கட்சிப் பிளவுகளுக்குக் கடிவாளம் எப்போது?

நமது மக்களாட்சி அமைப்பு  பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் கட்டமைக்கப்பட்டதாகும். இந்த நடைமுறை ஆரோக்கியமாகத் தொடர, அரசியல் கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானது.
கட்சிப் பிளவுகளுக்குக் கடிவாளம் எப்போது?


நமது மக்களாட்சி அமைப்பு பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் கட்டமைக்கப்பட்டதாகும். இந்த நடைமுறை ஆரோக்கியமாகத் தொடர, அரசியல் கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானது. மக்களாட்சி முறை நல்ல முறையில் திகழ அடிப்படை மூலக்கூறு, அரசியல் கட்சிகளின் திறன் வாய்ந்த செயல்பாடுதான். மேற்கத்திய உலகில் மக்களாட்சி முறை சிறந்து விளங்கும் நாடுகள் சுட்டிக்காட்டுவதும் இதனையே.
இந்தியாவில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வயல்வெளியில் பெருகும் எலிகளைப்போல அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் 6 தேசிய கட்சிகள், 54 மாநிலக் கட்சிகள், 2,597 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நமது நாட்டில் உள்ளன. இவற்றில் தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் மட்டும்தான் பெரும்பாலான தேர்தல்களில் போட்டியிடுகின்றன.
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் சில கட்சிகள் மட்டும், குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெறும் தேர்தல்களைச் சந்திக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கட்சிகள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வரிச் சலுகை, நிதி வசூல் உள்ளிட்ட தனிப்பட்ட லாபம் அடைவதற்காகவே நடத்தப்படுகின்றன.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் செயல்படும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் மோசமான நிலை தெரியவரும். அந்த நாடுகளில் இரண்டு அல்லது மூன்று பிரதான அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் இருக்கின்றன.
இந்தியாவில் அரசியல் கட்சிகள் பிளவுபடுவது 1964-இல் தொடங்கியது. முதன்முதலில் பிளவுபட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தொடர்ந்து பிற கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளும் உருவாகின.
அடுத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. ஸ்தாபன காங்கிரஸ் - இந்திரா காங்கிரஸ் என அக்கட்சி பிளவுபட்டது. அதன் பிறகு பல்வேறு அரசியல் கட்சிகள் பல காரணங்களால் பிளவுபடுவதை நாம் கண்டு வருகிறோம். இதில் கடைசியாக நிகழ்ந்திருப்பதுதான் மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவு.
அரசியல் கட்சிகளின் பிளவுகளுக்கு கொள்கை வேறுபாடுகள் காரணமாக இருப்பதில்லை. அதிகாரத்துக்கான போட்டியே கட்சிகளில் பிளவாக உருவெடுக்கிறது. கட்சித் தலைவர்களிடையே நிலவும் போட்டி மனப்பான்மையே தற்போது கட்சிகளின் உடைப்புக்கும், கட்சித் தாவலுக்கும், கூட்டணி மாறி அதிகாரத்தைப் பெறுவதற்கும் காரணமாகி இருக்கின்றன. பிளவுபடும் கட்சியின் பிரிவுகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை பலமே இதைத் தீர்மானிக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் (எம்.எல்.ஏ.-க்கள் அல்லது எம்.பி.-க்கள்), தங்களைத் தேர்வு செய்த குடிமக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும். சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் அவர்கள் மக்களின் நம்பகமான பிரதிநிதி என்ற கடமையை ஆற்ற வேண்டும்.
இந்தியாவில் சில அரசியல் கட்சிகள், குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அடிப்படையில்தான் அவை ஆட்சி அமைக்க வேண்டும். ஆனால், ஆட்சி அதிகாரமே முக்கியம் என்ற கண்ணோட்டத்தில் தேர்தலுக்குப் பின் அணி மாறி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் விசித்திரங்களும் நம் நாட்டில் நிகழ்கின்றன. இதுபோன்ற கூட்டணிப் பிளவுகளை பிற நாடுகளில் காண முடியாது. இது இந்திய ஜனநாயகத்தின் அசாதாரண குணமாகி இருக்கிறது.
தேர்தலுக்குப் பிந்தைய இந்த அணி மாற்றம் ஆரோக்கியமானதல்ல. இதற்கு கட்சிகளில் நிகழும் பிளவுகளும் காரணமாகின்றன. இது தேர்தலில் வாக்களித்த மக்களின் பிரதிநிதித்துவத்தையோ, விருப்பத்தையோ பிரதிபலிப்பதாக இருப்பதில்லை. அதிகாரத்துக்கான இத்தகைய அணி மாற்றங்களும் கட்சித் தாவல்களும், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அடிப்படையையே சிதைத்து விடுகின்றன. இது மக்களாட்சி அரசியலின் அடிப்படைக் கோட்பாட்டுக்கே எதிரானது; தேர்தல்களில் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் முடிவுகளுக்கும் எதிரானது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உடனடியாகவோ, சிறிது காலம் கழித்தோ இவ்வாறு பிளவுகள் நிகழ்வது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும். இத்தகைய சூழலை மேம்பட்ட மக்களாட்சி நடைமுறையிலுள்ள நாடுகளில் காண முடியாது. இந்தியாவில் மட்டுமே இத்தகைய விதிமீறல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.
இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் சில ஷரத்துகளே இந்தப் பிளவுகளுக்கு பிரதானமாக வழிவகுக்கின்றன. கட்சித் தாவல் தடைச் சட்டப்படி ஒரு கட்சியின் பிரதிநிதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தனியாகப் பிரிந்து இயங்கினால் அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க முடியாது. அதேசமயம், மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவாக கட்சிக்குள் பிளவு ஏற்படுமானால், அவ்வாறு கட்சியிலிருந்து விலகியவர்களின் பதவிகள் தகுதிநீக்கம் செய்யப்படும்.
சிறிய கட்சிகளில்தான் இத்தகைய பிளவுகளும் அணி மாறல்களும் அதிகமாக நேர்கின்றன. இதனால் அங்கு ஆட்சியிலுள்ள கட்சியின் பெரும்பான்மை பலம் பாதிக்கப்பட்டு ஆட்சி கவிழ்கிறது; அல்லது அணி மாற்றத்தால் புதிய தலைமையில் ஆட்சி அமைகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளின் நிலையாமைக்கு சிறிய மற்றும் நடுத்தரக் கட்சிகளில் நிலவும் இத்தகைய பிளவுகளே காரணமாகின்றன.
அரசியல் கட்சிகளுக்குள் நிகழும் உள்கட்சித் தகராறுகளே கட்சிப் பிளவாக வெளிப்படுகின்றன. இதற்கு அரசியல் கட்சிகளை நிறுவுவதிலும் நடத்துவதிலும் கடைப்பிடிக்கத் தேவையான நெறிமுறைகளைக் கொண்ட முறையான சட்டம் இல்லாததே காரணம் என்று தோன்றுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக, இத்தகைய சட்டத்தின் இன்றியமையாத தேவையை வலியுறுத்தி வருகிறது.
மத்திய சட்ட ஆணையமும் இதையே பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா குழுவும், "அரசியல் கட்சிகளை நிறுவுதல், நடத்துதல், கலைத்தல் தொடர்பான விதிகளுடன் பிரத்யேக சட்டம் உருவாக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளது.
தற்போது இத்தகைய கடுமையான அம்சங்களுடன் கூடிய வழிகாட்டும் சட்டம் ஏதும் இல்லாததால், அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் பிளவுகளின் போது, சரியான முடிவெடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறுகிறது. இந்த விவகாரங்களில் உச்சநீதிமன்றமும் மாநில உயர்நீதிமன்றங்களும் வழங்கியுள்ள பழைய தீர்ப்புகளின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் தற்போது செயல்பட்டு வருகிறது.
இத்தகைய உள்ளீடற்ற தன்மையால்தான், அரசியல் கட்சிகளில் பிளவுகள் நிகழ்கையில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளில் சர்ச்சை ஏற்படுகிறது. தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் கட்சிகளால், இந்த விவகாரம் நீண்ட காலம் இழுத்தடிக்கப்படுகிறது. தவிர, உடனடி முடிவு கிடைக்காததால், அரசியலில் நிலையற்ற தன்மையும் ஏற்படுகிறது. இந்திய அரசியலில் இந்நிலை தவிர்க்க முடியாததாகி விட்டது.
மேற்கத்திய நாடுகளில் அரசியல் கட்சிகளில் பிளவுகள் அடிக்கடியோ பரவலாகவோ ஏற்படுவதில்லை. மாறாக, இந்தியாவில் இது ஒரு அரசியல் வழிமுறையாகவே மாறிவிட்டது. அரசியல் கட்சித் தலைமையுடன் அக்கட்சியில் இருக்கும் பிறருக்கு அதிருப்தி ஏற்படுமானால், அவர்கள் தனியாகவோ, குழுவாகவோ பிரிந்து புதிய கட்சியாகச் செயல்படலாம். இது ஒரு பொதுவான விதியாகக் கருதப்படுகிறது.
ஆனால், ஒரு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்தப் பொதுவான விதி செல்லாது. ஏனெனில், அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சியின் கொடி, சின்னத்தாலும், கட்சி நிதியால் செய்யப்பட்ட செலவுகளாலும், அக்கட்சியின் பிரசாரத்தாலும்தான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்வாகிறார்கள். தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியில் பங்கேற்பதற்காகவோ, வேறு கட்சியின் ஆட்சியை ஆதரிக்கவோ தாய்க்கட்சியின் முடிவுகளுக்கு மாறாக அவர்கள் செயல்படுவது முறைகேடானதாகவே கருதப்பட வேண்டும்.
துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற கட்சிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான போதிய விதிமுறைகள், தற்போதைய கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் இல்லை. எனவே, அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிளவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்ளைச் செய்வதும், அரசியல் கட்சிகளை முறைப்படுத்தும் புதிய சட்டம் உருவாக்கப்படுவதும் காலத்தின் கட்டாயம்.
மத்தியிலும் மாநிலங்களிலும் தேர்தல் நடந்து முடிந்து அமையும் அரசுக்கு உடனடியாக கட்சித் தாவல்களால் சிக்கல் நேரிடாமல் தடுக்கும் வகையில், குறைந்தபட்சம் இரண்டாண்டுகளுக்கு கட்சிப் பிளவுகளுக்குத் தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையத்துடன் இணைந்து அரசு ஆராய வேண்டும்.
தேர்தல்களில் வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றாலும் வெற்றியே என்ற தற்போதைய நிலையும், சிறிய கட்சிகள் பல்கிப் பெருகக் காரணம். தேர்தல்களில் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்ய சிறிய கட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குத் தீர்வு, ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 33.13 % அல்லது 50 % வாக்குகளைப் பெறுபவரே தேர்தலில் வென்றவராகக் கருதப்பட வேண்டும். இந்தப் பரிந்துரை செயல்படுத்தப்படுமானால், புற்றீசல்போல அரசியல் கட்சிகள் பெருகுவது தானாகவே நின்றுபோகும்.

கட்டுரையாளர்: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com