ஆபத்தாகும் அந்நிய தாவரங்கள்  

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரந்து விரிந்துள்ள அந்நிய தாவரங்களாலும் அவற்றால் மாற்றப்பட்ட வழித்தடங்களாலும் அங்குள்ள உயிரினங்களுக்கு உணவு நெருக்கடி உருவாகிறது.
ஆபத்தாகும் அந்நிய தாவரங்கள்  

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரந்து விரிந்துள்ள அந்நிய தாவரங்களாலும் அவற்றால் மாற்றப்பட்ட வழித்தடங்களாலும் அங்குள்ள உயிரினங்களுக்கு உணவு நெருக்கடி உருவாகிறது. இந்த நெருக்கடி காரணமாக மனித குடியிருப்புகளுக்குள் நுழையும் வனவிலங்குகளுக்கும் அங்கு வாழும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகின்றன.

தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் மாற்றமடைந்து வருகின்றன. காபி, பாக்கு, செம்மரம், தேக்கு, ரப்பர் போன்ற பொருளாதார மதிப்பு மிக்க தாவரங்களாலும்  சிமரூபா கிளாக்கா போன்ற அந்நிய தாவரங்களாலும் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.

சுற்றுச்சூழலில் சீர்குலைவை ஏற்படுத்தும் மாகடம்பு (லாந்தனா), நாகசுவந்தை (யூபடோரியம்), கரட் புல் (பார்த்தீனியம்) போன்ற அந்நிய தாவரங்கள் காட்டு விலங்குகள், கொறித்துண்ணிகளின் முக்கிய உணவு ஆதாரங்களான மா, பலா, வாழை இவற்றையும் பெர்ரி போன்ற பாரம்பரிய மரங்களையும் அழித்து வருகின்றன.

பந்திப்பூர் தேசிய பூங்காவின் 87,224 ஹெக்டேர் (863.62 ச.கி.மீ.) பரப்பை மாகடம்பு ஆக்கிரமித்துள்ளது. சில பகுதிகளில் யானைக் கூட்டம் மறைந்து கொள்ளும் வகையில் இந்த அந்நிய தாவரம் பசும் புதராக வளர்ந்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

1990-ஆம் ஆண்டுகளில் பந்திப்பூர் தேசிய பூங்கா, காட்டெருமை, புள்ளிமான், நாற்கொம்பு மான் போன்ற மிருகங்களுக்கு மேய்ச்சல் நிலமாக இருந்துள்ளது. இதுபோன்ற மேய்ச்சல் நிலங்கள் புலி, செந்நாய் மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகளின் வேட்டையாடும் இடங்களாகவும் இருந்தன. 2000-ஆம் ஆண்டுகளில் சிறிய அளவில் வளர ஆரம்பித்த பார்த்தீனியம் செடிகளை அப்பகுதி வன அதிகாரிகளும் கிராம வனக் குழுவினரும் இணைந்து களைய முயற்சி மேற்கொண்டனர். 

கர்நாடக மாநிலத்தின் 60 கிராமங்களைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வனத்துறையுடன் இணைந்து அந்நிய தாவரங்களை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. 2017-ஆம் ஆண்டுக்குள்  மாகடம்பு  இல்லாமல்  பந்திப்பூர் தேசிய பூங்கா இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

காடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், தோண்டப்படும் சுரங்கங்கள், ஆக்கிரமிப்பு, ஒழுங்கற்ற சுற்றுலா போன்ற செயல்பாடுகள் ஏற்படுத்தும் வன உயிரினங்களின் வாழ்விட அழிவு, மனித-வனவிலங்கு மோதலுக்கான முதன்மையான காரணிகள். காடுகளில் உள்ள யானைகள் போன்ற பெரிய பாலூட்டி விலங்கினங்கள் பயன்படுத்தும் வழித்தடங்கள் பல பகுதிகளில் இல்லாமல் போய்விட்டன.

கேரளத்தின் இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து அவ்வப்போது பலாப் பழங்களுக்காக வெளியே வரும் யானைகள் சரணாலயத்தை ஒட்டிய சந்தன்பாறை, சின்னக்கானல் பஞ்சாயத்துகளில் உள்ள பண்ணைகளிலும் வீடுகளின் மீதும் உணவுக்காக தாக்குதல் நடத்துகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வீடுகளில் உள்ள கனி தரும் மரங்களின் காய்களை பழமாகும் முன்னரே பறித்துவிடுகின்றனர். 
2022-ஆம் ஆண்டு வரை அரிக்கொம்பன் யானை தன் உணவிற்காக நெல் வயல்கள், அரசு நியாய விலைக் கடைகள், வீட்டு சமையல் அறைகள், மளிகைக் கடைகள் என அனைத்து இடங்களிலும் புகுந்து சேதப்படுத்தியது ஊடகங்களில் செய்தியானது.

இடுக்கி வனப்பகுதியில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதே இந்த இரண்டு வகை யானைகளும் பயிர்களை சேதப்படுத்த காரணம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாகடம்பு, சீமை கொன்றை (சென்னா ஸ்பெக்டாபிலிஸ்) போன்ற அந்நிய தாவரங்களின் பரவலும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகளின் மந்தமான அணுகுமுறையுமே இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறைக்கான காரணங்கள் என்று கேரள மாநில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலத்தில் வணிக, சமூக, பொருளாதார காரணங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணற்ற அந்நிய தாவர இனங்கள், தமிழ்நாட்டில் நீண்ட கால பிரச்னையாக இருந்து வருகின்றன. 2015- ஆம் ஆண்டு நாட்டில் ஊடுருவியுள்ள அந்நிய தாவரங்கள் பற்றி அறிய உபயோகப்படுத்தப்பட்ட வாழிடவியல்  சூழல் முடுக்கு மாதிரியமைத்தல்  என்ற பகுப்பாய்வு தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள காடுகளில் அந்நிய தாவரங்கள் வேகமாகப் பரவி வருவதை காட்டியது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் எல்லையாகவும் மேற்கு-கிழக்கு தொடர்ச்சி மலைகளின் எல்லையாகவும் உள்ள ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பாயும் மாயாறு ஆற்றின் கரை யானைகள் வந்து திரும்பி செல்லும் வழித்தடமாக உள்ளது.  யானைகளுக்கு உணவளிக்கும் பசுமையான புற்களால் மூடப்பட்டிருந்த இந்த வழித்தடத்தை சுற்றியுள்ள பகுதி தற்போது அந்நிய தாவரமான சீமைக் கருவேலம் சூழ்ந்துள்ளது. 

2021-ஆம்  ஆண்டு இப்பகுதியில் வனத்துறையினர் யானை வழித்தடத்தில் இருந்த சீமைக் கருவேல தாவரங்களை அகற்றி பூர்விக புல் வகைகளை விதைக்க ஆரம்பித்தனர். அகற்றப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட பிறகு மீண்டும் வளரும் சீமை கருவேலம், மாகடம்பு போன்ற அந்நிய தாவரங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாத்து பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பது வனத்துறை அதிகாரிகளின் கோரிக்கை.

தமிழ்நாட்டில் 196 அந்நிய தாவரங்கள் 3.18 ஹெக்டேர் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றில் செழித்து வளர்ந்துள்ள தீங்கு விளைவிக்கும் ஏழு அந்நிய தாவரங்கள் உட்பட 23 அந்நிய தாவரங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள அந்நிய தாவரங்கள்-சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நிபுணர் குழு கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com