சமத்துவமே லட்சியம்!

இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலின பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

-வழக்குரைஞர் ஆர். சங்கீதா

இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலின பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது. அரசமைப்பின் 14-ஆவது பிரிவு சட்டத்தின் முன் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்குகிறது; அதேசமயம் 15-ஆவது பிரிவு பாலினம், மதம், ஜாதி அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டை தடை செய்கிறது. இந்தச் சட்டங்கள் பெண்களுக்கான சமத்துவத்தின் அடித்தளமாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்த சட்டபூர்வ பாதுகாப்புகள் மட்டுமே நடைமுறையில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை மாற்ற போதுமானதாக இல்லை.

வரலாற்று ரீதியாக, இந்திய சமூகம் பெரும்பாலும் ஆணாதிக்கம் கொண்டதாகவே இருந்துள்ளது. சில சமூகங்களில், பெண்கள் அதிக மரியாதை பெற்றாலும், பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்பட்டனர். கல்வி, சொத்துரிமை, மற்றும் அரசியல் முடிவெடுப்பதில் பெண்களுக்கு இருந்த வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. சதி (கணவர் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறுவது), குழந்தை திருமணம், வரதட்சிணை போன்ற பழக்கவழக்கங்கள் பெண்களின் வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கின.

இந்தப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக, இந்தியாவில் பல சமூக சீர்திருத்தவாதிகள் போராடினார்கள். பெண்களின் கல்வி, மறுமணம் மற்றும் உரிமைகளுக்காக பலரும் குரல் கொடுத்தனர். அவர்களின் விடாமுயற்சிகளின் தொடர்விளைவாக

இந்தியாவில் பெண்களின் நிலைமை சற்று மேம்பட ஒரு வழி பிறந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திய அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பெண்களின் கல்வியை மேம்படுத்துவது, பாலின பாகுபாட்டைக் குறைப்பது மற்றும் பொருளாதார ரீதியாக பெண்களை வலுப்படுத்துவது போன்ற குறிக்கோள்களுடன் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன.

பெண்களுக்கான சமத்துவம் என்பது கல்வியில் இருந்துதான் தொடங்குகிறது. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், மற்றும் ராணுவம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னணி பங்காற்றுகின்றனர். கிராமப்

புறங்களில் உள்ள பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் சுய உதவிக் குழுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அரசியல் அதிகாரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம், சமத்துவத்தை அடைவதற்கான ஒரு முக்கியமான நிலையாகும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு (சில மாநிலங்களில்) வழங்கப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் உள்ள பெண்களை அரசியல் முடிவெடுக்கும் செயல்முறையில் நேரடியாகப் பங்கேற்க வைக்கிறது. இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே உள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான சவால்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பிரதிநிதிகளாய் பெயரளவுக்கு பொறுப்பு வகித்தாலும், பல இடங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்களால் ஆட்டுவிக்கும் பொம்மைகளாகவே இருப்பதுதான் காலத்தின் கொடுமை.

பெண்களுக்கான சமத்துவம் குறித்து நாம் பேசும்போது, அவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சமூக சவால்களை நாம் கவனிக்க வேண்டும். வரதட்சிணை மரணங்கள், பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவை இன்றும் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளன.

இந்தக் குற்றங்களைச் சமாளிக்க, அரசு பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டம், வரதட்சிணை தடுப்புச் சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. இவை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

இந்தியாவில் பெண்களுக்கான சமத்துவம் என்பது ஒரு நீண்ட மற்றும் தொடர்ச்சியான போராட்டம். இதற்கு, சட்டபூர்வ பாதுகாப்பு மட்டும் போதாது. சமூகத்தின் மனநிலையிலும், கலாசார நடைமுறைகளிலும் பெரிய மாற்றங்கள் தேவை. அனைவருக்கும், குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கச் செய்வது, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான மிக முக்கியமான காரணியாகும்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது, அவர்கள் சுயதொழில் தொடங்க உதவுவது மற்றும் நிதிச் சேவைகளை அணுக உதவுவது ஆகியவை அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்துவதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதும் மிகவும் அவசியம். சமூகத்தில் உள்ள ஆண், பெண் பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் அவசியம் சேர்க்கப்பட வேண்டும்.

சமத்துவம் என்பது ஆண்களையும், பெண்களையும் சரிசமமாக நடத்துவது மட்டுமல்ல. இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உயர வேண்டுமெனில், அதன் மொத்த மக்கள்தொகையில் பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அதுதான் உண்மையான முன்னேற்றம். இது ஒரு தேசத்தின் பயணமும், நம் சமூகத்தின் கடமையும் ஆகும். பெண்களுக்கான முழுமையான சமத்துவம் கிடைத்தால் மட்டுமே

இந்தியா ஒரு வலுவான தேசமாக உயரும்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com