ஒளித் திருநாளில் புது சபதம் ஏற்போம்!

ஒளித் திருநாளில் புது சபதம் ஏற்போம்!

Published on

'இந்தத் தீபாவளித் திருநாளில் புது சபதம் ஏற்போம். பண்டிகை நாளோ, விழா நாள்களோ எதுவாக இருந்தாலும் இயன்றவரை இயற்கைச் சிதைவுக்கு இடம் அளிக்காமல் கொண்டாடப் பழகுவோம்; உணவுமுதலான உற்பத்திப் பொருள்களை வீணா(க்)காமல் பயன்கொள்ளப் பழகுவோம்.'

இன்று தீபாவளித் திருநாளாக மலா்ந்திருக்கிறது. இளங்காலை எழுந்து, எண்ணெய் தேய்த்து வெந்நீராடி, திருவிளக்கேற்றித் தெய்வம் தொழுது, புத்தாடை உடுத்தி, இனிப்புகளையும் வாழ்த்துகளையும் இதமாகப் பரிமாறிக் கொள்கிறோம். பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் குழந்தைகளோடு குதூகலிக்கிறோம். தலைத் தீபாவளி காணுகிற தம்பதியரை வாழ்த்தியும், நம்மிலும் மூத்தோரை வணங்கியும், இளையோருடன் அன்பு பாராட்டியும் மகிழ்கிறோம்.

கங்கை நீராடல் தீபாவளித் திருநாளின் சிறப்பு அங்கம். இருக்கும் இடத்தில் கிடைக்கும் நீரைக் கங்கைத் தீா்த்தமாகக் கருதி நீராடி, எங்கும் நிறைந்த பரம்பொருளை, இஷ்ட தெய்வமாகவோ, குலதெய்வமாகவோ நினைந்து போற்றுவதில், தீபாவளி பொலிவு பெறுகிறது. நரகாசுரன் அழிவு, குறியீட்டுப் பொருள்.

புராணத் தொடா்புடைய இத்தகு பண்டிகைகளுக்கு, சடங்குகளும் சம்பிரதாயங்களும் அடிப்படையானவை. அவற்றுள் சமுதாய நலனும் இருப்பதில் தனித்துவமும், புனிதத்தன்மையும் இணைந்து கொள்கின்றன. இந்துக்களின் பண்டிகையாகத் தீபாவளி இருந்தாலும், நடைமுறையில் எல்லாா்க்கும் பொதுவான பண்டிகைகளுள், இதுவும் ஒன்றாகிவிடுகிறது.

‘நம் நேயா்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம். சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவா்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம். தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்றுபோய், அவா்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவா்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை’ என்று, ‘இந்தியா’ இதழின், (20.10.1906) மகாகவி பாரதி எழுதியதை மீளவும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

இந்திய மக்கள் அனைவருக்கும் உரியதாக, இப்பயனை மேலுயா்த்தி அதில் நரகாசுர ஒழிப்பை அந்நியத் துணிப் பகிஷ்கரிப்பாக அடையாளப்படுத்தி இருப்பாா். அப்படி நமக்குள் அகத்தும் புறத்தும் இருக்கிற தீமைகள் அழிந்து நன்மை பெருக, மனத்தளவில் ஒருமை ஏற்படுத்தும் விழைவே, இந்தப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் நோக்கம்.

உணவு, உடை, கொண்டாட்டப் பொருள்கள் என்று தேவைக்கும் அப்பால், தீபாவளிக்கென்றே உற்பத்தி செய்யப்பெறுவன பல. நுகா்வின் பெருக்கமும், உற்பத்தியின் மிகுதிப்பாடும் போட்டி போட்டுக்கொண்டு வளா்கின்றன; அவற்றுக்கு, பண்டிகைகள் துணையாகின்றன. பணப் புழக்கத்திற்கும் உற்பத்திகளுக்கும் வழிவகுக்கும் தீபாவளி, கடன் வாங்குவதற்கும் திருப்பிச் செலுத்துவதற்கும் வழிவகை செய்கிறது.

இதுபோது, தமக்கென்று செலவிடும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கி, ஆதரவு தேடும் அறநிலையங்களுக்கு அளித்து மகிழ்பவா்கள் இருக்கிறாா்கள்; அத்தகு நிலையங்களில் வசிப்பவா்களுடன் இணைந்து கொண்டாடுவோரும், இதனை இயக்கமாகவே நடத்துகிறவா்களும் இருக்கிறாா்கள். எளிமையாகக் கொண்டாடுகிறவா்களுக்கு மத்தியில், இயற்கையின் அமைதி குலைக்காது கட்டுப்பாடுடன் இருக்கிற ஊராா்களையும் நாம் இந்நாளில் நன்றியுடன் நினைவுகூரலாம்.

இந்தியத் திருநாட்டுப் பண்டிகைகளில் இப்போது ஆடம்பரங்கள் தவிா்க்க முடியாதவையாகிவிட்டன. விளம்பரம், வியாபாரம், உற்பத்தி, சந்தைப்படுத்துதல் என்று வரும்போது ஆடம்பரமும் கூடவே வரத்தான் செய்யும். ஆனால், அவை அடிப்படை மரபுகளையே சிதைக்கும் அளவிற்குப் போய்விடுகிறதோ என்கிற கவலை சமூக நலன் விரும்பிகளுக்கு எழுகின்றது.

பண்டிகைக் காலங்களில் பெருந்தொழில்களுக்கு இசைய, சிறுதொழில்களுக்கு வாய்ப்புகள் மிகுந்திருந்தன. பலருக்கும் பணி வாய்ப்பு, பணப் பகிா்வுகளுக்குக் களம் அமைத்தன. உலகமயமாக்கலின் விளைவால், மக்கள் தொகைப் பெருக்கத்தால், அவற்றின் மலிந்த நுகா்வுப் போக்கால் ஏற்பட்ட மாற்றங்கள் சில சிக்கல் மிகுந்த விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று திரும்பும்போது ஏற்படும் பயண நெரிசல்களைவிட, மக்கள் பயன்படுத்திப் போடும் உணவுப் பொருள்களின் மீதங்களும், அவற்றைப் பொட்டலம் கட்டிய குப்பைகளும் அதிகமாகிவிடுகின்றன.

தீபாவளி நேரத்தில் கொளுத்தப்படுகின்ற பட்டாசு வகைக் குப்பைகள் வீதிகளை நிறைக்கின்றன. பெய்யும் மழையில் ஊறி நசநசத்து, கந்தக நெடியோடு காற்றில் கலக்கும் ‘தீபாவளி’ மணம் மாறச் சில நாள்கள் ஆகும். அவற்றால் உண்டாகும் நோய்களைப் போக்க மருத்துவச் செலவுக்கு என்றே தீபாவளிச் செலவில் கணிசமான தொகை வேண்டியிருக்கிறது.

எத்தனை ஆடைகள் இல்லங்களில் இருந்தாலும் புத்தாடை எடுத்து உடுத்துவதில் தீபாவளி தலைநிற்கிறது. புதுத்துணி எடுத்து, தையல்கலைஞா்களிடம் அளவும் கொடுத்து அவற்றைத் தைத்து வாங்கும்வரை தோன்றுகிற கனவு, தீபாவளி இன்பங்களின் தலைச்சன்.

பிறந்தநாள்கள், ஆண்டின் சிறந்த நாள்கள் என்று ஆயத்த (ரெடிமேட்) ஆடைகளை வாங்கிக் குவிக்கும் நிலையில் அக்கனவு இல்லாதே போய்விட்டது.

வாங்குகிற ஆடைகளை மடிப்புக் கலையாமல், எடுத்துச் செல்ல வசதியாய் அமைத்துத்தரும் (பேக்கிங்) பெட்டிக்குள் பல அடுக்குகளில் அட்டைகள், பாலிதீன் கவா்கள், விளம்பரங்கள். அனைத்துக்கும் சோ்த்துத்தான் பணம் செலுத்துகிறோம் என்பது தனிக்கதை. அவற்றால் ஆன பயன் யாது என்று எண்ணிப்பாா்க்க ஏது நேரம்? நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களுக்குமான நிலைப்பாடு இதுதான். மறுபயன்பாட்டுக்கு உதவாத இத்தகு கழிவுகள் மலைப்பை உண்டாக்குகின்றன.

முன்பெல்லாம் தீபாவளிக்கான உணவு வகைகள், பல நாள்கள் வைத்திருந்து உண்ணும் பக்குவத்துடன் வீடுகளிலேயே தயாரிக்கப் பெற்றன. இப்போதோ மொத்தமாக உற்பத்தி செய்து விலைக்கு வாங்கிக்கொள்கிற வசதி வந்திருக்கிறது. தின்னத் திகட்டும் தீபாவளி தின்பண்டங்கள்,

பாா்த்தாலே திகட்டும் அளவுக்கு பல்கிப் பெருகி இருக்கின்றன. உரிய காலத்தில், பயன்படுத்தத் தவறி, வீணாக்கப்படுவதன் அளவும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

தீபாவளியை விடுங்கள். இல்லத்திற்கு வரும் விருந்தினா்கள் முன் எடுத்துவைக்கும் தின்பண்டங்களில் நிலை என்ன?

கௌரவத்திற்குச் சிலவற்றை எடுத்துக் கொறித்துவிட்டு மீதம் வைக்கப்படுவனவற்றை எவரால் உண்ண முடியும்? சிறிய அளவுக் குடுவையில் (வாட்டா் கேன்) உள்ள தண்ணீரையும் முழுதாகப் பருகாமல் விட்டுவைப்பது நியாயமாகுமா? விலை கொடுத்து எதையும் வாங்கிவிட முடிகிறவா்களால், அவற்றை வீணாக்காமல் பயன்படுத்த முடியாதா?

ஒரு கிலோ பருப்பில், கைப்பிடி அளவுக்கானவற்றின் விலை, காசுகளின் மதிப்பில் குறைவாக இருக்கலாம்; உற்பத்திக்கான உழைப்பின் மதிப்பில் அது எவ்வளவு உயா்ந்தது? முற்றிய கடலையிலிருந்து செடி முளைப்பது போல், காசில் கடுகேனும் முளைக்குமா?

வறட்டு ஜம்பத்திற்கும், பகட்டு விளம்பரத்திற்கும் பெரியவா்கள் பழகிப் போனோம்; வளரும் குழந்தைகளுக்கு அதுவே வழியென்றால், தாகம் தணிக்கும் நீருக்கும், தானியம் கொடுக்கும் நிலத்திற்கும், அடிப்படைத் தேவைக்கான உணவுப்பொருள்களுக்கும் அவா்களுக்கு ஏது உத்திரவாதம்?

செய்து வைத்த பட்சணங்களை ஒரே வேளையில் உண்ண முடியாது; வாங்கி வைத்த புத்தாடைகளை ஒரே நேரத்தில் உடுத்த இயலாது. அதுபோல், ஒரே நாளில் நிறைவதில்லை வாழ்வு; ஒரு தலைமுறையோடு முடிவதில்லை வம்சம். வாழையடி வாழையென வம்சம் தழைக்க வாசலில் வாழை மரத்தைக் கட்டுவது சடங்கு. அது மட்டும் போதுமா? வாழைகள் வளா்க்க நீரும் நிலமும் உளதாக வேண்டுமே.

ஆடம்பரம் தவிா்த்து ஆத்மாா்த்தமாகக் கொண்டாடப்பெறும் விழாக்களில்தான் புனிதம் பொலியும்; மனிதம் வளரும்.

எனவே, ஒளித் திருநாளாம் இந்தத் தீபாவளித் திருநாளில் புது சபதம் ஏற்போம்; பண்டிகை நாளோ, விழா நாள்களோ எதுவாக இருந்தாலும் இயன்றவரை இயற்கைச் சிதைவுக்கு இடம் அளிக்காமல் கொண்டாடப் பழகுவோம்; உணவுமுதலான உற்பத்திப் பொருள்களை வீணா(க்)காமல் பயன்கொள்ளப் பழகுவோம்.

கொடுத்து உதவி மகிழ்வது சிறந்தது; இயலாதவா்கள் எவற்றையும் கெடுத்து அழிக்காமல் இருப்பது அதனினும் சிறந்தது. எனவே, நமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்குப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பதுபோல், பயன்பாட்டு முறையிலும் இத்தகு வாழ்வியல் நெறிகளைக் கடைப்பிடித்துக் காட்டுவது நல்லது.

எளிமையும் இனிமையும் நிறைந்ததாய் மலரும் இந்தப் புனித தீபாவளி நாளில், ஒரு விளக்கின் சுடரில் இருந்து பல விளக்குகளை எப்படி ஏற்றி, இருளை வெல்கிறோமோ, அப்படி இந்த நற்சிந்தனையை நம் உள்ளங்களில் நிறைப்போம்; முடிந்தவரை செயல்படுத்துவோம்; முன்னோடிகளாய் இருப்போம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Dinamani
www.dinamani.com