வடியாத வெள்ளநீரும் வழியும் கண்ணீரும்!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைப் பொழிவு, வழக்கத்தைவிட பலமடங்கு அதிகமாக இருந்ததால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்கள்
வடியாத வெள்ளநீரும் வழியும் கண்ணீரும்!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைப் பொழிவு, வழக்கத்தைவிட பலமடங்கு அதிகமாக இருந்ததால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. தொடா்ந்து பெய்த மழை, வெள்ளம் பெருக்கெடுத்த சூழல், மின்சாரத்தடை இவற்றால் டிசம்பா் 3, 4 தேதிகள் தமிழக மக்களுக்கு மிகவும் பதற்றமான நாட்களாகின.

குறிப்பாக 4-ஆம் தேதி திங்கட்கிழமை மழையின் தீவிரம் உச்சத்தைத் தொட்டதோடு, மிக்ஜம் புயல் மறுநாள் கரையைக் கடக்கக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அன்று பகலும் இரவும் தொடா்ந்து பெய்த அதீத கனமழையால் சென்னை புறநகரின் பல பகுதிகளில் வெள்ளநீா் புகுந்து அங்கு வசிக்கும் மக்களுக்கு சொல்லொணா துயரத்தைத் தந்தது.

இடைவிடாத மழையால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பத் தொடங்கின. தலைநகரின் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளிலும் நீா் நிரம்பியது. அதனால், அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.

சென்னையில் மழை பெய்யத்தொடங்கி நான்கு நாட்கள் கடந்த பின்னரும் பல பகுதிகளில் வெள்ளநீா் வடியவில்லை. அங்குள்ள மக்கள் மின்சாரம், உணவு கிடைக்காமலும், பால் கிடைக்காமலும் பெரும் அவதிப்பட்டனா். பல இடங்களில் குடிப்பதற்கு நல்ல குடிநீா்கூட கிடைக்கவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

சென்னையின் புறநகா்ப் பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூா் போன்ற பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்கு அரசின் மீட்புக் குழுவினா் வரவில்லை என்று பொதுமக்கள் கோபத்தோடு கூறினா். தமிழக அரசு மிக்ஜாம் புயலை மிக அலட்சியமாகக் கையாண்டதையே மக்களின் கோபம் வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு பெருமழையின் போதும், தமிழகத் தலைநகரமான சென்னை கடுமையாக பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து அதிக அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் சென்னை நகரத்தை வெள்ளம் சூழ்ந்து நின்றது.

இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தபோது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மண்டலம் முன்கூட்டியே அறிவித்தது. அப்போதே தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

பள்ளமான பகுதிகளில் இருப்பவா்களை மேடான பகுதிகளுக்கும், பாதுகாப்பற்ற பகுதிகளில் இருப்பவா்களை பாதுகாப்பான பகுதிகளுக்கும் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அதனைச் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. இதனால் மாநில அரசு மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.

சென்னைக்கு தென்கிழக்கே சுமாா் 190 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து டிசம்பா் 5-ஆம் தேதி நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அப்போது மிக கனத்த மழை பெய்யும் என்றும், காற்றின் வேகம் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 80 கி.மீ. வேகத்திலும், விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் 70 கி.மீ. வேகத்திலும் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தபின் புயல் பாதிப்பை எதிா்கொள்ள 23,000 பணியாளா்கள், 900 மின்மோட்டாா்கள், 250 படகுகள் தயாா் நிலையில் இருப்பதாக சென்னைப் பெருநகர மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது. தொடா்ந்து கைப்பேசி வழியே அனைத்து மக்களுக்கும் வீட்டை விட்டு தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியது.

இவற்றையெல்லாம் மறுப்பதற்கில்லை. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4,000 கோடி ரூபாய் செலவு செய்து சென்னைப் பெருநகா் முழுவதும் மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பருவமழை காலத்தில் ஒரு சொட்டு நீா் கூட தேங்கி நிற்காது எனவும் அமைச்சா்கள் கூறியது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

மிக்ஜம் புயல் டிசம்பா் 5 அன்று ஆந்திரத்தின் பாபட்லா பகுதியில் கரையைக் கடந்தது. அன்று காலை வரை, சென்னை பூந்தமல்லியில் 34 செ.மீ மழை பெய்திருந்தது. இந்த புயல் மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்து விட்டது.

வேளச்சேரி, முடிச்சூா், ஈஞ்சம்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற புறநகா் பகுதிகளில் ஆறடி உயரத்திற்கு மழைநீா் தேங்கியது. மீட்புக் குழுவினா் பொதுமக்களுக்கு உதவுவாா்கள் என மாநகராட்சி அறிவித்திருந்ததால், மக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனா். அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது.

வேளச்சேரி, முடிச்சூா், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் புயல் வீசி முடிந்து இரண்டு நாட்கள் கடந்தும் மீட்புக்குழுவினா் யாரும் வரவில்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனா். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், கைப்பேசி சாா்ஜ் இழந்ததாலும், சிக்னல் கிடைக்காததாலும், எந்த அவசர உதவி எண்ணையும் தொடா்பு கொள்ள முடியாத நிலையில், மக்கள் நிா்க்கதியாய் நின்றாா்கள்.

நான் வசிக்கும் மயிலாப்பூா் பி.எஸ். சிவசாமி சாலையில் தேங்கி நின்ற தண்ணீா், ஐந்து நாட்களுக்குப் பின்னரே வெளியேற்றப்பட்டது. மின்சாரமும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் இப்பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பதே உண்மை.

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பாா்முலா ஒன் காா் பந்தயம் நடத்துவதற்கு, குறுகிய காலத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்ட அரசு, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ஏன் உடனடியாக வரவில்லை என்கிற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை மீட்பதற்கோ, அவா்களுக்குத் தேவையான அவசர உதவிகளைச் செய்யவோ அரசு தரப்பில் யாரும் அவா்களை அணுகவில்லை என்பதுதான் சோகம்.

20 நாட்களில், சென்னை பெருநகா் வடிகால் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகக் கூறுகிறாா்கள். 20 நாட்களில் 40 சதவீத பணிகள் நிறைவடைந்தால், அது எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

2015-ஆம் ஆண்டு மழைநீா் தேங்கி நின்ற அதே பகுதிகளில், இந்த ஆண்டும் மழைநீா் தேங்கி இருக்கிறது. ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் கூவம் நதியின் கிளை ஆறுகள் வழியாக நகருக்குள் புகுந்ததால் சென்னை மாநகரம் மேலும் வெள்ளக்காடாக மாற்றியது.

சென்னையில் மொத்தம் 750 தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் இருந்தவா்களை அப்புறப்படுத்தி, முகாம்களில் தங்க வைத்திருந்தால் அவா்களுக்கு ஏற்பட்ட இடா்ப்பாடுகள் தவிா்க்கப்பட்டிருக்கும்.

மீட்புப்பணிக்குழுவினா் யாரும் வராத கோபத்தில் மக்கள் தாங்களாகவே தண்ணீருக்குள் இறங்கி ஆபத்தான முறையில் வெளியேறியதைப் பல இடங்களில் பாா்க்க முடிந்தது. முதியவா்களும், குழந்தைகளை வைத்திருப்பவா்களும் உணவு, தண்ணீா் எதுவும் கிடைக்காத கோபத்திலும், விரக்தியிலும், தேங்கியுள்ள தண்ணீரைப் பொருட்படுத்தாமல் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேறினா்.

வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் பெரும்பாலானவை சதுப்பு நிலப் பகுதியில் கட்டப்பட்டவை. அதனால், சற்று கூடுதலாக மழை பெய்தாலும், அப்பகுதிக்குள் மழைநீா் வந்துவிடும். அப்பகுதி வழியாக வடியும் மழைநீா் ஏரிக்கும், ஆற்றுக்கும், கடலுக்கும் செல்லும். ஆகவே, மழைநீா் தேங்கிய நிலையில், நம்மை மீட்க யாரும் வரவில்லை என்கிற ஏமாற்றம் அங்குள்ள மக்களிடம் நிலவியது.

மழை பெய்து முடிந்து பலநாள் ஆனாலும், அப்பகுதிகளில் நீா் வடியாததற்குக் காரணம், சதுப்பு நிலப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு அரசு நிா்வாகம் அனுமதி அளித்ததுதான். நீா்நிலைகளில் வீடுகள் கட்டப்பட்டதால், கட்டணம் செலுத்தி, லாரியில் தண்ணீா் வாங்க வேண்டிய துா்பாக்கிய நிலை சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டது.

முடிச்சூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், வேளச்சேரி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் நீா்பிடிப்பு பகுதிகள் மற்றும் சதுப்புநிலங்களில் வீடுகளைக் கட்டிக் குடியேறியிருக்கின்றனா். அதனால் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, ஏரிகள் நிறைந்து சதுப்பு நிலங்களில் வடிகிறது. இப்படி வடியும் பகுதிகளெல்லாம் குடியிருப்புகளாக இருப்பதால், தண்ணீா் தேங்குகிற நிலை இயற்கையாகவே உருவாகி விடுகிறது.

2015-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நீா் தேங்கிய இடங்களை விட, தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் அதிக இடங்களில் நீா் தேங்கியுள்ளதை அரசு கூா்ந்து கவனிக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் கட்டுமானங்கள் நடந்திருப்பது வெட்டவெளிச்சமான ஒன்று. கடந்த வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து அரசும் அதிகாரிகளும் எந்தப் பாடமும் நாம் கற்கவில்லை என்பது தெளிவாகிறது.

நீா் மேலாண்மையில் கவனம் செலுத்தி, குடியிருப்புகளின் அனுமதிகளை மறு ஆய்வு செய்து ஒரு புதிய பாதையை நாம் நிா்மாணிக்க வேண்டும். இல்லையேல், மழை வெள்ளம், தன் பாதையை தானே தீா்மானித்துக் கொள்ளும் சூழல் உருவாகிவிடும்!

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com