தேர்தல் போட்டி தீர்வாகுமா?

வாக்குச்சீட்டு தோட்டாவைவிட வலிமையானது என்ற ஆப்ரஹாம் லிங்கன் கூற்று, அவ்வப்போது தாக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தவே செய்கிறது
தேர்தல் போட்டி தீர்வாகுமா?
Updated on
2 min read

தேர்தலில் போட்டியிட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. அது எந்த நிலையிலும் மறுக்கப்படக் கூடாது என்பதே ஜனநாயகத்தின் வலிமை. அதே நேரத்தில் தவறான நோக்கங்களுக்காக களமிறங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் நேரத்தில் எழுந்து வருகிறது.

1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ரூ. 10.45 கோடியும், சராசரியாக ஒரு வாக்காளர் வாக்களிப்பதற்கு 60 காசும் செலவிடப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்வுக்கேற்ப தேர்தல் செலவும் அதிகரித்தது. தேர்தல் செலவை உற்று நோக்கினால் அதிகப்படியான சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலின்போது அதற்கான செலவினமும் அதிகரித்துள்ளது தெரியவருகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அவ்வப்போதும் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏதாவதொரு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துவிடுகிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிடுவது, கோரிக்கையை முன்வைத்தோ, அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ, பிரச்னையை மக்களிடையே கொண்டு செல்லவோ அதிகப்படியான நபர்கள் தேர்தலில் போட்டியிடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இன்றைய தேர்தல்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது அரிதானது என்றாலும், சில மாநிலங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் உண்டு. பிகாரில் கடந்த 2020-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் 31 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, தெலங்கானா மாநிலம் ஜூபிளிஹில்ஸ் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட 211 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இங்கு பிராந்திய வெளிவட்டச் சாலைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அரசுக்கு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும் மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தனர். இந்தத் தொகுதி யில் 48 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

இதுபோன்றதொரு நிகழ்வு 1991 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் நிகழ்ந்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் 249 பேர் போட்டியிட்டனர். இதனால், வழக்கமாக அறிவிக்கப்பட்ட நாளில் இத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படாமல் ஒரு மாதத்துக்குப் பின்னரே தேர்தல் நடத்தப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய இத்தேர்தலுக்காக முதன்முறையாக 2 அடி நீளம், 2.5 அடி அகலம், 2 அடி அகலம் கொண்ட வாக்குப்பெட்டியும், 86 செ.மீ. நீளம், 61 செ.மீ. அகலம் கொண்ட வாக்குச் சீட்டும் பயன்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்டனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும், தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள் சாராத 1,016 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். ஒரே பெயருடைய பலரும் போட்டியிட்டனர். 120 பக்கங்களைக் கொண்ட "வாக்குச்சீட்டு' தயாரிக்கப்பட்டது. இவர்களில் 88 பேர் ஒரு வாக்கு கூட வாங்காமலும், 158 பேர் தலா ஒரு வாக்கும் பெற்றனர். இத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிட்டதால் இத்தேர்தலில் ஒரு தொகுதிக்கான சராசரி வேட்பாளர்களின் எண்ணிக்கை 19 -ஆக இருந்தது. ஆனால், 2001 தேர்தலில் 5.5-ஆகவும், 2006-இல்8.4-ஆகவும், 2011-இல் 9-ஆகவும் குறைந்தது. இத்தேர்தலுக்குப் பின்னர் தேர்தலில் போட்டியிட செலுத்துவதற்கான வைப்புத் தொகை அதிகரிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு வேட்பாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 7,190 பேர் (86 சதவீதம்) டெபாசிட் இழந்தனர்; இவர்களில் 584 பேர் தேசிய கட்சி வேட்பாளர்கள்; 68 பேர் மாநிலக் கட்சிகளையும், 2,633 பேர் பதிவு செய்யப்பட்ட அல்லது அங்கீகரிக்கப் படாத கட்சிகளையும் சேர்ந்தவர்கள்; 3,095 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.

முதல் மக்களவைத் தேர்தலில் 1874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1977-இல் தொகுதிக்கு சராசரியாக 3 முதல் 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிகரித்து 2019 தேர்தலில் சராசரியாக 14 வேட்பாளர்கள் என அதிகரித்தது.

அதிருப்தி, கோரிக்கை, கவன ஈர்ப்பு போன்றவற்றுக்காக தேர்தலில் போட்டியிடுவது சிக்கல்களுக்கும், சிரமங்களுக்கும் வழிவகுக்குமே தவிர தீர்வாக அமையாது. இவற்றுக்காக எதிர்ப்பை வெளிப்படுத்த ஒட்டுமொத்தமாக நோட்டாவுக்கு வாக்களித்தல், எவரேனும் ஒருவரை பொது வேட்பாளராக முன்னிறுத்தி அவருக்கு அனைவரும் வாக்களிப்பது போன்றவற்றைப் பின்பற்றலாம். மாறாக, அதிகப் படியானோர் போட்டியிடுவது தீர்வாகாது.

"வாக்குச்சீட்டு தோட்டாவைவிட வலிமையானது' என்ற ஆப்ரஹாம் லிங்கன் கூற்று, அவ்வப்போது தாக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தவே செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com