
நான் பத்தாம் வகுப்பு படித்த போது, ஒரு நாள் சமூக அறிவியல் ஆசிரியர் முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 1914 முதல் 1918 வரை முதல் உலகப் போர், 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றன என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, இப்படி நான்கு, ஆறு ஆண்டுகள் வரை ஒரு போர் தொடருமா என நாங்கள் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஒரு மாணவி மட்டும் எழுந்து, அதற்குப் பிறகு ஏன் மூன்றாம் உலகப் போர் ஏற்படவில்லை? என்று ஆசிரியரை நோக்கி கேள்வி எழுப்பினாள். இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய அழிவுக்குப் பிறகு போரே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை நாடுகள் எடுக்கத் தொடங்கின. மேலும், நாடுகளிடையே ஏற்படும் பிணக்கைப் போக்க ஐ.நா. போன்ற அமைப்புகள் கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றன.
அதனால், இனி மூன்றாம் உலகப் போர் ஏற்படாது என்று 1990-இல் எங்களுக்கு பாடம் எடுத்த சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார். அவர் அன்று சொன்ன சொற்களை, போர் மேகங்களோடு சுழலும் இன்றைய உலகோடு பொருத்திப் பார்க்கும் போது கவலை தோன்றுகிறது.
போர் முறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன. இன்றைய போர்க்களங்களை நம் முன் கொண்டு வரும் காணொலிகள் எல்லாம் நெஞ்சைப் பதற வைக்கின்றன. நிவாரண உதவிகள் வழங்கும் வண்டிகளை மக்கள் சூழ்ந்து கொண்டு முட்டி மோதுவதைக் காணும் போது உள்ளம் பதை பதைக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை உணவுக்காக அடித்துக் கொள்வதைக் காண முடியவில்லை.
சில நாள்களுக்கு முன்பு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில், சிறுவன் ஒருவன் உணவுக்காக தாங்கள் படும் அவல நிலையை எடுத்துச் சொல்ல கீழே கிடந்த மண்ணை எடுத்து வாயில் போட்டு, எங்களுக்கு போதுமான அளவு உணவு இல்லை; இனி மண்ணை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சாக வேண்டியதுதான் என்று அழுது கொண்டே கூறினான்.
உணவுக்கே அடிதடி எனும் போது, கல்வியைப் பற்றி அவர்கள் எவ்வாறு சிந்திக்க இயலும்? போரில் ஏற்பட்ட மனித இழப்புகளையும் அழிவுகளையும் கண்டு இனி போர் புரிவதில்லை என்ற முடிவுக்கு வந்த அசோக சக்கரவர்த்தியைப் பற்றி நாம் வாசித்து இருக்கிறோம். தற்போது, அதுபோன்ற போர்ப் புறக்கணிப்பை தலைவர்கள் அல்லது நாட்டின் அதிபர்கள் ஏற்படுத்துவார்களா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
உலக நாடுகளிடையே நடைபெறும் போர்களில் பல நாடுகள் அவ்விரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்க முயற்சிக்கின்றன. ஆனால், அதிலும்கூட தங்களுக்கு என்ன ஆதாயம் என்பதை முன்னிறுத்திய குறுகியப் பார்வைத் தெரிகிறது. நம் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
வடக்கே எங்கோ ஒரு மூலையில் நடைபெற்ற தாக்குதலாக இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் அந்த அழுத்தம் தென்பட்டது. நல்ல வேலையாக சில நாட்களிலேயே போர் முடிவுக்கு வந்து விட்டது. அட! அதற்குள் முடிந்து விட்டதே! இன்னும் கொஞ்ச நாள்கள் நீடித்திருந்தால், அந்த நாட்டுக்கு தக்க பாடம் புகட்டி இருக்கலாம் என பலரும் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதனால் ஏற்படும் எண்ணற்ற அபாயங்களை பற்றி ஏனோ அவர்கள் சிந்திக்கவில்லை.
முன்னெப்போதும் இல்லாத அளவில், பயணங்கள் தற்போது பெருகியிருக்கின்றன. ஊர் விட்டு ஊர் சென்று பணிபுரிந்த காலங்கள் போய் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறந்தெல்லாம் பணி செய்கின்றனர். கல்வி, பணி, சுற்றுலா, கூடுகை, கருத்தரங்கு போன்ற பலகட்ட வேலைகளுக்காக பயணம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நாடுகளிடையே போர் என்பது அந்த இரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை. பல நாடுகளைச் சேர்ந்த மக்களையும் பாதிக்கிறது. அந்த நாட்டின் வான் போக்கு
வரத்து வரை எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது. வடகிழக்கு நாடுகளிடையே நிலவும் போர்ப் பதற்றங்களால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தொடங்கி அதன் விலையேற்றம் வரை பல்வேறு பிரச்சனைகள் எதிரொலிக்கின்றன.
அதுமட்டுமா?! ராணுவ வீரர்களின் குடும்பங்கள் எவ்வளவு மன பாரத்துக்கு ஆட்படுகிறார்கள்! பல ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு நீண்ட காலம் பிரிந்து இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
போர் என்னும் சொல்லின் நீண்ட நெடிய வரலாற்றை நோக்கும்போது தனிமனித அழிப்பிலிருந்து மாறி, நாட்டில் வசிக்கக்கூடிய அப்பாவி மக்களையும் சேர்த்து கொன்று குவிப்பது தற்போதைய நடைமுறையாக உலகில் காண முடிகிறது. உலகின் வல்லரசுகள் தம்மிடம் ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தாலும், அவை நேரடியாக அணுகுண்டுகளை வீசுவதில்லை; மாறாக, நாடுகளைப் பணிய வைக்க வெவ்வேறு ராஜதந்திர உத்திகளை கையாளுகின்றன.
ஏனெனில் போர் என்பது பேரழிவு மற்றும் பொருளாதார நாசத்தைத் தரும் என்பது எல்லா நாட்டுத் தலைவர்களுக்கும் தெரியும். இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண ஒவ்வொரு தலைவரும் முயல வேண்டும் என்று நமது பிரதமரும் உலகத்தை நோக்கி வலியுறுத்தியுள்ளார்.
அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே சங்க காலத்தில் நடைபெற இருந்த போரை ஒüவையார் தூது சென்று சாதுரியமாக தவிர்த்தார் என்று படித்திருக்கிறோம். ஒரே ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தி இருக்கிறது என்பதையும் சென்ற நூற்றாண்டில் நாம் வரலாறு மூலம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
1972 -இல் தெற்கு வியத்நாம் போட்ட நாபாம் குண்டால் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ஓடிவரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது.
உடல் முழுவதும் ஆங்காங்கே தீக்காயங்களுடன் தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் செய்வதறியாது நிர்வாணமாக ஒரு சிறுமி ஓடி வரும் அந்தப் படம், பார்ப்பவர்கள் அனைவரையும் கதி கலங்கச் செய்தது.
சுமார் 19 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த வியத்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும் உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வியத்நாமை விட்டு வெளியேறியது. ஒரு ஒற்றை புகைப்படம் ஏற்படுத்திய மிகப் பெரிய மாற்றம் இது. ஆனால், இன்று குடிமக்களின் நிலையிலிருந்து பார்க்கும் பார்வை சில தலைவர்களிடம் இல்லையோ என்று தோன்றுகிறது.
கலிங்கத்துப்பரணியில் கலிங்க மன்னன் அனந்தவர்மன், சோழப் படையிடம் தோற்றான். இந்தப் போரில் ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டன என்ற செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் யானைகளைக் கொல்வது மன்னர்களின் வீரமாக கருதப்பட்டது. ஆனால், இன்று மக்களை இப்படி கொத்துக் கொத்தாக கொன்றுக் குவிப்பதை ஏற்கவே முடியவில்லை. எந்த ஓர் இனமும் தனது இனத்தை தானே இப்படி அழிப்பதில்லை; ஆனால், மனிதன் இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை
என்கிறது புறநானூற்றுப் பாடல். அதாவது, உலகில் இயற்கையாகவே ஒருவனோடு ஒருவன் போரிடுவதும் ஒருவனை ஒருவன் கொல்லுதலும் நடைபெற்று வருகிறது என்று புறநானூறு விவரித்துள்ளது.
ஆங்கில இலக்கியத்தில் ஆரோன் ஷெப்பர்ட் எழுதிய "தி கிறிஸ்துமஸ் ட்ரூஸ்' எனும் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் எதிரணியாக இருந்த ஆங்கிலேய மற்றும் ஜெர்மானிய வீரர்கள் எதிர் எதிராக நின்று போர் புரிந்து கொண்டிருந்தார்கள். மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை; அந்த நிலையில் ஆங்கிலேய மற்றும் ஜெர்மானிய வீரர்கள் தங்கள் பகைமையை மறந்து, அந்த ஒரு நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையை எவ்வாறு கொண்டாடினார் என்பதுதான் கதை.
பதுங்குக் குழிக்குள் இருக்கும் இரு அணியினரும் கிறிஸ்துமஸ் அன்று மட்டும் ஒரு நாள் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு ஒன்றாக ஆடிப் பாடி, கொண்டாடிய பிறகு, மீண்டும் நாளை போர்க்களத்தில் சந்திப்போம் எனப் பிரிந்து அவரவர் இடம் சேர்கின்றனர். நம் தலைவர்கள் எச்சரிக்கைகள் கொடுக்கும் இடங்களில் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டால் என்ன? பழிக்குப் பழி என்பதற்குப் பதிலாக வெகுமதிகள் வழங்கினால் என்ன? அத்தனை போர்களும் முடிவுக்கு வந்து விடாதா? போன்ற கேள்விகளுடன் அக்கதை முடியும். ஒரு ஆங்கிலேய வீரர் அவனது சகோதரிக்கு எழுதிய கடிதமாக இந்தக் கதை முடிவுறும்.
ஒவ்வொரு நாடும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.