கல்வி அழகே அழகு
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 48,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்கிற செய்தி எளிதாகக் கடந்துவிடக்கூடியதல்ல. கல்வியின் இன்றியமையாமையை மாணவர்கள் உணராதது மிகவும் கவலையளிக்கிறது.


தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 48,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்கிற செய்தி எளிதாகக் கடந்துவிடக்கூடியதல்ல. கல்வியின் இன்றியமையாமையை மாணவர்கள் உணராதது மிகவும் கவலையளிக்கிறது.
மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி ஒன்று தான் பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனுடன் வரக்கூடியது. "கற்றவர் மட்டுமே கண்ணுடையவர்களாகக் கருதப்படுவர், கல்வி கற்காதவர்கள் கண்ணிருந்தும் முகத்திரண்டு புண்ணுடையவர்களாகவே கருதப்படுவர்' என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
கல்வி ஒரு மனிதனின் அறிவை திறக்கும் திறவுகோலாகும். மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்வதும் கல்வியே. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் கல்வி இன்றியமையாதது. கல்வி ஒரு மனிதனை முன்னேற்றமடைய செய்வதோடு, அவன் சார்ந்த சமூகத்தையும், நாட்டையும் கூட முன்னேற்றமடைய செய்கிறது.
கல்வியானது கள்வர்களால் திருட முடியாத, ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய செல்வமாகும். இளமையில் நாம் கற்கும் கல்வியானது நம்மை உயரிய இடத்திற்கு இட்டுச் செல்லும்; உயர்ந்த பதவிகளையும் பெற்றுத் தரும். அதனாலேயே, "இளமையில் கல்' என்கிறது ஆத்திசூடி.
நம் நாட்டில் கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம், நாடு சுதந்திரம் பெற்ற போது இருந்ததை விட, 68 % அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 77 % பெண்களும், 84.7 % ஆண்களும் கல்வியறிவு பெற்றுள்ளதாகவும் கல்வி அறிவு குறித்த தேசிய அளவிலான ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
நம் நாட்டில், கேரள மாநிலத்தில் 92.2 % மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். அதிகபட்ச கல்வி அறிவு பெற்ற மாநிலமாக கேரளம் உள்ளது. கேரளத்திற்கு அடுத்தபடியாக, லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில், 91.85 % பேர் கல்வியறிவு பெற்றறவர்களாக உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மிúஸாரம் 91.33 % பேர் கல்வியறிவு பெற்ற மாநிலமாகி மூன்றாம் நிலையை எட்டியுள்ளது. நாட்டிலேயே மிகவும் குறைந்தபட்ச கல்வி அறிவு பெற்ற மாநிலமாக பிகார் உள்ளது. இங்கு 61.8 % மக்கள் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர்.
கல்வியறிவு குறைவாக உள்ள மாநிலங்களின் வரிசையில், அருணாசல பிரதேசம், 65.3 %உடனும் ராஜஸ்தான் 66.1 % உடனும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன. நாட்டில், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் ஒட்டு மொத்த விகிதம் 12.6 % ஆக உள்ளது.
இதில், 19.8 % பேர் இடைநிலைக் கல்வி வரை வந்து அதற்கு மேல் படிப்பைத் தொடராமல் நிறுத்தி உள்ளனர். இதனால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது. படிக்கும் வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும், கரோனா தீநுண்மி காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதும், இந்த நிலைக்கு காரணங்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
வழக்கம்போல், கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை நகர்புறங்களை விட ஊரகப்புறங்களில் குறைவாக உள்ளது. நம் நாட்டில் ஊரகப்புறங்களில் வசிப்போரின் கல்வியறிவு 67.77 % ஆகவும், நகர்ப்புறங்களில் 84.11 % ஆகவும் உள்ளது.
நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் ஒட்டு மொத்த கல்வி அறிவு 9 சதவீதமாக இருந்தது. 11 பெண்களில் ஒருவர் மட்டுமே படிப்பறிவு பெற்றவராக இருந்தார். இந்த நிலை தற்போது வெகுவாக மாறி உள்ளது வரவேற்கத்தக்தாகும்.
இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி (48.5 %) பெண்கள் இருக்கும் நிலையில், 77 % பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள் என்பதும், திருமணம் நடந்தவுடன் பெண்கள் படிப்பைக் கைவிட்டுவிடுகிறார்கள் என்பதும் வேதனையளிக்கும் செய்திகளாகும்.
கல்வியே குழந்தைகளை, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவு, நல்லொழுக்கம், சீரிய சிந்தனை ஆகிய நற்பண்புகளுடன் வளர்க்க உதவும். இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதற்கும், அவர்கள் சமுதாயத்தில் தங்கள் பங்கினை ஆற்ற உதவுவதற்கும், தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கும் கல்வி கற்றல் இன்றியமையாதது.
தனி மனிதனை மட்டுமல்ல, அவன் வாழும் சமூகத்தையும் மேன்மைப்படுத்த கல்வியால் அந்த மனிதன் பெற்ற அறிவால் மட்டுமே முடியும். கல்வியறிவு அறிவுடையவரை காப்பது மட்டுமல்ல. பகைவராலும் அழிக்க முடியாத அரணும் ஆகும். "அறிவு அற்றம் காக்கும் கருவி'யாகும். அது மனிதனை மனம் போன போக்கெல்லாம் போக விடாது, நேரிய வழியில் சிந்தித்து, நிலையான வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு.
"கல்வி அழகே அழகு' என்கிறது நாலடியார். சுவாமி விவேகானந்தர், "ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது பூரணமாகவே பிறக்கிறது. கல்வியின் நோக்கம் அந்த பூரணத்துவத்தை வெளிக்கொண்டு வருவதுதான்' என்று கூறுகிறார்.
தகவல்களைத் தெரிந்து கொள்வது மட்டும் கல்வி அல்ல. கற்றுக் கொள்பவர்களின் ஆற்றலை ஆழ்ந்து உள்ளே சென்று நல்லெண்ணங்களையும், நல்லொழுக்கங்களையும், பரந்து விரிந்த பார்வையையும் வெளி கொணருவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.
சிந்திப்பதற்கு மனத்தைப் பயிற்றுவிப்பதே கல்வியின் நோக்கம். நாம் பெற்ற கல்வியால் இந்தப் பாரெங்கும் உள்ள மக்கள் பயனுற வேண்டும் என்று செயலாற்றுவதே படித்தவர்களின் இலக்காக இருக்க வேண்டும். தாம் இன்புறுவது உலகு இன்புறக் காண்பதே கற்றோர் பணியாக அமைய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...