

நமது அன்றாட வாழ்வில் பல நல்ல நிகழ்வுகளும், சோக நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. துரதிருஷ்டவசமாக நமது மூளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்து விடுகிறது. மறக்க வேண்டியதை நினைவில் வைத்துக் கொள்கிறது. இதுதான் நமது மனம் செய்யும் மாயமாகும்.
நமது மூளை நமக்கு முக்கியம் எனக் கருதும் நிகழ்வுகளை மனதில் நிறுத்திக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நமக்கு நினைவாற்றல், மறதி இரண்டுமே தேவை. எதை மறக்க வேண்டும், எதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சார்ந்த தனி நபரின் வாழ்க்கையின் அனுபவத்தைப் பொருத்தது.
பெரும்பாலும், நம் வாழ்வின் சோக நிகழ்வுகள் வாழ்நாள் முழுவதும் நம் மனதை விட்டு விலக மறுக்கின்றன. அதனால்தான் நம்மில் பலரது மனம் மகிழ்ச்சியான பாடல்களை விட சோகமான பாடல்களை அதிகம் விரும்பி கேட்கிறது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரும் குறைவான நேரமே உறங்குகிறோம். இதனால், நமக்கு டிமென்ஷியாவின் பாதிப்பு இளமையிலேயே ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. முறையான சிகிச்சை அளிக்கப்படாத போது இம்மறதி நோய் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. நம் தொடர் மறதி பல்வேறு உறவுகளையும், சமூக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. வாகன விபத்துகள், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
நம் உடலின் நரம்பியல் கோளாறுகள், மனநலப் பிரச்னைகள், மனக்குழப்பம், மூளைக்காய்ச்சல், மூளையில் காயம், வைரஸ் தொற்றுகள் போன்றவை நமக்கு மறதியை ஏற்படுத்தலாம். சிலருக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஒரு பரம்பரை நோயாகவும் இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு நமது நினைவாற்றலை மிகவும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அதிகப்படியான மது, போதைப் பொருள் பயன்பாடுகளும் நமக்கு மறதியை ஏற்படுத்தலாம்.
இளமைக் காலத்தில் மாணவர்களுக்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம். கண் விழித்துப் படிக்கும் பாடப் பொருள்களை அவர்கள் தேர்வு அறையில் நினைவில் மீட்டுக் கொண்டு வந்து தேர்வை நன்கு எழுத அவர்களுக்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம்.
பணிக்காலத்தில் மறதியின் காரணமாக நாம் செய்யும் தவறுகள் சில நேரம் நமது பணியிடை நீக்கத்துக்கோ, பதவி பறிபோவதற்கோ காரணமாக அமையலாம். முதுமையில் கடந்தகால கசப்பு நினைவுகளை முதியவர்கள் மறக்க முயலுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அவர்களால் அவற்றை மறக்க முடிவதில்லை. அதனால், அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு, அவர்களுக்குப் பல்வேறு மனநலக் குறைபாடுகளும், உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படுகின்றன. மறதி நோய் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
மறதிக்கான அடிப்படைக் காரணத்தை விரைவில் கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். மறதி நோயிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறு அதன் அடிப்படைக் காரணத்தைப் பொருத்தது. நமக்கு தலையில் ஏற்படும் காயத்துக்குப் பிறகு, குழப்பம், நடத்தையில் மாற்றங்கள் போன்றவை ஏற்பட்டால் மருத்துவரின் உதவியை உடனே நாட வேண்டும். சில தடுப்பூசிகள் மறதியைக் கொண்டுவரும் தொற்றுகளைத் தடுக்கலாம். வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்த சமச்சீர் உணவு மூளையின் ஆரோக்கியத்தையும்,நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.
மன அழுத்தம் கவனச்சிதறலை ஏற்படுத்துவதால் மறதிக்கு காரணமாக அமைகிறது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர விருப்பமான இசையைக் கேட்டல், யோகா பயிற்சியில் ஈடுபடுதல், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் போன்றவை மிகவும் உதவும். இவை நம் மனதுக்கு அமைதியைக் கொண்டுவந்து நினைவாற்றலை அதிகரிக்கும்.
கரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்புக்குப் பிறகு நமது அன்றாட வாழ்வில் பல எதிர்மறை தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மனநிம்மதியை எங்கு தொலைத்தோம் என்பதை அறியாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம். நம்மை வழிகாட்டி, வாழ்க்கையைச் செம்மையாக நடத்த உதவும் அனுபவம் கொண்ட பெரியோர்கள் நம் அணுக் குடும்பங்களில் தற்போது மிகவும் குறைவாகவே உள்ளார்கள். அப்படி இருந்தாலும் அவர்களின் வழிகாட்டுதல்களை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை.
பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நம் உறவுகளில் தனிமையைக் கொண்டுவந்துள்ளன. தேவைக்கு ஏற்ப நாம் நமது செயல்பாடுகளில் நமது நினைவாற்றலும், மறதியும் உரிமை கொள்வதைப் பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இடங்களையும், நபர்களையும் விட்டு நாம் விலகி இருப்பது நல்லது.
தற்சார்புள்ள நிதி நிலை, போதுமான உறக்கம், சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல உறவுகள், பயனுள்ள பொழுதுபோக்குகள் மட்டுமே நமது நினைவாற்றலைப் பெருக்கும். நம் பணிகளை பட்டியலிட்டுக் கொண்டு, அவற்றின் முன்னுரிமைகளின் அடிப்படையில் நாம் செயல்படலாம்.
நாம் மகிழ்வான நிகழ்வுகளை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முனைய வேண்டும். பொதுவாக நமக்கு நினைவாற்றல் மிகவும் தேவை என்னும் கருத்தையே நாம் அனைவரும் மிகவும் ஆதரிக்கிறோம். ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் நமக்குத் தேவைதான்.
நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் போன்றவற்றை நாம் காலப்போக்கில் மறந்து விடுவது நல்லது. அவற்றை மறக்காமல் போனால் நமது வாழ்க்கையின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நினைவாற்றலுடன், மறதியும் முக்கியம்தான். இதை உணர்ந்து நாம் நம் வாழ்வை மென்மையாகக் கடந்துசெல்ல எத்தனிப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.