முடக்கம் தவிர்ப்பீர்!

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லை.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
Published on
Updated on
3 min read

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கூட்டத் தொடர் தொடங்கும்போதும் முதல் ஒரு வாரம் எந்த அலுவலும் நடக்காமல் முடங்கிப் போவதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இப்போது நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரிலும் அதுதான் நடந்தது.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள், கூட்டம் தொடங்கிய ஒரு சில நிமிஷங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம்வரை ஒத்திவைக்கப்பட்டு, அதன் பிறகு மதியமும் இதே அமளி தொடர அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இதுதான் நடந்தது. தொடர்ந்து சுமார் ஒரு வாரம் இப்படித்தான் நடந்தது.

ஜூலை 28-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என்ற ஒப்புதலுடன் அவை அமைதியாக நடந்தது. அன்றுகூட பிகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் அவை கூடியதும் சுமுகமான சூழ்நிலை நிலவியது.

பொதுவாக, ஒவ்வொரு கூட்டத் தொடருக்கு முன்பும் மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். இந்தக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தத் தொடரில் முக்கியமாக விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.

இந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து முழுமையாக விவாதம் செய்ய வேண்டும்; இதேபோல், பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி பற்றி விவாதிக்க வேண்டும். அந்த உத்தரவு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. அப்போது, ஆளுங்கட்சி தரப்பில் இவை எல்லாம் விவாதிக்கப்படும். நீங்கள் அவையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால், தொடர்ந்து இரண்டு அவைகளும் நடக்கவில்லை; எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், தர்னா எனத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இப்படி அவை முடக்கம் என்பது ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் தொடர்ந்து நடக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் நடத்த ஒரு நிமிஷத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது என்று மக்களவைத் தலைவர் ஒருமுறை அவையில் குறிப்பிட்டார். ஆனால், உறுப்பினர்களின் ஆவேச நடவடிக்கையால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது என்ற கவலை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையோ என்ற அச்சம் எனக்கு இப்போது வருகிறது.

நான் மக்களவை உறுப்பினராக இருந்தபோது ஆளுங்கட்சி கூட்டணியிலும் இருந்தேன்; எதிர்க்கட்சி கூட்டணியிலும் இருந்தேன். ஆனால், அப்போதெல்லாம் இந்த அளவுக்கு நீண்ட நாள் அவை முடக்கம் என்பது இல்லை. நாடாளுமன்றம் ஆக்கபூர்வமான விவாதம் நடக்கும் இடமாகவும், மக்கள் பிரச்னையை கவனிக்கக்கூடிய இடமாகவும்தான் அது அப்போது இருந்தது. அரசியல் காரணங்களுக்காக அவை முடக்கம் என்பது சரியில்லை என்பதுதான் என் கருத்து.

இப்போதுகூட எதிர்க்கட்சிகளின் இரண்டு கோரிக்கைகள் குறித்து ஆளுங்கட்சி கொஞ்சம் கெüரவம் பார்க்காமல் அனுமதித்து இருந்தால், ஒருவேளை இந்த முடக்கம் தவிர்க்கப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அவர்கள் கோரிக்கைதான் என்ன? 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விவாதம்; ஆனால், இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் அவர்கள் வெளிப்படையாக சொல்லி விட்டார்கள்.

குறிப்பாக, பாகிஸ்தான், இந்தியா தாக்குதலை நிறுத்தியது நான்தான் என்று டிரம்ப் சொல்கிறார்; இதுகுறித்து விளக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கை. ஆனால், பலமுறை ராணுவத் தளபதிகள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் இந்தத் தாக்குதலில் மூன்றாவது நாடு தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் நாங்கள் தாக்குதலை நிறுத்தினோம் என்று தெளிவுபடச் சொல்லிவிட்டார்கள்.

அப்போதும் டிரம்ப் ஒரு பொய்யர் என்று துணிச்சலாக மோடி சொல்வாரா என்று அரசியல்தான் பேசுகிறார் ராகுல் காந்தி. 'ஆபரேஷன் சிந்தூர்' விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அப்போதே மத்திய அரசு எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நாங்கள் துணை நிற்போம் என்று தெளிவாக சொல்லிவிட்டது. ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, திமுக தனது ஆதரவை தெரிவித்தது.

மத்திய அரசும் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி முக்கிய நாடுகளிடம் எடுத்துச் சொல்ல ஆறு குழுக்களை அனுப்பியது. இந்தக் குழுக்களில் திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் என்ன நடந்தது என்று எடுத்துச் சொல்ல கட்சி வித்தியாசமின்றி அனுப்பியது.

எல்லா உறுப்பினர்களும் அந்த நாடுகளின் தலைவர்களிடம் பேசும்போது, மத்திய அரசின் குரலாகத்தான் பேசினார்கள். நாடாளுமன்றத்திலும் பிரதமர் தனது பதில் உரையில், 'போரை நிறுத்தும்படி எந்த நாடும் எந்தத் தலைவரும் சொல்லவில்லை. போர் நிறுத்தம் கேட்டு பாகிஸ்தான்தான் கெஞ்சியது' என்று தெளிவுபடச் சொல்லிவிட்டார். டிரம்ப் ஏதோ அரசியல் காரணங்களுக்காக இப்படி ஏதோ சொல்கிறார் என்றுதான் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

பிரதமர் என்பவர் நாடாளுமன்றத்துக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்பதால், நாடாளுமன்றத்துக்கும் அவர் உரிய முக்கியத்துவம் தர வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்கள்தான் சர்வ வல்லமை படைத்தவர்கள்.

நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அவர்களிடம்தான் உள்ளது. மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் அத்தகைய மன்றம்தான் நாடாளுமன்றம். அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது என்பதை ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் உணர வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் எல்லோருமே அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை கொண்டவர்கள். எனவே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது ஆக்கபூர்வமான முறையில் மக்கள் பிரச்னைகளை அவர்கள் நலன் சார்ந்து விவாதித்து தீர்வு காணும் கூட்டத் தொடராக அமைய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பு. இதை நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புக்குமே உண்டு.

'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு ஆளும் தரப்பில் வெளிப்படையான பதில் தர வேண்டும். அதேசமயம் இதற்குப் பதில் பிரதமர்தான் தர வேண்டும் என்ற பிடிவாதம் ஆரோக்கியமான போக்கல்ல; உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் இவர்களும் அதற்குப் பதில் சொல்லக்கூடிய பொறுப்பானவர்கள்தான்.

மக்களவையில் பிரதமர் பதில் சொன்னார், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் பதில் சொன்னார், பிரதமர் பதில் சொல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பிரதமர் காலையில்கூட சில நிமிஷங்கள் மக்களவைக்கு வந்துவிட்டுப் போயிருக்கிறார். அப்படி இருக்கும்போது மாநிலங்களவைக்கு ஏன் வரவில்லை என்பது அவர்கள் கேள்வி. இது ஒரு நியாயமான கேள்வி. இதற்கும் உள்துறை அமைச்சர் விளக்கம் சொல்லிவிட்டு அவர் பதில் சொல்லி இருக்கலாம்.

நாடாளுமன்ற முடக்கம் என்பது மற்ற நாடுகளில் மிக மிக அபூர்வம். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முப்பதாண்டு காலத்தில் 12 முறை ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைப்பு நேரம் பெரும்பாலும் பத்து நிமிஷங்கள்தான். ஒரே ஒரு முறை மட்டும் அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த 20 ஆண்டுகளில் ஒத்திவைக்கப்படவே இல்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று ஒரு பக்கம் பெருமை பேசிக் கொண்டிருக்க, நாள்கணக்கில், வாரக் கணக்கில் அவை முடக்கம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

நாடாளுமன்றம் இதுவரை 15 நிமிஷங்கள்கூட தொடர்ந்து நடைபெறவில்லை. ஒவ்வொரு விநாடியும் மக்கள் வரிப் பணம்; அதை நாம் விரயம் செய்தால் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக நேரிடும் என்ற பொறுப்பும் கடமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும்.

கட்டுரையாளர்:

வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com