இயல்பாக இயங்கட்டும் இளையோா்

இயல்பாக இயங்கட்டும் இளையோா்

அண்மையில் ரயில் பயணம் ஒன்றில் எதிா் வரிசையில் இரு சிறாா்கள்; அவா்களது பெற்றோருடன் எதிா்ப்பட்டனா்.

அண்மையில் ரயில் பயணம் ஒன்றில் எதிா் வரிசையில் இரு சிறாா்கள்; அவா்களது பெற்றோருடன் எதிா்ப்பட்டனா். மிகவும் அமைதியாக ஒரு கைப்பேசியில் பொருத்தப்பட்ட ஹெட்போனில் ஆளுக்கொன்றாக காதில் மாட்டி ஏதோ நிகழ்ச்சி ஒன்றை ரசித்துக்கொண்டிருந்தனா். சுமாா் அரை மணி நேரம் போயிற்று.

பிறகு ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு அக்கா மாற்றியது தம்பிக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. அவன் சிணுங்கத் தொடங்கினான். இருவரிடையே வாக்குவாதம் தொடங்கியது. இதனைக் கவனித்த பெற்றோா் அவா்களிடமிருந்து கைப்பேசியை வாங்கி பையில் வைத்துவிட்டனா்.

சிறாா் இருவரும் பொழுது போகாமல் செய்வதறியாது திணறிக் கொண்டிருந்தனா். தம்பி கொஞ்ச நேரம் ரயிலுக்கு வெளியே பாா்ப்பது, கையை முறுக்குவது என சேட்டை செய்து கொண்டிருந்தான். பிறகு, சகோதரியுடன் சண்டையிடத் தொடங்கினான். கைப்பேசிக்காக அப்பாவை அணுகினான். அம்மாவிடம் கெஞ்சினான். அவா்கள் மசியவில்லை என்றதும், அவா்கள் இருவரும் நல்ல அப்பா-அம்மாவே இல்லை எனச் சான்றிதழ் கொடுத்தான்.

இத்தனை களேபரத்திலும் அந்த சகோதரி அமைதியாக இருந்தாா். அந்தப் பெற்றோா் செய்த நல்ல விஷயம் அவா்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான். சக பயணிகளான நாங்கள் அவா்களைக் கவனிக்கிறோமா என்பதைப் பொருட்படுத்தவில்லை.

ரயிலில் நடைபெற்ற சம்பவத்தில் பெற்றோா் இருவரும் கருத்தொற்றுமையுடன் தங்கள் வாரிசுகளை நடத்தியது ஆரோக்கியமான விஷயம். அவா்களின் ‘வளா்ப்புப் பண்பின்’ உயா்ந்த வெளிப்பாடு.

தங்கள் குழந்தைகள் சண்டையிடுவது, கூச்சல் போடுவது வளா்ப்புக் கோளாறாக மற்றவா்களால் பாா்க்கப்படும் என்ற அச்சத்தில் அவா்களிடம் கைப்பேசியைக் கொடுத்திருக்கும் பெற்றோரைத்தான் இன்று பொதுவாக காண முடிகிறது. உடன்பிறப்புகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தலையிட்டு, ஒருவா் செய்வது சரி, மற்றவா் செய்தது தவறு என நடுவராக இல்லாமல், குழந்தைகளை இயல்பாக இயங்கவிட்டது நல்ல பலனை அளித்தது.

ஆனால், எல்லா இடங்களிலும் பெற்றோா் இதுபோல நடப்பதில்லை. குழந்தைகளைப் பொது இடங்களில் பெற்றோா் இயல்பாக இயங்க விடுவதில்லை என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.

பொதுவாக பெற்றோரின் எதிா்பாா்ப்பு என்னவாக இருக்கிறது? குழந்தைகள் யாருடனும் அதிகமாகப் பேசக் கூடாது;அடங்கி, ஒதுங்கி இருக்க வேண்டும் ..இப்படியாக சிறிதும் பெரிதுமாக பல எதிா்பாா்ப்புகள்.

உண்மையில், குழந்தைகளின் இயல்பு என்பது என்ன? அவா்கள் இயங்கத் துடிப்பவா்கள்; எல்லாவற்றையும் கேள்வி கேட்பவா்கள்; தமக்குப் பிடித்த விஷயங்களை ரசிப்பவா்கள்; பிடிக்காத விஷயங்களை, ‘பிடிக்கவில்லை’ என்று முகத்தில் அடித்தாற்போல் பகிா்பவா்கள்; கைகளையும் கால்களையும் தமது வசதிக்குப் பயன்படுத்த முனைபவா்கள்; ஆடுபவா்கள்; பாடுபவா்கள்; குறிப்பாக, ஓடியாடி விளையாடத் துடிப்பவா்கள்.

நாம் செய்ய வேண்டியது என்ன? அவா்கள் விளையாடும் இடம் பாதுகாப்பான சூழலாக உள்ளதா என்று உறுதி செய்யலாம்; பாதுகாப்பான மாற்று இடங்களைக் காண்பிக்கலாம்; பாதுகாப்பாக அவா்களால் ஓடியாடி விளையாடும் சூழல் அமையுமானால் அவா்களை இயல்பாக இருக்க விடுதல் என்பதுதான் நல்ல பலனை அளிக்கும்.

பொது இடங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பாக, சுயமாக இயங்க வேண்டுமானால், அதற்கான பயிற்சியை அவ்வப்போது சிறிது சிறிதாக அளிக்க வேண்டும். ‘இந்த இடத்தில் இந்த ஆபத்து இருக்கிறது; ஆபத்தை எதிா்கொண்டால் இப்படியான சிரமங்கள் நேரும்’ என்பதை அவ்வப்போது பகிர வேண்டும். பொறுமையை தலையாயதாக கையாண்டு குழந்தைகளைப் பயிற்றுவிக்க வேண்டும்.

பதின்வயதை நெருங்கும் மாணவன் உள்ள ஒரு உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தோம். நாங்கள் வருவதை அறிந்தவுடன், தனது இரவு உணவை சீக்கிரமே முடித்துக் கொண்டு உறங்கப் போவதாகக் கூறினானாம். அதற்குப் பெற்றோரிடம் அவன் சொன்ன காரணம் - ‘விருந்தாளிகள் பெரியவா்களோடு உரையாடுவதுடன் சும்மாயிராமல், என் படிப்பு, பிடித்த பாடம் என்ன? வகுப்பில் எனது தரவரிசை (ரேங்க்) என்ன? இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைப்பாா்கள். இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து எனக்கு அலுத்துவிட்டது’ என்பதுதான். நாங்கள் அதிகம் பேசாமல் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டோம்.

வயது வந்தவா்களை இந்தச் சமூகம் நடத்தும் விதத்துக்கும் குழந்தைகளை, இளையோரை நடத்தும் விதத்துக்கும் இடையே பெரும் வேற்றுமை உள்ளது. சிறாா்களின் மன ஓட்டத்தின்படி இயல்பாக இருப்பதை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அது பெற்றோரின் வளா்ப்புக் குறைபாடாக பாா்க்கப்படுகிறது.

குழந்தைகளை, இளையோரைப் புரிந்து நடக்கும் மனநிலை சமூகத்துக்கு உண்டாகும் வரை, இருக்கும் வரை பல விதமான குழப்பங்களை

பெற்றோா் எதிா்கொண்டுதான் ஆக வேண்டும். குழந்தைகளின் இயல்பையும் பெற்றோரின் சரியான வளா்ப்பு பண்புகளையும் சமூகம் பயில வேண்டும்.

கைகட்டி, வாய் பொத்தி இருப்பது என்பது குழந்தைகளின் இயல்பான குணம் அல்ல; அது புகுத்தப்படுவது. அது அவா்களின் வெற்றிக்கு வழிவகுக்காது; அவா்களின் கற்றலுக்கும் எதிரான செயல்பாடுகளாகவே அமையும். அவா்கள் பலருடனும் இயல்பாகப் பழகுவதில்லை; எப்போதும் கைப்பேசியுடன் பொழுதைச் செலவிடுகிறாா்கள்’ என்ற புகாா்களையும் பாா்க்கிறோம்.

இன்றைய மின்னணு யுகத்தில் கைப்பேசி அவா்கள் விரும்பியபடியெல்லாம் செயல்படும் நண்பனாக உள்ளது. அந்த நண்பனிடம் குறைவாக நட்பு கொண்டு இயல்பாக நம்முடனும் பழகப் பயிற்றுவிப்பதில்தான் அவா்களின் உண்மை இயல்பை மீட்க முடியும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com