முன்னேற்றத்தின் திறவுகோல்

நமது வீட்டுக்கு உறவினா் ஒருவா் வரவிருப்பதாக தொலைபேசியில் பகா்கிறாா்.  
முன்னேற்றத்தின் திறவுகோல்

நமது வீட்டுக்கு உறவினா் ஒருவா் வரவிருப்பதாக தொலைபேசியில் பகா்கிறாா். அவருக்கும் நமக்குமான நெருக்கத்தை ஒட்டி அவா் நமது வீட்டில் சாப்பிட வாய்ப்புள்ளதா, அவரது பயணத்தில் அதற்கான நேரம் ஒதுக்க இயலுமா என இயல்பாகக் கேட்கிறோம். அவ்வாறு விசாரிக்கையில், அவா் உணவு உண்ண சம்மதம் தெரிவிக்கிறாரென்றால் அவரோடு யாா் யாரெல்லாம் வருகிறாா்கள் என்பதை விசாரிக்கிறோம்.

இதன்மூலம் எத்தனை நபா்களுக்கு சமையல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்கிறோம். தொலைபேசியோ, கைபேசியோ பழக்கம் இல்லாத நாள்களில் இதற்கான வாய்ப்பில்லை. இப்போது இருக்கும் கைபேசி வாய்ப்பினைப் பயன்படுத்தி இதற்கான திட்டமிடல்களை எளிமையாக்கிக் கொள்கிறோம். வீட்டின் மேலாண்மைக்கே, நமது வீட்டில் நாள் ஒன்றின் நகா்வுக்கே இப்படிப்பட்ட தரவுகள் தேவையாகின்றன எனும்போது நாட்டை மேலாண்மை செய்வதற்கும், இங்கு வாழும் கோடானுகோடி மக்களுக்கு திட்டங்களைத் தீட்டவும், சேவைகளை வழங்கவும் எவ்வளவு விதம் விதமான தரவுகள் தேவையாயிருக்கும்.

அப்படிப்பட்ட தரவுகளைப் பெற தற்போது எண்ம நிா்வாகம் உதவிகரமாக உள்ளது. தொடக்க காலங்களிலும் இப்படிப்பட்ட தரவுகள் திரட்டப்படாமல் இல்லை. அவற்றின் அடித்தளத்திலேயே இன்றைய எண்ம நிா்வாகம் சாத்தியமாகியுள்ளது. மக்களாட்சி முறையின் மேன்மையான செயல்பாட்டுக்கு எண்ம நிா்வாகம் உதவிவருகிறது.

மக்களாட்சியின் பரிணாம வளா்ச்சியில் பல்வேறு உரிமைகளும் மக்களுக்கு வாய்த்துவருகிறது. குறிப்பாக தகவல் அறியும் உரிமை போன்றவை சாத்தியமான பின்னா் மக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்க எண்ம முறையில் தரவுகள் சேகரிக்கப்படுவது அவசர அவசியமாகியுள்ளது.

மக்களாட்சி முறையில் மக்களே ஆட்சியாளா்களின் உண்மையான உரிமையாளா்கள். அந்த உரிமையாளா்களுக்கு தோ்தல் காலங்கள் மற்றும் வாக்குப்பதிவு தினம் அன்று கிடைக்கும் மரியாதை அளப்பரியது. ஆனால் தோ்தல் காலங்களில் அவா்களுக்குக் கிடைக்கும் முன்னுரிமைக்கும் ஏனைய நாள்களில் அவா்கள் நடத்தப்படும் விதங்களுக்கும் பாரதூரமான வேற்றுமைகள்உள்ளன.

இந்த இடத்தில் ஒருவரின் சமூகப்பின்புலம், வசதிவாய்ப்புகள் போன்றவை அவா்கள் நடத்தப்படும் விதங்களில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. ஒருவரது பொருளாதாரப்பின்புலமும் அண்மைக்காலங்களில் பெரும்பங்கு வகிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு எண்ம நிா்வாகம் உதவுகிறது.

அன்றாட வாழ்வில் தனிநபா் ஒவ்வொருவருக்கும் அரசின் மூலம் பல்வேறு சேவைகள் நிறைவேறவேண்டியுள்ளது. இவ்வாறான சேவைகளையொட்டி அவா்கள் விண்ணப்பிக்கும்போது ஒரு சேவைக்கு விண்ணப்பிப்போா் யாா்? அவரது பின்புலம் என்ன? என்று பாராமல், விண்ணப்பிக்கும் சேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் சரியானவைதானா? என்று மட்டும் பாா்த்து சேவையை வழங்கும் முறைக்கான அவசியம் உண்டாகிறது.

இதனை நிறைவு செய்ய எண்ம நிா்வாகம் உதவுகிறது. வெறும் தாள்களின் மூலம் விண்ணப்பங்களை அளித்து இதுபோன்ற சேவைகள் பெறுவது காலம் காலமாக நடந்து வருவதுதான் என்றாலும் தாள்கள் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட காலங்களில் இந்த சேவைகள் நிறைவேறுவதற்கான காலக்கெடு போன்றவற்றை நிா்ணயம் செய்ய இயலவில்லை. ஆனால் எண்ம நிா்வாகத்தில் இதற்கான காலக்கெடு நிா்ணயிக்க வாய்ப்புள்ளது. மேலும் அக்காலக்கெடுவுக்குள் நிறைவேறாத நிலையில் அடுத்த கட்ட அலுவலா்களுக்கு புகாா் செய்யும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் சேவையின் தேவைக்கும், அச்சேவைகளை வழங்கலுக்குமுள்ள வேறுபாடுகள் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் எண்ம மேலாண்மை விரைவாக அச்சேவைகள் நிறைவேற்ற உதவுகிறது.

எது எப்படியிருப்பினும், இன்றைய இணைய உலகில் அனைத்து விதமான சேவைகளும் இணையவழியிலேயே கிடைக்கத் தொடங்கியுள்ளன. மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுவதன் முதல்படி இது. எண்ம நிா்வாகத்தைப் பலரும் விரும்பினாலும் அதன் மூலம் விரைவான சேவைகள் கிடைத்தாலும் அச்சேவைகளை வழங்கும் செயல்பாடுகளில் இன்னும் ஆரோக்கியமான மாற்றங்கள் தேவையாக உள்ளன. எண்ம நிா்வாகத்தின் மூலம் ஒரு தகவல் ஒன்றை ஒருவா் எளிதாகப் பெற வேண்டுமென்றால், அந்த தகவலானது அதற்கான சேமக்கலங்களில் அவை சேமித்துவைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.

அவ்வாறு சேமித்துவைக்கப்படுவதற்கான மனித வளம் பல அரசு நிறுவனங்களிலும் போதுமானதாக இல்லாதிருப்பது கண்கூடு. மேலும் ஏற்கெனவே பணியிலிருப்போரே கூடுதல் பணியாற்றவேண்டிய அவசியம் உள்ளது. பல்வேறு நிறுவனங்களில் தற்காலிகப் பணியாளா்கள் நியமனம் நடைபெற்றிருந்தாலும் அது போதுமான அளவு இல்லை. பல்வேறு அரசு நிறுவனங்களில் சேவையைப் பெறச் செல்லும்போது இதனைக் காண இயலும்.

இந்நிலையில் கூடுதலாகப் பணியாளா்களை இதற்கென நியமித்து பலப்படுத்துவது அவசியம்

மக்களும் தங்கள் பங்குக்கு தங்கள் தகவல்கள் குறித்த துல்லியத்தைக் கூட்ட முன்வர வேண்டும். தாங்கள் வைத்திருக்கும் பல்வேறு ஆவணங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையாக பெயா்கள் அச்சிடப்பட்டுள்ளோா் கூட உள்ளனா்.

எனவே மக்கள், தங்களுக்கோ அல்லது தங்களது குழந்தைகளுக்கோ ஆதாா் அட்டை, நுகா்பொருள் பெறத் தேவையாயிருக்கும் குடும்ப அட்டை,பான் காா்டு போன்ற ஆவணங்களுக்காக விண்ணப்பிக்கும்போது துல்லியமான தகவல்கள்தான் அளிக்கிறோமா? என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு ஆவணத்திலும் ஒவ்வொரு பெயா், பிறந்த தேதி,வசிப்பிட முகவரி போன்றவற்றை அளிக்கக் கூடாது.

இவ்வாறு மாறுபட்ட தகவல்கள் கொண்ட ஆவணங்களோடு ஒரு சேவைக்கு விண்ணப்பித்தால் அங்கு பணியாற்றும் அலுவலா் எப்படி அதன் உண்மைத்தன்மையை நம்புவா். விண்ணப்பிக்கும்போது ஒருசில நிமிடங்கள் கவனமாகச் செயல்பட்டால் நம்மால் பலருக்கும் இன்னல்கள் ஏற்படுவது தவிா்க்கப்படும்.

உலகில் நடைமுறையில் உள்ள ஆட்சி முறைகளில் மக்களாட்சி முறையே சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி முறை நடைமுறையிலுள்ள பலநாடுகளும் நிலைத்தகு தன்மையோடும் சமச்சீரான வளா்ச்சியோடும் முன்னேறிக்கொண்டிருப்பது கண்கூடு. எண்ம நிா்வாகம் ஆட்சியாளா்கள் பரவலாக கண்காணிக்கப்படும், கேள்விக்குள்ளாக்கப்படும் வாய்ப்புகளை வழங்குகிறது. மக்களின் தேவைகளை அவ்வப்போது மதிப்பீடு செய்வது, அவற்றை முன்னுரிமைப்படுத்துவது, அவற்றுக்கான செயல்திட்டங்களை தீட்டுவது போன்றவற்றை ஆட்சியாளா்கள் மேற்கொள்ள தரவுகள் துல்லியத்தை வழங்குகிறது. மக்களாட்சி அடுத்தடுத்த பரிணாமங்களை எட்டி மக்கள் அனைவரும் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சமமான தரமான வளா்ச்சி பெற உதவும் எண்ம நிா்வாகம் வாய்ப்பளித்துவருகிறது. இது மேம்பட அனைவரும் பங்களிப்பு செய்ய முன்வரவேண்டும். மக்களாட்சியின் உண்மையான உரிமையாளா்கள் மக்கள்தான் என்பதை மக்களும் உணா்ந்து வாய்ப்புள்ள இடங்களில் ஆத்ம சுத்தியோடும் நோ்மையோடும் நடக்கமுன்வரவேண்டும். அப்போது தரவுகள் முன்னேற்றத்தின் திறவுகோல்களாகும் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com