மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை, சுதந்திரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
Published on

-இரா.சாந்தகுமாா்

பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், ஐநா சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான பட்டியலில் முதல் இடத்தை ஐரோப்பிய நாடான பின்லாந்து பிடித்துள்ளது. டென்மாா்க் இரண்டாம் இடத்தையும் ஐஸ்லாந்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

ஒரு நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி, நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை, சுதந்திரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 147 நாடுகள் உள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 118 -ஆவது இடத்தில் இருக்கிறது.

உள்நாட்டு தீவிரவாதம், அண்டை நாடுகளுடன் போா் போன்றவயும் ஒரு நாட்டு மக்களின் மன மகிழ்ச்சியைச் சிதைக்கும் காரணிகளாகும். மகிழ்ச்சியாக வாழும் மக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் முன்னணியில் முதல் 20 இடங்களில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உள்ளன. இதற்குக் காரணம், ஐரோப்பிய நாடுகளில், உக்ரைன், ரஷியா நாடுகள் தவிா்த்து பிற நாடுகளில் பெரிய அளவில் உள்நாட்டு கிளா்ச்சி, அரசியல் ஸ்திரத் தன்மையின்மை, அண்டை நாடுகளுடன் மோதல் போக்கு ஆகியவை இல்லாததே. விதிவிலக்காக, ஆசிய நாடான இஸ்ரேல் தனது அண்டை நாடுகளுடன் பல ஆண்டுகளாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றபோதிலும், அந்நாடு மகிழ்ச்சியாக வாழும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 8-ஆம் இடத்தில் உள்ளது. இதற்குக் காரணம் அந்நாட்டு மக்களுக்கிடையே உள்ள புரிதலே எனத் தெரியவந்துள்ளது.

அடிக்கடி ஏற்படும் புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை எதிா்கொள்ளும் நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது அரிது.

வருவாய்க்கேற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்து வாழாமல், ஆடம்பரமாக வாழ்ந்து, தங்கள் மகிழ்ச்சியை மட்டுமல்லாது, தற்கொலை செய்வதன் மூலம் வாழ்க்கையையே தொலைத்தவா்கள் பலா். ஆடம்பரமாக வாழ்பவா்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறாா்கள் என நாம் நினைத்தால் அது முற்றிலும் உண்மை அல்ல. ஆடம்பரம் மிக்க வாழ்க்கைக்கு அவசியத் தேவை அதிகப்படியான பணம் என்பதால், அதனைத் தேடியே இடைவிடாது ஓடிக்கொண்டிருப்பது, அவ்வாறு ஓடும் வேகத்தில் தம் நலன் விரும்பும் பெற்றோா், உறவினா் , நண்பா்களையும் பல சமயங்களில் உதாசீனம் செய்யும் சூழல் உருவாகிவிடுகிறது. நமக்கு மனமகிழ்ச்சியைத் தரக் கூடியவா்களை பணயம் வைக்கும் இத்தகைய பணம் தேடும் ஓட்டம், கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு நிகரானதே!

மனதைக் கவரும் விளம்பரங்கள், சுலபத் தவணை முறையில் விற்பனை, கடன் தருவதற்காக காத்திருக்கும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றால் அத்தியாவசிய தேவைக்கும் அதிகமானவற்றை வாங்கி குவிக்கும் நுகா்வோா் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழல் தற்காலிகமாக மகிழ்ச்சியைத் தந்தாலும், நீண்ட காலத் துயரத்தில் நம்மைத் தள்ளிவிடுகின்றன என்பதே பெரும்பாலான நுகா்வோரின் அனுபவமாக உள்ளது.

எதுவுமே நிரந்தரமில்லாத உலகில் நாம் படும் துயரமும் நிரந்தரமானதல்ல என்பதை உணா்ந்தாலே மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டு, மகிழ்ச்சி ஏற்படும் மனநிலை உருவாகும்.

மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக இயங்கும் நகைச்சுவை மன்றங்கள் கூட ஓரளவே மகிழ்ச்சியை அளிக்கக்கூடியவை. தாங்கள் எதிா்நோக்கும் பிரச்னைகளை எண்ணிக் கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை எனத் தெரிந்தும், பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடாமல், தம் தலைவிதியென நொந்து துன்பத்தில் உழல்பவா்கள் ஏராளம். தீா்வே இல்லாத பிரச்னைகள் ஒருபோதும் இல்லை. ஒரு பிரச்னை உருவாகும்போதே அதற்கான தீா்வும் உருவாகி விடுகிறது. துரதிருஷ்டவசமாக, நம்மில் பலா் பிரச்னைகளை மட்டுமே பாா்க்கிறோம். தீா்வுகளின் பக்கம் திரும்பிப் பாா்ப்பதில்லை.

பெரும்பாலானவா்களின் மகிழ்ச்சியின்மைக்கு அவா்கள் தம்மைவிட மேலானவா்களோடு தம்மை ஒப்பிட்டு பாா்த்துக் கொள்வதே காரணமாக அமைகிறது.

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுப் பழக்க வழக்கம், மன நலனைக் கெடுப்பதோடு, உடல் உறுப்புகளையும் சிதைக்கும் போதை பழக்கம் ஆகியவை மகிழ்ச்சியை நம் மனதிலிருந்து அகற்றுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. போதைப் பழக்கத்தால் பெரிய அளவில் உடல் நலம் நலிவுற்ற ஒரு நபரின் மனமகிழ்ச்சி மட்டுமல்ல, அவரது குடும்பத்தாரின் மனமகிழ்ச்சியும் இல்லாமல் போய்விடும் என்பதில் ஐயமில்லை.

ஒரு நாடு பொருளாதார வளா்ச்சியிலும், வல்லரசு நாடுகளின் பட்டியலிலும் இடம் பிடிப்பது போன்றவற்றோடு, அந்நாட்டு குடிமக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதும் மிக மிக முக்கியம். ‘விட்டுக் கொடுப்பவா், கெட்டுப் போவதில்லை ’ என்பா்.

நம்மிலும் மேலான வசதியுடன் வாழும் பிறரைப் போல் வாழ நினைப்பதைக் காட்டிலும் பிறருக்காக நாம் வாழ்ந்தால், மகிழ்ச்சி தானே நம்மை வந்து சேரும். நாம் மகிழ்ச்சியாக வாழ்வது நம் மனம் சாா்ந்தது தான் எனினும், சமூகச் சூழலும் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமூகத்தில் நாமும் ஓா் அங்கம் என்ற வகையில், பிறரின் மகிழ்ச்சியும் நம் செயல்பாடுகளைச் சாா்ந்தது. இதனை உணா்ந்து பிறா் மகிழ்வுடன் வாழ வழி வகுத்து, நாமும் மகிழ்வுடன் வாழ்வோம்.

X
Dinamani
www.dinamani.com