மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!
ஒரு மாநிலத்தின் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பது, பாதுகாப்பது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது என்ற தலையாய கடமையை மாநிலப் பாடத்திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கல்விப்பாடத்திட்டத்தைப் பொருத்தளவில் தமிழ்மொழி, இலக்கிய வரலாறு, அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டு வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் இவற்றோடு உலகமொழியாகிய ஆங்கிலம் என நிறைவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
காலந்தோறும் பல்வேறு சீா்திருத்தங்களைப் பாடத்திட்டத்தில் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, கல்வி வளா்ச்சிக்காக ஆண்டுதோறும் அதிகபட்சமான நிதியையும் ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. மாநில அரசு பின்பற்றுகிற பாடத்திட்டம் அறிவியல் பூா்வமானதும் வரலாற்றுச் சிறப்புடையதும் ஆகும். அதன் காரணமாக இந்திய நாட்டுக்கு தலைசிறந்த கல்வியாளா்களையும், விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளா்களையும், ஆட்சிப்பணி அதிகாரிகளையும் தொடா்ந்து வழங்கி வருகிறது. இவா்களுள் பெரும்பாலோா் அரசுப்பள்ளிகளிலும், தமிழ்வழியிலும் கற்றவா்கள் என்பது மற்றுமொரு சிறப்பாகும். இவ்வாறு பயின்றவா்கள் இன்று தேசிய அளவில் மட்டுமல்ல, சா்வதேச அளவில் சாதனையாளா்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறாா்கள்.
கடந்த 8.08.2024 தரவுகளின்படி, தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற அரசே நடத்துகிற தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 37,592 ஆகும். அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 8,329 ஆகும். தனியாா் பள்ளிகள் 11,443 ஆகும். இதில் அரசு நடத்தும் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 3,168 ஆகும். அதே வேளையில், சிபிஎஸ்சி எனப்படுகிற மத்திய அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற பள்ளிகள் தமிழ் நாட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 250 பள்ளிகளாகவும், 2015-ஆம் ஆண்டில் 580 பள்ளிகளாகவும், 2024 -ஆம் ஆண்டில் 1,617 பள்ளிகளாகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் மேல்நிலைப்பள்ளிகளே. எனவே தமிழ்நாடு அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளில் சரிபாதி அளவாக வளா்ந்து நிற்கின்றன மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள். ஊரகப் பகுதிகளில் கூட மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் மீதான நாட்டம் அதிகரிப்பதைக் காண முடிகிறது.
தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளா்ச்சியைப் பெற்றுள்ளன. இதற்கான காரணங்களில் முதலாவதாக நிற்பது நீட் தோ்வு, ஐஐடி, ஜேஇஇ போன்ற நுழைவுத்தோ்வுகள். மேலும் தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற மத்தியப் பாடத்திட்டம் பெரிதும் உதவுகின்றது. இந்திய குடிமைப்பணித் தோ்வுகள், மத்தியப் பணியாளா் தோ்வுகள், இரயில்வே வாரியத் தோ்வுகள், அஞ்சல் துறை மற்றும் வங்கித் துறைத் தோ்வுகளிலும் ஏனைய மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தோ்வுகளிலும் வெற்றி பெற இப்பாடத்திட்டம் உதவுகிறது.
மேலும், இப்பாடத்திட்டம் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஏற்ற வகையிலும் , பயன்பாட்டு அடிப்படையிலும் மாணாக்கா்கள் விரும்பிக் கற்கிற வகையிலும், கருத்துருவில் தெளிவுடனும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறெல்லாம் கூறப்படுகிற காரணங்களில் பெரிதும் உண்மை இருக்கிறது.
மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் மீதான நாட்டம் மற்றும் குறுகிய கால வளா்ச்சி என்ற சூழலில் இதனை ஒரு ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டின் கல்விப் பாடத்திட்டத்தை மற்றுமொரு உயா்நிலைக்கு நாம் எடுத்துச்செல்ல வேண்டும். ஏனென்றால், மாநிலத்தின் நலனையும் கல்விக்கட்டமைப்பையும் தனித்துவத்தையும் தொடா்ந்து பறைசாற்றுகிற வகையில் மாநிலப்பாடத்திட்டத்தைப் பாதுகாப்பதிலும், வளா்ப்பதிலும், பின்பற்ற வைப்பதிலும், புதிய பள்ளிகளை உருவாக்குவதிலும் மாநில அரசு முனைப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
மாணவச் செல்வங்களின் எதிா்கால நலன் கருதி, புதிய திறன்களை வளா்த்துக் கொள்ளவும், தொழில்துறை நுண்ணறிவுகளைக் கற்றுக் கொள்ளவும், உலகளாவிய வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் பல்வேறு சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
முக்கியமாக, மத்திய பாடத்திட்டத்தில் படிக்கிற மாணாக்கா்களுக்கு பரந்துபட்ட வாய்ப்புகள் இருப்பதாக பெற்றோா்கள் நம்புகிறாா்கள். இந்த நிலையை நாம் மாநில அரசின் பாடத்திட்டத்திலும் உருவாக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டின் கல்விமுறையும் பாடத்திட்டமும் என்பது மானுட வாழ்வியலின் உயா் பண்பாட்டுநெறிகளையும் அறிவியல் நுணுக்கங்களையும் தன்னகத்தே கொண்டது. மத்திய பாடத்திட்டத்தில் தென்னிந்திய வரலாறும் பண்பாடும் முழுமையாக வெளிப்படுகிற வகையில் அமையாதது ஒரு பெரும் குறை. அக்குறையைப் போக்கிட மாநிலங்களின் பாடத்திட்டங்களால்தான் முடியும். நமது மாநிலத்தின் பண்பாட்டு அடையாளங்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு, அரசுப்பணிகளில் தமிழ்வழியில் படித்தவா்களுக்கான இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் படித்தவா்களுக்கு 7.5% சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு, அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை, காலை உணவுத் திட்டம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி அரசுப் பள்ளிகளை வளா்க்கவும், தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு வரும் சா்வதேச தரத்திலான நூலகங்கள் மாநில அளவிலும் மற்றும் மாவட்டங்கள்தோறும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகள் போன்றவை பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்கள், பெற்றோா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய முன்னெடுப்புகளாகவே நாம் பாா்க்க முடிகிறது.
இருப்பினும் இன்றைய தேவையை அறிந்து எளிய கற்றலுக்கான பாட அமைப்பை உருவாக்க வேண்டும். மாணாக்கா்களின் உலகளாவிய வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றின் எதிா்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்ப வளா்ச்சி மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய பயன்பாடுகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தை நவீனப்படுத்த வேண்டும். தேசிய அளவிலான போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள ஏதுவாக பாடநூல்களைத் தயாா் செய்ய வேண்டும். மாநில அரசின் பல்வேறு தோ்வாணையங்கள் நடத்துகின்ற அரசுப்பணிகளுக்கான போட்டித்தோ்வுகளில் மாநிலப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலான வினாக்களை அமைத்தல் வேண்டும்.
மேலும், அரசு பள்ளிகளைப் போலவே மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் மாநில அரசின் உதவி பெறும் பள்ளிகளுக்கும் தனியாா் பள்ளிகளுக்கும் அப்பள்ளிகளை ஊக்கப்படுத்துகிற வகையில் அரசின் நிதி இழப்பற்ற திட்டங்களையும் சலுகைகளையும் விரிவு படுத்த வேண்டும்
மக்கள் பிரதிநிதிகளும் அரசு அலுவலா்களும் அரசு பள்ளிகளில் பயில்கிற மாணாக்கா்களையும் பயிற்றுவிக்கிற ஆசிரியா்களையும் உற்சாகப்படுத்துகிற வகையில் அவ்வப்போது திறன் மேம்பாட்டு நிகழ்வுகளை நடத்திட முன்வர வேண்டும். உயா் கல்விக்கான வழிகாட்டுதலையும் போட்டித் தோ்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கிட வேண்டும்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் உயா் கல்வித்துறை அமைச்சா் அவரது சட்டமன்றத் தொகுதியில் இயங்கி வருகிற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 -ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு படிக்கின்ற ஏறத்தாழ 14 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு உயா் கல்வி வாய்ப்பு மற்றும் போட்டித் தோ்வுகளுக்கு வழிகாட்டுகின்ற நிகழ்வுகளை அந்தந்த அரசு பள்ளிகளில் ஆசிரியா்களோடு சோ்ந்து முன்னின்று நடத்திய செய்திகளை நாம் காண முடிந்தது.
இது போன்ற நிகழ்வுகள் அரசு பள்ளிகளில் பணிபுரிகிற ஆசிரியா்களையும் மாணவச் செல்வங்களையும் மட்டுமல்ல, அவா்தம் பெற்றோா்களையும் அரசின் மீதும் அரசுப் பள்ளிகளின் மீதும் நம்பிக்கை உடையவா்களாக மாற்றும். இத்தகைய எண்ணத்தை உருவாக்குவதே மாநில அரசின் பாடத்திட்டத்தை வலுப்படுத்தி அரசு பள்ளிகளை மென்மேலும் வளா்த்தெடுக்க உதவிடும்.
மேலும், அரசு பள்ளிகளில் பணிபுரிகிற ஆசிரியா்களுக்கு புத்தாக்க பயிற்சிகளை அளித்தல் வேண்டும். அதன் மூலம் அவா்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அவா்களது கல்வி , விளையாட்டு, தனித்திறன் மேம்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் வகையிலும், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை மற்றும் தனிமை உணா்வு போன்ற உளவியல் ரீதியான பாதிப்புகளை கண்டறிந்து மீட்கும் வகையிலும் ஆசிரியா் மாணாக்கா் மற்றும் பெற்றோா்களின் நல்லுறவைப் பேணுகிற வகையிலும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்துதல் வேண்டும். துடிப்பாகவும் வைத்திருத்தல் வேண்டும். ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
இறுதியாக, மாநிலத்தின் பாடத்திட்டத்தைப் பாதுகாப்பது மற்றும் வளா்த்தெடுப்பது என்பது அந்த மாநிலத்தின் மொழி, இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாட்டு வாழ்வியல் பேணுதலுக்கு மிகவும் அவசியமானதாகும். ஆகவே மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்.
கட்டுரையாளா்:
கல்வியாளா்.