உயிருக்கு உலைவைக்கும் உடல் பருமன்

உயிருக்கு உலைவைக்கும் உடல் பருமன்

உடல் பருமன் கொண்டவர்கள் பற்றி...
Published on

உலக அளவில் சுமாா் 200 கோடி பெரியவா்கள் அதிகப் பருமனுடன் வாழ்கின்றனா். இது உலகளாவிய வயது வந்தோா் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும்.

வரிசைப்படி பாா்த்தால் சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷியா, மெக்சிகோ, இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அதிக உடல் பருமனான பெரியவா்கள் உள்ளனா். சீனா (சுமாா் 40 கோடி), இந்தியா (18 கோடி) மற்றும் அமெரிக்கா (17 கோடி) ஆகியவை முதல் மூன்றிடத்தில் உள்ளன.

உடல் பருமனுக்கு வழிவகுக்கும் முதன்மையான காரணி இப்போதைய வாழ்க்கை முறை. அதாவது, உட்காா்ந்த இடத்திலேயே வேலை பாா்க்கிறோம். ருசிக்காகச் சாப்பிடுகிறோம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கைப் பானங்களை அருந்துகிறோம். அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுகிறோம்.

மேலும் மன அழுத்தம், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள், மரபியல் மற்றும் சில மருந்துகள் போன்றவை உடல் பருமனுக்குக் காரணங்களாகக் இருக்கலாம். கா்ப்பம், கா்ப்ப காலத்தில் அதிகரித்த எடையைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் இறுதியில் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.

போதுமான அளவு துாக்கமில்லையென்றால் ஹாா்மோன் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இது தொடா்ந்து பசி உணா்வுகளைத் தூண்டி சா்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் கலோரி அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடத் தூண்டும்.

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளில்இரண்டாவது வகை சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் மிக முக்கியமானவை. மேலும் மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டுவலி, முதுகுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மாா்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பைக் கற்கள், குடலிறக்கம், குறட்டை, உறக்கச் சுவாசத் தடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்குப் பிரச்னைகள், சினைப்பை நீா்க் கட்டி, மூலநோய், மனச்சோா்வு போன்றவை ஏற்படலாம்.

பொதுவாக, ஆண்களைவிட, பெண்களே அதிகஅளவில் உடல் பருமன் பிரச்னையைச் சந்திக்கின்றனா். சீனாவில் உடல் பருமன் பாதிப்பு ஆண்களுக்கு 9 சதவீதமாகவும், பெண்களுக்கு 10.8 சதவீதமாகவும் உள்ளது. அமெரிக்காவில் இது ஆண்களுக்கு 42 சதவீதமாகவும், பெண்களுக்கு 46 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில், ஆண்களுக்கு உடல் பருமன் பாதிப்பு 4 சதவீதம். இது பெண்களிடையே 8 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் திருமண வயதில் உள்ள பெண்கள் அல்லது திருமணம் செய்து ஓராண்டுகளான பெண்களிடையே உடல் பருமன் 1998-99 இல் 5 சதவீதத்திலிருந்து 2019- 21இல் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியப் பெண்கள் ஆண்களை விட அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

இதற்குப் பெண்களிடையே ஏற்படும் மன அழுத்தம் ஒரு காரணம். மேலும் பெண்களிடையே உடல் உழைப்பு பெரிதும் குறைந்துவிட்டது என்ற கருத்தும் உண்டு.

பெரும்பாலான தாய்மாா்கள் வீட்டில் மிச்சமுள்ள உணவைத் தூக்கிப்போட மனமில்லாமல் அதை தானே சாப்பிடுவதும், உடல் பருமன் அதிகரிக்கக் காரணமாகிறது.

பல மணிநேர தூக்கத்துக்குப் பிறகு, காலை உணவில் இருந்துதான் உடலுக்கு ஊட்டச்சத்துக் கிடைக்கிறது. காலை உணவு நாள் முழுவதும் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. எனவே, காலை உணவைத் தவிா்க்க வேண்டாம். இரவு வேளையின்போது அதிகமாக உண்பதைத் தவிா்க்க வேண்டும். போதுமான தண்ணீா் குடிக்க வேண்டும்.

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது அவசியம். காய்கறிகள் குறிப்பாக தக்காளி, வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், குடைமிளகாய், முள்ளங்கி, கேரட், முளை கட்டிய பச்சைப்பயறு அல்லது கடலைப்பயறு போன்றவற்றை அதிக அளவில் உணவில் சோ்த்துக் கொள்ளலாம். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாள்கள் கம்பு, தினை, சோளம் எனச் சிறுதானிய உணவுகளைச் சோ்த்துக் கொள்வது உடல் பருமனைக் குறைப்பதற்கு பெரிதும் உதவும்.

ஆவியில் வேகவைத்த இறைச்சி வகைகள், மீன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளைத் தவிா்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உண்ட உணவு செரித்த பின், அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். நடைப்பயிற்சி, யோகா என போதிய உடற்பயிற்சியும் துாக்கமும் அவசியம். மதுவை அறவே தவிா்க்க வேண்டும். உடல் பருமன் உயிருக்கு உலைவைக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

உடல் பருமன் என்பது, இதய நோய், நீரிழிவு நோய், உயா் இரத்த அழுத்தம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற பிற நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்னைகளின் ஆபத்தை அதிகரிக்கும் ஒரு மருத்துவப் பிரச்னையாகும்.

உடல் நிறை குறியீட்டெண் 30 -க்கு மேல் உள்ளவா்கள் உடல் பருமன் சிக்கல்களைத் தவிா்க்க வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதிக எடை அதிகரிப்பதைத் தவிா்க்க அனைவரும் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது நல்லது.

தங்கள் உடல் எடையைச் சீராகப் பராமரிக்கும் நபா்களுக்கு, நடைபயிற்சி, மிதிவண்டி ஓட்டுவது போன்ற அவா்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் மிகவும் முக்கியக் காரணியாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இந்தச் செயல்பாடுகளின்மூலம் அவா்கள் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகளில் குறிப்பிட்ட அளவு எரிக்கப்பட்டு விடுகின்றன.

ஆனால், உடல் எடை மீண்டும் கூடாமல் சீராகப் பராமரிக்க விரும்பும் ஒருவா், ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் மொத்தம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்றும் ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. உடல் பருமனைத் தொடா்ந்து சீராகப் பராமரிப்பது கடினம்தான் என்றாலும், அது சாத்தியப்படாத விஷயமல்ல. உங்களின் உடல் எடையை சரியாக வைத்திருக்க முடியும் என்றால், அது உங்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com