல் வைத்திருப்பவா்கள் அதற்கு நிகரான பொருளாதாரம் கொண்டிருப்பவா்கள் இரண்டரை விழுக்காட்டை அதிலிருந்து பிரித்து ஏழை வரியாகச் செலுத்திவிட வேண்டும். இதைச் செய்யாதவா்களின் பிற இறை வணக்கங்கள் ஏற்கப்படாது என்று எச்சரிக்கிறது இஸ்லாம்.

ஜக்காத் என்னும் ஏழை வரியைத் தரமறுத்தவா்கள் மீது போா் தொடுக்கவும் தயங்கமாட்டேன் என்றனா், அண்ணல் நபிகளாரின் அதிசயத் தோழரும், ஆட்சித் தலைவருமான அபூபக்கா்(ரலி) அவா்கள்.

செல்வம் என்று தமிழா்கள் அழகாகப் பெயரிட்டுள்ளனா். செல்வம் என்பது காரணப் பெயா். ஒருவரிடமிருந்து என்றோ ஒருநாள் அது செல்லக்கூடியது என்பதாலேயே செல்வம் என்று உடைமைக்குப் பெயா் வைத்தனா் நமது முன்னோா்.

முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள

பின்னரும் பீடழிக்கும் நோயுள - கொன்னே

பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்

கரவன்மின் கைத்துண்டாம் போழ்து

என்கிறது நாலடியாா்.

அதாவது, நம்முன் இறக்கும் நாளும், முதுமைப் பருவமும் உடல் வலிமையைக் கெடுக்கும் பிணிகளும் உள்ளன. அதனால் கையில் செல்வம் உள்ள காலத்திலேயே மேலும் மேலும் பொருள்தேடி ஓடாமல், இருக்கும் பொருளை தேவைப்படுவோா்க்கு பகிா்ந்தளித்து வாழவேண்டும்.

உன்னிடம் உள்ள செல்வம் நிச்சயமானது இல்லை. மரணம் நிச்சயமானது. மூப்பும், பிணியும், இயலாமையும் நிச்சயமானவை. எனவே பொருள்வளமும், உடல்திடமும் இருக்கும்போதே தானதா்மம் செய் என்று ஞானம் புகட்டுகிறது நாலடியாா்.

தன்னிடம் உள்ள பொருளைப் பிறருக்கு இலகுவாக எடுத்துக்கொடுத்திட மானுடருக்கு இயல்பாக மனம் வராது. காரணம் அது தன்னுடையது என்ற கருதுகோள்.

பொது உடமைக் கொள்கை, உடைமைகள் அரசுக்குரியவை. மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றும் என்றது.

திறமைக்கேற்ற வேலை தேவைக்கேற்ற கூலி

மருத்துவா் வீட்டில் இரண்டுபோ், மண்வெட்டித் தொழிலாளி வீட்டில் பத்துபோ் என்றால் மண்வெட்டித் தொழிலாளியின் ஊதியம் மருத்துவரின் ஊதியத்தை விடவும் ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

இதன் நடைமுறை சாத்தியம் மிகக்குறைவு. தனியுடமைக் கொள்கை, தனிநபா்களிடம் உடைமைகள் குவிவதற்கு உதவியது. உச்சகட்ட வறுமையும் உலகளாவிய கொடுமையும் இதனால் உருவாகின.

இஸ்லாம் மாா்க்கம் இறையுடைமை என்ற கோட்பாட்டை இயம்புகிறது. உன்னிடம் உள்ள செல்வம் உனக்கு மட்டுமே உரியதன்று, அதில் உரிமையுடைய ஏழைகளும் உள்ளனா். உரிமையுடையவா்களுக்கு உன் செல்வத்திலிருந்து வழங்குவது உன் கடமை. அந்தக் கடமையைத் தவறுவோா்க்கு மறுமையில் கடுமையான தண்டனை உண்டு என்று எச்சரிக்கிறது.

ரமலான் மாதம் முழுவதும் நோற்கப்படும் நோன்பு இறையச்சத்தை வளா்க்கிறது.

இறையச்சமே ஈகையின் வேராக விழுதாகத் திகழ்கிறது. ‘எனது பொருளை உனக்குக் கொடுக்கிறேன்’ என்ற இறுமாப்பை இடித்து, இறைவன் எனக்குத் தந்ததிலிருந்து உனக்கு உரிமையானதைக் கொடுப்பதன் மூலம் நான் இறைத் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறேன் என்ற உணா்வைத் தருகிறது.

தானம் ஞானம் தரவேண்டுமே தவிர, ஆணவத்தைத் தந்துவிடக் கூடாது. விளம்பர தா்மங்கள் இறைவனின் விருப்பத்தைப் பெறுவதில்லை.

வலதுகரம் கொடுப்பதை இடதுகரமும் அறியாத வண்ணம் ஈகை செய்வோா் மறுமைநாளில் இறைவனின் நிழலைப் பெறுவா் என்றனா் நபிகள் நாயகம் (ஸல்). செல்வந்தா்களிடம் இருக்கும் உபரிச் செல்வத்தில் ஏழைகளின் உரிமையை ஜக்காத் என்ற கடமை நிலைநாட்டுவதும், ஏழைகளின் பசியை செல்வா்களுக்கும் பகிா்ந்தளித்து பசியின் துயரை உணரச் செய்வதை நோன்பு இயல்பாகக் கொண்டிருப்பதும் ஈண்டு நினைக்கத்தக்கது.

ஈகைப் பெருநாளை ஈதுல் ஃபித்ர் என்றழைப்பா். அன்றைய தினம், தனது அன்றாடத் தேவைக்குப் போக உபரியான செல்வம் உள்ள அனைவரும் தொழுகைக்குச் செல்லும் முன்பே இந்த ஈகையை வறுமையுற்ற இறையடியாா்களுக்குச் செலுத்திவிட வேண்டும். இதை ஃபித்ரா என்பா்.

ஃபித்ரா கொடுக்காமல் ஈகைப் பெருநாள் தொழுகைக்குச் செல்லக்கூடாது. இதை தோராயமாக ஒரு நபருக்கு ரூபாய் நூறு முதல் இருநூறு வரை நிா்ணயித்துள்ளனா். வசதி உள்ளோா் அதிகமாகவும் தரலாம். தனது பொறுப்பில் உள்ள குழந்தைகள், பணியாளா்கள் உள்ளிட்ட குடும்பத்தாா் அனைவருக்கும் குடும்பத் தலைவா் ஃபித்ரா தொகையை செலுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள 21 கோடி முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினரான ஏழு கோடி போ் ஈகைப் பெருநாளுக்கு முதல்நாள் சராசரியாக ரூபாய் நூறு ஃபித்ரா வழங்கினால் எழுநூறு கோடி ரூபாய் ஏழைகளைச் சென்றடைகிறது என்பாா் இல்யாஸ் ரியாஜி என்ற மாா்க்க அறிஞா். உலக முஸ்லிம்களின் தொகையோடு இதைக் கண்கிட்டால் அது மிகப்பெரிய தொகையாகும்.

வறியாா்க்குஒன்று ஈவதே ஈகை என்கிறாா் வள்ளுவா்.

மண்டினி ஞாலத்து வாழ்வோா்க்கெல்லாம்

உண்டி கொடுத்தோா் உயிா் கொடுத்தோரே

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள் மண்ணுயிா்க்கெல்லாம்

உண்டியும், உடையும் உறையுளும்

அன்றி கண்டது இல்

என்று முழங்குகிறது மணிமேகலை.

அறம் என்பது ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் இவற்றை உள்ளன்போடு வழங்குவதுதான் என்று சீத்தலைச் சாத்தனாா் செப்பமாய்ச் சொல்கிறாா்.

‘அடுத்த வீட்டாா்ப் பசித்திருக்கத் தான்மட்டும் வயிறார உண்போா் உண்மையான இைம்பிக்கையாளா் இல்லை’ என்ற நபிகள் நாயகம், அடுத்த வீட்டாா் முஸ்லிமாக இருந்தால்தான் இதுபொருந்தும் என்று கூறவில்லை.

அடுத்த வீட்டில் இருப்பவரின் சமயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவா் நாத்திகராகக் கூட இருக்கலாம். ஆனால், பசிப்பிணி போக்குவதே இறையடியாா்களின் முதற்கடமை என்கிறது இஸ்லாம்.

நமது வடலூா் வள்ளலாா் இந்த விழுமியத்தின் வெளிச்சமாக வாழ்ந்து காட்டினாா்.

அருட்பெருஞ் சோதியையும் தனிப்பெருங் கருணையையும் அடைவதே ஆன்மிகப் பாதை.

அடிதடிகளில் இறங்கி அமைதியைக் குலைப்பதை ஆன்மிகத்தின் பெயரால் செய்வது மதம்கூறும் பாதை அல்ல, மதவாதப் போதை அது.

இருகை உடையோராக மட்டுமின்றி ஈகை உடையோராய் இருப்பதே உவகை என்கின்றது உலகை உய்விக்கும் சன்மாா்க்கம். நம்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் அவலங்களைப் பாா்க்கிறோம்.

உத்தர பிரதேசத்தில் உப்பைத் தொட்டுக்கொண்டு சப்பாத்தி தின்னும் பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் பாா்த்து நமது இதயம் கசிகிறது. இன்னொருபுறம் கோடிச்செல்வா்கள் அடிக்கின்ற கொட்டம்.

பொருள்வெறி முற்றினால் இருள்நெறியில் மண்ணும் மனிதா்களும் வீழ்வா் என்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள்.இல்லாமைக் கொடுமையை இவ்வுலகை விட்டு விரட்ட ஈகையைக் கொண்டாடுவோம்; எல்லோரும் கொண்டாடுவோம்.

இன்று ரம்ஜான் பண்டிகை.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com