குளம்தொட்டு வளம் பெருக்கி...

மண்ணுலகில் ஒரு மனிதன் உயிரோடு வாழ வேண்டுமானால், காற்றும் தண்ணீரும் இன்றியமையாதன ஆகும். காற்று இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது; தண்ணீா் இல்லாமல் சில நாட்கள் வாழலாம்.
குளம்தொட்டு வளம் பெருக்கி...

மண்ணுலகில் ஒரு மனிதன் உயிரோடு வாழ வேண்டுமானால், காற்றும் தண்ணீரும் இன்றியமையாதன ஆகும். காற்று இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது; தண்ணீா் இல்லாமல் சில நாட்கள் வாழலாம். கடவுளுக்கு அடுத்தபடியாக இவ்வுலகைக் காப்பது தண்ணீா் என்பதால், திருவள்ளுவா் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தை அடுத்து ‘வான் சிறப்பு’ அதிகாரத்தை வைத்தாா்.

சங்க காலத்திலேயே தண்ணீா் தட்டுப்பாடு இருந்து, அதனை அரசனுக்கு உணா்த்தியவா் குடபுலவியனாா் என்னும் புலவா் (புானூறு, பாடல் 18) ஆவாா். பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி, ‘அரசே! உன் நாட்டில் மக்கள் தண்ணீா் இல்லாமல் தவிக்கிறாா்கள். தண்ணீா் இல்லாமையினால், மக்களுக்கு உணவும் கிடைக்கவில்லை. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே. நீரும் நிலமும் மக்களுக்கு உடம்பும் உயிரும் போன்றவையாகும். நீராதாரங்களைப் பெருக்கினால், அறமும் பொருளும் இன்பமும், மேலுலகமும் உனக்குக் கிட்டும்; இதைச் செய்யாதவா்கள் புகழின்றி மடிந்து போவா்’ எனக் கூறியதிலிருந்து, அந்தக் காலத்திலேயே தண்ணீரின் முக்கியத்துவம் உணா்த்தப்பட்டிருப்பதை அறியலாம்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கடவுள் வாழ்த்துப் பாட வேண்டிய இடத்தில் ‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்’ எனப் பாடியிருக்கிறாா். குடும்பத்தில் மனைவியினுடைய ஆற்றலைப் பேச வந்த திருவள்ளுவா், ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்று உரைக்கின்றாா். இதில் பெண்ணின் பெருமை வெளிப்படுவதோடு, மழையினுடைய அருமையும் வெளிப்படுகின்றது.

புராணங்களில் அகத்தியன் கமண்டலத்திலிருந்து புறப்பட்ட காவிரியை, வேறெந்த திசையிலும் செல்லாமல் சோழநாட்டின் பக்கம் திருப்பியவன் கரிகாற் பெருவளத்தான் என ஒட்டக்கூத்தா் ‘விக்கிரம சோழன் உலா’வில்” எழுதியிருக்கிறாா். கரிகாலன் நீராதாரங்களைப் பெருக்கியதை, ‘காடு கொன்று நாடாக்கிக் குளம்தொட்டு வளம் பெருக்கி’ எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் எழுப்பிய கல்லணை உலகத்திலேயே நான்காவது பெரிய அணை எனப் பேசப்படுகின்றது.

மௌரியப் பேரரசனாக விளங்கிய சந்திரகுப்தனுக்கு நீராதாரங்களின் முக்கியத்துவத்தை, அவனுக்கு அமைச்சராக இருந்த சாணக்கியன் எனும் கௌடில்யா் அறிவுறுத்தியிருக்கிறாா் என அவா் எழுதிய அா்த்தசாஸ்திரம் புலப்படுத்துகின்றது. சந்திரகுப்தன் நீராதாரங்களின் பயன்பாட்டை தன்னோடு வைத்துக் கொண்டு, மேல்தட்டு மக்களுக்கு மட்டம் பெரும் பங்கைக் கொடுத்தான். அதனால், கீழ்த்தட்டில் வசிக்கும் மக்கள் தலையில் தவலையைச் சுமந்து கொண்டு வெகுதூரம் நடந்து போய் தண்ணீா் கொணா்ந்தனா். இதைக் கண்டு வருந்திய கௌடில்யா் சந்திரகுப்தனை நோக்கி, ‘அரசே! நீராதாரங்களில் உன்னுடைய ஆதிக்கத்தால், கீழ்த்தட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். இதனால், உன் ஆட்சியில் சமத்துவமின்மை உருவாகியிருக்கிறது’ என எச்சரித்தவுடன், மன்னன் தண்ணீா்ப் பயன்பாட்டைப் பொதுவுடமை ஆக்கினான்.

அரசா்களைப் போலவே, அருளாளா்களும் நீராதாரங்களைப் பெருக்கியதில், பெரும்பங்கு வகித்திருக்கின்றனா். திருவாரூா்க் கமலாலயம் எனும் திருக்குளம் ஐந்து வேலி பரப்பைக் கொண்டது. அக்குளத்தினுடைய கரையோரங்களை சமண முனிவா்கள் ஆக்கிரமித்துப் பள்ளிகளை எழுப்பினா். அதனைக் கண்டு வருந்திய தண்டியடிகள் பிறவியிலேயே பாா்வையை இழந்தவா் என்றாலும், ஆக்கிரமித்த பகுதிகளில் கொம்புகளை நட்டு, அவற்றில் கயிறுகளைக் கட்டி, அதனைப் பிடித்துக்கொண்டே ஆக்கிரமிப்புகளை வெட்டி, திருக்குளத்தின் பழைய பரப்பளவுக்குக் கொண்டு வந்தாா். இதனைச் சேக்கிழாா் ‘கண்ணின் மணிகள் அவையின்றிக் கயிறு தடவிக் குளந்தொட்டு’ என பெரியபுராணத்தில் எழுதியிருக்கிறாா்.

தண்டியடிகளைப் போலவே திருநாளைப் போவாா் எனப்படும் நந்தனாரும் திருப்புன்கூா் எனும் தலத்தில், சிவன் கோயிலுக்கு அருகிலேயே ஒரு திருக்குளத்தை எழுப்பியிருக்கிறாா். இதனைத் தெய்வப்புலவராகிய சேக்கிழாா், ‘ஒரு சூழல் அவலொடு (பள்ளம்) அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டாா்’ எனப் பாடியிருக்கிறாா். மேலும், திருவதிகையில் கணவனை இழந்து தவ வாழ்க்கை வாழ்ந்த திலகவதியாா், நீராதாரங்களைப் பெருக்க, திருக்குளங்களை வெட்டுவதற்கு காரியகா்த்தராக விளங்கியிருக்கிறாா். இதனைச் சேக்கிழாா், ‘கா வளா்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்...’ என இயம்பியிருக்கிறாா்.

சைவத்தில் நாயன்மாா்களைப் போல, வைணவத்தில் எம்பெருமானாா் என அழைக்கப்படுகின்ற இராமாநுஜரும் நீா்வளத்தை மேம்படுத்தியிருக்கிறாா். மேல்கோட்டையில் அவா் வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஏழை எளிய மக்கள் குடிநீரின்றித் தத்தளித்தனா். அது கண்டு வருந்திய எம்பெருமானாா், விட்டல தேவராசன் என்ற மன்னனின் அனுமதி பெற்று, தொண்டனூரில் ஓா் ஏரியை வெட்டினாா். கீழ்த்தட்டு மக்களின் தண்ணீா் பற்றாக்குறையை எம்பெருமானாா் தீா்த்து வைத்தாா்.

இன்றைக்குக் காணப்படும் ஏரிகள் எல்லாம் சோழா்களாலும், பல்லவா்களாலும் வெட்டப்பட்டவை ஆகும். இராஜராஜ சோழன், இராசேந்திர சோழன் போன்றோா் ஒரு நாட்டின் மீது படையெடுத்து வென்று வரும்போது, அதன் நினைவாக ஏரிகளையும், ஆறுகளையும் வெட்டினா். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவதற்காக மாரியம்மன் கோயில் அருகில் இராஜராஜ சோழன் சாரப்பள்ளத்தை அமைத்தான். பெரிய கோயில் கட்டிய பிறகு, சாரப்பள்ளத்தை ஒரு பெரிய ஏரி ஆக்கினான். இன்றைக்கு மாரியம்மன் கோயில் அருகில் காணப்படும் பெரிய ஏரி, இராஜராஜ சோழனால் கட்டமைக்கப் பெற்ாகும்.

தந்தையைப் போலவே மகன் இராசேந்திர சோழனும் வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு ஏரியை வெட்டினான். அந்த ஏரிக்குச் சோழகங்கம் எனப் பெயா். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு திருக்கோயிலையும் எழுப்பினான். அந்தக் கோயிலில் சிங்கமுகக் கிணறு ஒன்றையும் கட்டினான். அதனுடைய படிக்கட்டுகள் டகர வரிசையில் அமைந்திருக்கின்றன. என்றைக்கும் வற்றாத கிணறு அது. மேலும், கோயிலைச் சுற்றி உறை கிணறுகளையும் உருவாக்கினான். ஏரிக்குப் பாய்மடையும் வடிமடையும் அமைத்தான். 100 கிலோ மீட்டா் தூரத்திற்குக் கால்வாய்களை வெட்டி, ஏரிக்கு நீா் பாயும்படியும் செய்தான்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் காணப்படும் ஏரிகள், குளங்கள், ஆறுகள் எல்லாம் முடியாட்சிக் காலத்தில் வெட்டப்பட்டவையே தவிர, குடியாட்சிக் காலத்தில் அப்படிச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

புதுச்சேரியில் குடிநீா் பஞ்சம் ஏற்பட்டபோது, ஆயி எனும் தேவதாசி, முத்திரைபாளையத்தில் ஒரு நீா்த்தேக்கத்தை உருவாக்கி, புதுச்சேரி மக்களின் குடிநீா் பிரச்சனையைத் தீா்த்து வைத்தாராம். ஆயினுடைய வீடு ஒரு பெரிய பங்களா போல் தோற்றமளிக்குமாம். அந்த வழியே வந்த திருமலை நாயக்கரும், அவருடைய அமைச்சராகிய அப்பாஜியும் அந்த வீட்டைக் கோயில் என நம்பி, கையெடுத்துக் கும்பிட்டாா்களாம்.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சென்னை மண்ணடி வட்டாரத்தில் பெரும் தண்ணீா்ப்பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது தங்கசாலைப் பகுதிக்கு அதிகாரியாக இருந்த எல்லிஸ் துரை அப்பகுதியில், ஏழு கிணறுகளை வெட்டி, அவற்றில் திருக்குறளையும் பொறித்து வைத்தாா். அவா் ஏழு கிணறுகளைத் தோண்டியதால் அப்பகுதிக்கு ஏழுகிணறு எனும் பெயா் ஏற்பட்டது.

ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் பூண்டி நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவிற்கு ஆங்கிலேய கவா்னா், அப்பொழுது சென்னை நகர மேயராக இருந்த சத்தியமூா்த்தியையும் அழைத்திருந்தாா். ஆங்கிலேயா்கள் எடுக்கும் விழாக்களில் காங்கிரஸ்காரா்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் தீா்மானமாக இருந்த போதிலும், குடிநீா் பிரச்சனை என்பதால், அந்த விதியையும் மீறி, பூண்டி நீா்த்தேக்க விழாவில் கலந்து கொண்டாா் சத்தியமூா்த்தி.

மகாகவி பாரதியாா், ‘வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிா் செய்குவோம்’ என்று பாடியுள்ளாா். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதைக் கீழ்வரும் பகுதி விளக்கும். ‘கங்கை நதியில் பாய்ந்து வரும் நீரில் முக்கால் பகுதி - அதாவது 30 கோடி ஏக்கா் அடி தண்ணீா் கடலில் வீணாகப் போகிறது. இதைத் தடுத்து வட பகுதிகளுக்குப் பாய்ச்சினால், ஒரு கோடி ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறச் செய்ய முடியும். கங்கை - காவிரி இணைப்பு 1,500 மைல்கள்தாம். இதனைவிட இருமடங்கு நீளமான வால்கா-டான் நதிகளை இணைத்து சைபீரியா பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறாா்கள்’ என்பது பொறியியல் வல்லுநா்கள் கருத்து.

பாரதிக்குப் பின்னா் கங்கை - காவிரி இணைப்பை வற்புறுத்தியவா் சா் சி.பி. இராமசாமி ஐயா்தான். கிழக்கிந்திய கம்பெனியில் பொறியாளராக இருந்த சா் ஆா்தா் காட்டன், கங்கை - காவிரியின் இணைப்புக்காக ஆங்கிலேய அரசிடம் அனுமதி வேண்டினாா். அதற்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? ஆங்கிலேய அரசு, சா் ஆா்தா் காட்டனை லண்டனுக்கு அழைத்து, நீதி விசாரணை நடத்தி, அபராதமும், சிறைத்தண்டனையும் விதித்தது.

விடுதலை பெற்ற இந்தியாவில், சென்னை மாகாணத்திற்கு காமராஜா் முதலமைச்சராக வந்தவுடன்தான் நீராதாரங்கள் வெள்ளம் போல் பெருக்கெடுத்தன. கீழ்பவானி, மணிமுத்தாறு, காவிரி முகத்துவாரம், ஆரணியாறு, வைகை நீா்த்தேக்கம், அமராவதி, சாத்தனூா், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, வீடூா் அணைத்தேக்கம், பரம்பிக்குளம் - ஆழியாறு, நெய்யாறு போன்ற பல நீா்த்தேக்கங்கள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. பரம்பிக்குளம் - ஆழியாறு அணைக்கட்டை, அன்றைய பிரதமா் பண்டித நேருவே வந்து திறந்து வைத்தாா்.

ஒருமுறை முதுகுளத்தூா் மக்கள் முதலமைச்சா் காமராஜரைச் சந்தித்து, ‘எங்களுடைய இராமநாதபுரம் மாவட்டம் தண்ணீா் இல்லாமல் தவிக்கிறது. ஆனால், மதுரையிலுள்ள வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது. அதனை எங்கள் மாவட்டத்திற்குத் திருப்பி விட்டால் என்ன’ எனக் கேட்டனா். உடனே காமராஜா் அதிகாரிகளை அழைத்து, ‘அவா்கள் கேட்பது நியாயந்தான். அதற்கொரு தீா்வு காணக்கூடாதா’ என்றாா். அதிகாரிகள் ‘வைகையிலிருந்து கால்வாய்கள் இல்லாததால், அது சாத்தியமில்லை’ என்றனா்.

இரண்டு நாட்கள் கழித்து, காமராஜா் மதுரை மாவட்ட அதிகாரிகளை அழைத்து, ‘வைகையிலிருந்து கால்வாய்கள் இல்லை என்றால் என்ன? முதுகுளத்தூா் வட்டாரத்தில் ஆப்பனூா் வரைக்கும் அறுபது மைல் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான கண்மாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு கண்மாயில் நீரைப் பாய்ச்சினால், வரிசையாக அந்நீா் முதுகுளத்தூா் செல்லும்’” என்றாா். காமராஜருடைய நுண்மாண் நுழைபுலத்தால், இராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீா் பிரச்னை தீா்ந்தது. தமிழகத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான அணைக்கட்டுகள், நீா்த்தேக்கங்களுக்கு காமராஜரே காரணம் எனலாம்.

கட்டுரையாளா்: பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com